For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை விற்பவர்கள் நாட்டுப்பற்றைக் கற்றுத்தரத் தேவையில்லை- ஸ்டாலின் 'பொளேர்'

Google Oneindia Tamil News

திருப்பூர்: கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை விற்பவர்கள் எங்களுக்கு நாட்டுப்பற்றைக் கற்றுத்தரத் தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழகம் மீட்போம் என்ற தலைப்பிலான தமிழக சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டத்தில் திருப்பூர் திமுகவினரிடையே மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்த ஊரான திருப்பூரில் இன்று 'தமிழகம் மீட்போம்' என்ற முழக்கத்தை உரக்கச் சொல்வதற்காக நாம் கூடியிருக்கிறோம்.

தந்தை பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும் முதன்முதலாகச் சந்தித்த ஊர் இந்த திருப்பூர். அதனால்தான், அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்த ஊர் என்று திருப்பூரை நான் குறிப்பிட்டேன்.

1934-ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் காஞ்சிபுரத்தில் இருந்து வந்த இளைஞரான அண்ணா அவர்களை, தந்தை பெரியார் அவர்கள் இங்கு வைத்துத்தான் முதன்முதலாகப் பார்த்தார்கள்.

BJP Dont teach us patriotism, says DMK President MK Stalin

எம்.ஏ., படித்து முடித்திருந்த அண்ணா அவர்கள், வேலைக்குச் செல்ல விருப்பமில்லை என்றும் பொதுவாழ்வில் ஈடுபடப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்கள். 'அப்படியானால் என்னோடு வந்துவிடுகிறீர்களா?' என்று சொல்லி அண்ணாவை தன்னோடு ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அதுதான் தமிழக அரசியல் களத்தில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

தியாகத்தின் திருவுருவமாகப் போற்றப்படும் திருப்பூர் குமரன் வாழ்ந்த ஊர் இந்த திருப்பூர். அவர் மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து ஒன்பது பேர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். எவ்வளவு தாக்கினாலும் கையில் இருக்கும் தேசியக் கொடியைக் கீழே விடமாட்டேன் என உறுதியோடு நின்ற தேசியவாதிகள் வாழ்ந்த ஊர் இந்த திருப்பூர்.

1965 மொழிப்போராட்டத்தில் தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் கல்லூரி மாணவர்கள் மட்டுமே, தமிழ் மொழி காக்கவும், இந்தித் திணிப்புக்கு எதிராகவும் போராடியபோது திருப்பூரில் தான் பள்ளி மாணவர்கள் எழுச்சியோடு போராடினார்கள். திருப்பூர் உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த சுப்பிரமணியன் என்ற மாணவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். அதனால் கோபம் கொண்ட பள்ளி மாணவர்கள், காவலர்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார்கள். அதில் இரண்டு காவலர்கள் மரணம் அடைந்தார்கள். இவையெல்லாம் திருப்பூர் நகரத்தின் எழுச்சி மிகுந்த வரலாற்றின் பக்கங்கள்.

அத்தகைய எழுச்சி மிகுந்த திருப்பூர் மாவட்டத்தில் 'தமிழகம் மீட்போம்' என்ற எழுச்சிமிகு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூருக்கே உரிய அதே எழுச்சியோடும் உணர்ச்சியோடும் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் க.செல்வராஜ் அவர்களையும், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களையும், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் இல.பத்மநாபன் அவர்களையும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்களையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

திருப்பூர் மாவட்டக் கழகமானது கழகத்தின் நிர்வாக வசதிக்காக நான்காகப் பிரிக்கப்பட்டு இருந்தாலும், மாவட்டத்தின் நான்கு திசையிலும் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளர்களும், ஒன்றிய கிளைப் பொறுப்பாளர்களும் துடிப்புடன் பணியாற்றி வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்டு அதனை அடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திருப்பூர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது திருப்பூர் குமரன் தான்! அந்த திருப்பூர் குமரனுக்கு நினைவுத் தூண் அமைத்த ஆட்சி தி.மு.க. ஆட்சி! திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் இறந்தபோது குமரனின் நினைவகத்தில் அவரை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த ஆட்சியும் தி.மு.க. ஆட்சி தான்!

நகராட்சியாக இருந்த திருப்பூரை மாநகராட்சியாக ஆக்கியது மட்டுமல்ல, திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அமைத்ததும் - தி.மு.க. ஆட்சியே! நகராட்சியாக இருந்த திருப்பூரை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்! 2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் திருப்பூர் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அந்நாளிலே நடைபெற்ற விழாவில் திருப்பூரை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்! தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு புது மாவட்டம் உருவாக்கியவரும் முதல்வர் கலைஞரே!

கழக ஆட்சியில், திருப்பூர் மாநகரின் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் ரிங் ரோடு அமைக்கப்பட்டது.

ஐந்து பாலங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூன்று பாலப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இன்றளவும் குறையாமல் அதிகமாகவே உள்ளது.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் உடல்நலத்தை மனதிற்கொண்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனை உருவாக்குவதற்காக இடம் ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக அ.தி.மு.க. அரசு கடந்த பத்து வருடமாகத் தொழிலாளர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து இந்த மருத்துவமனையைக் கட்டித் தராமல் இன்று வரை இழுத்தடித்து வருகிறது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்கின்ற மாவட்டமாகத் திருப்பூர் மாவட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த பத்தாண்டுக்காலமாக, அதிலும் குறிப்பாகக் கடந்த ஐந்தாண்டு காலமாகப் பெரிய நிறுவனங்களாக இருந்தாலும், சிறுகுறு நிறுவனங்களாக இருந்தாலும் அவை செயல்பட முடியாமல் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி வருகிறது. அதற்கு மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் தான் முழுமுதற் காரணம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

தொழில் வளர்ச்சியில், பின்னலாடை உற்பத்தியில், பருத்தி நூல் உற்பத்தியில், துணிகள் ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் தலைசிறந்து விளங்கிய திருப்பூர் மாவட்டமானது பின் தங்கியதற்கு இவர்கள் தானே காரணம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லிக் கொள்கிறார்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகியோர் இந்த மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் சேர்ந்து இந்த பத்தாண்டுக் காலத்தில் எத்தனையோ திட்டங்களை இந்த மண்டலத்துக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதனைச் செய்தார்களா?

கேட்டால் அத்திக்கடவு - அவிநாசித் திட்டத்தைச் சொல்வார்கள்!

1972-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கொள்கை ரீதியாக ஏற்கப்பட்ட திட்டம்தான் அத்திக்கடவு அவிநாசித் திட்டம். அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி எதுவும் செய்யவில்லை. 1990-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அதனைச் செயல்படுத்தும் முயற்சியை எடுத்தபோது, ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி எதுவும் செய்யவில்லை. 1996-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இத்திட்டத்தின் முதல் கட்டமாக கோவைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு அடுத்தகட்டப்பணிகளைச் செய்யவில்லை.

2006-ஆம் ஆண்டு அத்திக்கடவு பேஸ் 2 திட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தினார். கோவை முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதலுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. உலக வங்கி, நபார்டு, ஜப்பான் வங்கி ஆகியவை கடன் தர முன்வந்தன. ஆட்சி மாறியது. அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி எதுவும் செய்யவில்லை.

அத்திக்கடவு குடிநீர் விநியோகத்தையே முடக்கிவிட்டார்கள். 2012-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தது. ஆனாலும் அ.தி.மு.க. அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. நிலத்தைக் கையகப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை.

2015-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் போடப்பட்டது. நீதிபதிகள் அ.தி.மு.க. ஆட்சிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். தி.மு.க. பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது. சட்டமன்றத்தில் நான் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்தேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றேன். இவ்வளவும் நடந்தபிறகு வேறு வழியில்லாமல் இந்த ஆட்சி அறிவித்தது.

எனவே, அத்திக்கடவுக் கனவை, தான் நிறைவேற்றியதாக எடப்பாடி பழனிசாமி, இந்த வட்டாரத்தை ஏய்த்துக் கொண்டு இருக்கிறாரே தவிர அது உண்மையல்ல!

மூத்த அமைச்சரான செங்கோட்டையனுக்கு பள்ளிக் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அவர் அமைச்சர்தானா? அல்லது அமைச்சர் மாதிரியா என்பது தெரியவில்லை!

முதலமைச்சருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பள்ளிகள் திறக்கப்படாது என்று அமைச்சர் அறிவிப்பார். அடுத்த நாளே திறக்கப்படும் என்று முதலமைச்சர் சொல்வார். பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தாகாது என்பார் அமைச்சர். அடுத்த நாளே ரத்து செய்வார் முதல்வர். பள்ளிக் கல்வித்துறையில் அதிகாரிகள் அறிவிப்பதும் அமைச்சருக்குத் தெரியவில்லை. அமைச்சர் என்ன சொல்கிறாரோ அதற்கு மாறாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஐயோ பாவம்! செங்கோட்டையனிடம் கை கட்டி நின்றவர் பழனிசாமி என்பதற்காக இப்படியா பழிவாங்குவது?

இந்த மண்டலத்தில் இன்னொரு அமைச்சர் இருக்கிறார் அவர் தான் உடுமலை ராதாகிருஷ்ணன். அவர் என்ன நிலைமையில் இருந்தவர், இப்போது என்ன நிலைமையில் இருக்கிறார் என்பது அவரது கட்சிக்காரர்களுக்கே தெரியும்.

இன்னொரு அமைச்சர் கருப்பண்ணன். திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் வருவதைப் பற்றிக் கேள்வி கேட்டால், 'கோவை மக்கள் சோப்பு போட்டுக் குளிப்பதால் நொய்யல் ஆற்றில் நுரையாக இருக்கிறது' என்று கண்டுபிடித்த விஞ்ஞானி அவர்.

மதுரையில் ஒரு தெர்மகோல் விஞ்ஞானி இருக்கிறார் என்றால், இந்த மண்டலத்தில் ஒரு சோப்பு விஞ்ஞானி இருக்கிறார் அவர் தான் கருப்பண்ணன்.

உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையிலான சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக ஆக்கியது தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஜி.வெங்கட் ராமன் அவர்கள். நான்கு வழிச்சாலையாக மாற்றினார் தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு. ஆனால் பத்து ஆண்டுகளாக நெடுஞ்சாலையைக் கவனித்து வரும் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்?

உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, எவலநாசூர் பேட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டனம் போன்ற இடங்களில் இருவழிச்சாலைகளாக மாற்றக் கடந்த பத்து ஆண்டுகளாக ஏதாவது செய்தாரா? இல்லை!

கொச்சி துறைமுகம் முதல் கடலூர் துறைமுகம் வரையிலான இணைப்புச் சாலை இது. இந்த எட்டு இடங்களில் எத்தனையோ முறை விபத்துகள் ஏற்படுகிறது. அதற்கு ஏதாவது தீர்வு கண்டாரா பழனிசாமி? இல்லை!

எட்டுவழிப்பசுமைச் சாலையைத் தனது தனிப்பட்ட லாபத்துக்காக நிறைவேற்றத் துடிக்கும் பழனிசாமி, மக்கள் பயன்பாட்டுக்கான இந்தச் சாலைகளைப் பராமரித்தாரா?

இப்படி எந்தப் பணியையும் செய்யாத அ.தி.மு.க. அரசாங்கம், இந்த மண்டலத்துக்குச் செய்த கெடுதல்கள்தான் அதிகம்.

* எட்டு வழிப் பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சேலம் மக்களை அடித்துத் துரத்திக் கைது செய்தது எடப்பாடி அரசு தான்!

* நிலச்சரிவு ஏற்பட்டு நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க உடனே வரவில்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

* விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததன் மூலமாக ஒட்டுமொத்தமாக வேளாண் மக்களுக்கு துரோகம் செய்த பச்சைத் துரோக பழனிசாமி அவர்!

* பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டாவை அறிவித்துவிட்டு, அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்காமல் ஏமாற்றும் அரசு தான் இந்த அ.தி.மு.க. அரசு!

* சாயப்பட்டறைகள் மூலமாகச் சுற்றுச்சூழல் மாசுபடுவதைப் பற்றிக் கவலைப்படாத அரசு இந்த அரசு!

* உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராகப் போராடும் மக்களது கோரிக்கைக்குச் செவிமடுக்காத அரசு இந்த அரசு

- அதாவது சும்மா வாய் வார்த்தைக்குக் கொங்கு மண்டலம் எங்கள் மண்டலம் என்று அ.தி.மு.க.வினர் சொல்லிக் கொள்கிறார்களே தவிர, இம்மக்களுக்காக அவர்கள் எந்த நன்மையையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை! இந்த மண்டலமே தொழில் மண்டலம். அதன் வளர்ச்சிக்காக ஏதாவது செய்தார்களா? என்றால் இல்லை! இவர்கள் நினைத்திருந்தால் தொழில் வளர்ச்சி இந்த மாவட்டத்தில் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்குமா?

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்குச் சாட்சி வேண்டுமானால் திருப்பூர் ஒன்று போதும். 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் பொருளாதாரக் கொள்கையில் தவறுக்கு மேல் தவறு செய்து, இந்திய நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்கு பா.ஜ.க. அரசு தள்ளிவிட்டது!

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை திடீரென பிரதமர் மோடி தடை செய்தார். இதற்குப் பிறகு பாருங்கள், இந்தியாவே தலைகீழாக மாறப்போகிறது; இந்திய நாட்டுக்கு இது பொருளாதாரச் சுதந்திரம் என்றெல்லாம் பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் என்ன நடந்தது? அதுவரை இருந்த தொழில்கள் - அது மிகப் பெரிய தொழில் நிறுவனமாக இருந்தாலும், சிறுகுறு நிறுவனமாக இருந்தாலும் அவை அனைத்தும் மூச்சுத்திணற ஆரம்பித்தது. அதுதான் உண்மை.

ஏற்கனவே கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட ஒருவருக்கு மயக்க ஊசியைப் போடுவதைப் போல, அடுத்து ஒரு நடவடிக்கையைப் பிரதமர் மோடி அவர்கள் எடுத்தார்கள். அதுதான் ஜி எஸ்.டி. கந்து வட்டி வரி வசூலுக்கு இன்னொரு பெயர் தான் ஜி.எஸ்.டி. என்பதாகும். வரியைச் சீரமைக்கிறோம் என்று சொல்லிச் சீரழித்துவிட்டார்கள். இது பற்றி திருப்பூர் மக்களுக்கு நான் அதிகம் விளக்க வேண்டியது இல்லை.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களது ஏற்றுமதி இலக்கை எட்டமுடியாமல் போனதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை தானே காரணம்?

ஜி.எஸ்.டி. வரிக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு திருப்பூரின் மொத்த வர்த்தகம் 24 சதவிகிதம் குறைந்துவிட்டதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள். ஏற்றுமதி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஏற்றுமதி இல்லாததால் உற்பத்தியை இந்த நிறுவனங்கள் குறைத்துவிட்டார்கள். துணியாக ஏற்றுமதி செய்த காலம் போய், நூலாக ஏற்றுமதி செய்யும் காலம் வந்துவிட்டது.

பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஜாப் ஒர்க் வாங்கி தொழில் செய்த நிறுவனங்கள் பணம் இல்லாத காரணத்தால் ஜாப் ஒர்க் வாங்க முடியாமல் தவிக்கின்றன. வாட் வரி விதிக்கப்பட்டபோது சில நிலைகளுக்கு வரி இல்லாமல் இருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி.யில் அனைத்து நிலைகளிலும் வரி விதிப்பதால் சுமை அதிகமாகி விட்டது என்று சிறு - குறு நிறுவனம் நடத்துவபர்கள் சொல்கிறார்கள். சில நிலைகளில் வாட் வரியில் இருந்ததை விட 3 மடங்கு அதிகமாக ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டியது உள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள்.

கச்சாப் பொருள்களின் விலை உயர்ந்து விட்டது. கூடுதலாக முதலீடு செய்ய வேண்டி உள்ளது. இதனால் பலரும் சிறுகுறு நிறுவனங்களை மூடிவிட்டுச் சென்றுப்விட்டார்கள். மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் கொள்முதல் விவரங்களைச் சொல்ல வேண்டும். 30-ஆம் தேதிக்குள் இவற்றுக்கான வரிகளையும் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும் - என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்து வரி வசூலைப் போல இருக்கிறதே தவிர மக்களாட்சி வரி வசூலாகத் தெரியவில்லை!

எல்லாச் சிறு நிறுவனங்களும் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இது வர்த்தகத்தையே அழித்து வருகிறது. ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த துணிகள், கொரோனா போன்ற பேரிடரால் தேங்கிவிட்டது. வெளிநாடுகளுக்கும் அனுப்பும் சூழல் இல்லை. ஏற்றுமதிக்கான ஊக்குவிப்புத் தொகையைக் குறைத்துவிட்டார்கள். மாதத்தில் பாதிநாள் வேலை இல்லை. வேலை இருந்தாலும் உரிய சம்பளம் கொடுக்க முடிவதில்லை. இதனால் திருப்பூரில் 60 சதவிகித சிறுதொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டது என்று புள்ளிவிவரம் சொல்கிறது. மொத்தத்தில் 'டாலர் சிட்டி'யான திருப்பூர் இன்று 'டல்' சிட்டியாகி விட்டது!

தொழிலாளர்கள் நிம்மதியாக இல்லை, சிறு குறு நிறுவனங்களும் நிம்மதியாக இல்லை ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கின்றன - இதுதான் மோடியின் பொருளாதாரப் பாதை!

பெரும் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக சிறு - குறு நிறுவனங்களை மாற்றுவதுதான் உங்களின் பொருளாதாரக் கொள்கையா?

இந்த நிலையில் மாநகராட்சி சொத்து வரியை 100 மடங்கு உயர்த்திவிட்டது. இதனால் வாடகைக் கட்டடத்தில் இயங்குபவர்கள் அதிக வாடகை கொடுக்க வேண்டி இருக்கிறது. பல நிறுவனங்கள் மாநகராட்சிப் பகுதிக்கு வெளியே சென்று இடம் பார்க்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பெட்ரோல் டிசல் விலை உயர்ந்து விட்டது.

இப்படி திருப்பூர் அடைந்த பின்னடைவைச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பின்னடைவைச் சரி செய்ய வேண்டாமா? இதில் இருந்து மீள வேண்டாமா? அதற்காகத்தான் தமிழகம் மீட்போம் என்ற முழக்கத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு செய்தி வந்துள்ளது. தொழிலாளர்களை அச்சுறுத்தும் செய்தியாக அது உள்ளது. இதுவரை இருந்த 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக அதிகப்படுத்தப்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் அது. இதைவிடத் தொழிலாளர் விரோதக் கொள்கை ஒன்று இருக்க முடியாது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் தொழிலாளர் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. தொழிலாளர் விரோதச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. கொரோனாவைப் பயன்படுத்தி இது போன்ற மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

8 மணி நேர வேலை என்பது 180 ஆண்டுகளுக்கு முன்னால் உலகத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமை ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரை 1942-ஆம் ஆண்டு வைஸ்ராய் செயற்குழுவில் அங்கம் வகித்த டாக்டர். அம்பேத்கர் அவர்கள், இந்தியத் தொழிலாளர்களுக்கு உருவாக்கித் தந்த உரிமை ஆகும். அந்த உரிமையைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

ஏற்கனவே கொரோனா காலத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். இருக்கும் தொழிலாளர்களும் கூடுதலாக வேலை பார்க்க வேண்டும் என்பது தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பதாகும். பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பதைப் போல, எல்லாச் சோதனைகளும் தொழிலாளர்களுக்கே வருகிறது. இத்தகைய அவல நிலை துடைக்கப்பட வேண்டும். தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நாடு போகும் போக்கைப் பார்த்தால் மீண்டும் திருப்பூர் குமரன் காலத்துக்குத் தமிழகத்தைக் கொண்டு போய்விடுவார்களோ என்ற பயம் வருகிறது!

அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் நம்நாட்டுத் தொழிலையும், தொழிலாளர்களையும் எப்படி நலிவடையச் செய்ததோ அதைப் போல, இன்றைக்கு மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொழிலையும், தொழிலாளர்களையும் நலிவடையச் செய்கின்றன.

திருப்பூர் குமரனைப் போலப் போராட வேண்டிய நிலைக்கு இன்றைய இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இளைஞர்களுக்கு வேலைகள் இல்லை! வேலையில் இருப்பவர்களும் வேலையை இழக்கிறார்கள். இவை போதாது என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் அடைய வேண்டிய வேலை வாய்ப்புகள், வெளிமாநிலத்தவர்களால் தட்டிப்பறிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்த திருப்பூரிலேயே வெளிமாநிலத்தவர் வருகை அதிகமாகிவிட்டது, அதனால் தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பு பறிபோகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல மத்திய அரசுப் பணிகளான ரயில்வே, தபால் போன்ற பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் புறந்தள்ளப்படும் சூழல் உருவாகி வருகிறது. இந்தியைக் காரணம் காட்டி, தமிழ் இளைஞர்களின் வேலை உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதை எல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி அரசு முதுகெலும்பு இல்லாத அரசாக இருக்கிறது.

இப்படி நான் பேசுவதால் மொழி வெறியை, இனவெறியைத் தூண்டுவதாக யாரும் நினைக்கவேண்டாம். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்று கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது.

நாட்டுப் பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டியது இல்லை.

* சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது 1962-ஆம் ஆண்டு, திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!

* 1971-ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம் போட்டவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!

* 1972-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின் போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப்பாதுகாப்புக்காக ஆறுகோடி ரூபாய் நிதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!

அன்றைய தினம் அனைத்து மாநிலங்களும் வழங்கிய தொகை மொத்தம் 25 கோடி! அதில் 6 கோடியை வழங்கியது தி.மு.க. அரசு!

* அந்தப் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நிதியும் நிலமும் வழங்கிய அரசு கலைஞரின் அரசு!

* 1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கிய அரசு முதலமைச்சர் கலைஞரின் அரசு!

* பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு கோட்டை!

* பாரதியின் இல்லம் அரசு இல்லம் ஆனது!

* காமராசர் மணிமண்டபம்!

* இராஜாஜி நினைவாலயம்!

* தில்லையாடி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம்!

* வீரவாஞ்சியின் உறவினருக்கு நிதி!

* வ.உ.சி. இழுத்த செக்கு நினைவுச் சின்னம் ஆனது!

* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவச பேருந்து பயணம்

* தியாகிகள் மணிமண்டபம்

* சுதந்திரப் பொன்விழா நினைவுச் சின்னம்!

* பூலித்தேவன் நினைவு மண்டபம்!

* தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு!

* மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு!

* நேதாஜிக்கு சிலை!

* கக்கனுக்கு சிலை!

* சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்!

- இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை விற்பவர்கள், எங்களுக்கு நாட்டுப்பற்றைக் கற்றுத்தரத் தேவையில்லை. நாடு என்பது என்ன? வெறும் எல்லைகள் அல்ல; மக்கள் தான் நாடு!

சொந்த நாட்டு மக்களை நாலாந்தரக் குடிமக்களாக மாற்றிவிட்டு, நாட்டுப்பற்றாளர்களாகச் சிலர் வேஷம் போட்டுக் கொண்டு வருவதுதான் தேசத் துரோகம்!

தேச மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் யாரோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். அந்த அடிப்படையில் நாங்கள் தான் உண்மையான தேசபக்தர்கள்!

நாங்கள் விரும்பும் தேசத்தில் சாதி, மத ஏற்றத் தாழ்வு இல்லை. ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லை. எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி இந்தச் சமூகத்தை வழிநடத்துவதற்காகவே திராவிட இயக்கம் உருவாக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் களத்தில் அதற்கான போராட்டங்களைத் தான் முன்னெடுத்து வருகிறது.

கல்வியில், வேலைவாய்ப்பில், சுகாதாரத்தில், வேளாண்மையில் தொழில் துறையில், ஏற்றுமதி வர்த்தகத்தில் என அனைத்துத் துறையிலும் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை உருவாக்கித் தரும் ஆட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையும்!

கல்வி, வேலைவாய்ப்பு என்பது அனைவருக்குமானதாக இருக்கும்! பெரிய தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் சிறுகுறு தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினரும் மனநிம்மதியுடன் தொழில் செய்யும் சூழலை தி.மு.க. ஆட்சி ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, அவர்களது ஆலோசனைகளைச் செயல்படுத்தும் ஆட்சியாக இருக்கும். தொழிலாளர்களது கண்ணீர் துடைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடப்பதைப் போல, தொழில் நிறுவனங்களுக்கும் அரசுக்குமான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொய்வில்லாமல் நடத்தப்படும்.

தொழில் துறையினர் விரும்பும் கனவுகளைச் செயல்படுத்திக் காட்டும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அமையும்.

தங்களுக்கு எது லாபமோ அதனைச் செய்து கொள்ளும் அரசாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. மக்களுக்கு எது தேவையோ அதனைச் செய்து தரும் அரசாக தி.மு.க. அரசு இருக்கும். அத்தகைய அரசு அமையப் பாடுபடுவோம்! தமிழகம் மீட்போம்! தமிழர்களைக் காப்போம்! நன்றி! வணக்கம்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

English summary
DMK President MK Stalin said that BJP who sold the Nation to Corporates Don't teach us about the patriotism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X