• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு பிடிக்கும் - எந்த ராசிக்கு எந்த சனி தெரியுமா

|

சென்னை: சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி மகரம் ராசியில் குரு பகவானுடன் இருந்தாலும் வாக்கியப்பஞ்சாங்கப்படி வரும் 27ஆம்தேதியன்று தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருவும் சனியும் மகரம் ராசியில் கூட்டணி அமைப்பதால் உலகத்திற்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்ற பயம் பலருக்கும் வரலாம்.ஆனால் பயப்பட தேவையில்லை 2020ஆம் ஆண்டில் மிகப்பெரிய சோதனைகளை சந்தித்து அதன் மூலம் பல படிப்பினைகள் பாடங்களை கற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் 12 ராசிகளில் எந்த ராசிக்கு எந்த சனி என்று பார்க்கலாம்.

கோச்சாரப்படி சனி சஞ்சரிக்கும் இடத்தை வைத்தும், சனியின் பார்வை படும் இடங்களை வைத்தும் பலன் கூறலாம். மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனியால் மகரம், மேஷம், கடகம், துலாம் ராசிக்காரர்களுக்கு சச மகா யோகம் கிடைக்கிறது.

தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு இது ஏழரை சனி காலமாகும். மேஷம் ராசிக்கு கரும சனி அல்லது தொழில் சனி, ரிஷபம் ராசிக்கு பாக்ய சனி, மிதுனம் ராசிக்கு அஷ்டம சனி, கடக ராசிக்கு கண்டச்சனி, சிம்ம ராசிக்கு ருண ரோக சத்ரு சனி, கன்னி ராசிக்கு பூர்வ புண்ணிய சனி, துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி, விருச்சிக ராசிக்கு தைரிய சனி, தனுசு ராசிக்கு குடும்ப சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி, கும்பம் ராசிக்கு விரைய சனி, மீனம் ராசிக்கு லாப சனியாகும்.

கன்னிசாமிகளும் சரங்குத்தியும் - சபரிமலை யாத்திரையின் சடங்குகள்கன்னிசாமிகளும் சரங்குத்தியும் - சபரிமலை யாத்திரையின் சடங்குகள்

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்கு கரும சனி, தொழில் சனியாகும். சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இருக்கும் இடம் பத்தாம் வீடு என்றாலும் அவரது பார்வை உங்கள் ராசிக்கு 12ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தானங்களின் மீது சனிபகவான் பார்வை விழுவதால் அதற்கேற்ப இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்.
தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். தொழில் விசயமாக அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. இந்த சனிப்பெயர்ச்சியால் உடல் நலத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக முதுகு வலி ஏற்படும் கவனம் தேவை. பொங்குசனிபகவானை வணங்கலாம். மங்கள சனீஸ்வரரை மனம் உருகி வேண்டிக்கொள்ளுங்கள் நினைத்தது நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சனிபகவான் அமர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள். பணப்புழக்கம் சற்று தாளாரமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உடல் நலப்பிரச்சினைகளும், மன அழுத்தங்களும் தீரும். வேலை தேடுபவர்களுக்கும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். ஒன்பதாம் இடத்தில் சனி அமர்ந்து உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், முயற்சி தைரிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களை பார்வையிடுகிறார். தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். நண்பர்களால் நன்மை ஏற்படும். ஒருமுறை திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது. கவலை வேண்டாம் பணவரவு அதிகமாக இருக்கும் காரணம் சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். இதுவரை வராமல் தடையாக இருந்த பணம் தடையின்றி வந்து சேரும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் ராசிக்கு 10ஆம் இடத்தை பார்க்கிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். பங்கு சந்தையில் அதிக கவனம் தேவை. சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அதிக வேகம் ஆபத்துதான் நிதானமாக செல்வது அவசியம். அடுப்பங்கரையில் கவனமாக இருங்கள். நெருப்பு காயங்கள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு 7ஆம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். கும்பகோணம் அருகில் உள்ள திருநறையூரில் உள்ள நாச்சியார் கோயிலில் மங்கள சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார். சனிதிசை, கண்டச்சனியால் ஏற்படும் பாதிப்பு குறைய இங்குள்ள சனிபகவானை தரிசனம் செய்து அர்ச்சனை செய்ய நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் இடத்து சனி அற்புத பலன்களைத் தரப்போகிறது. இதுநாள்வரை வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும். எடுக்கும் காரியங்கள் கைகூடும் புதிய விஷயங்களை கற்க வாய்ப்பு அமையும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும் அவர்களால் நன்மை உண்டாகும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். சனிபகவான் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். சுபகாரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களின் பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்யும் காலமாக அமையும். திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்து வர அதிக நன்மைகள் கிடைக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி காலமாகும். 4ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்தால் மட்டுமே அந்த வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். அர்த்தாஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய வேலூர் வாலாஜாபேட்டை அருகே தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள். காலபைரவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு தைரிய சனி, மூன்றாம் இடத்தில் அமரும் சனியால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல செய்திகள் உங்களை தேடி வரப்போகிறது. உங்களுக்கு பணவரவு அதிகரிக்கப்போகிறது. எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். சிலருக்கு பழைய சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் கிடைக்கும். சிலர் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் நன்மைகள் ஏற்படும். உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். கேது உங்கள் ராசியில் இருப்பதால் அவசரப்பட வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. புதிய சொத்துக்கள் சேரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. வேலையில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான நிலை தளர்ந்து நற்பலன்கள் கிடைக்கும். குச்சனூர் சனிபகவானை குடும்பத்தோடு சென்று வணங்கி வாருங்கள்.

தனுசு

தனுசு

குடும்பசனி குடும்பத்திற்கு ஆகாது. என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை தூக்கி எறிந்து விடவும்.சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையற்ற விஷயங்களை இருவரும் பேசுதல் கூடாது. தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. சனி பகவான் 7ம் பார்வையாக உங்களது ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமாக சென்று வாங்க. அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாகும். கடன் வாங்குவதில் கவனம் தேவை. 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11ம் இடத்தை பார்ப்பது ஒரளவு அனுகூலமான விஷயம். எதிர்பாராத சொத்துகள் வந்து சேரும்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கு ஜென்ம சனி காலமாகும். கடந்த இரண்டரை ஆண்டுகள் விரைய சனி காலமாக இருந்தது. நிறைய விரைய செலவு செய்தீர்கள். இனி ஜென்ம சனி என்றாலே பாதிப்பு வருமே என்று மகரம் ராசிக்காரர்கள் பயப்பட வேண்டாம். உங்கள் ராசிநாதன் ராசியில் ஆட்சி பெற்று குரு உடன் அமர்கிறார். உடல் ஆரோக்கியம் மேம்படும். நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.
தனியார் நிறுவனங்களில் சக ஊழியர்களின் நட்பும் ஒத்துழைப்பும் கிட்டும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பம் கிடைக்கும். பத்தாம் வீட்டை சனி பார்ப்பதால் போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்கும். பணப்பிரச்சினை நெருக்கடியாகத்தான் இருக்கும் சமாளிக்கலாம் .உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தவிருங்கள்
அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவைநெருங்கிய உறவினர்களால் தேவையற்ற பிரச்சினை ஏற்படும் ஜென்மசனியால் ஏற்படும் பாதிப்புகள் குறைய பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கலாம்.

கும்பம்

கும்பம்

சனி பகவான் விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டில் அமர்வதால் பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். எதிர்பார்த்த விரும்பிய நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கடன்பட்டு பொருட்கள் வாங்க வேண்டிய நிலை வரும். வேலையில் ஊதிய உயர்வு கிட்டும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். அவர் மகரத்தில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். நாவடக்கம் தேவை. உங்கள் ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். ஏழரைசனி காலமாக இருந்தாலும் சனிபகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் உங்களுக்கு கெடுதல்களை செய்ய மாட்டார்.

மீனம்

மீனம்

லாப ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவானால் உங்களுக்கு வருமானம் பெருகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி அமர்வதால் சனிக்கிழமை செய்யும் செயல்கள் வெற்றி கிட்டும். இதுநாள் வரை மனதில் குழப்பமாக இருந்திருக்கும். இனி குழப்பம் நீங்கி நன்மையே நடக்கும். சனிபகவான் 3வதுபார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். 7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். எனவே குழந்தைகளினால் நன்மை நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி வரலாம் கவனம்.

English summary
Sani Peyarchi Palan 2020 Tamil Sani peyarchi 2020 to 2023 predictions for 12 zodiac signs. Elarai Sani for Dhanusu, makaram and Kumbam. Although Saturn is with Guru Bhagavan in Capricorn. Sani bhagavan moves from Sagittarius to Capricorn on the 27th according to the Vakiyappan. Guru and Saturn form an alliance in Capricorn.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X