For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த வார ராசி பலன் : ஏப்ரல் 19 2024 முதல் ஏப்ரல் 25 2024 வரை

Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல் மாதத்தில் நான்காவது வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் மேஷ ராசியில் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் கும்ப வீட்டில் அமர்ந்திருக்கிறார். 23 ஆம் தேதி மீனத்திற்கு வருகிறார். புதன் வக்ரகதியில் மீன ராசியில் உள்ளார். மேஷத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் மீனத்தில் இருக்கிறார். 24 ஆம் தேதி மேஷத்திற்கு செல்கிறார். கும்பத்தில் சனி... மீனத்தில் ராகு... கன்னியில் கேது... என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரத்தில் வேறு கிரக மாற்றம் இல்லை.

சந்திரன் இந்த வாரம் சிம்மம் கன்னி துலாம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார்.

தனுசு மகரம் கும்பம் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - மேஷ ராசி
செவ்வாய் - கும்ப - மீன ராசி
புதன் - மீன ராசி
குரு - மேஷ ராசி
சுக்கிரன் - மீன - மேஷ ராசி
சனி -கும்ப ராசி
ராகு - மீன ராசி
கேது - கன்னி ராசி

மேஷம்

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசியில் இருக்கிறார். எப்படியாவது கடனை அடைக்க வேண்டும் என்று கடுமையாக உழைப்பீர்கள். இருப்பினும் அதற்குரிய பலன் கிடைப்பது கடினம். வெளியில் சிக்கல் சிரமங்கள் இருந்தாலும் குடும்பத்தினர் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சிகள் தொழிலுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். சாணக்கியத்தனத்தால் வியாபாரத்தில் சாதனை படைப்பீர்கள். செவ்வாய் 11,12 ஆம் இடத்தில் இருக்கிறார். இஷ்டப்பட்டு கடன் கொடுத்து கஷ்டப்பட்டு வாங்குவீர்கள். தூரதேச பயணங்களின் போது எச்சரிக்கையாக வாகனம் ஓட்டுங்கள். புதன் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை மாறுதல் உத்தரவு வந்து சேரும். நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் பின்புலத்தையும் ஆராய்ச்சி செய்யுங்கள். பெண்களோடு நெருக்கமாக பழக வேண்டாம். குரு 1 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆன்லைன் வர்த்தகங்கள் சாதகமாக அமையாது. மங்கல நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்கி செலவு செய்வீர்கள். சுக்கிரன் 12,1 ஆம் வீட்டில் அமர்ந்து இருக்கிறார். அடுத்தவர் உதவி செய்து காரியம் பார்க்க வேண்டியதில்லை. சுயமாக சிந்தித்து தொழிலில் பெரும் வெற்றி பெறுவீர்கள். சனி 11 ஆம் வீட்டில் இருக்கிறார். நண்பர்கள் தானாக முன்வந்து பண உதவி செய்வார்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக நடக்கும். வெளியூர் பயணங்களில் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். ராகு 12 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். உறவினர்களுடன் சண்டை சச்சரவுகளில் இறங்காதீர்கள். கேது 6 ஆம் இடத்தில் இருக்கிறார் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை மனதை வாட்டும்.

ரிஷபம்

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய கடை திறப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தேவையில்லாத இடையூறுகள் உண்டாகி தானாகவே மறைந்து போகும். விவசாய நிலங்கள் வாங்குவீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி சாதகமான பலனை தரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். முதலாளியின் பாராட்டல் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். செவ்வாய் 10,11 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இனம் தெரியாத மனக்கவலை இதயத்தை அழுத்தும். இரும்பு, நெருப்பு சம்பந்தப்பட்ட இடங்களில் மிகுந்த எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். புதன் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். மனம் போன போக்கில் நடக்காதீர்கள். தேவையில்லாத விவகாரங்களை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள். குரு 12 ஆம் வீட்டில் இருக்கிறார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வீர்கள். அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாட்டரி பந்தயங்களில் ஆதாயம் பெறுவீர்கள். சுக்ரன் 11,12 ஆம் வீட்டில் இருக்கிறார். எடுத்த காரியங்கள் தானாகவே நடக்கும். வியாபாரம் விருத்தி அடைந்து பொருள் சேர்க்கை உண்டாகும். சனி 10 ஆம் வீட்டில் இருக்கிறார். பண வரவு அதிகம் இருக்கிறது என்று ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். அதுவே உங்களுக்கு பிரச்சனையை கொண்டு வரும். ராகு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சிரமப்படுவீர்கள். கேது 5 ஆம் இடத்தில் இருக்கிறார். சிக்கலான காரியங்களில் அசாத்தியமான துணிச்சலுடன் முடிவெடுத்து வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம்

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வெளிநாடு செல்ல வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்களா... தாராளமாக ஏற்பாடு செய்யுங்கள். வெற்றி கிடைக்கும் உங்களுக்கு. தேவையான பணத்தை நண்பர்கள் தர தயாராக இருப்பார்கள். சந்திரனின் சஞ்சாரமும் நற்பலன்களை கொடுக்கும். புதிய முறைகளை புகுத்தி வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தொழில் துறைகளில் இருந்த இடையூறுகள் நீங்கி பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். செவ்வாய் 9,10 ஆம் இடத்தில் இருக்கிறார்‌. வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்குவீர்கள். உங்களின் நிதானமான போக்கால் விரோதிகளையும் நண்பர்களாக மாற்றுவீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பெறுவீர்கள். புதன் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். திட்டமிட்ட வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமைந்து தன வரவை உண்டாக்கும். தொட்ட காரியம் தடையில்லாமல் துலங்கும். சிறு வியாபாரிகள் பெரும் லாபம் பெறுவார்கள். குரு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். தனியார் துறை ஊழியர்கள் நல்ல வருமானம் பெறுவார்கள். அரசாங்க ஊழியர்களுக்கு இடம் மாற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க நண்பரின் உதவி கிடைக்கும். சுக்கிரன் 10,11 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தள்ளிப்போன திருமண காரியங்கள் நடக்கும். வீட்டில் மழலை சத்தம் எதிரொலிக்கும். பழைய வீட்டை புதுப்பித்து அலங்காரம் செய்வீர்கள். சனி 9 ஆம் இடத்தில் இருக்கிறார். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் அவமானத்தால் மனம் குன்றி போவீர்கள். ராகு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். கேது 4 ஆம் இடத்தில் இருக்கிறார். தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்வீர்கள்.

கடகம்

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். மனதை வாட்டிய கவலைகள் படிப்படியாக குறையும். ஆன்லைன் வர்த்தகங்களின் மூலமாக பணத்தை அள்ளுவீர்கள். குடும்பத்தில் பல நல்ல காரியங்கள் நடக்கும். சந்திரனின் இடப்பெயர்ச்சி சாதக பாதகமான பலன்களையே கொடுக்கும். வியாபாரத்திற்கு எதிராக சிலர் வில்லங்கம் செய்வார்கள். அதை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். செவ்வாய் 8,9 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளிநாட்டிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கான அனுமதி பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் பண சேர்க்கை உண்டாகும். குடும்ப கவலை மறந்து மன நிம்மதி ஏற்படும். புதன் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆன்மீகப் பெரியோர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். ஆலய தரிசனங்கள் செய்வீர்கள். குரு 10 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். ஐடி ஊழியர்கள் புதிய சாதனை படைப்பார்கள். வாகனம் வாங்குவீர்கள். சுக்ரன் 9,10 ஆம் வீட்டில் இருக்கிறார். எதிரிகள் பணிந்து நடப்பார்கள். பதவி உயர்வும் பாராட்டும் கிடைக்கும். சனி 8 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள். சின்ன சின்ன இடையூறுகள் ஏற்படும். ராகு 9 இடத்தில் இருக்கிறார். ஆடம்பரமாக செலவு செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து வைப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் மேலோங்கி மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். கேது 3 ஆம் இடத்தில் இருக்கிறார். பெற்றோர் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம். மருத்துவ செலவு உண்டாகும். செலவுகள் கைமீறி போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
உங்கள் ராசிநாதன் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். அதிகமான அலைச்சல் ஏற்படும். அதன் பிறகு காரியங்கள் கைகூடிவரும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். திருட்டு போவதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் கோபத்தை காட்டாதீர்கள். வீண் மனத்தாங்கல் உருவாகலாம். சந்திரனின் நகர்வுகள் தொழிலுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். செவ்வாய் 7,8 ஆம் இடத்தில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடக்கும். பங்கு பரிவர்த்தனையில் தைரியமாக முதலீடு செய்யலாம். தொழில் விரோதிகளை துணிவுடன் வீழ்த்துவீர்கள். புதன் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலில் இறங்குவதா வேண்டாமா என்ற அச்சம் உண்டாகும். வீட்டுப் பெண்களின் ஆசையை பூர்த்தி செய்ய கடன் வாங்கி செலவு செய்வீர்கள். குரு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசனை செய்து தொடங்குங்கள். அவசரப்பட்டு யாரையும் நம்பி விடாதீர்கள். சுக்கிரன் 8,9 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். கூட்டுத் தொழிலில் சிறப்பான லாபத்தை பெறுவீர்கள். சனி 7 ஆம் வீட்டில் இருக்கிறார். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். ராகு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவி மரியாதை குறைவாக நடந்து கொள்வார் அதனால் மனக்கவலை அடைவீர்கள். வெளியூர் பயணங்கள் வீண் அலைச்சலை மட்டுமே கொடுக்கும். கேது 2 ஆம் இடத்தில் இருக்கிறார். வரவுக்கு மேல் செலவு வந்து வாட்டும். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வீர்கள்.

கன்னி

கன்னி

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
சூரியன் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். சேர்ந்தாரைக் கொல்லும் சினம் என்பது பழமொழி. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இல்லையென்றால் குடும்பத்தில் கலகம் பிறக்கும். சந்திரனின் நகர்வுகள் அவ்வளவு சாதகமாக இல்லை. தொழிலில் மந்தமான போக்கே காணப்படும். வியாபாரத்தில் தேவையில்லாத சிக்கல்கள் உருவாகும். அரசாங்க காரியங்களில் இடையூறுகள் ஏற்படலாம். செவ்வாய் 6,7 ஆம் இடத்தில் இருக்கிறார். என்னதான் இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டி பெற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள். திட்டமிட்டு பயணங்களை மேற்கொள்ளுங்கள். தேவையில்லாத அலைச்சலுக்கு ஆளாகாதீர்கள். புதன் 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். கூடையிலே நண்பர் குணம் அறிந்து கூட வேண்டும். இல்லையென்றால் கூடையிலே வார்த்தைகளை கொட்டுகின்ற நிலைவரும். மேலதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வார்கள். குரு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். திருமணப் பேச்சுவார்த்தையில் இடையூறு ஏற்படும். காதலியிடம் மனம் விட்டு பேச தவிப்பீர்கள். சுக்கிரன் 7,8 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய ஆடை அணிமணிகள் வாங்குவீர்கள். நகைகள் வாங்குவதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். சனி 6 ஆம் வீட்டில் இருக்கிறார். அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் தொல்லைகள் கழுத்தை நெரிக்கும். ராகு 7 ஆம் வீட்டில் இருக்கிறார். உங்கள் வீட்டு விஷயத்தில் மாமியார் மூக்கை நுழைப்பார்.
கேது 1 ஆம் இடத்தில் இருக்கிறார். செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெறுவீர்கள்.

துலாம்

துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
சூரியன் 7 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தொழிலுக்குத் தேவையான பணத்தை புரட்ட படாத பாடுபடுவீர்கள். இந்த நேரத்தில் குடும்பத்தின் மூலமாகவும் சில சிக்கல்களும் சிரமங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சந்திரன் இடமாற்றம் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு கூடும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். செவ்வாய் 5,6 ஆம் இடத்தில் இருக்கிறார். நான்தான் உயர்ந்தவன் என்று மார்தட்ட முடியாது. உங்களை விட வயது குறைந்தவரிடம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய கட்டாயம் ஏற்படும். புதன் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலுக்கு இடையூறு செய்ய எதிரிகள் தோன்றுவார்கள். கடனை அடைக்க முடியாமல் கெட்ட பெயர் எடுப்பீர்கள். குரு பகவான் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்தில் சில சங்கடங்கள் உண்டாகும். தொழில் காரணமாக குடும்பத்தை பிரிந்து செல்வீர்கள். சுக்ரன் 6,7 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்திற்கு தேவையான காரியங்களை முன்னெச்சரிக்கையுடன் செய்யுங்கள். சிலருக்கு திருமணம் நடைபெறும். சனி 5 ஆம் இடத்தில் இருக்கிறார். வரவுக்கு மீறி செலவு வந்து வாட்டும். சில நூதனமான நோய்கள் தொல்லை கொடுக்கும். ராகு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். மேலதிகாரிகள் அனுசரணையாக இருக்க மாட்டார்கள். தெய்வ பக்தியில் மனதை செலுத்துவீர்கள். வெளியூர் பிராயணங்களால் சில நன்மைகள் அடைவீர்கள். கேது 12 ஆம் வீட்டில் இருக்கிறார். உயிருக்கு ஆபத்தை விளைவிக்காத சிறிய விபத்துகள் நடக்கலாம். குடும்பத்தில் துன்பமும் கவலையும் சூழ்ந்து நிற்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
சூரியன் 6 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அமோக வருமானம் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் சிறப்பான லாபத்தை கொடுக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். எந்த வகையிலாவது பொருள் வரவு இருக்கும். சந்திரனின் நகர்வுகள் வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை கொண்டு வரும். விளைநிலங்கள் வாங்குவீர்கள். விவசாயத்தின் மூலமாக நல்ல பலன் அடைவீர்கள். செவ்வாய் 4,5 ஆம் இடத்தில் இருக்கிறார். எவ்வளவு தான் நெருக்கமான நண்பராக இருந்தாலும் ஆபத்து சமயத்தில் கைவிரிப்பார். அடுத்தவருக்கு நல்லது செய்வீர்கள். ஆனால் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும். அதனால் மன நிம்மதி இழப்பீர்கள். புதன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலில் புதிய திருப்பத்தை சந்திப்பீர்கள். வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபடுவீர்கள். குரு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு அனுகூலமான காலம் இது. பதவி உயர்வு கிடைக்கும். பெற்றோர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புது மனை வாங்குவீர்கள். சுக்ரன் 5,6 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிறு வியாபாரிகள் பெரிய லாபம் பார்ப்பார்கள். சனி 4 ஆம் இடத்தில் இருக்கிறார். கூட இருந்து குழி பறிக்க நினைத்த எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். ராகு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆடல் பாடல் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். கேது 11 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர்களை அதிகம் நம்ப வேண்டாம். சிக்கலை உண்டு பண்ணுவார்கள்.

தனுசு

தனுசு

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்க காரியங்களில் சில தடைகள் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். சந்திரனின் இடப்பெயர்ச்சி வியாபாரத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். செவ்வாய் 3,4 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆசைப்பட்ட வாகனத்தை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்ததை விட வியாபாரத்தில் அதிக லாபம் அடைவீர்கள்‌. புதன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். காதல் விவகாரங்கள் கை கூடி வரும். குடும்பத்தில் புதிய ஜீவன் வருகையால் மகிழ்ச்சி பொங்கும். குரு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆரோக்கியத்திற்கு பங்கம் உண்டாகி மன நிம்மதி குறையும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். சுக்கிரன் 4,5 ஆம் இடத்தில் இருக்கிறார். பிடிவாதமாக நின்று தொழிலில் மேன்மையை கொண்டு வருவீர்கள். சனி 3 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆன்லைன் வர்த்தகங்கள் சிறப்பாக நடக்கும். நில விற்பனை நல்ல லாபத்தை கொடுக்கும். ராகு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். அலுவல் சுமையும் அலைச்சல் மிகுதியும் ஒரு இடத்தில் உங்களை இருக்க விடாது. மேலதிகாரிகளின் அன்பு உங்களை உற்சாகப்படுத்தும். கேது 10 ஆம் இடத்தில் இருக்கிறார். நேற்று நினைத்த காரியங்கள் இன்று நடக்கும். வெளிவட்டாரங்களில் புகழும் செல்வாக்கும் அடைவீர்கள்.19,20 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள்.

மகரம்

மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
சூரியன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் சிரமம் உண்டாகும். பெற்றோர் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகலாம். எதிர்பார்த்த இடங்களில் உதவி கிடைக்க தாமதமாகும். சந்திரனின் இடப்பெயர்ச்சி தொழிலில் ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்கும். வியாபாரத்தில் வில்லங்கம் தோன்றி பின்னர் மறையும். செவ்வாய் 2,3 ஆம் இடத்தில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். புதிய வீடு கட்டி குடி போவீர்கள். சகோதரருக்கு பண உதவி செய்வீர்கள். புதன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். நியாயமான விஷயமாக இருந்தாலும் நண்பர்களிடம் விவாதம் செய்யாதீர்கள். உறவுக்குள் விரிசலை உண்டு பண்ணிவிடும். குரு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்க உத்தியோகத்தில் விரும்பாத இடத்துக்கு மாறுதல் உண்டாகும். தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டி வரும். சுக்கிரன் 3,4 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கலை துறையினர் புதிய சாதனை படைப்பீர்கள். சனி 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். ராகு 3 ஆம் வீட்டில் இருக்கிறார். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பாராத விதமாக பணம் வரும். ஆனால் கையில் தங்குவது கடினம். சேமிப்பை அதிகரிக்க சிறப்பாக திட்டமிட வேண்டும். கேது 9 ஆம் இடத்தில் இருக்கிறார். தெய்வ திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்து வாங்குவதில் முனைப்பு காட்டுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும். 21,22 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

கும்பம்

கும்பம்

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
சூரியன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். இரு மடங்கு எச்சரிக்கையுடன் தொழிலில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத தொல்லைகளை தூர ஓட்டி விடுவீர்கள். கவனக்குறைவாக இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சந்திரனின் சஞ்சாரம் தொழில் அபிவிருத்திக்கு துணையாக இருக்கும். பெரியோர்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். விரோதிகளின் எதிர்ப்பால் விளையும் தீமையை விவேகத்தால் வெற்றி கொள்வீர்கள். செவ்வாய் 1,2 ஆம் இடத்தில் இருக்கிறார். உங்களை வீழ்த்த விரோதிகள் சுறுசுறுப்பாக திட்டம் போடுவார்கள். அதை தாண்டித்தான் காரியங்கள் செய்ய வேண்டும்‌. மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். புதன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். ஏதாவது காரணத்தால் தடைப்பட்ட காரியங்கள் இடையூறின்றி கைகூடிவரும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். பெண்கள் மூலமாக பொருள் ஆதாயம் கிடைக்கும். குரு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் புதிய ஜீவன் ஒன்று உருவாகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தியை பெருக்குவீர்கள். சுக்கிரன் 2,3 ஆம் இடத்தில் இருக்கிறார். நம்பிக்கையுடன் ஒரு காரியத்தை செய்வீர்கள். அதில் நல்லது நடக்காது. ஆனால் அவநம்பிக்கையோடு ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். அது எதிர்பாராத பண வரவைக் கொண்டு வரும். சனி ராசியிலேயே அமர்ந்து இருக்கிறார். அதிகம் லாபம் கிடைக்கிறதே என்று அடுத்தவர் பேச்சை கேட்டு தீய காரியங்களில் இறங்கி விடாதீர்கள். போலீஸ் விசாரணை வளையத்தில் சிக்கிக் கொள்வீர்கள். ராகு 2 ஆம் இடத்தில் இருக்கிறார். பெண்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். கேது 8 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் நிலவும் குழப்பத்தை தீர்க்க சிரமப்படுவீர்கள்.23,24 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

மீனம்

மீனம்

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே....
சூரியன் 2 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். கணவனின் வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் செலவு வைப்பதிலேயே மனைவி குறியாக இருப்பார். தூரதேச பயணங்களை இந்த வாரத்தில் தள்ளி வைப்பது நல்லது. உறவினர்களிடமும் நண்பர்களிடமும் வீண்வம்பு வராமல் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். உலவுகின்ற நிலவும் உங்களுக்கு உதவியாக இல்லை. தொழிலில் மந்தமான நிலை காணப்படுகிறது. வியாபாரத்தை விருத்தி செய்ய இரவு பகலாக உழைப்பீர்கள். செவ்வாய் 12,1 ஆம் இடத்தில் இருக்கிறார். விவசாய உற்பத்தியை பெருக்க ஆர்வமுடன் செயல்படுவீர்கள். தோப்புக் குத்தகை மூலமாக நல்ல லாபம் பார்ப்பீர்கள். சகோதர சகோதரிகளின் ஆதரவு உண்டு. புதன் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலில் துணிவோடு முதலீடு செய்யுங்கள். நல்ல பலனை அடைவீர்கள். லாட்டரி பந்தயங்களில் ஈடுபட வேண்டாம். ஆன்லைன் சூதாட்டங்களை மனதால் நினைக்காதீர்கள். குரு 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அனாவசியமான செலவுகள் வந்து பணப்பையை காலி செய்யும். அலைச்சலும் பண விரயமும் அதிகரிக்கும். சுக்கிரன் 1,2 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்துரு. எந்த நேரத்திலும் நிதானத்தை கைவிடாதீர்கள். நல்ல நண்பர்கள் விரோதியாக மாறிவிடுவார்கள். சனி 12 ஆம் இடத்தில் இருக்கிறார். வாகனங்களில் செல்லும்போது வளைவுகளில் வேகத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்வாராத விபத்துகள் ஏற்படலாம். ராகு 1 ஆம் இடத்தில் இருக்கிறார். தான தர்மங்களில் மனம் நாட்டமடையும். கேது 7 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளால் பண செலவு உண்டாகும். 25 ஆம் தேதி சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.

English summary
Intha vara rasi palan in tamil weekly horoescope for 12 zodiac signs mesham to meenam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X