தைப்பூசம் : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் - 18ல் தெப்பத்திருவிழா
மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தைப்பூசத் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தைப்பூச தெப்பத்திருவிழா தைப்பூச நாளான வரும் ஜனவரி 18ம் தேதி நடைபெற உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சித்திரை திருவிழா, ஆவணி மூலத்திருவிழாவிற்கு அடுத்தபடியாக தை மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இத்திருவிழாவிற்கு தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வர்.
இந்த ஆண்டு தெப்பத்திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி தெப்பக்குளத்தில் நடப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தெப்பத்திருவிழா நடைபெறுவது ஏன்
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அதற்காக ஒவ்வொரு வருடமும் வைகை ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்படும். இந்த ஆண்டு பெருமழை பெய்த காரணத்தால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வண்டியூரில் உள்ள தெப்பக்குளமும் நிறைந்து காணப்படுகிறது. தெப்பத்திருவிழா வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

தெப்பம் முட்டுத்தள்ளுதல்
இதற்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தினசரியும் காலை, இரவு என இருவேளையும் சாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை அதனுடன் வலைவீசி அருளிய லீலை போன்றவையும் நடைபெறும். தெப்பத் திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 16ஆம் தேதியும், அதைத் தொடர்ந்து 17ஆம் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழாவும் நடைபெறும்.

பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா
ஓமிக்ரான் பரவல் மற்றும் கொரானா தொற்று பாதிப்பால் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் யாரும் கொடியேற்ற விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெப்பத்திருவிழா தைப்பூச நாளான வரும் ஜனவரி 18ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அரசின் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தே தெப்பத்திருவிழா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர்
பிரமாண்ட தெப்பக்குளத்தில் நீர் நிரம்பியுள்ளது. இந்த வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் பவனிவரும் அழகைக் காண மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்வார்கள் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக அம்மனை தரிசிக்க முடியுமா என்கிற எதிர்பார்ப்பும் பக்தர்களிடையே உள்ளது.