For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்கழி திருவாதிரை விரதமும் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனமும்

Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

சிதம்பரம்: மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்மமுகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம்.

இந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். அது மட்டுமின்றி இதே நாளில் தான், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார். இதே நாளில் தான் ஈசன் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கும் தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.

இந்நாளிலேயே பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி இதனைக் கடைபிடிக்கின்றனர்.

Tiruvathirai festival celebrated of Lord Siva Temple

ஆருத்ரா தரிசனத்தின் வரலாறு :

புராண காலத்தில் பாற்கடலில் திருமால் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த போது, திடீரென்று இறைவனின் பாரம் அதிகமாயிற்று. அதனை உணர்ந்த சேஷன் பகவானிடம், நாராயணா !! திடீரென்று தங்கள் உடல்பாரம் அதிகமாகக் காரணம் என்ன என்று வினவினார். அதற்கு இறைவன், "ஆதிசேஷா !! நான் ஈசனின் திருதாண்டவ அழகை நினைத்துப் பார்த்தேன். அந்தப் பூரிப்பின் காரணமாகத் தான் எனது உடல்பாரம் அதிகமாயிற்று என்று கூறி அந்த அழகை அவரிடம் வர்ணித்தார் திருமால்.
இதனைக் கேட்டு மகிழ்ந்த ஆதிசேஷன், கேட்கும் போதே இவ்வளவு பேரானந்தமாக இருக்கும் இந்த அழகை நேரில் காண விரும்பி அதற்கான மார்க்கத்தை உரைக்கும்படி திருமாலிடம் வேண்டினார். அதற்கு அவர் ஆதிசேஷனை பூலோகத்திற்கு சென்று தில்லையில் தவம் புரிந்தால் அவனுக்கும் அது சித்தியாகும் என்றார். அதன்படி, ஆதிசேஷன் பூலோகத்தில் ஒரு ரிஷி தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, வளர்ந்து உரிய பருவத்தில் தில்லையில் தவம் இயற்றத் தொடங்கினார். அவரோடு வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவரும் இறைவனின் திருத்தாண்டவ தரிசனம் வேண்டி அவரோடு சேர்ந்து தவம் செய்தார்.
இருவருக்கும் அருள்புரிய எண்ணிய ஈசன் திருவாதிரை நன்னாளில் அவர்களுக்கு தரிசனம் அளித்து, தாண்டவம் ஆடி மகிழ்ந்து, அனைவரையும் மகிழச் செய்தார்.

சிவனின் அழகில் மயங்கிய முனி பத்தினிகள்

ஆருத்த்ரா தரிசனம் தொடர்பாக இன்னொரு கதையும் கூறப்படுகிறது :

தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிட்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிட்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர்.

சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்றும் சொல்லப்படுகின்றது.

களி படைக்கப்படும் வழக்கம் வந்த கதை :

‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி' என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி உண்டு மகிழ்கின்றனர்.புராணங்கள் திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசித்து வருவது சிறப்பு என்கின்றன. இந்த களி படைக்கப்பட்டதற்கும் ஒரு கதை உள்ளது.

சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் சேந்தனார் என்றொரு விறகுவெட்டி வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி, நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார்.

சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார்.

கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.
எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.
சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களி படைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.

திருவாதிரை விரதம் இருக்கும் முறை :

மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும். சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.
இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்களின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது . இந்த ஐந்துக்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களானது சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகியவை. இதில் முதன்மையான ஆலயத்தில் சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் .

English summary
This festival, Thiruvathirai, dedicated to Lord Shiva and his consort Parvati is celebrated on the full moon day of Margazhi in Tamil. It is believed that Lord Shiva was born on this revered day and at Chidambaram temple in Tamil Nadu, Sri Natarajar (Lord Shiva) temple’s six festive Poojas commemorate on Thiruvathirai. Aarudhra Darshan is celebrated in the Margazhi Month of Tiruvathirai star.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X