• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

இந்த வார ராசி பலன் : ஜூலை 1, 2022 முதல் ஜூலை 7, 2022 வரை

Google Oneindia Tamil News

சென்னை: ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மேஷ ராசியில் செவ்வாய், ராகு,... ரிஷப ராசியில் புதன், சுக்கிரன்...மிதுன ராசியில் சூரியன், ...துலா ராசியில் கேது... கும்பத்தில் சனி... மீனத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஜூலை 2 ஆம் தேதி புதன் மிதுன ராசிக்கு செல்கிறார். . மற்ற கிரகங்களில் மாறுதல் இல்லை. ஜூலை 1, 2022 முதல் ஜூலை 7, 2022 வரை வார ராசிபலன்களைப் பார்க்கலாம்.

சந்திரன் இந்த வாரம் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - மிதுன ராசி
செவ்வாய் - மேஷ ராசி
புதன் - ரிஷப ராசி- மிதுன ராசி
குரு - மீன ராசி
சுக்கிரன். - மிதுன ராசி
சனி - கும்ப ராசி-மகர ராசி
ராகு. - மேஷ ராசி
கேது - துலாம் ராசி

மேஷம்

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார். பிடிவாதமாக இருந்து எந்தக் காரியத்தையும் சாதிக்க முயற்சி செய்வீர்கள். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெறுவீர்கள். செவ்வாய் உங்கள் ராசியிலேயே அமர்ந்து இருக்கிறார் அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்காதீர்கள். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்யுங்கள். புதன் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். அரசுத் துறை வேலை வாய்ப்புக்கான தேர்வுகளை நம்பிக்கையோடு எழுதுங்கள். கலைத்துறையினருக்கு இந்த வாரம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் இருக்கிறார். எதிர்பார்த்த காரியம் தாமதமாக நடக்கும். திட்டமிட்ட திருமணங்கள் தள்ளிப்போகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற சிரமப்படுவீர்கள். சுக்கிரன் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் அடம்பிடிக்காதீர்கள். விட்டுக் கொடுத்துப் போங்கள். வெளியூர்ப் பயணங்களில் தொழிலுக்கு தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். வசீகரமாக பேசி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள். சனி பகவான் பதினோராம் வீட்டில் இருக்கிறார். இரும்பு உலோகப் பொருள் வியாபாரம் அமோகமாக நடக்கும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். நிலையான வருமானத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார். திறமையாகச் செயல்பட்டு அரசாங்க உதவிகளைப் பெறுவீர்கள். துடிப்புடன் நடந்து தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள். குடும்பத்தினரின் தேவை அறிந்து நடந்து கொள்வீர்கள். சந்திரனின் சஞ்சாரம் வியாபாரத்திற்குத் தேவையான உதவிகளைக் கிடைக்கும்படி செய்வார். செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனம் தேவை. சாலையைக் கடக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் வேண்டாம். நிலம் வாங்கினால் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். புதன் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். உங்கள் வாக்கு பலிதமாகும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நடக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். குரு பகவான் 11-ஆம் வீட்டில் இருக்கிறார்‌ எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும்‌ அரசுத்துறை ஊழியர்கள் புதிய வீடு கட்ட திட்டம் போடுவார்கள். முதலாளிகளின் பாராட்டுதலால் பணியாளர்கள் பெருமிதம் அடைவார்கள். புதிய வீடு வாங்கலாம், அல்லது மாறலாம். சனிபகவான் 10-ம் இடத்தில் இருக்கிறார். பங்குச்சந்தை வியாபாரம் படுஜோராக நடக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும். ராகுவும் கேதுவும் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை நடத்தி வைப்பார்கள்.

மிதுனம்

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
நியாயமான பிரச்சனை என்றாலும் நிதானமாகப் பேசுங்கள். வார்த்தைகளால் உறவுகள் காயம் படக்கூடாது. வியாபாரத்தில் நுணுக்கமாக நடந்து கொள்ளுங்கள். கமிஷன் வியாபாரம் லாபத்தை அள்ளிக் கொடுக்கும். சந்திரனில் நிகழ்வுகள் சாதகமாக இருக்கின்றன. கூட்டாகச் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் வெற்றி காண்பீர்கள். செவ்வாய் பதினொன்றாம் வீட்டில் இருக்கிறார். வீடு கட்டும் தொழில் விறுவிறுப்பாக நடைபெறும். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பீர்கள். புதன் ராசியிலேயே அமர்ந்து இருக்கிறார். பேராசிரியர்கள்,வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவார்கள். புத்திசாலித்தனமாக வியாபாரத்தை நடத்துவீர்கள். குரு பகவான் பத்தாம் வீட்டில் இருக்கிறார். எதிர்பார்த்த வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் மீது சிலர் துவேஷம் ஆக இருப்பார்கள். சுக்கிரன் ராசியிலேயே அமர்ந்து இருக்கிறார். மங்கல காரியங்கள் தடையில்லாமல் நடக்கும் சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். மனரீதியான குழப்பங்கள் வந்து விலகும். தந்தையாருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். ராகு பகவான் 11 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கேது பகவான் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். பிள்ளைகளுக்கான கல்விச் செலவு அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருக்கிறார். பணம் கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். வாங்கிய நபர் வார்த்தை மாறிப் பேசலாம். உங்கள் உதவியைப் பெற்றவர்கள் உங்களுக்கு எதிராக மாறலாம். சந்திரன் பாதகமான நிலையில் இருக்கிறார் ஆகவே, எந்தப் பொருளையும் அலட்சியமாக கண்ட இடத்தில் வைக்காதீர்கள். செவ்வாய் பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தொழில் மிகச் சிறப்பாக நடைபெறும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். புதன் 12-ம் வீட்டில் இருக்கிறார். ஏதோ ஒருவகையில் மனச் சஞ்சலம் மனக் குழப்பம் உருவாகும். குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் தோன்றும். குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சனி பகவான் 7 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். உடல்ரீதியான பாதிப்புகளை சந்திப்பீர்கள். வெளியூர்ப் பயணங்கள் அலைச்சலில் முடியும். யாருக்காகவும் வக்காலத்து வாங்காதீர்கள். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாதீர்கள். ராகு பகவான் பத்தாம் வீட்டில் இருக்கிறார். அரசாங்க உதவி கண்டிப்பாக நடக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அரிய காரியங்களைப் பார்ப்பீர்கள். கேது 4-ஆம் வீட்டில் இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே இறுக்கமான நிலை உருவாகும். மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
உங்கள் ராசிநாதன் 11- ஆமிடத்தில் இருக்கிறார். உங்கள் உதவியால் பல நல்ல காரியங்கள் நடக்கும். திட்டம் போட்டு எந்தச் செயலையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கையிருப்பு கணிசமாக உயரும். செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். மணல் ஜல்லி செங்கல் போன்ற வியாபாரங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக நடக்கும். ஊழியர்கள் உற்பத்தியை அதிகப்படுத்திக் காட்டுவார்கள். புதன் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்திற்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்‌. நடக்குமா என்ற காரியத்தை தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். குரு பகவான் எட்டாமிடத்தில் இருக்கிறார். முக்கியமான வெளியூர்ப் பயணங்களைத் தவிர மற்றவற்றை தள்ளிப்போடுங்கள். நிலம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் இப்போது வேண்டாம். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஆகும். சுக்கிரன் பதினொன்றாம் வீட்டில் இருக்கிறார். கலைத்துறையினருக்கு பிரகாசமான வாய்ப்புக் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். காதலர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். சனிபகவான் ஏழாம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் குழப்ப நிலை உருவாகும். பிள்ளைகளின் நடவடிக்கையை அணுக்கமாகக் கண்காணியுங்கள். ராகு ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். கடல்கடந்து போவதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். கேது பகவான் 3-ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரத்திற்கு எதிர்ப்புகள் தோன்றும். அவற்றை வேரோடு பிடுங்கி எறிவீர்கள். எதிரிகள் பயப்படுவார்கள்.

கன்னி

கன்னி

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
சூரியன் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். எந்தக் காரியமாக இருந்தாலும் தடையில்லாமல் நடக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் தொழிலுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். சந்திரனின் சஞ்சாரம் சற்று சாதகமாக இல்லை. ஆகவே, பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். அநாவசியமாக யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார். கணவனுக்கும் மனைவிக்கும் வாய்ச்சண்டை கைச் சண்டையாக மாறலாம். அனுசரித்துப் போவது அனுகூலமான பலனைத் தரும். போட்டி பந்தயங்களில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டாம். புதன் பத்தாம் வீட்டில் இருக்கிறார். மருத்துவத் துறை மாணவர்கள் சாதனை படைப்பார்கள். கல்லூரியில் சேருவதற்காக அக்கறையோடு செயல்படுவார்கள். குரு பகவான் ஏழாம் வீட்டில் இருக்கிறார். தள்ளிப் போன திருமணம் காரியங்களை கில்லி மாதிரி சொல்லி முடிப்பீர்கள். உங்களைத் தேடி வந்த காதல் ஜோடிகளை இணைத்து வைப்பீர்கள். சனி பகவான் ஆறாம் வீட்டில் இருக்கிறார். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். தொழில் போட்டியாளர்களை மண்ணைக் கவ்வ வைப்பீர்கள். ராகு பகவான் எட்டாமிடத்தில் இருக்கிறார். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள். அது தேவையில்லாத விவகாரத்தை கொண்டு வரும். கேது பகவான் இரண்டாமிடத்தில் இருக்கிறார். வாங்கிய கடனைக் கொடுக்கவில்லை என்றால் அவமானங்கள் வந்து சேரும்.

துலாம்

துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
உங்கள் ராசிக்கு 9- ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். தொழிலுக்காக விண்ணப்பம் செய்த லைசென்ஸ் சற்று தாமதமாக கிடைக்கும். வேலையாட்கள் உங்கள் எண்ணப்படி நடக்க சிரமப்படுவார்கள். வெளிவட்டார செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். சந்திரனின் சஞ்சாரம் உங்களுடைய தொழிலுக்கு ஓரளவு உதவியாக இருக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார். பேசி முடிவு செய்த திருமணங்கள் கூட தள்ளிப்போகலாம். மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று பெண்ணும் பெண்ணைப் பிடிக்கவில்லை என்று மாப்பிள்ளையும் முரண்பாடலாம். புதன் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். தொழிலுக்குத் தேவையான புதிய ஒப்பந்தங்களைப் போடுவீர்கள். குரு பகவான் ஆறாம் வீட்டில் இருக்கிறார். நீண்டகாலமாக உங்களைப் பாதித்த நோய்த் தொந்தரவில் இருந்து விடுபடுவீர்கள். பிரிந்து போன உறவுகளை இணைக்க பெரும் முயற்சி எடுப்பீர்கள். உங்களைப் கெடுக்க நினைத்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். சனி பகவான் 5-ம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ராகு 7ஆம் வீட்டில் இருக்கிறார். எலியும் பூனையுமாக இல்லறம் நடக்கும். உங்களை புரியவைக்க பெரும் முயற்சி எடுப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை கைவிடாதீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
சூரியன் மாங்கல்ய ஸ்தானத்தில் இருக்கிறார். வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டவில்லை என்றால் கொடுத்தவர் வீட்டு வாசலில் வந்து நிற்பார். வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்துங்கள். அலட்சியமாக இருந்து வேலையை இழந்து விடாதீர்கள். உலவுகின்ற நிலவு உங்களின் வியாபாரத்திற்கு உதவிகரமாக இருக்கும். செவ்வாய் ஆறாம் வீட்டில் இருக்கிறார். வியாபாரத்திற்குப் போட்டியாக புதிய எதிரிகள் தோன்றுவார்கள். கடுமையான உழைப்பால் அவற்றைச் சமாளிப்பீர்கள். புதன் எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அடுத்தவர் பேச்சைக் கேட்டால் உங்களுடைய மூளை குழம்பி விடும். சுயமாகச் சிந்தித்து முடிவெடுங்கள். குரு பகவான் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்‌. உறவினர்கள் வருகையால் வீட்டில் விருந்து நிகழ்ச்சிகள் நடக்கும். சுக்கிரன் எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தொழிலில் ஏற்ற இறக்கத்தைச் சந்திப்பீர்கள். தக்க சமயத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் கிடைக்காது. முதலாளியின் அன்பைப் பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். சனி பகவான் மூன்றாம் வீட்டில் இருக்கிறார்‌. இடையூறுகள் எத்தனை வந்தாலும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடுமையான போட்டி களுக்கிடையே வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

தனுசு

தனுசு

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
சூரியன் ஏழாம் வீட்டில் அமர்ந்து இருக்கிறார். ஓடிப் போன உறவுகளைத் தேடிப்பிடித்து ஒன்று சேர்ப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். சந்திரனின் நிலை சாதகமாக இல்லை. நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். ஆணோ பெண்ணோ முறைதவறிய பழக்கத்தைக் கைவிடுங்கள். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். கடந்த காலத்தில் வாங்கிய நிலத்தை பத்திரப் பதிவு செய்வீர்கள். கட்டுமானத்துறையில் கவனத்தைச் செலுத்துவீர்கள். புதன் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். புதிய முயற்சியில் வியாபாரத்தில் அதிக லாபம் பார்ப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகளை வங்கியில் இருந்து பெறுவீர்கள். அரசாங்க ஊழியர்கள் சிறப்பாக பணி செய்வார்கள். பலனும் பெறுவார்கள். குரு பகவான் நான்காம் வீட்டில் இருக்கிறார்‌. பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். நினைத்த காரியங்கள் கைகூடிவரும். ஆன்லைன் வியாபாரம் அதிக லாபத்தைக் கொடுக்கும். ஐடி ஊழியர்கள் புதிய சாதனை படைப்பார்கள். சுக்கிரன் ஏழாம் வீட்டில் இருக்கிறார். கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்துகொள்வார்கள். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி பகவான் இரண்டாம் வீட்டில் இருக்கிறார்‌. வாகனத்திற்குகான தவணைப் பணத்தை முறையாகச் செலுத்தி விடுங்கள். யாருக்கும் நகைகளை இரவல் கொடுக்காதீர்கள். 1,2 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம்.

மகரம்

மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
சூரியன் ஆறாம் வீட்டில் இருக்கிறார். எந்தக் காரியத்திலும் சுறுசுறுப்பாக இறங்குவீர்கள். புதிய திட்டங்கள் மூலம் தொழிலை மேம்படுத்துவீர்கள். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். நல்ல நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தொழில் போட்டியாளர்களை புறமுதுகு காட்டி ஓட வைப்பீர்கள். செவ்வாய் நான்காம் வீட்டில் இருக்கிறார். நீண்ட காலமாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீர்கள். வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் இறங்குவீர்கள். சிலர் புதிய வீடு கட்டுவதற்காக இன்ஜினியரிடம் கலந்து ஆலோசனை செய்வார்கள். புதன் ஆறாம் வீட்டில் இருக்கிறார். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். ஊர் சுற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வியாபார ஒப்பந்தங்களை நன்கு படித்துப் பாருங்கள். குரு பகவான் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். முழுமையாக முயற்சி செய்தால் எந்தக் காரியத்திலும் வெற்றிதான். சகோதரர்கள் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். புதிய ஆர்டர்களைப் பெறுவதற்காக வெளியூர்ப் பயணம் செல்வீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடாதீர்கள். சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருக்கிறார். வாக்குவாதம் செய்தால் வாழ்க்கையே நரகமாகிவிடும். பொறுப்போடு நடந்து வெறுப்புகளைத் தணித்துக் கொள்ளுங்கள். சனி பகவான் ராசியிலேயே இருக்கிறார். கையில் காசு இருந்தால் பையில் வைத்து இருக்காதீர்கள். வங்கியில் சேமிப்பாக மாற்றுங்கள். 3,4,5 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம்.

கும்பம்

கும்பம்

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
சூரியன் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அரசாங்கத்தின் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தள்ளிப் போகும். இருள் சூழ்ந்த மனதில் ஏதோ ஒரு கவலை அழுத்திக் கொண்டிருக்கும். வெளியூர்ப் பயணங்களின் போது பொருட்சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சந்திரனின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. வீட்டிலும் வெளியிலும் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவால் பணவிரயம் ஏற்படும். செவ்வாய் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். ஏதாவது ஒரு வகையில் பொருள் சேர்க்கை உண்டாகும். விருப்பமான நண்பர்களுடன் இன்பமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீழ்த்த நினைத்த விரோதிகளின் சூழ்ச்சிகள் பயனற்றுப் போகும். புதன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே வீண் மனத்தாங்கல் ஏற்படும். உறவினர்கள் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை மாறுதலால் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். வியாபாரத்தில் தடைகள் உண்டாகும். தொழில் மந்தமாக நடக்கும். பிற பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மனதை அலைபாய விடாதீர்கள். ராகு மூன்றாம் இடத்தில் இருக்கிறார். சகோதரர்களுக்கு செலவு செய்ய கடன் வாங்குவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது. கேது ஒன்பதாமிடத்தில் இருக்கிறார். நல்ல பலன்கள் கிடைக்கும் .குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். எதிர்பாராத வகையில் உறவினர்களின் சொத்தில் உங்களுக்கு ஒரு பகுதி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.6,7 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம்.

மீனம்

மீனம்

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே....
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். செலவுகள் திடீர் திடீரென வரும். ஆனால், அதற்குத் தகுந்த வருமானம் கிடைக்கும். பணத் தட்டுப்பாடு இருக்காது. செவ்வாய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். போட்டி பந்தயங்களைத் தவிர்த்துவிடுங்கள். சுரண்டல் லாட்டரிச் சீட்டுப் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். சிலருக்கு மரண பயம் மனதை அழுத்திக் கொண்டிருக்கும். புதன் ஏழாம் வீட்டில் இருக்கிறார். எதையும் தாண்டி செல்லும் மனத்துணிவு ஏற்படும். சிலர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொள்வார்கள். குரு பகவான் ராசியிலேயே அமர்ந்து இருக்கிறார்‌. வியாபாரம் சரளமாக நடக்கும். புதிய முதலீடுகள் போட வேண்டாம். உறவினர்கள் வீட்டில் துக்க காரியங்கள் நடக்கலாம். சனி பகவான் 11-ஆம் வீட்டில் இருக்கிறார். நினைத்த காரியங்கள் கை கூடி வரும். நில விற்பனை அமோகமாக நடக்கும். விபத்துக்கள் ஏற்பட்டாலும் பாதிக்காது. சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ராகு 2ஆம் வீட்டில் இருக்கிறார். தான தர்மங்கள் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புகழும் கௌரவமும் பாராட்டும் கிடைக்கும். கேது எட்டாமிடத்தில் இருக்கிறார். பிள்ளைகளால் பணச்செலவு அதிகரிக்கும். எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படலாம்.


உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ. பெர்னாட்ஷா, காரைக்குடி.

English summary
Intha vara rasi palan in tamil weekly horoescope for 12 zodiac signs mesham to meenam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X