• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சோமவார பிரதோஷம் - நந்தி அபிஷேகத்திற்கு என்ன வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் தெரியுமா?

Google Oneindia Tamil News

மதுரை: சிவ ஆலயத்திற்கு செல்பவர்கள் சோமவார நாளில் சென்று வழிபடுவார்கள். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோம வார பிரதோஷ தினமான இன்று சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று சிவ தரிசனம் செய்யலாம்.

சோமன் என்றால் சிவன், திங்களை முடிமேல் சூடிய சிவனுக்கு சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை உகந்த தினம். தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும்.

மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும். நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

தோஷம் நீக்கும் பிரதோஷ மகிமை

தோஷம் நீக்கும் பிரதோஷ மகிமை

பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிவ தாண்டவ தரிசனம்

சிவ தாண்டவ தரிசனம்

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத்தில் அயர்ச்சியில் பள்ளி கொண்டது துவாதசியில். உலகமெலாம் உய்வுற தாண்டவம் ஆடியது திரயோதசி நாளில், அந்தி சாயும் நேரத்தில். இந்தக் காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம்.

பிரதோஷ கால நடனம்

பிரதோஷ கால நடனம்

பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்த மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கயிலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.

நந்தியிடம் சொன்னால் நிறைவேறும்

நந்தியிடம் சொன்னால் நிறைவேறும்

சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்பவர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை என்பது எல்லா கோவில்களிலும் இருக்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு

சோமவார பிரதோஷ சிறப்பு

சோமவார பிரதோஷ சிறப்பு

சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும். மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

தடைகள் நீங்கும்

தடைகள் நீங்கும்


அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் வாங்கித்தரலாம். சிவ பெருமானுக்கும் நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். கொண்டக்கடலை எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும்.

நந்தி வழிபாடு

நந்தி வழிபாடு

பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்வது சிறப்பு.

அபிஷேக பொருட்கள்

அபிஷேக பொருட்கள்

பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும், தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், நெய் - முக்தி பேறு கிட்டும். இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்.

சிவ தரிசனம்

சிவ தரிசனம்

பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்த்தால் சிறப்பு. முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்பதால் தோஷங்கள் நீங்கும். பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

குறைகள் குணமாகும்

குறைகள் குணமாகும்

ஆடி மாத வளர்பிறை பிரதோஷ தினமான இன்று சிவபெருமானை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும் அபிஷேக ஆராதனைகளிலும் பங்கேற்று வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும், அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், சந்திர கிரக தோஷங்கள் நீங்கும், சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை குணமாகும், வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும், வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும், மேலும் சிறப்பான பலன்களை அளிக்கும்.

அபிஷேக ஆராதனைகள்

அபிஷேக ஆராதனைகள்

ஆடி பிரதோஷ தினமான இன்று வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் எழுந்தரும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் ருத்ர ஹோமம் நடைபெறுகிறது. இதில் விசேஷ மூலிகைகள், நவ சமித்துக்கள், நெய், தேன், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், விசேஷ புஷ்பங்கள், பழங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது. ஸ்ரீ மரகதேஸ்வர்ருக்கு பஞ்ச திரவிய கலசாபிஷேகமும், வில்வ இலைகளால் அர்ச்சனையும் மஹா தீபாராதனை நடைபெறுகிறது.

English summary
Pradosham falls on the 13th lunar day,One of the name of Lord shiva is soma saha uma. For the Lord someshvara Who wears the soma the moon crescent on the matted hair, on the somavara day. Somavara pradosam best for Lord shiva.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X