For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிப்பெருக்கு நாளில் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரி... கண்முன்னால் பொன்னியின் செல்வன்

வீராணம் ஏரி நிரம்பி கடல்போல காட்சி தருகிறது. ஆடிப்பெருக்கு நாளில் நிரம்பி வழிந்த வீராணம் ஏரியைப் பற்றி சமூக வலைத்தளங்களில் உற்சாகமாக பதிவிட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆடிப்பெருக்கு நாளில் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரி- வீடியோ

    சென்னை: நிரம்பி வழியும் வீராணம் ஏரியினால் சென்னையின் குடிநீர் பிரச்சினை தீரப்போகிறது. கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரியை பார்த்து பொன்னியின் செல்வன் நாவலை நினைவு படுத்தி வந்தியத்தேவனையும் கண்முன் கொண்டு வந்துள்ளனர் சமூக வலைத்தளவாசிகள்.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அது மட்டுமின்றி சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.

    Veeranam lake to attain full capacity

    ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த கன மழை காரணமாக காவிரியில் லட்சக்கணக்கான கனஅடி நீர் உபரிநீராக தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. மேட்டூர் அணை நிரம்பியதும் அங்கிருந்து கடந்த ஜூலை 19ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர் கடந்த 26ஆம் தேதி கீழணைக்கு திறக்கப்பட்டது. கொள்ளிடம் வழியாகவும் உபரிநீர் திறக்கப்பட்டது.

    Veeranam lake to attain full capacity

    கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வீராணம் ஏரிக்கு அதிகமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதங்களில் காய்ந்து கிடந்த வீராணம் ஏரி இப்போது நிரம்பி கடல்போல காட்சியளிக்கிறது.

    ஆடிப்பெருக்கு நாளில் வீராணம் ஏரி நிரம்பி கடல்போல காட்சியளிப்பதை சமூக வலைத்தளங்களில் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். கூடவே கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலையும், வந்தியத்தேவனையும் நினைவுபடுத்தி பதிவிட்டு வருகின்றனர்.

    வல்லவரையன் வந்தியத் தேவன் வீராணம் ஏரி என்றழைக்கப்படும் வீர நாரயண ஏரி வழியாக குதிரையில் பயணத்து வரும் அந்த காட்சிதான். பொன்னியின் செல்வன் ஆரம்பமே இது தான்.

    தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில்(ஒரு காதம் என்பது 6.7 கி.மீ), அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் 'வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.

    ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

    ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்.

    Veeranam lake to attain full capacity

    வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தெளியும் நடவும் நடந்து கொண்டிருந்தன.

    உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான். ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.

    ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்? வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார்?

    தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா? அதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்’ எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?

    Veeranam lake to attain full capacity

    இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.

    இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது என்று பொன்னியின் செல்வன் காட்சியினை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளனர்.

    சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. வாய்ப்பு இருப்பவர்கள் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரியை கண்டு ரசித்து வாருங்களேன்.

    English summary
    Veeranam lake will receive ample water supply from the Keezhanai channel within a few days as the outflow from Mettur dam remains rising.Veeranam lake, Kalki R. Krishnamurthy’s magnum opus, Ponniyin Selvan, opens with the hero riding along and admiring this lake.the Veeranam Lake, located in Cuddalore District.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X