• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"அம்மா தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா?"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (13)

Google Oneindia Tamil News

- சுதா அறிவழகன்

"திடீர்னு தலை சுத்திருச்சுடா.. அப்படியே சாஞ்சுட்டேன்.. என்ன சொன்னாங்க டாக்டர்"

"ஒன்னும் இல்லம்மா. பிபி கூடிருக்கு.. சரியாய்ரும்னு சொல்லிட்டாங்க.. பயப்பட ஒன்னும் இல்லையாம்"

"ம்.. சரி.. நீயும் தைரியமா இரு.. அவ்வளவு சீக்கிரம் போய்ர மாட்டேன்" சிரித்தார் அம்மா.

ப்ரீத்திக்கு அழுகையை அடக்க முடியவில்லை.. சுனில் இன்னும் தோளை அழுத்தி ஆறுதல்படுத்தினான்.. அம்மாவின் பார்வை சுனில் மீதும், ப்ரீத்தியின் தோள்பட்டையைப் பிடித்திருந்த அவனது கை மீதும் பட்டுத் திரும்பியது.

சுனில் மெல்ல குணிந்து, ப்ரீத்தி அழாதீங்க. அம்மா பயப்படறாங்க பாருங்க. காமா இருங்க.. ப்ளீஸ் என்று கூறினான்.

ப்ரீத்தி தன்னை கட்டுப்படுத்த முயன்றாள். அழுகைதான் நின்றபாடில்லை.

 Nilavkukku Neruppendru Peyar Tamil series episode 13

அம்மாவிடம் அமைதி.. கண்ணை மூடிக் கொண்டார்.

சுனில், ப்ரீத்தியை கண்ணால் ஜாடை காட்டி வெளியே அழைத்தான்.

ப்ரீத்தியும் மெல்ல எழுந்து சுனிலுடன் வெளியில் வந்தாள்.

இருவருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை.. ப்ரீத்திக்கு அழுகை நின்றபாடில்லை.. அப்போது அந்தப் பக்கமாக டீ எடுத்துக் கொண்டு ஒருவர் வண்டியில் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்திய சுனில் 2 டீ வாங்கினான்.. அதை எடுத்துக் கொண்டு ப்ரீத்தி அருகில் வந்து "வா.. அங்க போய் உட்கார்ந்து பேசலாம்.. வா" என்று ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு போனான்.

கல் நாற்காலியில் மெல்ல அமர்ந்த சுனில், ப்ரீத்தியையும் அமரச் சொன்னான். கையில் டீ கப்பைக் கொடுத்தான். வாங்கிக் கொண்ட ப்ரீத்தி, அதை கீழே வைத்து விட்டு கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். மனசு இறுகிக் கிடந்தது.. இனம் புரியாத அழுத்தம் அவளை ஆட் கொண்டிருந்தது. எதுவும் இல்லாத வெறுமையாக உணர்ந்தாள். அவளது கட்டுப்பாட்டிலேயே அவள் இல்லை.. வெறித்த பார்வையுடன் டீ கப்பை எடுத்து வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சினாள்.

இறுக்கத்தைக் குறைக்க நினைத்த சுனில்.. பேச்சைத் திருப்பினான்

"ப்ரீத்தி நாம டிஸ்சார்ஜ் ஆயிக்கலாம்.. அம்மாவுக்கு வேற ஏதாவது டெஸ்ட் எடுக்கணுமான்னு கேட்கலாம். இல்லைன்னா அம்மாவையும் அழைச்சுட்டு போயிரலாம்.. இங்க இருந்தா அவங்களும் டென்ஷனாவே இருப்பாங்க. என்ன சொல்ற"

"கரெக்ட்தான் சுனில். அம்மாவுக்கு என்னைப் பத்தின கவலைதான் அதிகம். அதான் பிபி கூடிருச்சு போல.. நான் டிஸ்சார்ஜ் ஆயிட்டா அவங்களும் நார்மல் ஆயிடுவாங்கன்னு நினைக்கிறேன்"

"கரெக்ட்.. நான் போய் டாக்டர் கிட்ட பேசறேன்.. சரின்னு அவர் சொல்லிட்டார்னா இன்னிக்கே கிளம்பலாம்.. உங்க 2 பேருக்கும் ஆட்சேபனை இல்லாட்டி பேசாம எங்க வீட்டுக்கு வந்து நாலஞ்சி நாளைக்கு தங்குங்க.. அம்மா பாத்துக்குவாங்க. உங்க ரெண்டு பேருக்குமே நல்ல ரெஸ்ட் தேவை.. என்ன சொல்ற"

"உங்க வீட்டிலேயா.. எப்படிப்பா.. சரியா இருக்குமா.. உங்க அம்மா ஏதாவது சொல்ல மாட்டாங்களா"

"அதெல்லாம் சொல்ல மாட்டாங்க. இந்த மாதிரி சமயத்துல உதவுவதில் தப்பில்லைன்னுதான் சொல்வாங்க.. நீ என்ன சொல்ற"

"யோசனையா இருக்கு சுனில்"

"என்ன யோசனை"

"இல்லை.. இது சரியான்னு.. எங்கம்மா ஏதாவது நினைச்சுக்க மாட்டாங்களா"

"உங்கம்மா அல்ரெடி என்னைப் பத்தி நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க"

"உங்களைப் பத்தியா.. என்ன சொல்றீங்க"

"ஆமா.. நான் உன்னைத் தோளைத் தொட்டு ஆறுதல் சொன்னதை அம்மா அர்த்தத்தோடு பார்த்தாங்க"

"அப்படியா.. அய்யோ.. தப்பா நினைச்சிருக்கப் போறாங்க சுனில்"

"இல்லை.. அவங்க பார்வையில் ஒரு ஆறுதலும், நிம்மதியும் தெரிஞ்சுச்சு.. தப்பா பார்க்கலை"

"எப்படி சொல்றீங்க"

"கெஸ் பண்றேன்.. தன்னோட பொண்ணுக்கு ஒரு நல்ல ஆறுதல், தோழமை கிடைச்சிருக்குங்கற நிம்மதி அந்தப் பார்வையில் எனக்குத் தெரிஞ்சது... இந்த நினைப்பே அவங்களை நல்லா வச்சுக்கும் ப்ரீத்தி.. டோன்ட் ஒர்ரி"

குபுக்கென்று அழுது விட்டாள் ப்ரீத்தி.. அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டாள்.. சுனிலின் கை இரண்டையும் பிடித்து கன்னத்துடன் சேர்த்து வைத்துக் கொண்டு அழுதாள் ப்ரீத்தி.. அங்கு கரைகள் உடைந்தன.. கட்டுப்படுத்த முடியாத அன்பு வெள்ளம்.. சுனில் நெகிழ்ந்து விட்டான். ப்ரீத்தியை அணைத்தாற் போல அமர்ந்து அவளை கொஞ்ச நேரம் அழ விட்டான்.

அழுத ப்ரீத்தியை தனது வலது கரத்தால் மெல்ல அணைத்து சேர்த்தாற் போல இருத்திக் கொண்ட சுனில் அவளது காதுகளுக்கு அருகே சென்று "இந்தக் கையை இறுதி வரை விட மாட்டேன் ப்ரீத்தி.. என் மனைவி நீ தான். எனக்கு எல்லாமே நீதான்.. நிம்மதியாக இரு.. நான் இருக்கேன்.." அவன் சொல்லச் சொல்ல அப்படியே அவனது மார்பில் முகம் புதைத்து கொண்டு குமுறினாள் ப்ரீத்தி.. இது சந்தோஷத்தில் வெடித்து வந்த அழுகை.

அத்தனை நேரம் அமைதியாக இருந்த வானம் திடீரென வெடித்து மெல்லிய நீர்த்துளிகளை பூமியை நோக்கி தெளிக்க ஆரம்பித்தது.. அழகான மென்மையான மழை.. எழுந்து போகத் தோன்றாமல் அந்த இரண்டு ஜீவன்களும் நனைந்து கொண்டிருந்தன.. அவர்களின் மனசும்!

கரைந்து கொண்டிருந்த அந்த மழை நிமிடத்தில் நனைந்து கொண்டிருந்தது ஒரு அழகான காதல்.. மனசுக்குள் முட்டி மோதிய உணர்வுகளை அடக்க முடியவில்லை ப்ரீத்தியால்.. "கடவுளே.. இந்த தருணத்தில் நான் அப்படியே செத்து போய் விட மாட்டேனா.. இப்படி ஒரு அன்பை இவன் கொடுக்கிறானே.. இது போதும் எனக்கு.. என் மிச்ச வாழ்வின் மொத்தத்தையும் இப்போதே கொடுத்து விட்டானே இவன்.. என்னைத் தாங்கிப் பிடிக்கும் இந்த இதயத்தை பெற நான் என்ன தவம் செய்தேன்.. என் மனசை அப்படியே புரிந்து வைத்துள்ளானே.. இறைவா" உள்ளுக்குள் உருகிக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி.

சுனிலின் அணைப்பு விலகவில்லை.. இன்னும் சொல்லப் போனால்.. மேலும் நெருங்கி அவனிடம் மயங்கிச் சாய்ந்திருந்தாள் ப்ரீத்தி. சுனிலின் மனதிலும் நிறைந்து வழிந்தது நெகிழ்ச்சி.. ரொம்ப நிறைவாக உணர்ந்தான்.. ப்ரீத்தியின் மீதான தனது மொத்த காதலையும் தனது கரத்தின் வழியாக வெளிப்படுத்தினான்.. அதை ப்ரீத்தியும் உணராமல் இல்லை.

மெல்ல நிமிர்ந்து பார்த்தபடி "சுனில் எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுவியா"

"என் வாழ்க்கையே உனக்குத்தான்.. வேறு என்ன வேணும்"

"அது இல்லை.. அது எனக்குத் தெரியும்.. "

"வேற என்னடா வேணும்.. சொல்லும்மா"

"என்னை ஒரு நாள் கூட அழாம பாத்துக்குவியா"

"இது என்ன கேள்வி.. உன்னை அழ வைக்கவா நேசிக்கிறேன்.. எப்போதும் நெஞ்சில் வச்சு தாங்குவேன் ப்ரீத்தி... நீ என்னோட ஜீவன் ப்ரீத்தி"

"நிஜமாவா சுனில்"

"எங்க அம்மா சத்தியமா"

"இதுக்குமா அம்மா சத்தியம் பண்ணுவாங்க"

"பண்ணலாமே.. பொய் சொல்றவன்தான் சத்தியம் பண்ண மாட்டான்.. நான் உன்னை இந்த உலகிலேயே என் அம்மாவுக்கு அடுத்து அதிகமா நேசிக்கிறேன்.. என் வாழ்க்கை நீதான்னு முடிவு பண்ணிட்டேன்.. என்னோட சுக துக்கம் எல்லாத்திலும் உனக்கு இனி பங்குண்டு.. நீ என் உசுருடா ப்ரீத்தி"

"ரொம்ப அழுகையா வருது நீ பேசப் பேச"

"நோ.. அழக் கூடாது.. சந்தோஷமா மட்டும் இரு.. அது மட்டும்தான் நான் உனக்கு தரப் போறேன். நான் உனக்கு பிராமிஸ்களை வார்த்தையில் தர விரும்பலை.. வாழ்ந்து காட்டப் போறேன்.. உன்னோடு நான் வாழப் போகும் வாழ்க்கையை ஒருத்தனும் வாழ்ந்திருக்கக் கூடாது.. அப்படி வாழப் போறேன்"

" சுனில்.. ஐ லவ் யூ.. ஐ லவ்யூ சோ மச்.. மனசார சொல்றேன்.. நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரி சுனில்"

"நானும்தான் ப்ரீத்தி"

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X