• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனிவாசனுக்கு கடன் கொடுத்த குபேரன்... திருப்பதி ஏழுமலையானை தரிசித்தால் திருமண யோகம் கைகூடும்

Google Oneindia Tamil News

திருப்பதி: வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட வேண்டும் என்று விரும்பினால் திருப்பதி சென்று வாருங்கள் என்று சொல்வார்கள். திருமலையில் வாசம் செய்யும் ஏழுமலையானை தரிசனம் செய்தால் திருப்பம் மட்டுமல்ல தடைகள் நீங்கி திருமண யோகமும் கை கூடி வரும் என்பது நம்பிக்கை. சீனிவாச பெருமாள் திருமணத்திற்காக அந்த குபேரன் கடன் கொடுத்திருக்கிறார். அந்த கடனுக்கு பெருமாள் இன்னமும் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார் என்பது நம்பிக்கை.

கோடீஸ்வர சாமி திருப்பதி ஏழுமலையான். சாதாரண மக்கள் வைகுண்ட வாசல் வழியாக மணிக்கணக்கில் காத்திருந்து இலவச தரிசனம் செய்தால் மிகப்பெரிய பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், நடிகர்களும் விஐபி பிரேக் தரிசனத்தில் சென்று சில நிமிட நேரங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்புகளைப் பற்றி இந்த புரட்டாசி மாதத்தில் அறிந்து கொள்வோம்.

சேஷாத்திரி, நீலாத்திரி,கருடாத்திரி,அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றொரு திருநாமம் உள்ளது.

 பஞ்சாப் அரசியலில் புதிய பரபரப்பு- காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத்சிங் சித்து! பஞ்சாப் அரசியலில் புதிய பரபரப்பு- காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத்சிங் சித்து!

திருமலை திருப்பதி கோவில்

திருமலை திருப்பதி கோவில்

சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில்கொண்டிருக்கிறான். உலகிலேயே அதிகமான பக்தர்கள் வழிபட செல்லும் இந்து கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். கொரோனா காலத்திற்கு முன்பு வரை தினசரியும் சராசரியாக 50 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வந்தனர். பிரம்மோற்சவம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

உண்டியல் வசூல்

உண்டியல் வசூல்

உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் இந்து கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் முதலிடத்தை வகிக்கிறது. திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் தினந்தோறும் சராசரியாக ரூ. 3 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதுவரை ஒரே நாளில் ரூ. 5.73 கோடி உண்டியல் வசூலே சாதனையாக உள்ளது.

    Nayanthara Vignesh Shivan Tirupati Visit | Tamil Filmibeat
    அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான திருவேங்கடம் என குறிப்பிடப்பட்டிருக்கும். காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை காண கண் கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும் போது திருப்பதியில் மட்டும் தினசரியும் பக்தர்கள் கூட்டம் அலைமோத காரணங்கள் உள்ளன.

    பெருமாள் குடியேறக் காரணம்

    பெருமாள் குடியேறக் காரணம்

    கங்கை நதிக்கரையில் காஸ்யப முனிவரின் தலைமையில் முனிவர்கள் சிலர் யாகம் செய்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நாரதர் இந்த யாகம் யாருடைய நன்மைக்காக நடத்தப்படுகிறது என கேட்டார். ஆனால் அங்கிருந்த முனிவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அதனால் பிருகு முனிவரிடம் உதவி கேட்டு சென்றனர். பிருகு முனிவரின் உள்ளங்காலில் ஒரு கண் இருந்ததால் அவருக்கு மற்ற முனிவர்களை விட ஞானம் சற்று அதிகம் இருந்தது. அவர் இதற்கு ஒரு தீர்வு காண நினைத்து பிரம்மனை தரிசிக்க சத்யலோகத்திற்கு சென்றார். அங்கே பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் தனது நான்கு முகங்களாலும் ஸ்ரீமன் நாராயணைப் போற்றி நான்கு வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார்.

    சாபமிட்ட முனிவர்

    சாபமிட்ட முனிவர்

    அவர் பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முனிவர் இவர் வழிபாட்டிற்கு உகந்தவர் இல்லை என முடிவு செய்து சிவப்பெருமானை தரிசிக்க கைலாசம் சென்றார். ஆனால் சிவன் பார்வதிதேவியுடன் ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் அவரும் முனிவரை கண்டுக் கொள்ளவில்லை. முனிவரைக் கண்ட பார்வதிதேவி சிவனிடம் கூற அவரோ தனது முக்கிய ஆலோசனையின் போது முனிவர் குறுக்கிட்டதைக் விரும்பாததால் அவரை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். அதனால் ஆத்திரமுற்ற பிருகு முனிவர் சிவப்பெருமானுக்கு சாபமிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

    எட்டி உதைத்த முனிவர்

    எட்டி உதைத்த முனிவர்


    பின்னர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தார். ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க, மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்ய ஆனந்த சயனத்தில் இருந்ததால் அவரும் முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் மதியிழந்த பிருகு முனிவர் மகாலட்சுமியின் உறைவிடமான மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்தார். முனிவரின் கோபத்தை தணிக்க நினைத்த பெருமாள் எட்டி உதைத்த காலை சட்டென பிடித்து பாதங்களை மென்மையாக அழுத்திவிட்டார். அந்த இதத்தில் முனிவரின் கோபம் தணிந்தது. அதே சமயம் மகாவிஷ்ணு பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பறித்துவிட்டார்.

    மகாலட்சுமியின் பிரிவு

    மகாலட்சுமியின் பிரிவு

    பாதத்தில் இருந்த கண் தான் அவருக்கு இத்தனை அகங்காரத்தை தந்தது. தனது தவறை உணர்ந்த முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்புக் கோரிவிட்டு மும்மூர்த்திகளில் சிறந்தவர் இவரே என முடிவு செய்தார். இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார்.

    பசியை போக்கிய பசு

    பசியை போக்கிய பசு

    அவரைத் தேடிப் பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார். இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர். சூரிய பகவான் மூலம் இதனை அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார். அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள். அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார்.

    பசு மீது கோபம்

    பசு மீது கோபம்

    அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான். அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாலியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார். தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான்.

    விஷ்ணு கொடுத்த சாபம்

    விஷ்ணு கொடுத்த சாபம்

    ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான். அஙகே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு எதுமறியாமல் விழித்தான். அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு அவனது வேலைக்காரன் செய்த குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லாக் காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாய ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.

    பத்மாவதி அவதாரம்

    பத்மாவதி அவதாரம்

    இது அனைத்தும் முன் ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான். பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்கு பிள்ளைப் பேறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அப்போது அதை எடுத்து வளர்த்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான் மன்னன் ஆகாசராஜன்.

    மன்னன் மகள்

    மன்னன் மகள்

    இதனிடையே சீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார். உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம் சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் சீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள்.

    கடன் கொடுத்த குபேரன்

    கடன் கொடுத்த குபேரன்

    செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் திருமணச் செலவுகளுக்காக சீனிவாசனுக்கு கடன் தருகிறார். இரு வீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ சீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைபெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைபெற்ற இடம் தான் திருவேங்கடமலை . அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. திருமலையில் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் பட்டு வஸ்திரங்கள் அனைத்து ஏழுமலையான் ஆலயத்தில் இருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    ஏழுமலையானுக்கு நகைகள்

    ஏழுமலையானுக்கு நகைகள்

    தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர். கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார். 1933ஆம் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொடங்கப்பட்டது.

    மலையப்ப சாமி

    மலையப்ப சாமி

    கோயிலில் மூலவருக்கு தினந்தோறும் 120 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு 383 வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது. ஏழுமலையானின் தங்க பீதாம்பரம் மட்டும் 40 கிலோ எடை கொண்டதாகும். ஏழுமலையானின் ஆபரணங்களில் குறிப்பிடத்தக்க ஆபரணம் 500 கிராம் எடைகொண்ட பச்சை மரகத கல்லாகும். இதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. இந்த பச்சைக்கல் மரகதத்தை விசேஷ நாட்களில் அலங்காரம் செய்ய பயன்படுத்துகின்றனர். சுவாமிக்கு உண்டியல் மூலம் தினமும் சராசரியாக 7 கிலோ வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகின்றனர்.

    பெருமாளுக்கு வியர்க்கும்

    பெருமாளுக்கு வியர்க்கும்

    வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலமாகும். மூலவர் ஏழுமலையானின் திருமேனிக்குப் பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை ரசாயனம் கலந்தது என்பதை அறிவோம். சாதாரண கற்களில் இதைத் தடவி வந்தால், காலப்போக்கில் அந்தக் கல்லில் வெடிப்பு விழும். ஆனால், ஏழுமலையானுக்கு வருடத்தில் 365 நாட்களும் பச்சைக் கற்பூரம் தடவுகிறார்கள்; எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதால், எப்போதும் குளிர் நிறைந்திருக்கும் திருப்பதியில், அதிகாலை குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும் பெருமாளுக்கு வியர்க்குமாம். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏழுமலையானின் திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும் என்கிறார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவார்கள். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் கதகதப்புடன் இருப்பதை உணரமுடியுமாம்.

    வராகசுவாமிக்கு நன்றி

    வராகசுவாமிக்கு நன்றி

    இந்த சம்பவங்கள் நடந்த காலக்கட்டத்தில் திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார். அவரும் மகிழ்ந்து இடமளித்தார். அதற்கு நன்றிக் கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகமும் உள்ளது. திருமணம் நடைபெறுவதில் தடையிருப்பவர்கள் சீனிவாச பெருமாள் கல்யாணத்தை தரிசனம் செய்ய திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது. என்ன வாசகர்களே திருமலை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    English summary
    They will tell you to go to Tirupati if you want life to take a turn. It is believed that not only the twists and turns but also the marriage yoga will come together if one sees the seven mountains that reside in Thirumalai. Kuberan has lent money for the marriage of Srinivasa Perumal. Hopefully Perumal is still paying interest on that loan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X