வைகுண்ட ஏகாதசி கதை: அசுரர்கள் கேட்ட வரம்...சொர்க்க வாசல் திறக்க சம்மதித்த மகாவிஷ்ணு
சென்னை:மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இது மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தனிச்சிறப்பு பெறுகிறது. மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை பாடி பெருமாளை பின் தொடர்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். அந்த நாளில் மகாவிஷ்ணுவை மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு எதுவும் சாப்பிடாமல் இரவில் கண் விழித்து விரதம் இருப்பவர்களுக்காக சொர்க்க வாசலை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் இறைவன்.
மாதத்திற்கு 2 ஏகாதசி என ஆண்டிற்கு 24 ஏகாதசி விரதம் இருந்தாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமைக்குரியது. இந்த நாளில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டும் சொர்க்க வாசல் திறப்பது ஏன் பிற நாளில் சொர்க்க வாசலை மூடியிருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை. இந்த கதைக்கு செல்லும் முன்பு ஏகாதசியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
தீபாவளி, கந்த சஷ்டி என பல பண்டிகைகள் அசுர வதத்தை முன்னிலைப்படுத்தியே கொண்டாடப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசி பண்டிகையும் அப்படி ஒரு அசுரனை வதம் செய்த நாளாகத்தான் உள்ளது. அசுரன் முரனை அழிக்க விஷ்ணுவிடம் இருந்து சக்தியாக அவதரித்தவள் ஏகாதசி. அசுரனை அழித்த உன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பேன் என்று வரம் அளித்தார் பெருமாள். ஏகாதசி என்பதற்கு 11 ஆம் நாள் என்பது பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து அதாவது வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசியின் தத்துவமாகும். இப்படி உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றி உபவாசம் இருப்பதையே ஏகாதசி புண்ணிய தினம் வலியுறுத்துகிறது.

சொர்க்கவாசல் திறக்கப்படும் கதை
இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி. முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள் என்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த மகா விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர். மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக்கொண்டு, ''பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதன்பொருட்டே பெருமாள் ஆலயங்களில் சொர்க்க வாசல் இன்றும் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மோட்சத்துக்கு வழிகாட்டுகிறார் திருமால்!.

அசுரனின் தொல்லை
ஏகாதசி பற்றி மற்றொரு புராண கதை உள்ளது. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகுந்த தொல்லைகள் கொடுத்து வந்தான் முரன் எனும் அசுரன். இதனால் துன்பம் அடைந்த தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களை திருமாலிடம் அனுப்பிவைத்தார் சிவன். உடனே பெருமாளும் தேவர்களை காக்க அசுரனுடன் போரிட்டார். ஆயிரம் ஆண்டுகள் நீடித்த போர் முடிவுக்கு வரவில்லை. பெருமாளோ அசுரனுக்கு பயந்தது போல நடித்து சிம்ஹாவதி என்னும் குகையில் போய் உறங்கி விட்டார். அப்போது திருமாலின் உடம்பில் இருந்து ஒரு சக்தி பெண் வடிவில் வெளிப்பட்டது.

அசுரனை அழித்த ஏகாதசி
அப்போது அங்கேயும் தேடி வந்து பெருமாளை போருக்கு கூப்பிட்டான் முரன். பெண் சக்தியை அழிக்க அசுரன் நெருங்கும் போது, அந்த பெண்ணிடம் இருந்து 'ஹும்' என்ற சத்தம் மட்டுமே எழுந்தது அதுவே அந்த அசுரனை எரித்து சாம்பலாக்கியது. உறக்கத்தில் இருந்து எழுந்த பெருமாள், 'ஏகாதசி' என்று அந்தப் பெண் சக்திக்கு பெயரிட்டார், அதோடு உன்னை வழிபடுபவர் களுக்கு வைகுண்டம் அளிப்பேன் என்றும் வரம் தந்தார். இந்த நாள் முதல் ஏகாதசி விரதம் ஆரம்பமானது மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி' என்று போற்றுகிறோம்.

பரமபத விளையாட்டு
மார்கழி மாதம் மட்டுமின்றி மாதம்தோறும் வரும் ஏகாதசிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனிப் பெயரும், சிறப்பும் உண்டு. இந்த 24 ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்கலாம். 24 ஏகாதசிகளில் மார்கழி மாத ஏகாதசி மட்டுமே மோட்ச ஏகாதசி அல்லது வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் கண் விழித்து விரதம் இருப்பவர்கள் பரமபத விளையாட்டு விளையாடுவார்கள். அந்த விளையாட்டில் பாம்பும், ஏணியும் முக்கியத்துவம் பெருகிறது. ஏணியில் ஏறி செல்லும் போது பாம்பு கொத்தி கீழே இறக்கி விட்டு விடும் ஏற்ற இறக்கம் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துகிறது. பாம்பின் வாயில் கடிபடாமல் தப்பித்தால் பரமபதவாசலை அதாவது சொர்க்கத்தை அடையலாம் என்கிறது இந்த விளையாட்டின் தத்துவம். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விரதம் இருந்து இறைவனிடம் வேண்டிய வரம் பெறுவோம்.