கர்நாடகாவில் 10ம்வகுப்பு பாடத்தில் பெரியார் பற்றிய பகுதிகள் நீக்கம்.. இடம்பிடித்த ஆர்எஸ்எஸ் நிறுவனர்
பெங்களூர்: கர்நாடகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து சமூக சீர்த்திருத்தவாதியான பெரியார் பற்றிய குறிப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். 2022-2023 கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் ஒருதலைப்பட்சமாக முடிவுகள் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது மைசூர் புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தான் தொடர்பான குறிப்புகள் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கேவலம்.. அவமானம்.. மாநிலங்களவை பதவிக்காக இப்படியா? காங்கிரஸை விளாசிய பாஜக நாராயணன் திருப்பதி!

ஆர்எஸ்எஸ் நிறுவனர் பேச்சு
அதன்பிறகும் பாடப்புத்தகம் தொடர்பாக சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கன்னட பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவரின் பேச்சுகள் இடம்பெற்றது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதனை நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

10ம் வகுப்பு சமூகஅறிவியல் புத்தகம்
இந்நிலையில் தான் தற்போது கர்நாடக பாடநூல் கழகம் தனது இணையதளத்தில் 10ம் வகுப்பு சமூகஅறிவியல் பாடத்தின் பகுதி ஒன்றுக்கான பாடப்புத்தகத்தை பதிவேற்றியுள்ளது. இதில் அத்தியாயம் 5 என்பது சமூகம் மற்றும் மத சீர்த்திருத்தங்கள் பற்றிய பாடமாக உள்ளது. இதில் பல்வேறு சீர்த்திருத்தவாதிகள், சீர்த்திருத்த அமைப்புகள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.

சமூக சீர்த்திருத்த இயக்கங்கள்
பிரம்ம சமாஜத்தை நிறுவிய ராஜாராம் மோகன்ராய், சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம், ஆத்மாராம் பாண்டுரங்கின் பிரார்த்தனா சமாஜம், ஜோதிபா பூலேயின் சத்யசோதன சமாஜம், சர் சையத் அகமது கானின் அலிகார் இயக்கம், ராமகிருஷ்ண பரமஹம்சரின் ராமகிருஷ்ண மிஷனை தோற்றுவித்த சுவாமி விவேகானந்தர், அன்னிபெசன்டின் தியோசாபிகல் சொசைட்டி பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பெரியார் குறிப்புகள் நீக்கம்
இந்த பகுதியில் இதற்கு முன்பு சமூக சீர்த்திருத்தவாதிகளான நாராயணகுரு (கேரளா ஆன்மிகவாதி, சமூகசீர்த்திருத்தவாதி), பெரியார் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த குறிப்புகள் இடம்பெறவில்லை. இதனால் சமூகஅறிவியல் பாடத்தில் இருந்து நாராயணகுரு, பெரியார் பற்றிய குறிப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தற்போது சர்ச்சையாகி உள்ளது. பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த பாடப்புத்தகம் இன்னும் மாணவர்களுக்கு வழங்கப்படாத நிலையில் அதற்குள் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நீக்கத்துக்கு எதிர்ப்பு
இதுபற்றி நாராயண குருவின் ஸ்ரீ கோகர்ணநாதர் கோவிலின் பொருளாளர் பத்மராஜ் கூறுகையில், ‛‛ஒடுக்கப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்க கடுமையாக பாடுபட்டவர் நாராயண குரு. இவரது சித்தாந்தங்கள், கொள்கைகள் இன்றைய தலைமுறையினருக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. நாராயண குருவின் பணி பற்றி குறிப்பிடாமல் சமூக மற்றும் மத சீர்த்திருத்தங்கள் தொடர்பான அத்தியாயம் ஒருபோதும் முழுமை பெறாது'' என்றார். இதுதொடர்பாக மங்களூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஜேஆர் லோபோ கூறுகையில், ‛‛நாராயண குரு மற்றும் பெரியார் தொடர்பான குறிப்புகளை புத்தகத்தில் நீக்குவது என்பது சமூக, மத நல்லிணக்கத்துக்காக இவர்கள் 2 பேரும் அளித்த பங்களிப்பை மாணவர்களுக்கு தெரியப்படுத்தாமல் தடுக்கும் செயலை அரசு செய்வது போன்றதாக உள்ளது'' என குற்றம்சாட்டி இருந்தார்.

7 ம் வகுப்பு புத்தகத்தில் நாராயண குரு
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை பாடநூல் ஆய்வு குழு தலைவர் ரோஹித் சக்ரதீர்த்தா மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் ‛‛10ம் வகுப்பு சமூகஅறிவியல் புத்தகத்தில் சமூக, மத சீர்த்திருத்தங்கள் தொடர்பான அத்தியாயத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாராயண குருவின் சீர்திருத்தங்களை புறக்கணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. இதுதொடர்பான குறிப்புகள் 7ம் வகுப்பின் சமூகஅறிவியல் 2வது பகுதி புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பாடப்பகுதிகள் நீக்கம் எனக்கூறி சிலர் பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் பொய்யான பிரசாரத்தை நம்ப வேண்டாம்'' என்றார்.

பெரியார் குறிப்புகள் இல்லை
இருப்பினும் பெரியார் தொடர்பான குறிப்புகள் 7 ம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் இல்லை. இதன்மூலம் பெரியார் பற்றிய குறிப்புகள் கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.