For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"வெட்டிப் பயலும்.. வெள்ளத்தாளும்".. இது கொரோனா காலத்து குபீர் அனுபவங்களின் தொகுப்பு!

புதுப் புத்தகத்தோட வாசத்தை யாராச்சும் நுகர்ந்து அனுபவிச்சிருக்கீங்களா.. அது ஒரு தனி மணம்.. புத்தகத்தை வாங்கியவுடன் படிச்சவங்களை விட அந்த வாசத்தைப் பிடிச்சவங்கதான் அதிகம் இருப்பாங்க.. அதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்.. சரி அதை விடுங்க.. வாங்க "வெட்டிப் பயலை"ப் பார்ப்போம்!

"வெட்டிப் பயலும்.. வெள்ளத்தாளும்".. இப்படி ஒரு தலைப்பு.. என்னாவா இருக்கும் என்ற யோசனையுடன் உள்ளே போனபோது.. பெரிதாக எதிர்பார்ப்பு இருக்கவில்லைதான்.. ஆனால் முதல் கட்டுரையின் முதல் வரியைப் படிக்கத் தொடங்கியதுமே.. அப்படி ஒரு விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது.

Book review: Vettipayalum Vellathalum by Vijaya Giftson

நெல்லை எக்ஸ்பிரஸ் எக்மோரை விட்டுக் கிளம்பி.. ஒரே வேகத்தில், கூடாமல் குறையாமல், சாப்பாட்டுக்குக் கூட எங்கேயும் நிற்காமல் நேரா போய் ஜங்ஷனில் பிரேக் போட்டு நிறுத்தினால் எப்படி ஒரு ஃபீல் வருமோ.. அதேதாங்க வந்துச்சு இந்த புத்தகத்தை முழுசாக படிச்சு முடித்தபோது.

தி.க.சி, வண்ணதாசன்.. இந்த வழி வந்த ரத்தமல்லவா.. இருக்கத்தானே செய்யும்.. தி.க.சியின் பேத்திதான் விஜயா கிப்ட்சன். வண்ணதாசனின் சகோதரி மகள்.. ஆனால் அவர்களிலிருந்து தனது சுயத்தை மிக அழகாக இதில் காட்டியிருக்கிறார் விஜயா.. அதற்காகவே அவரை முதலில் பாராட்ட வேண்டும். இது முதல் புத்தகம் என்ற நினைப்பே வரவில்லை.. அப்படி எழுதியிருக்கிறார் விஜயா கிப்ட்சன்.. "கொரோனா காலத்து கொடூரங்கள்" என்ற தலைப்பில் புத்தகம் எழுதியிருக்கலாம்.. இல்லாவிட்டால் "கொரோனா நேரத்து குபீர் சிரிப்புக் கதைகள்" என்று கூட கொடுத்திருக்கலாம்.. ஆனால் அப்படியெல்லாம் பயமுறுத்தாமல், இயல்பான விதத்தில் தனது அனுபவங்களை விவரித்திருக்கிறார்.

தான் பார்த்த திரைப்படங்கள், தான் சந்தித்த அனுபவங்கள், தான் உணர்ந்த உணர்வுகள், தன்னுள் பதிந்து போன நினைவுகள், நாம் இழந்தவை, நாம் திரும்பப் பெற்றவை, என்று தீரும் எங்களின் சோகம் என்ற ஏக்கம்.. என எல்லாவற்றையும் அலசி எடுத்து அழகாக காயப் போட்டிருக்கிறார்.. வார்த்தைகளால். பெரும்பாலான கட்டுரைகளில் ஜோவியல் நடை அதிகம் எழுந்தோடியிருக்கிறது என்றாலும் கூட தனது உணர்வுகளை அப்படியே இயல்பாக பதிய வைத்து விட்டுப் போயிருப்பது அவரது ஸ்டைலாக உணர முடிகிறது.

Book review: Vettipayalum Vellathalum by Vijaya Giftson

நெல்லைத் தமிழ் ஒரு பக்கம் ஓடுகிறது.. திடீரென உள்ளே புகுந்து சென்னைத் தமிழும் கரைந்து கலக்கிறது. நிறைய விஷயங்களை அடுக்கித் தள்ளியிருக்கிறார். அதிலும் திரைப்படங்கள் குறித்த அலசல் இருக்கே.. அடேங்கப்பா.. சூப்பரப்பு.. மொத்தப் படத்தையும் வரிக்கு வரி எழுதித் தள்ளி விட்டார்.. (ஏலே.. படம் பார்க்க தியேட்டருக்குப் போக வேண்டாம்ல. இவர் எழுதியதைப் படித்தாலே போதும்.. படம் பார்த்த திருப்தி கிடைத்து விடும்!)

முதல் கட்டுரையில் அவர் சொல்லியுள்ள இந்த வார்த்தை பொட்டில் அடிப்பது போல நம்மை ஊடுருவிச் செல்கிறது.. "என்னைக்காச்சும் இம்புட்டு விசயம் பெரியவங்க கிட்ட உக்காந்து பேசிருக்கோமா.. அவுங்கள்லாம் நடமாடும் கூகுள் என்பதை நாம் என்னைக்குமே மறந்து போகக் கூடாது".. எத்தனை சத்தியமான வார்த்தை.. முன்பெல்லாம் அப்படித்தானே இருந்தோம்.. அப்பத்தாக்களும், அம்மச்சிகளும் நமக்கு சொல்லாத கதைகளா.. கதைகள் கேட்டு வளர்ந்த பரம்பரைகள் இன்று நெட்டில் பார்த்து வளர்ந்த பரம்பரைகளாக மாறியிருக்கிறது.. இடையில் வந்த இந்த கொரோனாவால் பெரியவர்களின் அருமையை கொஞ்சமேனும் இப்போதைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம்தான்.

"மச்சீஸ்" ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருக்கிறது.. "வாழ்தல் இனிது என்று எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.. இதுக்கும் மேல வேற எந்த துவாவும் இக்கணம் எனக்குக் கேட்கத் தோன்றவில்லை"... சத்தியமான வார்த்தைகள்.. வாழ்தலை ரசிக்க ஆரம்பிக்கும் ஒவ்வொருவருக்கும், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் ரசிக்கும் ஒவ்வொருவருக்கும், அன்பு செலுத்தும் உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் வாழ்தல் இனிதுதான்.. உறவுகளின் பிடிப்புகள் ரொம்ப பலமானவை.. இடையில் வந்த துயரங்களை அது துடைத்துப் போட்டு விடும் இல்லையா!

ஜாலி சைடு என்று பார்த்தால் கொரோனா லாக்டவுன் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் நடந்த ஜாலி கலாட்டாக்களை ரொம்பவே அழகாக எடுத்து வைத்திருக்கிறார்.. அந்த சுவாரஸ்யங்கள் குறையாமல்.. கொரோனா நமக்கு இந்த சோதனைக் காலத்தில் கற்றுக் கொடுத்த முக்கியமான பாடமே.. "எத்தனை துயர் வந்தாலும் நிலை குலையாம இரு.. தைரியமா இரு" என்பதுதான்.. அதை நம்ம மக்கள் கரெக்டாகவே எடுத்துக் கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.. இல்லாவிட்டால் இவ்வளவு சீக்கிரம் நாமெல்லாம் கொரோனாவுடன் வாழப் பழகியிருக்க மாட்டோமே!

Book review: Vettipayalum Vellathalum by Vijaya Giftson

அச்சோ.. மறந்து போச்சே.. அந்த "பொடிசுகள்".. அபாரம்.. ரொம்ப நல்லா வந்திருக்கு.. எல்லோரும் படிக்க வேண்டியது.. குறிப்பாக "பெருசுகள்" படிக்க வேண்டியது.. கூண்டுக்கிளிகளாக மாறிப் போய் விட்ட பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களும் அம்மாக்களும் மறக்காமல் படிக்க வேண்டியது. நாம என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இது உதவும்.. படித்து முடித்தபோது நம்மையும் அறியாமல் நிறைய ஏக்கங்களை மனசு வெளிக்காட்டுவதை உணர முடியும்..

"கொரோனா காலத்து நிகழ்வுகள் நிலையானவை அல்ல.. ஆனால் என்றும் நம் மனங்களில் நிலைத்திருப்பவை" என்று கூறி முடித்திருக்கிறார் விஜயா.. உண்மைதான்.. நிறைய பாடங்களை இந்த பாழாய்ப் போன கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. மூளையில் உரைக்கும்படிதான் அது சொல்லி விட்டுப் போயிருக்கிறது.. அதிலிருந்து நாம் தேறி வந்து மாறிப் போன நமது வாழ்வியலையும், சூழலியலையும் திரும்ப செப்பனிடும்போது மீண்டும் இதுபோன்ற ஒரு இக்கட்டு நமக்கு வராது என்று நம்பலாம்.

நல்ல புத்தகம்.. பொழுது போக்குக்கு மட்டுமல்ல.. நிறைய சிந்தனைகளையும் தூண்டி விடும் வகையில் உள்ளது. நூறு ரூபாய்க்கு ரொம்ப ஒர்த்தானது.. மறக்காம வாங்கி வாசிங்க.

ஆசிரியர் தொடர்புக்கு:

விஜயா கிப்ட்சன் ([email protected])

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X