• search
keyboard_backspace

இந்தியாவின் குவாட் அமைப்பை கேள்விக்குள்ளாக்குமா யு.எஸ், ஆஸி, பிரிட்டனின் Aukus ஒப்பந்தம்?-அ.நிக்ஸன்

Subscribe to Oneindia Tamil

(இலங்கை மூத்த பத்திரிகையாளர்)

இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களை மையமாகக் கொண்டு அமெரிக்காவும் இங்கிலாந்தும் முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில் நுட்பத்தை ஆஸ்திரேலியாவுக்கு வழங்குவதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றில் சென்ற புதன்கிழமை இரவு கையெழுத்திட்டுள்ளன.

மூன்று நாடுகளும் இணைந்து கையெழுத்திட்ட அக்கியூஸ் (Aukus) என்ற இந்த ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்சியென பிபிசி செய்திச்சேவை(இலங்கை மூத்த பத்திரிகையாளர்) கூறுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரின் இணையவழி செய்தியாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்களில் இந்தியாவுக்கு அழைப்பு இல்லை.

AUKUS Agreement and Indias QUAD- A Nixon

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மூன்று நாடுகளுக்கு இடையேயான மிக முக்கியமான பாதுகாப்பு ஏற்பாடாக அக்கியூஸ் பாதுகாப்புக் கூட்டமைப்பு உள்ளதாக அமெரிக்காவின் பாக்ஸ் தொலைக்காட்சி வர்ணித்துள்ளது. எதிர்வரும் 24 ஆம் தேதி இந்தியா தலைமையிலான குவாட் (The Spirit of QUAD) அமைப்பின் மாநாடு நியூயார்க்கில் நடைபெறும் நிலையில் புதன்கிழமை இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்கா. ஜப்பான். ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்கவுள்ள ஆசிய நோட்டோ இராணுவ அணி என்று வர்ணிக்கப்பட்டு வரும் சூழலில் இந்தப் பிராந்தியப் பாதுகாப்புக்கான அக்கியூஸ் ஒப்பந்தம் இந்தியாவுக்குக் கவலையளித்திருக்கலாம். ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறியுள்ளதால் தலிபான்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், மேற்படி மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொண்ட ஒப்பந்தம் இந்தியாவைத் தனிமைப்படுத்துமோ என்ற அச்சம் டெல்லிக்கு உருவாகலாம்.

தலிபான்களுக்கும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வான்வழி தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகளை அமெரிக்கா, இந்தியவுடன் ஆராய்ந்து வருகின்றது. இந்த நிலையில், அக்கியூஸ் ஒப்பந்தத்தின் பின்னர்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து ஏன் நேட்டோ படைகள் விலகியது என்பது குறித்து இந்தியா சிந்திக்கவும் ஆரம்பிக்கலாம். புவிசார் பூகோள அரசியல் நிலமைகளைத் தூரநோக்கில் சிந்தித்துத் செயற்படுத்தும் ஆற்றல் அமெரிக்காவுக்கு உண்டு. என்ற அடிப்படையிலேயே இந்தோ- பசுபிக்,; தென் சீனக் கடல் பாதுகாப்பு விகாரங்களில் இந்தியாவை அமெரிக்கா ஈடுபடுத்தியிருக்கிறது.

இதனாலேயே குவாட் அமைப்பை 2017 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் செயற்படுத்தியுமிருந்தார். இந்த நிலையில் அக்கியூஸ் ஒப்பந்தம் எந்த வகையில் குவாட்டோடு ஒத்துழைத்துச் செயற்படும் என்ற கேள்விகள் எழுலாம். 2016 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா இந்தியாவோடு செய்து கொண்ட மூன்று ஒப்பந்தங்களும் மேற்படி பிராந்திய ஆதிக்கத்தை மையமாகக் கொண்டதுதான். ஆப்கானிஸ்தான் விவகாரத்துக்குப் பின்னரான சூழலில் அந்த ஒப்பந்தங்களை அமெரிக்கா வேகமாகச் செயற்படுத்துகின்றது.

குறிப்பாக 2016 ஆம் ஆண்டு லெமோ எனப்படும் மூலோபாயப் பரிமாற்ற ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement- LEMOA) ஒப்பொந்தம் ஒன்றை அமெரிக்கா இந்திவுடன் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவின் மற்றுமொரு இராணுவத் தளமாக மாறுமென்ற அச்சத்தை இந்தியாவின் சில பிரதான நாளேடுகள் அப்போது வெளியிட்டிருந்தன. ஆனால் அப்படியில்லையென மோடி அரசாங்கம் உடனடியாக மறுத்துமிருந்தது. இதனால் இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கொம்காசா எனப்படும் தொடர்பு இணக்கத் தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Communications Compatibility and Security Agreement- COMCASA) அமொிக்காவும் இந்தியாவும் 2018 ஆம் ஆண்டு கைச்சாத்திடடன. இந்த ஒப்பந்தம் ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற இராணுவத்தால் பயன்படுத்தப்படும் அனைத்து அமெரிக்க தயாரிப்புகளுடன் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ளும் திறனை அதிகரிக்கிறது.

AUKUS Agreement and Indias QUAD- A Nixon

2020 ஆம் ஆண்டு பீகா எனப்படும் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (Basic Exchange and Cooperation Agreement- BECA) இது அமெரிக்கப் பாதுகாப்புத்துறை மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் தேசிய புவிசார்-புலனாய்வு முகாமைக்கு இடையிலான ஒப்பந்தமாகும். ஆகவே இந்த மூன்று ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே ஆபாகானிஸ்தான் மற்றும் அதன் பின்னரான பாகிஸ்தானை மையப்படுத்திய தலிபான்களின் செயற்பாடுகள் மற்றும் சீனாவைப் பிரதானப்படுத்தியுள்ள இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களை அமெரிக்கா இந்தியாவோடு இணைந்து முன்னெடுத்து வருகின்றமை பட்டவர்த்தனம். பீகா எனப்படும் ஒப்பந்தம் இந்திய ஏவுகணைகள் மற்றும் அத்தகைய தரவு தேவைப்படும் ஆயுதமேந்திய ட்ரோன்களின் துல்லியத்தை அதிகரிக்கவும் இடமளிப்பதால், இந்தியாவில் இந்தே ட்ரோன் தாக்குதல்களை தலிபான்கள் மற்றும் பாகிஸ்தான் மீது நடத்த அமெரிக்கா ஏற்பாடு செய்கிறது. இது தொடர்பாக அமெரிக்க இந்தியப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சமீபத்தில் சந்தித்துப் பேசியிமிருக்கின்றனர்.

ஆகவேதான் இந்தியா அமெரிக்காவின் இராணுவ வியூகத்திற்குள் சென்றுவிட்டதெனக் கருத இடமுண்டு. ஏனெனில் எந்த நேரத்திலும் இந்தியப் படைத் தளங்கள், இந்தியத் துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடிய முறையிலான ஏற்பாடுகளுக்கு மோடி அரசாங்கம் வழி வகுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளை விலக்குவதென டொனால்ட் ட்ரம்ப் 2015 ஆம் ஆண்டே முடிவு செய்ததன் பின்னணில், மேற்படி மூன்று ஒப்பந்தங்களும் இந்தியாவுடன் செய்யப்பட்டிருக்கலாம் என்று யாரும் கருதினால், அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏனெனில் பூகோள அரசியல் ரீதியான இராணுவத் தீர்மானங்களை அமெரிக்கா ஒருபோதும் திடீரென மேற்கொள்வதில்லை.

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கும் திட்டம் என்பது சீனா, ரஷியா ஆகிய நாடுகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் நோக்கமாக இருந்தாலும், படை விலகலின் பின்னரான பக்கவிளைவுகள் எப்படி அமையும் எனற் எதிர்வு கூறலையும் அமெரிக்கா 2015 ஆம் ஆண்டில் இருந்தே கணிப்பீடு செய்திருக்கும்.. அதன் பின்னணியில் இந்தியாவோடு 2020 ஆம் ஆண்டு செய்யப்பட்ட பீகா எனப்படும் மூன்றாவது ஒப்பந்தம் அமைந்திருக்கலாம். ஆகவே இதன் சாதக பாதக விளைவுகளை இந்தியாவே தீர்மானிக்க வேண்டும். பாகிஸ்தான் மூலமாகத் தலிபான்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையலாமென முன்னாள் அமெரிக்கத் தூதுவர் நிக்கி கோலி விடுத்த எச்சரிக்கைகூட புதுடில்லியை மேலும் அமெரிக்கப் பக்கம் சாய வைக்குத் தந்திரோபாயம் என்பதில் சந்தேகமேயில்லை.

பாகிஸ்தான் தலிபான்களைப் பயன்படுத்தி இந்தியா மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டால், அதனைத் தடுக்க அமெரிக்கா விசுவாசமாக இந்தியாவுக்கு ஒத்துழைக்கும் என்பதைவிட, இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்கு இந்தியாவைத் தளமாக மாற்றும் முயற்சியிலேயே அமெரிக்கா ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் கூடுதலாக இருப்பதை மேற்படி ஒப்பந்தங்கள் காண்பிக்கின்றன. இதன் பின்புலத்திலேதான் அக்கியூஸ் ஒப்பந்தம் ஏன் கைச்சாத்திடப்பட்டது என்ற கேள்விகளும் டெல்லிக்கு எழலாம். ஆனாலும் அமெரிக்கச் செய்பாடுகள் இந்தியாவுக்குச் சிலவேளை தற்காலிகப் பாதுகாப்பைக் கொடுக்கலாம். இருந்தாலும் அக்கியூஸ் ஒப்பந்தத்தின் பின்னரான நீண்டதூர நோக்கில் இந்தியாவுக்கு ஆராக்கியமானதாக இருக்குமெனக் கூற முடியாது.

அத்துடன் அமெரிக்க ஏற்பாட்டில் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் குவாட்டில் இடம்பெற்றுள்ள நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து இந்தியாவுக்கு ஒத்துழைக்குமா என்பதும் சந்தேகமே. ஆகவே இந்தியா தனது சொந்த இராணுவ உத்தியை எவ்வாறு வளர்த்தெடுக்கப்போகிறது என்ற கேள்விகளே விஞ்சியுள்ளன. குவாட் அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கினாலும்; இந்தியாவுக்கான முக்கியத்துவம் அங்கு குறைந்ததாகவே இருக்கலாமென இந்திய இராணுவத்துறை ஆய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர். ஏனெனில் சீனாவுக்கு இந்தியாவுடன் இருக்கும் மோதலைப் போன்று, அமெரிக்காவுக்கு இல்லை. இந்திய- சீன எல்லைப் பிரச்சினை என்பது வேறு. ஆனால் இந்தோ- பசுபிக் பிராந்திய ஆதிக்கமும் இராணுவ மேலதிக்கம் மாத்திரமே அமெரிக்காவுக்குத் தேவை என்பதை அக்கியூஸ் ஒப்பந்தம் காண்பிக்கின்றது. ஆகவே சீனாவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் மோதலை கவனிக்கும் போது சீனா விடுக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சியில் பாரம்பரிய நட்பு நாடான ரஷியாவை ஈடுபடுத்தினால், தனது பழைய அணிசேராக் கொள்கைக்கு இந்தியா மீண்டும் திரும்புமா என்ற கேள்வி எழும். (ரஷியா இன்றுவரை இந்தியாவுடன் தொடர்ந்து உறவைப் பேண விரும்புகின்றது)

அப்படியில்லையேல் நட்பு நாடுகள் போன்று காண்பிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் பங்குதாரர்களான பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைத் தனது இந்தோ-பசிபிக் பாதுகாப்புத் தந்திரோபாயத்துக்குள் கொண்டுவருவதன் ஊடாகப் பல்வேறு அணிகளில் சேருதல் என்ற உத்தியை இந்தியா பின்பற்றுமா என்ற கேள்விகளும் எழாமலில்லை. அல்லது அக்கியூஸ் ஒப்பந்தத்தினால் ஆத்திரமடைந்துள்ள பிரானஸ் நாட்டோடு உரையாடி தனது ஆதங்கத்தையும் இந்தியா வெளிப்படுத்துமா? அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில் உள்ள தனது தூதுவர்களை பிரான்ஸ் அழைத்து அக்கியூஸ் உடன்படிக்கையின் விளைவுகள் குறித்து உரையாடுவது போன்று இந்தியாவும் தமது தூதுவர்களை அழைத்து உரையாடுமா? அல்லது சீனாவின் எதிரிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள புதுடில்லி முயற்சிக்குமா அல்லது ஆப்கானிஸ்தான் விவகாரத்துக்குப் பின்னரான அமெரிக்க- சீனப் பனிப்போரில், இந்தியா தனக்கெனத் தனியான சுயமரியாதைக் கட்டமைப்பு ஒன்றை வகுத்துக் கொள்ளுமா என்ற கேள்விகளும் உண்டு.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்த உறுப்புரிமை இல்லாத நிலையிலும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாதுகாப்புச் சபை அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்க அனுமதிக்கப்பட்டமைகூட அமெரிக்கத் தந்திரோபயமே என்பது கண்கூடு. ஏனெனில் இந்தோ- பசுபிக் விவகாரத்தில் தனது மேலான்மையை உறுதிப்படுத்தி இராணுவ மற்றும் பொருளாதார நலன்களைப் பலப்படுத்த வேண்டுமென்ற அமெரிக்கச் சிந்தனைக்கு இந்தியா அவசியம் தேவைப்படுகின்றது. இதற்காவே தலிபான்களை பாகிஸ்தான் பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்தலாமென்ற அமெரிக்க எச்சரிக்கையும், இந்தியாவில் இருந்தே ட்ரோன் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டதிடும் உத்தியும் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறலாம். ஆகவே அமெரிக்க நலனுக்கானவே இந்தியா பயன்படுத்தப்படுகின்றது. மாறாகச் சீன- இந்திய மோதலைத் தடுக்கவோ அல்லது இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைவிட இந்தியாவைப் பலப்படுத்த வேண்டுமென்ற நோக்கிலோ அல்ல. இதனை அக்கியூஸ் ஒப்பந்தம் வெளிப்படுத்துகின்றது.

ஆனால் இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் பகுதியில்கூட இந்தியா ஆதிக்கம் செலுத்தியிருக்கக்கூடிய புவிசார் அரசியல் போக்கு 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான சூழலில் தாராளமாகவே இருந்தது. அப்போது ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டதை்தை இல்லாமல் செய்யும் நோக்கில் இலங்கையும் இந்தியாவை நம்பியிருந்தது. 2009 இன் பின்னரான சூழலில் இந்தியாவைக் கடந்து அமெரிக்காவுடன் சமாந்தரமாக உறவைப் பேன வேண்டுமென்ற சிந்தனையை உருவாக்கிய சிங்கள ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா எவ்வாறு இடமளித்ததோ, அதேபோன்றதொரு அந்தஸ்தை இந்தியாவைக் கடந்து பாகிஸ்தானுக்கும் அமெரிக்க வழங்கக்கூடிய வாய்ப்புண்டு. ஏற்கனவே பாகிஸ்தானைக் கூட்டாளி நாடென அமெரிக்க 2004 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. சீனாவோடு நெருக்கம் அதிகரித்ததால் பாகிஸ்தானுடனான கூட்டாளி உறவை அமெரிக்கா பின்னர் துண்டித்துக் கொண்டது. ஆனாலும் அவ்வாறு துண்டிக்கப்பட்டமை குறித்து காங்கிரஸில் அமெரிக்கா இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆகவே எந்தநேரமும் முன்னெச்சரிக்கையோடு இந்தியா, அமெரிக்கா சொல்வதைக் கேட்ககக்கூடிய நட்பு ஒன்றைப் பேண வேண்டிய ஆரோக்கியமற்ற சூழல் இந்தியாவுக்கு உண்டு. குவாட் அமைப்பிற்குள் சேர்ந்து செயற்படுவதற்குரிய தகுதி இலங்கை இராணுவத்துக்கு இல்லை. ஆனாலும் ஒத்துழைப்பது குறித்த இணக்கப்பாடுகளை அமெரிக்கா இலங்கையோடு பேசி வருகின்றது. ஆகவேதான் இலங்கையை முழுமையான கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலமே அமெரிக்கப் பிடியில் இருந்து விலகி இந்தியா சுயமாக இயங்க முடியுமென்பதைப் புதுடில்லி நன்கு அறியும். ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதைவிட ஈழத்தமிழர் பிரச்சினைகளை இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள்ளேயே தீர்த்துவிட இந்தியா முற்படுவது, புத்திசாலித்தனமல்ல. இந்தியாவின் இந்தப் பலவீனங்களே இலங்கையில் சீனா நிலையாகக் கால் ஊன்ற வழி சமைத்ததுடன், அமெரிக்காவும் இந்தியாவைப் பயன்படுத்தத் துணிந்ததென்றும் கூறலாம். எனவே அக்கியூஸ் ஒப்பந்தம் இந்தியாவுக்குப் படிப்பினைகளைக் கொடுக்கும் காலமிது.

English summary
Srilanka Journalist A Nixon has written on AUKUS Agreement and India's QUAD.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In