திருவையாறு தியாகராஜ சுவாமிகள் 175வது ஆண்டு ஆராதனை - பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி
தஞ்சாவூர்: காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சத்குரு தியாகராஜரின் சமாதி வளாகத்தில், இன்று 175வது ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒரே இடத்தில் கூடி தியாகராஜர் பாடிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தினர். திருவையாறு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். கி.பி. 18ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் உள்ள திருவாரூரில் ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர்.
திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார். இவருக்கு 8 வது வயதிலேயே உபநயனம் நடைபெற்றது. நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார். இராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப்படவில்லை.
கொரோனா மட்டுமில்லங்க.. மனித குலத்திற்கு பல சிக்கல் இருக்கு.. ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை

காவிரி கரையில் நினைவிடம்
1847ஆம் ஆண்டில் தமது 80 ஆவது வயதில் தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்தார். அவர் சித்திநிலை எய்துவதற்கு முன் வந்த தசமி இரவில் இன்னும் 10 நாட்களில் இறைவனின் பாதார விந்தத்தைச் சேருவதாகக் கனவு கண்டார். இவரின் பூதவுடலானது அவர்தம் சீடர்களால் தக்க மரியாதைகளுடன் திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது. அங்கேயே அவருக்கு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி தியாகபிரம்மத்திற்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர்.

175வது ஆராதனை விழா
ஆண்டுதோறும் 5 நாட்கள் நடக்கும் ஆராதனை விழா இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி தினத்தில் மட்டும் ஒரு நாள் நிகழ்ச்சியாக நடத்த சபா சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 175வது ஆராதனை விழா தொடங்கியது. முதலில் பஞ்சரத்ன கீர்த்தனையையொட்டி, காலை 6 மணிக்கு திருவையாறு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது.

தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள்
இதையடுத்து அவரது சிலை உஞ்சவிருத்தி பஜனை பாடியபடியும் மேள தாளங்கள் முழங்கவும் பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நாதஸ்வர, மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

இசை அஞ்சலி
இதையடுத்து தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாடகி மகதி உள்ளிட்ட பல்வேறு இசை கலைஞர்கள் கலந்துகொண்டு ஒருமித்த குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும் இசைக்கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட இசைக்கலைஞர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டு உள்ளார்களா என சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.