• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றம் மே 4ஆம் தேதி ஆழித்தேரோட்டம்

|

திருவாரூர்: தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. ஏப்ரல் 6ஆம் தேதி பங்குனி உத்திரநாளில் தியாகராஜ சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் மே 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். மேலும், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87 ஆவது சிவத்தலமாகும். இந்த ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான, பெரிய கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

திருவாரூருக்கு பெருமைசேர்க்கும் திருவிழா, ஆழித் தேரோட்டம். ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்ற சிறப்புக்குரிய ஆழித் தேரில், ஆரூரர் அமர்ந்து உலா வரும் திருக்காட்சி, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது. திருவாரூர் நகரமும் ஆலயமும் சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது என்கின்றன புராணங்கள். ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம். இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது.

அசதி தீர மருந்து

அசதி தீர மருந்து

நளனும் சனியும் வழிபட்ட தலம் இது. தியாகேசர் சந்நிதியில், மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்! பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கும். சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.

பங்குனி உத்திரத்தில் பாத தரிசனம்

பங்குனி உத்திரத்தில் பாத தரிசனம்

தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே எம்பெருமான் தியாகேசரது திருப்பாதம் இந்த உலக மக்களுக்கு காட்சியளிக்கும். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று நிகழும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தியாகேசரின் இடது பாதம் மார்கழி திருவாதிரை பதஞ்சலி முனிவர்க்கு காட்சி கொடுத்தார். வலது பாதம் பங்குனி உத்திர நாளில் வியாக்ரபாதருக்கு காட்சி கொடுத்ததாக புராண கதைகள் கூறுகின்றன.

மகா அபிஷேகம்

மகா அபிஷேகம்

இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. ஏப்ரல் 6ஆம் தேதி பங்குனி உத்திரநாளில் மகா அபிஷேகம் நடைபெறும். பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் மே 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழித்தேர் என்றால் அது திருவாரூர் தேரையே குறிக்கும் கடல் போல பரந்து விரிந்த பெரிய தேர் என்பதனாலேயே இத்தேர் ஆழி தேர் என அழைக்கப்படுகிறது.

பிரம்மாண்ட ஆழித்தேர்

பிரம்மாண்ட ஆழித்தேர்

96 அடி உயரமும், முன்னூறு டன் எடையும் கொண்ட ஆழித் தேரின் நான்கு இரும்புச் சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப் படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகு காண்போரை அதிசயிக்க வைக்கும்.

 
 
 
English summary
Thiruvarur Sri Thiyagarajar temple Panguni festival 2020 Started with flaghoisting today morning. The famour car festival azhi therottam on May 4th, 2020.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X