
மதுரை தைப்பூச தெப்பத்திருவிழா: பொற்றாமரை குளத்தில் வலம் வந்த மீனாட்சி சுந்தரரேஸ்வரர்
மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தைப்பூச தெப்பத்திருவிழா பொற்றாமரைக் குளத்தில் எளிமையாக நடைபெற்றது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த விழாவில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சித்திரை திருவிழா, ஆவணி மூலத்திருவிழாவிற்கு அடுத்தபடியாக தை மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இத்திருவிழாவிற்கு தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வர்.
இந்த ஆண்டு தெப்பத்திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி தெப்பக்குளத்தில் நடப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றம் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது.
பழனியில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்... காவடியுடன் குவிந்த பக்தர்கள் அரோகரா முழக்கம்

தெப்பத்திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள் அணைத்தும் கோவிலுக்குள்ளேயே நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 14ஆம் தேதி வலை வீசி அருளிய லீலையும், 16ஆம் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், கதிரறுப்பு திருவிழாவும் கோவிலுக்குள்ளேயே பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

மதுரை மீனாட்சி
விழாவில் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழாவை, கோவிலுக்குள் உள்ள பொற்றாமரை குளக்கரையில் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அதன்படி நேற்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அதிகாலையில் சேத்தி மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி பொற்றாமரை குளத்திற்கு வந்தனர். அங்கு குளத்தை இருமுறை வலம் வந்து, அங்குள்ள ராணிமங்கம்மாள் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்து விழா பூஜைகள் நடந்தன.

வலம் வந்த அம்மன்
பின்னர் இரவு ஒரு முறை சுவாமியும், அம்மனும் பொற்றாமரை குளத்தை வலம் வந்ததும் தீபாராதனை காண்பிக்கபட்டது. அதை தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வந்து காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெறும் விழா இந்த ஆண்டு பொற்றாமரைக்குளத்தில் நடைபெற்றது பக்தர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

கோவிலுக்குள் தெப்பத்திருவிழா
தை தெப்பத்திருவிழா ஆங்கில வருட தொடக்கத்தின் முதல் திருவிழாவாகும். தெப்பத்திருவிழாவை எப்படியாவது தெப்பக்குளத்தில் வைத்து நடத்தி விடுவோம். அங்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் நிலை தெப்பமாக திருவிழா நடைபெறும். ஆனால். கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள்ளேயே திருவிழாவை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. வரலாற்றிலேயே தெப்பத்திருவிழாவை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் நடத்தியது, இது தான் முதல் முறை என்று பட்டர் ஹலாஸ் தெரிவித்துள்ளார்.