For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க வீட்ல வலம்புரி சங்கு இருக்கா... அப்ப மகாலட்சுமி உங்க வீட்ல நிச்சயம் இருப்பாங்க

Google Oneindia Tamil News

மதுரை: சாகா வரம் தரும் அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள் ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.

வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது மகாலட்சுமிக்கு ஈடானது. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றியவளே எனவேதான் வலம்புரிச் சங்கு "லக்ஷ்மி சகோதராய" என்று அழைக்கப் படுகிறது. ஸ்ரீ மஹாவிஷ்ணு வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை தனது மார்பிலும் தாங்கியபடி காட்சி அளிக்கிறார்.

வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மஹத்திதோஷம் இருப்பின் போய்விடும்.

Valampuri sangu importance

சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.

ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா வைத்திருந்த சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், "குருதட்சணையாக என்ன வேண்டும்?" எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை

பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு பாஞ்ச ஜன்யம் என்று பெயர்.

கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர் தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம். திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.

வலம்புரிச்சங்கு வைத்திருந்தால் கிடைக்கும் நன்மைகள்:

வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும். செய்வாய் தோஷம் உள்ள நபர்கள் வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி 27 செவ்வாய் கிழமைகள் அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் தோஷம் விலகும், திருமணம் கூடிய விரைவில் நடக்கும்.

அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும். சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும். ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.

பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.

பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது.

வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம். சித்ரா பௌர்ணமி, ஆனி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் - மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.

தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும். பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் - மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பிறந்த குழந்தைக்கு வலம்புரி சங்கு மூலம் பால் ஊற்றினால், குழந்தை நல்ல ஆரோக்கியம் பெறும். மேலும், இதனால் குழந்தை மேல் யாருடைய கண் திருஷ்டியும் படாது என கூறப்படுகிறது.

வாழையிலை அல்லது தட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். வாழையிலை அல்லது தட்டில் பச்சை அரிசி அல்லது நெல் வைத்து அதன் மீது வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்ய வேண்டும். வலம்புரி சங்கு வடக்கு அல்லது தெற்கு முகம் பார்த்து தான் வைக்க வேண்டும். வலம்புரி சங்கில் தண்ணீர் மற்றும் துளசி வைத்து பூஜை செய்வது சிறப்பு. வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்யும் போது மலர்கள், தங்கம் அல்லது பணம் வைத்தும் பூஜை செய்யலாம்.

வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். 'சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத்' என்பது வேதவாக்கு. வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் விளங்கும் என்பது நம்பிக்கை.

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவை அண்டாது. சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம். ஆலயங்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்கலப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதேபோன்று, கார்த்திகை மாத சோமவார நாளில் 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப்படும். அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள்.

வியாழக்கிழமை மாலையில் 5 முதல் 8 மணிவரையிலான குபேர காலம், வெள்ளிக்கிழமை காலை வேளை, பௌர்ணமி, திருவோணம் மற்றும் பூர நட்சத்திர நாட்களில் இந்த பூஜையைத் துவங்கி 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில் செய்து முடிக்கலாம்.

குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் வலம்புரிச் சங்கில் பால், குங்குமப்பூ இட்டு சந்தான கணபதியை வரித்து, பூஜை செய்து, 48 தினங்களுக்கு கணவருடன் சேர்ந்து அருந்திவந்தால் பலன் கிடைக்கும். ஒருவர் தமது நட்சத்திர அதிதேவதையையும், லட்சுமிகுபேரனையும் யோக எண் மற்றும் (சிறிய) பட உருவில் வலம்புரிச் சங்கில் வைத்து, சில காசுகளும் போட்டு வைத்து தினமும் வழிபட, அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும்.

English summary
Valampuri Sangu also Called Lakshmi Shankh or Vishnu Shankh. Valampuri Sangu is a very rare religious product and also lucky product not only for Hindus but all for all religions across the globe.It is believed Valampuri Sangu helps to get out of all hurdles in your life and also brings health and wealth to your family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X