• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"பத்திரமா பாத்துக்குவியா சுனில்?"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (15)

Google Oneindia Tamil News

- சுதா அறிவழகன்

ப்ரீத்தியின் அம்மாவின் அத்தியாயம் முடிந்திருந்தது.. அம்மா இப்போது இல்லை என்ற அந்த விநாடியை ப்ரீத்தியால் ஜீரணிக்கவே முடியவில்லை.. இனி நான் என்ன செய்யப் போகிறேன் என்ற வேதனையும், குழப்பமும், அச்சமும்.. ஒரே நொடியில் உலகம் இருண்டு போனது போல ஒரு உணர்வு.

அம்மாவின் உயிரற்ற உடலுக்கு அருகில் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள் ப்ரீத்தி.. சுனிலுக்கு எதுவுமே புரியவில்லை. இந்த சூழலை எப்படிக் கையாளுவது என்ற தெளிவு கூட வரவில்லை. காரணம், இதை அவனும் எதிர்பார்க்கவில்லை.

மெல்லக் குனிந்து ப்ரீத்தியை தட்டிக் கொடுத்தான்.. எழுந்த வேகத்தில் சுனிலின் இரு கரங்களுக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டாள் ப்ரீத்தி. அழுகை பன் மடங்காக மாறியது.. சுனிலுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை. என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்றும் புரியவில்லை.. மரணித்துக் கிடந்த ப்ரீத்தியின் தாயாரைப் பார்த்தான். அவரது கண்கள் தனக்கு கடைசியாக சொன்ன செய்தி நினைவுக்கு வந்து அவனுக்குள்ளும் அழுகையை வெடித்து வெளி வரச் செய்தது.

"ப்ரீத்தியை பத்திரமாக பாத்துக்குவேன்னு நம்பிக்கை இருக்கு" என்றுதான் அவரது பார்வை கடைசியாக அவனுக்குள் உணர்த்தியது. வாய் விட்டு அழுது விட்டான் சுனில்.. அவன் அழுததைப் பார்த்ததும் ப்ரீத்தி மீண்டும் மீண்டும் கேவி கேவி அழுதாள். அந்த இடமே சோகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது.

 Nilavkukku Neruppendru Peyar Tamil series episode 15

--

பார்மாலிட்டிகள் முடிந்து போய் விட்டன. ப்ரீத்தியின் தாயார் புகைப்படமாகி விட்டார்.. இனி அவர் வரப் போவதில்லை என்ற நினைப்பே ப்ரீத்தியின் நெஞ்சைப் பிசைந்தது. எல்லாமுமாக இருந்த அம்மா.. நீ இல்லாமல் நான் எப்படி இனிமேல் என்று நினைத்து நினைத்து அழுதபடியே இருந்தாள் ப்ரீத்தி.

அம்மா இல்லாமல் போன அந்த வீட்டில் இப்போது ப்ரீத்திக்கு ஆறுதலாக உடன் இருந்தது சுனிலும், அவனது தாயாரும்தான்.

"இங்க பாரும்மா.. எதிர்பாராதது நடந்து போச்சு..மனசை திடமா வச்சுக்கோ.. நீ சின்னக் குழந்தை இல்லை. தைரியமா இருக்கணும். கணவர் இல்லாத பெண்களுக்கு எப்படி வாழ்க்கை கஷ்டமோ அது போலத்தான் தாயாரை இழந்த பெண்களுக்கும். இருந்தாலும் நாம வாழ்ந்தாகணும். பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாள் போய்த்தான் சேர வேண்டும். அது இயற்கை. ஆனால் நமது பிறப்புக்கு அர்த்தம் இருக்கணும். பிறந்தோம், வாழ்ந்தோம் போனோம்னு இருக்கக் கூடாது. ஒரு அடையாளத்தை விதைச்சுட்டுப் போகணும்.. ஒரு நல்ல பொண்ணை உங்கம்மா பெத்தெடுத்து வளர்த்து ஆளாக்கிட்டுப் போயிருக்காங்க. அதுக்காக நீ பெருமைப்படணும். அடுத்து நீ எடுத்து வைக்க வேண்டிய அடிகளைப் பத்தி மட்டுமே கவலைப்படு. அம்மா தெய்வமா இருந்து உனக்கு துணை இருப்பாங்க.. தைரியமா இரு"

சுனிலின் அம்மா பேசப் பேச ப்ரீத்திக்குள் அழுகை மேலும் பொங்கியது. அதேசமயம், அவர் பேசப் பேச தைரியமும், தெம்பும் கூடியது. தனக்குத் துணையாக அம்மா இல்லாவிட்டாலும் சுனிலின் அம்மா இன்னொரு தாயாக இருந்து தனக்கு கை கொடுப்பார் என்ற நம்பிக்கை அவளுக்குள் பெருக்கெடுத்தது. அருகே இருந்து பேசிய அவரது மடியில் சாய்ந்து அப்படியே குழந்தை போல அழ ஆரம்பித்தாள் ப்ரீத்தி.

சுனிலின் தாயாரும் ப்ரீத்தியை இறுகப் பற்றிக் கொண்டு தலையைத் தடவிக் கொடுத்தார். முதுகை தட்டிக் கொடுத்தார். நான் இருக்கேன். நாங்க இருக்கோம் என்ற ஆறுதலை அந்த அரவணைப்பு ப்ரீத்திக்குக் கொடுத்தது. கொஞ்சம் கொஞ்சமா அவளுக்குள் இருந்த அழுத்தம் குறைந்தது. சற்றே இயல்புக்குத் திரும்பினாள். மெல்ல எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"ஸாரிம்மா.. உங்க எல்லோருக்கும் என்னால் ரொம்ப சிரமம்.. ஆனால் நீங்க மட்டும் இல்லாட்டி நான் ரொம்பவே உடைஞ்சு போயிருப்பேன்" என்றாள் முகத்தைத் துடைத்தபடி.

"அதை விடும்மா.. நீயும் எனக்கு ஒரு பொண்ணு மாதிரிதான். விட்ருவேனா.. சரி.. இப்ப ஆக போறதைப் பார்ப்போம்.. நீ என்ன பண்ணப் போறே.. தனியா எப்படி இருக்கப் போறே.. உறவுக்காரங்க யாரும் இருக்காங்களா" என்று பரிவோடு பலகேள்விகளைப் போட்டார் சுனிலின் அம்மா.

"இல்லம்மா. நெருங்கிய உறவுக்காரங்கன்னு யாரும் இல்லை.. அப்பா இறந்ததுக்குப் பிறகு அம்மாவை அவங்களோட நெருங்கி உறவுக்காரங்க எல்லோரும் கைவிட்டுட்டாங்க. அதனால் அம்மா ஒரு வைராக்கியத்தோடுதான் என்னை வளர்த்தார். அதனால நாங்க யாரையும் பக்கத்தில் சேர விடலை.. நான் தனியாத்தான் இருக்கணும்" இதை சொல்லி முடிக்கும் முன்பே ப்ரீத்திக்கு மீண்டும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அடக்க முயன்று தோற்றாள்.

"இல்லை.. நீ தனி ஆள் கிடையாது.. நாங்க இருக்கோம்.. நீ பேசாம எங்க கூட வந்து கொஞ்ச நாள் இரு. தனியா இருக்க வேண்டாம். கொஞ்சம் நார்மலானதும் நாம பேசிக்கலாம்.. என்ன சொல்றே" என்று மகனையும் ஒரு பார்வை பார்த்தபடி ப்ரீத்தியிடம் கேட்டார் அம்மா.

இதை ப்ரீத்தி எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் மறுத்தாள். "இல்லம்மா.. நான் மட்டும் தனியா வந்து உங்க வீட்டோடு இருந்தால் நல்லாருக்காது.. நாலு பேர் நாலு விதமா பேச மாட்டாங்களா" என்று கேட்டாள் சுனிலின் தாயாரிடம்.

"அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லம்மா.. உன்னோட பதிலைச் சொல்லு"

"எனக்கு ஆட்சேபனை இல்லை.. ஆனால் உங்க எல்லோருக்கும் சங்கடமா இருக்குமே.. உறவுக்காரங்க கிட்ட நீங்க பதில் சொல்ல வேண்டி வருமே.. அதான்.. யோசிக்கிறேன்"

இப்போது சுனில் குறுக்கிட்டான்.. "ப்ரீத்தி அம்மா சொல்வதுதான் சரி.. பேசாமல் எங்க கூட வந்துரு.. மத்ததைப் பிறகு பார்த்துக்கலாம்"

இப்போது சுனிலின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ப்ரீத்தி.. தேவையில்லாத குழப்பம் வராதா என்ற கேள்வி அதில் தெரிந்தது.. ஆனால் சுனிலின் பார்வையில்.. வராது, பாத்துக்கலாம் என்ற பதில் வேகமாக வந்து விழுந்தது.

அம்மாவிடம் திரும்பி.. "சரிம்மா நான் வர்றேன். ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு நான் ஹாஸ்டல் மாதிரி பாத்துட்டுப் போயிர்றன்" என்றாள் ப்ரீத்தி.

அதைக் கேட்ட அம்மா, "ஹாஸ்டலெல்லாம் வேண்டாம்மா.. நீ வா.. பாத்துக்கலாம்" என்று உத்தரவிடுவது போல கூறவே, அதைத் தட்ட முடியவில்லை ப்ரீத்தியால்.. சரிம்மா என்றாள் அமைதியாக.

சுனிலின் முகத்தில் பெரிய நிம்மதி, மனசுக்குள் ஒரு அமைதி பிறந்தது.. தனக்கு பொறுப்புகள் கூடியிருப்பதாக உணர்ந்தான். அம்மாவின் கை பற்றி, "தேங்க்ஸ்மா" என்று கூறி அம்மாவை அணைத்துக் கொண்டான்.

"போடா.. இதெல்லாம் நம்ம கடமைடா" என்பது அந்தத் தாயின் பதிலாக இருந்தது.

அந்த இடத்தில் மூன்று மனசுகளிலிருந்தும் கிளம்பிய உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி.. உணர்வு ஜோதியாய் எழுந்து வியாபித்தது.

"இருங்கம்மா நான் டீ போட்டுட்டு வர்றேன்" தலைமுடியை ஏற்றிக் கட்டியபடி எழுந்து அடுக்களைக்குள் புகுந்தாள் ப்ரீத்தி.

அவள் செல்வதை அமைதியாக் பார்த்துக் கொண்டிருந்த அம்மா சுனிலின் பக்கம் திரும்பினார்.

"3 மாசம் கழிச்சு உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம்.. அதற்கு அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம்"

அப்படியே ஷாக்காகி சமைந்து நின்றான் சுனில்

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X