சபரிமலை: மண்டல பூஜையில் சாமி தரிசனத்திற்கு தினசரி 25,000 பேருக்கு அனுமதி - பம்பையிலும் நீராடலாம்
சபரிமலை: ஐயப்பனை தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்களே, உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் தினசரி 25ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாத பிறப்பு நாட்களில் நடை திறக்கப்பட்டு சில நாட்கள் பூஜைகள் நடைபெறும் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா காலமாக இருப்பதால் கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
துலாம் மாத பூஜைக்காக வரும் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். 17ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அன்றைய தினம் காலையில் புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்ந்து 21ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
ஆணவம்?.. தேவையின்றி பேசி வாங்கி கட்டிக்கொண்ட ரோஹித் சர்மா.. ஐபிஎல்லில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

ஆன்லைன் புக்கிங்
கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று காலை முதல் தொடங்கியது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கார்த்திகை மாத பிறப்பு
கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல மகரவிளக்கு பூஜைகள் நடைபெற உள்ளன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு காலத்தில் தினசரி 1,000 பக்தர்களும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தினசரி 2,000 பக்தர்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மகர விளக்கு தரிசனத்துக்காக 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நவம்பர் மாதம் மண்டல பூஜை
மண்டலகால, மகரவிளக்கு பூஜைகள் முடிந்த பிறகு கொரோனாப் பரவல் அதிகரித்த காலகட்டங்களில் மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டாலும் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாதாந்திர பூஜைகளின்போது தினசரி 15,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வரும் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கும் மண்டல மகரவிளக்கு கால பூஜைகளுக்கு எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து கேரள தேவசம்போர்டு அதிகாரிகள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

முதல்வர் தலைமையில் ஆலோசனை
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சபரிமலை மண்டல மகரவிளக்குகால பூஜைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் சபரிமலையில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக ஆரம்ப நாள்களில் தினசரி 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பூஜை சமயத்தில் சபரிமலை செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றுடன் செல்ல வேண்டும்.

அபிஷேக நெய் பிரசாதம்
10 வயதுக்கு கீழும், 65 வயதுக்கு மேலும் உள்ள பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் கொண்டு செல்லும் நெய், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சந்நிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் நீராட அனுமதி
கடந்த ஆண்டு பம்பா நதியில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் பம்பை நதியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு, நதிக்கரையிலேயே ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, பம்பா நதியில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். எருமேலியில் இருந்து பெருவழிப்பாதையில் நடந்து சபரிமலை செல்லவும் அனுமதி இல்லை. கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்திவிட்டு கே.எஸ்.ஆர்.டி.சி அரசுப் பேருந்தில் பம்பா செல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். கேரளா அரசின் அறிவிப்பு வெளியான உடன் கார்த்திகை மாதம் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் இப்போதே தயாராகி விட்டனர்.