For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 8: டி.எம். நாயர்

By Chakra
Google Oneindia Tamil News

TM Nair
-ஆர்.முத்துக்குமார்

அறிக்கையைப் படிக்கப் படிக்க ஏமாற்றமாக இருந்தது நீதிக்கட்சித் தலைவர்களுக்கு. எத்தனைத் தீர்க்கமான சாட்சியங்கள். எத்தனை விளக்கமான அறிக்கைகள். எதற்கும் பலனில்லாமல் போய்விட்டதே... வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற நம்முடைய உயிர்நாடிக் கோரிக்கையை அறிக்கை கண்டுகொள்ளவில்லையே? அதிருப்தி. பலத்த அதிருப்தி. சோர்ந்துபோய் நின்றனர் நீதிக்கட்சித் தலைவர்கள்.

எதிர்த்துப் பேசக்கூட வாய்ப்பில்லாத வகையில் வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதை நினைத்து வேதனைப்பட்டார் டி.எம்.நாயர். வருத்தத்தைத் துடைக்கும் நோக்கத்துடன் மூன்று நேசக்கரங்கள் நாயரை நோக்கி நீண்டன. லார்டு லாமிங்டன். லார்டு சிடென்ஹாம். லார்டு கார்மைக்கேல். மூவருமே இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள். நாங்கள் இருக்கிறோம். கவலை வேண்டாம். விரைவில் வாய்ப்பூட்டு அகற்றப்படும். ஆவன செய்கிறோம். வாக்குறுதி கொடுத்தனர்.

சொன்னதைப் போலவே நாடாளுமன்றத்துக்குச் சென்று நாயரின் நிலைகுறித்துப் பேசினர்.

‘இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களின் குறைகள், பிரச்னைகள் ஆகியவற்றை முழுமையான புரிதலுடன் பேசக்கூடியவர் டி.எம். நாயர். இங்கே இருப்பவர்கள் இந்தியர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள டி.எம். நாயரின் பிரசாரம் அவசியம். ஆகவே, தன்னுடைய அரசியல் கருத்துகளைச் சொல்ல எந்தத் தடையும் நாயருக்கு இருக்கக்கூடாது.’

மூவர் முன்வைத்த வாதங்கள் நாயரின் வாய்ப்பூட்டைத் தகர்த்தெறிந்தன. பிராமணர் அல்லாத மக்களுக்கான உரிமைக் குரலை எழுப்ப இனி தடையேதும் இல்லை. நிமிர்ந்து உட்கார்ந்தார் நாயர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்துவதே பிராமணர் அல்லாத மக்களுக்கு விடியலைக் கொடுக்கும். இதை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் புரியவைக்க வேண்டும். புரிய வைப்பேன். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி கூறிவிட்டுத் தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.

2 ஆகஸ்டு 1918. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் (சாமானியர்கள்) சபை, பிரபுக்கள் சபை உறுப்பினர்கள் பலரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நீதிக்கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் பற்றிப் பேசினார் நாயர். முக்கியமாக, மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கையில் இருக்கும் பல அம்சங்கள் வரவேற்கக்கூடியதுதான். இருப்பினும் தென்னிந்தியாவில் வாழும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அடிப்படையில் சமூகநீதி வழங்க மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை தவறிவிட்டது. அந்த அறிக்கை பிராமணர்களுக்குச் சாதகமாகவே இருக்கிறது. அதிருப்திகள். குறைகள். பாராட்டுகள். மனத்தில் தோன்றிய அனைத்தையும் பதிவு செய்தார் நாயர்.

மேடைகளில் பேசுகிறோம். அரங்குகளில் பேசுகிறோம். வேறு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? பத்திரிகை. லண்டனில் நிறைய பத்திரிகைகள் இருக்கின்றன. எழுதலாம் என்று முடிவெடுத்தார். எடின்பரோ ரிவியூ, டெய்லி டெலக்ராஃப், ஸ்பெக்டேட்டர் என்று பல பத்திரிகைகளில் எழுதும் வாய்ப்புகள் உருவாக்கின. உருவாக்கிக் கொண்டார். நாயர் எழுதிய கட்டுரைகளை பல பத்திரிகைகள் பிரசுரம் செய்தன.

‘பிராமணர்கள் உடலுழைப்பில் ஈடுபடுவதில்லை. நூல் நூற்பதில்லை. வியர்வை சிந்தும் அடிமைகள் அவர்களுக்காக அனைத்தையும் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் பங்குக்கு ஆன்மிகத் துறையைப் பயிற்சி செய்தார்கள்... மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் அமலுக்கு வருமானால் சாதி உயர்வைப் பேணிக் காத்துவரும் பிராமணர்கள் கையில் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டு, அதன் விளைவாக மனு மீண்டும் செயல்வடிவத்துக்கு வரும் வாய்ப்புகள் உருவாகும்.’

மேடைகளிலும் பத்திரிகைகளிலும் பிராமணர் அல்லாதாரின் உரிமைகள் குறித்தும் பிராமணர்களின் ஆக்கிரமிப்புகள் குறித்தும் நாயர் முழங்கிய நாயர் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார்.

சௌத்பரோ கமிட்டி

14 செப்டெம்பர் 1918. சென்னை மாகாண அரசிடம் நீதிக்கட்சி சார்பில் மனு ஒன்று தரப்பட்டது. ‘தென்னிந்தியாவில் உள்ள பிராமணர் அல்லாத மக்கள் மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை குறித்து மன நிறைவு பெறவோ அல்லது மகிழ்ச்சி அடையவோ எதுவும் இல்லை. அந்த அறிக்கை குறித்து மக்கள் பெரிதும் கவலையுடன் இருக்கிறார்கள். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அறிக்கை வழங்கப்படவில்லை. விருப்பத்துக்கு மாறாகச் சென்னை மாகாண மக்கள் மீது அந்த அறிக்கை திணிக்கப்பட்டுள்ளது.’

எனினும், மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கின. தொகுதிகளைப் பற்றியும் வாக்குரிமை பற்றியும் நிர்ணயிப்பதற்காக சௌத்பரோ குழுவில் சர். பிராங்ஸ்லை, சாஹேப் சதா அஃப்தாப் அகமது கான், டபிள்யு.எம்.ஹெய்லி, சுரேந்திரநாத் பானர்ஜி, வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, மால்கம் என். காக் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். குழுவின் செயலாளராக பி.சி. டேலண்ட்ஸ் நியமிக்கப்பட்டார்.

முக்கியத்துவம் வாய்ந்த கமிட்டியில் திடுதிப்பென பானர்ஜி, சாஸ்திரி என்ற இரண்டு பிராமணர்களைச் சேர்த்தது நீதிக்கட்சித் தலைவர்களை ஆத்திரம் கொள்ளச்செய்தது. கூடாது. அவர்கள் இருவரும் குழுவில் இடம்பெறக் கூடாது. உடனடியாக அவர்களைக் குழுவில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும். மேடைக்கு மேடை ஆவேசப்பட்டனர். மாநாடு போட்டு அவர்களை நீக்கவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தனர்.

20 அக்டோபர் 1918 அன்று தென்னிந்திய பிராமணர் அல்லாதார் சிறப்பு மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. பிட்டி. தியாகராயர் அதற்குத் தலைமை வகித்தார். அதில் மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கையைக் கண்டித்துப் பேசப்பட்டது. குறிப்பாக, பிட்டி. தியாகராய செட்டியார் எடுத்துவைத்த வாதங்கள் அனலைக் கக்கின.

‘பிராமணர் அல்லாதாரைப் பார்த்து நீங்கள் பெரும்பான்மையாக இருக்கிறீர்கள் என்றுகூறும் மண்டேகுவும் செம்ஸ்போர்டும் பிராமணர் அல்லாதார் இருக்கும் இடத்தைத் தேடித்திரிந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ள நிலையைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?... கல்வி, சமுதாயம், அரசியல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் போதிய பங்கும் இடமும் அதிகாரமும் பெறும் வரையில் பிராமணர் அல்லாதார் தனி வாக்குரிமை பெற்றவர்களாக இருந்தே தீரவேண்டும்’

இந்திய வைஸ்ராய்க்குக் கடிதம் ஒன்று எழுதப்பட்டது.

‘சீனிவாச சாஸ்திரி எந்த விதத்திலாவது பிராமணர் அல்லாத மக்களுக்குப் பிரதிநிதித்துவம் வகிக்கிறார் என்று கற்பனை செய்துகொள்ளப்பட்டிருந்தால் நாங்கள் அந்த எண்ணத்தை வன்மையாக மறுக்கிறோம்... இந்தப் பிராமணர் சென்னை சட்டசபையில் உள்ள பிராமண உறுப்பினர்களால் டில்லி சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்... அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் இந்த மாகாணத்து பிராமணர் அல்லாதாருக்கும் எந்தப் பங்கும் கிடையாது’

ஜஸ்டிஸ் ஏட்டில் எழுதப்பட்ட தலையங்கங்களும் அறிக்கையைக் கண்டிக்கும் வகையில் இருந்தன. ஆனாலும் பிரிட்டிஷார் அசைந்துகொடுக்கவில்லை. நீதிக்கட்சித் தலைவர்களின் எதிர்ப்புகள் புறந்தள்ளப்பட்டன. சௌத்பரோ கமிட்டி தனது வேலைகளைத் தொடங்கியது. சென்னை மாகாணத்துக்கு வந்தபோது திவான் பகதூர் எல்.டி. சாமிக்கண்ணுப் பிள்ளை, கடலூர் திவான் பகதூர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் ஆகியோரைக் குழுவில் சேர்த்துக்கொண்டு விசாரணை நடத்தத் தொடங்கியது.

நீதிக்கட்சி, சென்னை மாகாண சங்கம், சென்னை மகாஜன சபா, சென்னை மாகாண காங்கிரஸ், சென்னை மாகாண முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து முக்கிய அமைப்புகளுக்கும் சௌத்பரோ கமிட்டி அழைப்பு அனுப்பியது. அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் சாட்சியம் அளித்துச் சென்றனர், நீதிக்கட்சியைத் தவிர.

என்னுடைய அரசியல் எதிரிகளால் தீர்ப்பளிக்கப்படும் நிலைக்கு நான் என்னை ஆட்படுத்திக் கொள்ளமாட்டேன் என்று திட்டவட்டமாகச் சொன்ன டி.எம். நாயர், தனது நிலையை விளக்கி சென்னை மாகாண அரசுக்குக் கடிதம் எழுதினார். அதில் சௌத்பரோ உள்ளிட்ட கமிட்டிகள் பகிரங்க விசாரணை நடத்தி, கூறுவோரின் கருத்துகளையும் எண்ணங்களையும் எழுத்துமூலம் குறித்துக்கொள்ளப் போவதில்லை என்பதால் அதில் வந்து சாட்சியம் அளிக்கத் தனக்கு விருப்பம் இல்லை என்றார்.

11 ஜனவரி 1919ல் பிராமணர் அல்லாதாரின் இரண்டாவது மாநாடு (நீதிக்கட்சியின் ஏற்பாட்டில்) கூடியது. பிட்டி. தியாகராய செட்டியார், டி.எம். நாயர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். பலத்த ஆலோசனைகளுக்குப் பிறகு இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒன்று, சௌத்பரோ குழுவிடம் எவரும் சாட்சியம் அளிக்கக்கூடாது. மற்றொன்று, டி.எம். நாயர் தலைமையில் நீதிக்கட்சிக் குழு ஒன்று இங்கிலாந்துக்கு அனுப்பி பிராமணர் அல்லாதாரின் எண்ணங்களைத் தெள்ளத் தெளிவாகப் புரியவைக்கவேண்டும்.

அதன் தொடர்ச்சியாகவே பிட்டி. தியாகராய செட்டியார் சென்னை மாகாண அரசுக்குக் கடிதம் ஒன்றை 12 ஜனவரி 1919 அன்று எழுதினார்.

ஒருதலைப்பட்சமாகவும் ஒரு சாராரை ஆதரிக்கும் விதத்திலும் அரசின் தன்மை இருப்பதாலும் இந்த விஷயத்தில் பிராமணர் அல்லாதார் ஆத்திரத்துடன் தெரிவித்த கடும் கண்டனத்துக்கு அரசு மௌனம் சாதித்து வருவதாலும் பிராமணச் சிறுபான்மை ஆட்சி அமைந்திட வக்காலத்து வாங்குவோருக்கு அரசு புகழாரம் சூட்டிக் கொண்டிருப்பதாலும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் சௌத்பரோ குழுவைப் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறது

மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை தொடர்பாக அனைத்து மாகாண அரசுகளும் கருத்து தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி சென்னை மாகாண அரசு தனது கருத்தைத் தெரிவித்தது.

தற்போதைய சட்டமன்றத்தில் 260 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட பிராமணர் அல்லாத இந்துக்கள் தற்போதைய பிரதேச வாரித் தேர்தலால் ஒரேயொரு பிரதிநிதியை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால் 15 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள பிராமணர்களோ 9 பிரதிநிதிகளைப் பெற்றுள்ளார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் பொருந்தாத இந்தத் தேர்தல் முறையானது வாக்குரிமைக் கமிட்டியினரால் நன்கு பரிசீலிக்கப்படும் என்றும் பெரும் மக்கள் தொகையைக் கொண்டுள்ள பிராமணர் அல்லாத இந்துக்கள் போதிய பிரதிநிதித்துவம் அடைந்திடும் வழிவகைகள் காணப்படும் என்று இம்மாகாண அரசாங்கம் பெரிதும் நம்புகிறது.

5 அக்டோபர் 1919 அன்று தனது அறிக்கையை வெளியிட்டது சௌத்பரோ கமிட்டி.

முஸ்லிம்கள், இந்தியக் கிறித்தவர் தவிர வேறு யாருக்கும் குறிப்பிட்ட வகுப்புத் தொகுதிகள் தேவையில்லை. தாழ்த்தப்பட்டோர் தவிர்த்த பிராமணர் அல்லாதார் மக்கள்தொகையில் பிராமணரை ஒப்பிடும்போது 22:1 என்கிற விகிதத்தில் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இப்போது வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் பிராமணர் அல்லாத வாக்காளர்களும் பிராமண வாக்காளர்களும் 4:1 என்ற விகிதத்தில் இருப்பார்கள். எனவே, இந்த எண்ணிக்கைப் பெரும்பான்மையைக் கருதி பிராமணர் அல்லாதார்க்கு தனித்தொகுதி ஒதுக்கீடு முறை தேவையில்லை.

பிராமணர் அல்லாதார் இதுவரை அரசியலுக்குச் செலவழித்த சக்தியை இந்தப் பெரிய பெரும்பான்மைச் சமுதாயத்தை அமைப்பு ரீதியாக ஒரு அணியில் திரட்டச் செலவிட்டிருந்தால் பிராமணர்களின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் மீறி அவர்கள் தங்கள் சக்தியை செயல்வடிவத்துக்குக் கொண்டுவந்திருக்கமுடியும் என்பதை எங்களால் நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

இதுதான் சௌத்பரோ குழுவின் அறிக்கையின் சாரம்.

நீதிக்கட்சியைப் போலவே சென்னை மாகாண அரசும் சௌத்பரோ கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்கவில்லை. கல்வி, சமுதாயம், மதம் என்ற மூன்று விஷயங்களில் ஆதிக்கம் செலுத்துவோருக்கு முன்னால் எண்ணிக்கை பலம் என்பது ஒன்றுமே இல்லை. (அழுத்தம் ஆசிரியருடையது) சௌத்பரோ கமிட்டி இதை உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டது என்றது சென்னை மாகாண அரசு.

டி.எம். நாயர் மரணம்

மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை மக்கள் சபை மற்றும் பிரபுக்கள் சபை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுப்பொறுக்குக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சீர்திருத்தங்களில் அதிருப்தி இருப்பவர்கள் இந்தக் குழுவில் தங்களது குறைகளை எடுத்துச்சொல்லி, அவற்றுக்குப் பரிகாரம் தேடிக்கொள்வதற்கான இறுதி வாய்ப்பு. ஆகவே, காங்கிரஸ், முஸ்லிம் லீக், ஹோம் ரூல் கட்சி உள்ளிட்டோர் இங்கிலாந்து சென்று அந்தக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் சார்பாக டி.எம். நாயர் மீண்டும் லண்டன் புறப்பட்டார். அவருடன் கே.வி. ரெட்டி நாயுடு, கோக்கா அப்பாராவ் நாயுடு, கே. சுப்பாராவ், ராமராய நிங்கார், எல்.கே. துளசிராம், ஏ.பி. பாத்ரோ ஆகியோர் சென்றனர். சென்னை மாகாணச் சங்கத்தின் சார்பாக வி. சக்கரைச் செட்டியார், பி. செஞ்சயா ஆகியோரும் சென்னை திராவிடச் சங்கத்தின் சார்பாக சர் ஏ. ராமசாமி முதலியாரும் காங்கிரஸ் சார்பாக சத்தியமூர்த்தி அய்யர், எஸ். சீனுவாச சாஸ்திரி, எம். ராமச்சந்திர ராவ், ஏ. ராமசாமி அய்யங்கார் ஆகியோரும், ஹோம் ரூல் சார்பாக டாக்டர் அன்னிபெசண்டும் லண்டன் வந்திருந்தனர்.

நாயரின் உடல்நிலை மோசமடைந்தது. கூட்டுப் பொறுக்குக் குழுவுக்கு முன்னால் நாயர் சாட்சியம் அளிக்கமுடியவில்லை. உடனே ஜூலை 18, 1919 அன்று கூட்டுப் பொறுக்குக் குழுவே (Joint Selection Committee) நாயர் தங்கியிருக்கும் மருத்துவ மனைக்கு வந்து அவருடைய சாட்சியத்தைப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கு முந்தைய நாள் காலை ஐந்து மணிக்கு டாக்டர் நாயர் மரணம் அடைந்தார். லண்டனிலேயே அவருக்கு இறுதிக் காரியங்கள் நடத்தப்பட்டன.

-தொடரும்...

திராவிட இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்), ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 400 ரூ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X