• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"என்னது.. என்ன சொல்றீங்க" .. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (20)

Google Oneindia Tamil News

-சுதா அறிவழகன்

"என்னது.. என்ன சொல்றீங்க" .. போனில் வந்த தகவலைக் கேட்டு அப்படியே உறைந்து போய் விட்டான் சுனில்.

உலகமே காலுக்குக் கீழே நழுவி விழுவதைப் போல உணர்ந்தான். எதுவுமே புரியவில்லை.

ப்ரீத்தியை யாரோ கடத்தி விட்டார்கள் என்று போனில் வந்த தகவல் அவனை உலுக்கிப் போட்டு விட்டது. கைக்கு எட்டிய தூரத்தில் ப்ரீத்தியை பறி கொடுத்து விட்டோமே என்ற வேதனையில் அழுகை முட்டிக் கொண்டு வர, பைக்கை வேகமாக காவல் நிலையத்துக்கு விரட்டினான்.

காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு.. பட்டப் பகலில், நூறு பேர் நடமாடும் இடத்தில், தைரியமாக இளம் பெண்ணை காரில் வந்து கடத்திப் போயிருக்கிறார்கள்.. அங்கிருந்த போலீஸ் பூத் என்ன செய்து கொண்டிருந்தது, போலீஸார் எங்கு போயிருந்தனர் என்று கோபத்துடன் முழங்கிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ஜெயசிங். ஏற்கனவே விரைத்து நின்ற அவரது மீசை மேலும் துடித்துக் கொண்டிருந்தது. இந்த சம்பவத்தை பெரும் அவமானமாக கருதினார் அவர்.

ஷாப்பிங் மாலின் நுழைவுப் பகுதி, அந்த சாலையில் இருந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி என அந்த ஏரியா முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் படையினர் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிருந்தனர். யாருக்கும் எந்த க்ளூவும் கிடைக்கவில்லை. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் எண்ணை வைத்து விசாரித்ததில், அது டூவீலர் நம்பர் என்று தெரிய வந்தது. எனவே போலியான எண்ணை வைத்து இந்த வேலையை செய்துள்ளனர் என்று தெரிய வந்தது.

தனது டீமுக்கு அடுத்தடுத்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ஜெயசிங். புயல் போல வந்த சுனில் பைக்கை சரியாக கூட நிறுத்தாமல் வேகமாக உள்ளே வந்தான்.

கோபத்துடன் நின்று கொண்டிருந்த ஜெயசிங்கிடம் போய் நின்ற அவன் " சார்.. நான் சுனில்.. என்னாச்சு சார்.. ப்ரீத்திக்கு என்னாச்சு" என்று அழுதபடியே கேட்க.. அவனை தோளைப் பிடித்து ஆசுவாசப்படுத்தினார் ஜெயசிங். அமரச் சொன்னார்.

 Nilavkukku Neruppendru Peyar Tamil series episode 20

இருக்கையில் அரைகுறையாக அமர்ந்த சுனிலுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

"என்னாச்சு என் ப்ரீத்திக்கு.. யார் சார் அந்த ராஸ்கல்ஸ்.. " என்று ஆவேசமாக அவன் கேட்க, டேபிள் மீது அமர்ந்தபடி அவனிடம் பேசினார் ஜெயசிங்.

"ரிலாக்ஸ் மிஸ்டர் சுனில். தரோவா விசாரிச்சிட்டிருக்கோம். இதுவரைக்கும் எந்தக் க்ளூவும் கிடைக்கவில்லை. உங்களுக்கு யாராவது முன்பகை உண்டா.. யாராவது உங்களுடன் ஏதாவது சண்டை போட்டிருக்காங்களா.. கொஞ்சம் யோசிச்சுச் சொல்லுங்க"

"அப்படியெல்லாம் யாருமே கிடையாது சார்.. சண்டை வந்தாலும் விலகிப் போகும் கேரக்டர் சார் நானும், ப்ரீத்தியும். அதுவும் இப்படி கடத்தும் அளவுக்கெல்லாம் யாருமே கிடையாதே"

"யாராவது தன்னிடம் ஏதாவது வம்பிழுத்ததாக அவங்க எப்பவாச்சும் உங்களிடம் சொல்லியிருக்காங்களா..?"

"இல்லை சார்.. அப்படியெல்லாம் யாரும் வம்பு செய்ததில்லை. அந்த அளவுக்கு அவள் இடம் கொடுக்கவும் மாட்டா. ஆனால் ஒரு முறை ஹாஸ்ப்பிட்டல்ல அவளை அட்மிட் செய்தப்ப அவளோட தாய்மாமா மூலமா ஒரு சிக்கல் வந்தது"

"என்ன சிக்கல்?"

விவரித்தான் சுனில்.. தகவல்களை உன்னிப்பாக கேட்டுக் கொண்ட ஜெயசிங், அருகில் இருந்த எஸ்ஐ தனக்கோடியை பார்த்தார். தனக்கோடி புரிந்து கொண்டு அது தொடர்பான தகவல்களை நோட் செய்து கொண்டார்.

"இதுதொடர்பாக போலீஸில் புகார் செய்தீங்களா"

"இல்லை சார், ஆனால் அந்த ஆஸ்பத்திரில அப்போது போலீஸார் இருந்தாங்க. அவங்களே விசாரணை நடத்தித்தான் இந்தத் தகவல்களை சொன்னாங்க.. நாங்க விட்ருங்கன்னு கேட்டுக் கொண்டதால், அதை அப்படியே விட்டுட்டாங்க.. கேஸ் பதிவாகலை"

"சரி சுனில்.. அமைதியா இருங்க.. எஸ்ஐ சில தகவல்கள் கேட்பார். அதை மட்டும் கொடுங்க. அமைதியா வீட்டுக்குப் போங்க. இது எங்களுக்கு மிகப் பெரிய சவால்.. அவனுகளை சும்மா விட மாட்டோம்.. ப்ரீத்தியை பத்திரமாக மீட்பதுதான் இப்போது முக்கிய வேலை.. அதை முடிச்சுட்டு அவனுகளை நடு ரோட்டுல வச்சு.. அமைதியா இப்ப வீட்டுக்குக் கிளம்புங்க. தேவைப்பட்டால் நாங்களே கூப்பிடுறோம்.. தைரியமா போங்க.. ப்ரீத்திக்கு ஒன்னும் ஆகாது.. She is like my daughter.. don't worry.. சீக்கிரம் மீட்க வேண்டியது என்னோட பொறுப்பு" என்று ஜெயசிங் பேசப் பேச உடைந்து போய் அழுது கொண்டிருந்தான் சுனில்.

மனசு ஆறவில்லை.. ப்ரீத்தியை ஏன் கடத்தினார்கள் என்ற கேள்வி அவனது மனதை துளைத்துக் கொண்டிருந்தது. யாராக இருக்கும் என்று யோசிச்சு யோசித்து மூளையே சூடாகி விட்டது. வீட்டில் அம்மாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்ற குழப்பம் மறுபக்கம்..

மெல்லத் தள்ளாடியபடியே எழுந்து போய் ஓரமாக இருந்த சீட்டில் உட்கார்ந்தான்

"ஸார்... கால் ஃப்ரம் பரந்தாமன்"

செல்லை ஜெயசிங்கிடம் நீட்டினார் சப் இன்ஸ்பெக்டர் தனக்கோடி.

"சொல்லுங்க பரந்தாமன்"

"ஸார், பூந்தமல்லி ஹைரோட்ல கடத்தல் காரை சிலர் பார்த்திருக்காங்க. அண்ணா நகர் ஆர்ச்சுக்கு எதிர்ப்புறம் உள்ள ஹோட்டல் கிட்ட கார் 10 நிமிஷம் நின்றிருக்கு.. பிறகு புறப்பட்டு மறுபடியும் ஸ்டிரெயிட்டா போயிருக்கு. எங்கேயும் திரும்பலை. ஸ்பாட்டில் உள்ள சிசிடிவி ஃபுட்டேஜை ஆய்வு செய்ததில் சில முக்கியமான தகவல்கள் கிடைச்சிருக்கு சார். நீங்க கொஞ்சம் வர முடியுமா"

"டீமோட கிளம்பி வர்றேன்"

போனை தனக்கோடியிடம் கொடுத்த ஜெயசிங், "தனக்கோடி நீங்களும், ராஜேஷும் என் கூட வாங்க.."

திரும்பி சுனிலைப் பார்த்த ஜெயசிங், "மிஸ்டர் சுனில்,, தைரியமா இருங்க.. சீக்கிரம் ப்ரீத்தியை மீட்டு விடலாம். நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க.. நானே கால் பண்றேன். 24 மணி நேரத்துல ப்ரீத்தி உங்க வீட்டுல இருப்பாங்க" என்று கூறினார்.

அதைக் கேட்ட சுனில், " இல்லை சார்.. நானும் உங்க கூடவே வர்றேன்.. அவனுகளை விடக் கூடாது சார்.. என்னோட ப்ரீத்தி அவனுக கிட்ட இருக்கிற ஒவ்வொரு நொடியும் நான் தோத்துட்டிருக்கேன் சார்.. விடக் கூடாது சார் அவனுகளை" என்று ஆக்ரோஷமாக கூறினான் சுனில்.

அவனது கோபத்தில் உள்ள நியாயத்தைப் பார்த்த ஜெயசிங்.. சரி வாங்க என்று அவனையும் தன்னுடன் வரச் சொல்லி விட்டு டீமுடன் கிளம்பினார். ஜீப்.. சூறாவளி போல சுழன்று கிளம்பியது.

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 19 ]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X