• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

திருமயிலை கபாலி கற்பகத்தை தரிசித்தால் களத்திர தோஷமும் புத்திர தோஷமும் நீங்கும்!

By Sundarajan
|

சென்னை: இன்றைக்கு 7/9/2018 வெள்ளிக்கிழமை சுக்கிர வாரமும் பிரதோஷமும் இணைந்த சிவபெருமானுக்கு உகந்த அற்புத நாள். சென்னை திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் (சுக்கிர ஸ்தலம்), தஞ்சை பெரியக்கோயில், சிதம்பரம், திருவண்ணாமலை போன்ற அனைத்து சிவஸ்தலங்களிலும் இன்று பிரதோஷம் சிறப்பாக நடைபெறும்.

இந்த நாளில் சிவ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். சுக்கிர வாரத்தில் வரும் பிரதோஷம் களத்திர தோஷமும் புத்திர தோஷமும் நீக்கி கற்பக விருக்ஷமாக செல்வ வளமும் சேர்க்கும் என்கிறார்கள் ஆன்றோர்கள். அதிலும் திருமயிலை கபாலீஸ்வரர் உடனுறை கற்பகத்தை சுக்கிர வாரத்தில் பிரதோஷ தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது ஐதீகம்!

Today is Sukaravar Friday Pradosham

சுக்கிர வார பிரதோஷ தரிசனம்:

சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது சோமன் எனப்படும் சந்திரன், மகாலக்ஷ்மி எனப்படும் திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. சந்திரனை சிவபெருமான் தலையில் சூடிக்கொண்டார். மஹாலக்ஷ்மியை திருமால் ஏற்றுக் கொண்டார். களத்திர காரகன் சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் பிரதோஷ காலத்தில் தோன்றியது குறிப்பிடத்தக்கது. மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.

களத்திர தோஷமும் திருமண தடையும்:

பெண்ணை பெற்றவர்களும் (தற்போதெல்லாம் நிறைய ஆண்களை பெற்றவர்களும்) தங்கள் குழந்தைகளுக்கு நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெறவேண்டுமே என கத்திமேல் நிற்பது போல் தவியாய் தவிக்கின்றனர். இன்று பல பெற்றோர்களின் பெருங்கவலை தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டுமே என்பதோடு மட்டுமல்லாமல் "காதல்-கத்திரிக்காய்" என மாட்டிக்கொள்ளாமல் தங்கள் எண்ணப்படி நடக்கவேண்டும் என்பதே ஆகும் திருமணம் ஆகாமல் கன்னி பெண்களையும் காளையர்களையும் வீட்டில் வைத்திருக்க நாளுக்கு நாள் பீபி ஏறிக்கொண்டே இருக்கிறது.

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக திருமண தடைகள், காதல் தோல்வி மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

திருமண தடை ஏற்படுத்தும் தோஷங்கள்

செவ்வாய் தோஷம்:

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.

ராகு - கேது தோஷம்:

லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

மாங்கல்ய தோஷம்:

இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

சூரிய தோஷம்:

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நிற்கும்போது இருதார யோகமும், வீடு தள்ளி 42 பாகைக்கு மேல் இடைவெளி பெற்று நிற்பது திருமணம் ஆகா நிலையையும் ஏற்படுத்துகிறது.

களத்திர தோஷம்:

களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும். மேலும் களத்திர காரகன் சுக்கிரன் நீசம் அடைவது, பாபகர்தாரி யோகம் பெறுவது,கேதுவுடன் சேர்ந்து நிற்பது, கேது சாரம் பெறுவது போன்றவையும் களத்திர தோஷமே ஆகும்.

சூரிய சுக்கிர இடைவெளி:

ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சூரியனும் நெருங்கிய பாகையில் நின்றுவிட்டால் அது பெண்ணிற்க்கு இருதார யோகத்தை தந்துவிடுகிறது. அதே நேரத்தில் ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் குறிப்பிட்ட இடைவெளிக்கு மேல் சென்று இருவருக்கும் இடையில் ஒரு வீடு இடைவெளி அமைந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் அமைவது என்பது குதிரை கொம்பாகிவிடுகிறது.

புணர்ப்பு தோஷம்:

ஓருவருடைய ஜாதகத்தில் மனோ காரகன் சந்திரனும் கர்ம காரகன் சனியும் சேர்க்கை பெற்று நிற்பது, பரிவர்தனை பெறுவது, சார பரிவர்தனை பெறுவது, சம சப்தம பார்வை பெறுவது போன்றவை திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படுத்தும் தோஷமாகும்.

தாம்பத்ய வரமருளும் சுக்கிரன்:

திருமணம் ஆனவர்களுக்கு அடுத்த கவலை சீக்கிரம் ஒரு குழந்தை பிறக்கவேண்டுமே என்பதுதான். கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கையை நிறைவடைய செய்யும் காதல் மற்றும் காமத்தின் காரகரும் சுக்கிர பகவனேதான். சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் 6/8/12 தொடர்பு மற்றும் நீசம், வக்ரம், பாவர்கள் தொடர்பு பெற்றுவிட்டால் அவர் வாழ்க்கையில் படுக்கை சுகமும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் எட்டாகனிதான்.

காலையில் இருந்து எத்தனை விஷயங்களில் வெற்றி பெற்றுவிட்டாலும் இரவில் படுக்கையில் ஒருவர் தோற்றுவிட்டால் அவர் நிலையை யோசித்து பார்க்கவே முடியாது. ஒருவர் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து நின்றுவிட்டாலோ, சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நின்று விட்டாலோ அவர்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்துவிடும்.

பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப்பதோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு தோஷம் போக்கவும் வளர்பிறை பிரதோஷம் வாழ்வின் வளம் சேர்க்கவும் ஏற்றதாகும்.

பிரதோஷத்தையொட்டி, நந்திதேவருக்கும் சிவலிங்கத்துக்கும் இன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகத்துக்குத் தேவையான பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, திரவியப்பொடி ஏதேனும் வழங்கி, சிவனாரை கண்ணார தரிசிப்பது சிந்தையில் தெளிவு பிறக்கும். எடுத்த காரியத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் சிவபெருமான்! அனைத்துக்கும் மேலாக, தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள் விலகி, புண்ணியங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்!

இந்த சுக்கிர வார பிரதோஷ நாளில் பிரதோஷ காலம் எனும் கோதூளி லக்ன காலத்தில் சந்திரனை தலையில் சூடிய நிலையில் காட்சி தரும் ரிஷபாரூட மூர்த்தியையும் சோமாஸ்கந்த மூர்த்தியையும் தரிசிப்பது சுக்கிரனின் அதிதேவதை மற்றும் சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அருளால் வாழ்வில் களத்திர தோஷம், புத்திர தோஷம் நீங்குவதோடு செல்வ செழிப்பு, சந்தோஷம் மற்றும் மனநிம்மதியும் பெறமுடியும். மேலும் தேவையான அளவு மழை பெய்து கால்நடைகள் மற்றும் விவசாயம் செழிக்கும் என்பது நிதர்சனம்

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Pradosh Vrat is observed on the 13th day of a fortnight and there are two Pradosham in a Hindu month. Lord Shiva and Goddess Parvati are worshipped in the evening during twilight on this day. (on the Trayodashi of both lunar fortnights (Shukla and Krishna Paksh). Pradosh as the name indicates is a period just before sunset and after sunset. Roughly, the Pradosha period is between 1.5 hours before sunset and 1 hour after sunset. It is said that Lord Shiva and Parvati are in a happy mood during Pradosha period and they shower blessings on devotees.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more