• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வடலூர் தைப்பூச தரிசன பெருவிழா 27ல் கொடியேற்றத்துடன் தொடக்கம் - 28ல் ஜோதி தரிசனம்

|

கடலூர்: வடலூரில் இந்த ஆண்டு 150வது ஜோதி தரிசன விழா திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் என்னும் சத்ய ஞானசபையில் நடைபெறுகிறது. இதையொட்டி வருகிற 27ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28ஆம் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவில் திருவிழாக்கள், கடற்கரைகளில் கூட்டம் கூட அனுமதிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதால் வடலூரில் தைப்பூச திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

Vadalur Thaipusam Festival to begin with flag hoisting on the 27th,2021

வரும் 28ஆம் தேதி தைப்பூசம் தினத்தன்று காலை 6 மணி, 10 மணி, மதியம், 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 29ஆம் தேதி காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

கடலூருக்கு அருகே உள்ள மருதூரில் பிறந்த ராமலிங்க அடிகளார் 'சமரசச் சுத்தச் சன்மார்க்கச் சத்தியச் சங்கத்தை அமைத்து உயிர்க்கருணை ஒழுக்கத்தை கடைபிடிக்கச் சொல்லி அனைவரையும் வலியுறுத்தினார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என்று அறிவுறுத்தி வந்த வள்ளலார் அன்னதானச் சாலை ஒன்றை அமைத்தார்.

வடலூரில் பார்வதிபுரம் என்னும் ஊர் மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, அங்கு சமரச வேதத் தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருக்கிறது.

இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலார் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை கட்டினார். அங்குதான் 25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே 'பேருபதேசம்' என்று சொல்லப்படுகிறது.

1874-ஆம் வருடம் தை மாதம் 19ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருள் வாழ்த்து வழங்கி விட்டு இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். அவரது விருப்பப்படி, அவரது முதன்மைச் சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.

வள்ளலார் அன்று முதல் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்சோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து ஒருமை வழிபாடு செய்யலாம். மாதந்தோறும் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையைப் பலகணி வழியாகப் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

வள்ளலார் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது. இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இறைக்காட்சியோடு தங்களையே தாங்கள் காணும் உணர்வு அந்தப் பொழுதில் 'அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை' என்று முழக்கமிட்டு பக்தியுடன் வழிபடுகின்றனர்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான்.

ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் காணலாம்.

இந்த ஆண்டு வரும் 28ஆம் தேதி தைப்பூசம் தினத்தன்று காலை 6 மணி, 10 மணி, மதியம், 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 29ஆம் தேதி காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 30ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கருத்தரங்கம், நாடகங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான ராட்டினங்கள், கடைகள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
This year the 150th Jyoti Darshan Festival is being held in Vadalur at the Satya Gnanasabai called Thiruarutprakasa Vallalar Deva Nilayam. The flag hoisting for the Thaipusam Jyoti Darshan Festival is scheduled to take place on the 27th and the Thaipusam Festival on the 28th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X