• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"என்னங்க இதெல்லாம்?".. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (19)

Google Oneindia Tamil News

- சுதா அறிவழகன்

வெளியில் பைக் சத்தம். சுனில் வந்தாயிற்று. ப்ரீத்தி மெல்ல எழுந்து வாசல் பக்கம் போனாள்.

கையில் நிறைய பைகளுடன் சுனில் வந்தான். அவற்றை வாங்கிக் கொண்டாள் ப்ரீத்தி.

"என்னங்க இதெல்லாம்"

"ம்.. கொஞ்சம் டிரஸ்.. அப்றம் காய்கறி.. அவ்வளவுதான்"

"யாருக்கு டிரஸ்ஸுங்க.."

"உனக்கும் அம்மாவுக்கும் வாங்கினேன்.. உள்ளே வா சொல்றேன்"

 Nilavkukku Neruppendru Peyar Tamil series episode 19

ஷூவை கழற்றி ரேக்கில் வைத்த சுனில் அப்படியே உள்ளே வந்தான்.. அம்மாவிடம் சென்றான்.. பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.. "என்னாச்சும்மா.. மறுபடியுமா"

"ஆமாடா.. அதுதான் விசிட்டிங் புரபஸர் மாதிரி அடிக்கடி வந்து போகுதே. நீ ஏன் லேட்"

"அது பெரிய கதை. ராஜி கிடைச்சுட்டா.. அவளே எனக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பியிருந்தா. கல்யாணம் பண்ணிக்கிட்டாளாம். மாமா திட்டுவார்னு நினைச்சு வெளியே போயிருக்கா.. பயப்படாதீங்க. நானே வந்துர்றேன்னு சொல்லிருக்காம்மா.. என்ன சொல்றதுன்னு தெரியலை"

"ஏன்டா இந்தப் பாவிப் பொண்ணு இப்படிப் பண்ணா.. அண்ணன் என்ன குறை வச்சார் இவளுக்கு. சொல்லிருந்தா அவரே நல்லா பண்ணி வச்சிருப்பாரே.. ஏன் இப்படிப் பண்ணா. குடும்ப மானத்தையே வாங்கிட்டாளே" ரேவதி வருத்தப்பட்டார்.

சுனில் நீண்ட பெருமூச்சு விட்டான்.. பிறகு அம்மாவிடம் திரும்பி, "அம்மா நீங்க அலட்டிக்காதீங்க. அவ பத்திரமாதான் இருப்பா. சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருப்பா. நீங்க கவலைப்படாதீங்க" என்று அம்மாவின் கையைப் பிடித்தபடி கூறினான் சுனில்.

ரேவதிக்கு மனசுக்குள் ஒரு ஆற்றாமை வந்து அமர்ந்து கொண்டது. அண்ணனை நினைத்துக் கவலைப்பட்டாள். அவர் சுணங்கிப் போனதைப் பார்த்த ப்ரீத்தி நிலையை சகஜமாக்க எண்ணி, "அத்தை நைட்டுக்கு என்ன சாப்பாடு பண்ண" என்று ஆரம்பித்தாள்.

"ஆமால்ல.. அது வேற இருக்குல்ல.. மறந்தே போயிட்டேன் பாரு.. ஏதாவது டிபன் பண்ணேன்.. எனக்கு மனசே சரியில்லை. நீங்க சாப்பிடுங்க. நான் பால் மட்டும் குடிச்சிக்குறேன் போதும்" என்றாள் ரேவதி.

"என்னத்தே நீங்க.. நீங்க சாப்பிடாம நாங்க சாப்பிட்டு என்ன ஆகப் போகுது.. நான் ஒரு டிபன் பண்றேன்.. சூப்பரா இருக்கும்.. செய்யட்டுமா"

"அட அப்படி என்னம்மா செய்யப் போறே" ஆச்சரியம் காட்டினார் ரேவதி.

"அதானே.. அப்படி என்ன இருக்கு" இது சுனில்.

"செஞ்சு காட்டறேன் பாருங்க.. நல்லா விரும்பி சாப்பிடுவீங்க"

"ஆஹா.. உன்னோட சோதனைக்கு நாங்கதான் எலியா இன்னிக்கு... ஜமாய்.." கிண்டலடித்தான் சுனில்.

அதைக் கேட்டு சிரித்த ப்ரீத்தி... "அப்படில்லாம் இல்லை.. ஏதோ எனக்குத் தெரிஞ்சது.. செய்றேன்.. சாப்பிடுங்க.. சொல்லுங்க" என்றபடி எழுந்தாள்.

அப்படியே அம்மாவின் மடியில் சாய்ந்தான் சுனில்.. மனசுக்குள் பெரும் சந்தோஷம்.. அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்ட அவன், அவரது முகத்தைப் பார்த்து "தேங்க்ஸ்மா" என்று சொல்ல... ரேவதி மெல்லப் புன்னகைத்தார்.. "திருட்டுப் பய" என்றபடி அவனது காதைக் கிள்ளி.. " நீ போய் ரெடி பண்ணும்மா" என்று ப்ரீத்திக்கும் செல்லமாக உத்தரவிட்டார் ரேவதி.

3 மனங்களிலும் 300 கோடி பூக்களைக் கொட்டியது போன்ற சந்தோஷம்.. ஒரே நேரத்தில் குடியேறியது.

அடுத்தடுத்து வேலைகளை முடுக்கி விட ஆரம்பித்தார் ரேவதி.. ஒரே மகனின் கல்யாணம் என்பதால் தடபுடலாக நடத்த ஆசைப்பட்டார். குடும்ப ஜோசியரிடம் ஏற்கனவே போனில் பேசி அவரிடம் இருவரைப் பற்றியும் சொல்லி, முகூர்த்த நாள் குறிக்கச் சொல்லிக் கேட்டிருந்தார். அவரும் குறித்துக் கூறி விட்டார். அதை விட முக்கியமாக, இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அமர்க்களமாக இருப்பதாக அவர் ஜாதகத்தையும் பார்த்து கூறியது ரேவதிக்கு ரொம்ப திருப்தியாக போய் விட்டது.

திருமணத் தேதியை நோக்கி எல்லா ஏற்பாடுகளும் ஒன்று திரள ஆரம்பித்தன. கல்யாண மாப்பிள்ளையாக இருந்தாலும் கூட யாரிடமும் வேலைகளை ஒப்படைக்காமல் தானே எடுத்துப் போட்டுச் செய்ய ஆரம்பித்தான் சுனில். அவனுக்குத் துணையாக ப்ரீத்தியும் வீட்டிலிருந்தபடியே ஒவ்வொரு வேலையாக உதவி வந்தாள்.

இவர்களை மேற்பார்வையிடுவது மட்டுமே ரேவதியின் வேலையாக இருந்தது. மகனும், மருமகளும் செயல்பட்ட விதத்தைப் பார்த்து ரொம்ப மகிழ்ந்து போனார் ரேவதி. பரவாயில்லை ஜாடிக்கு ஏத்த மூடி மாதிரிதான் இரண்டும் இருக்குதுங்க என்று மனசுக்குள் சந்தோஷித்தார்.

அன்று கல்யாண பத்திரிகை டிசைன் பார்க்க முடிவு செய்து ப்ரீத்தியை ரெடியாக இருக்குமாறு சொல்லியிருந்தான் சுனில். வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்கு வெளியே வந்து காத்திருக்குமாறு அவன் கூறவே, ப்ரீத்தியும் அந்த மாலுக்குப் புறப்பட்டுப் போனாள். சுனில் சொன்ன இடத்தில் காத்திருந்தாள்.

"Preethi Where are You?.. I am on the way.. will reach you by 15 mins"

"சரி சீக்கிரம் வந்து தொலை.. காலெல்லாம் வலிக்குது.. come fast man"

"ஓகேடா ஹனி.. கொஞ்சம் லேட்.. ஸாரி டியர்"

இப்படித்தான் ஏதாவது பேசி மனசை கலைச்சுப் போட்ருவான் இந்த சுட்டிப் பய.. ஆமா இந்த சுனில் பையனை எப்பப் பார்த்தேன்..?

சுனிலுடனான தனது காதலை சுருக்கமாக மனசுக்குள் நினைத்துப் பார்த்த ப்ரீத்தி.. நிஜ உலகுக்கு வந்து நின்றாள்.. மெல்லிய புன்னகை உதடுகளில் விரிய.. செல்போனை எடுத்து வாட்ஸ் ஆப்பை திறந்தாள்.. திறந்த அடுத்த நொடி.. ஒரு கார் வேகமாக வந்து அருகில் நின்றது. அதி வேகத்தில் வந்த அந்தக் காரைப் பார்த்து அந்த இடத்தில் இருந்தோர் அதிர்ச்சியுடன் தெறித்து ஓடினர்.

ப்ரீத்திக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்தக் காரை இப்படி வேகமாக ஓட்டி வந்து நிறுத்துகிறார்கள் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் காரிலிருந்து இறங்கிய 3 பேர் வேகமாக ப்ரீத்தியை நோக்கி விரைந்து வந்து அவளை அப்படியே மடக்கிப் பிடித்து இழுத்து காருக்குள் தள்ளினர். மூன்று பேருமே பலமானவர்களாக இருந்ததால், ப்ரீத்தி காட்டிய எதிர்ப்பு அவர்களிடத்தில் பலிக்காமல் போய் விட்டது.

மொத்தமே 3 நிமிடங்கள்தான் இருக்கும்.. எல்லாம் நடந்து முடிந்து போய் விட்டது. அந்த இடமே பரபரப்பாகி விட்டது. கடத்தல் கார் அந்த இடத்தை விட்டு மின்னல் வேகத்தில் கிளம்பிப் போய் விட்டது.

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X