நிலவுக்கு நெருப்பென்று பெயர்... (2)
- சுதா அறிவழகன்
"ஏன்டி.. இந்தா இருக்குது கடை.. அதுக்குப் போய்ட்டு வர இவ்வளவு நேரமா"
"ம்.. உன் மருமகன் வந்திருந்தாரு.. அதான் பேசிட்டு வர லேட்டாய்ருச்சு"
"என்னாது.. மருமகனா.. யார்டி அது.. என்ன கொழுப்பா"
"பின்ன.. கடைக்குப் போய்ட்டு வர வேணாமா.. கடைல கூட்டம்.. நான் என்ன பண்றது.. சரி சரி டீ போட்டியா.. நான் வெளில போகணும்"

"அதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. போடணும் இரு..."
பட்டாம் பூச்சி போல படபடப்போடு தன் ரூமுக்குள் பாய்ந்தாள் ப்ரீத்தி. போய் படுக்கையில் விழுந்த அடுத்த விநாடியே.. அந்த ஹெல்மெட்காரன்.. மனத்திரையில் மெல்ல விரிந்தான்.. "ம்.. ஆமா.. இந்தப் பயலை மறுபடியும் பார்க்கணும்னு ஏன் எனக்குள்ள தோணுது.. பெரிய அழகன் இல்லை.. ஆனால் நல்லாதான் இருக்கான்.. மூக்கும் முழியுமா.. ரொம்பக் கோபக்காரன் போலவும் தெரியலை.. ஆனால் பட்டுன்னு பேசிடறான்.. என் மாமியாருக்கு இவன் ஒருத்தன்தான் போலயே.. ச்சே.. என்னாச்சு எனக்கு".. தன் தலையில் தானே ஒரு குட்டு வைத்துக் கொண்டு விருட்டென எழுந்து குளிக்க ஓடினாள் ப்ரீத்தி.
...
மயிலாப்பூர்...
"மாப்ளை.. நாளைக்கு காலைல டிரெய்ன்ல ராஜி வர்றா.. சரியான நேரத்துக்குப் போய் கூட்டிட்டு வந்திருங்க. மறந்துடாதீங்க"
"சரிங்க மாமா.. சொல்லிட்டீங்கள்ள.. கரெக்டா போய்ருவேன்" காபியை குடித்து முடித்து லோட்டாவை அம்மா ரேவதி கையில் திணித்தான் சுனில்.. அப்படியே செல்போனையும் அணைத்தான். அம்மா முகத்தில் அத்தனை புன்னகை.. பின்னே.. வரப் போவது அண்ணண் ராமலிங்கத்தின் மகளாச்சே, வருங்கால மருமகளாச்சே.
தனது மாமாவுடன்தான் போனில் பேசிக் கொண்டிருந்தான் சுனில்.. சுனிலின் தாய் மாமா ராமலிங்கத்துக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் ராணுவத்தில் இருக்கிறான். மகள் எம்சிஏ முடித்து விட்டாள்.. சென்னையில் வேலை கிடைத்து விட்டது.. அதற்காகத்தான் வருகிறாள். தஞ்சாவூர்தான் இவங்களோட சொந்த ஊர்.
முதலில் ராமலிங்கத்துடன் வருவதாகத்தான் இருந்தது.. ஆனால் திடீரென அவருக்கு உடம்புக்கு முடியவில்லை என்பதால் ராஜி மட்டும் வருகிறாள். ராஜி ரொம்ப அமைதியான பொண்ணு.. அதிர்ந்து பேசத் தெரியாது.. போனால் போன இடம், வந்தால் வந்த இடம்.. அப்படி ஒரு பெண்.
சென்னை அவளுக்குப் புதுசு.. வந்ததே இல்லை.. அப்பாவும் வரவில்லை என்பதால் பயந்து விட்டாள். அமிர்தம்தான் பேசி "நாங்க இருக்கோம்ல.. தைரியமா வாம்மா"ன்னு சொல்லி கூலாக்கியிருக்கிறார். அத்தை கொடுத்த தைரியத்தில்தான் கிளம்பி வருகிறாள் ராஜி.
சுனிலைப் பொறுத்தவரை ராஜியிடம் பாசமாக இருப்பான். மாமா பொண்ணு என்பதால் மட்டுமல்ல.. அவளோட அமைதி அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.. அதிகமாக பேச மாட்டாள்.. இதுதான் அவனுக்கு ரொம்பப் பிடித்தது.. மற்றபடி வேறு எந்த அபிப்ராயமும் அவனிடம் இல்லை.
அடுத்த நாள் ஆபீஸில் உள்ள மீட்டிங்குக்கு தயாராக வேண்டும் என்ற பரபரப்பு பட்டென்று மனதில் ஒட்டிக் கொள்ளே.. சற்றே ராமலிங்கத்தை மறந்து கம்ப்யூட்டர் பக்கம் திரும்பினான் சுனில்.. அந்த நேரம் பார்த்து டேபிளில் கிடந்த செல்போன் சிணுங்கி அசைந்தது.. எடுத்து காதில் ஒற்றியபடி, இன்னொரு கையால் லேப்டாப்பை ஆன் செய்தான்.
"ஹலோ.."
"ஹாய்.. சுனில் எப்படி இருக்கீங்க.."
"நல்லாருக்கேன்.. நீங்க.. யார் பேசறீங்க"
"நான்தான் பேசறேன்.. யார்னு தெரியலையா"
"தெரியலையே.. எங்க இருந்து பேசறீங்க"
"கண்டுபிடிங்க.. பார்ப்போம்"
"ஹலோ என்னங்க இது விளையாட்டு.. யார் நீங்க.. என்ன வேணும்.. யார் வேணும்.. என்ன விளையாட்டு இது"
"ஹலோ கோப்படாதே கண்ணா.. உன் கூட விளையாடாம வேற யார் கூட நான் விளையாட முடியும்"
"ஸ்டுப்பிட்.. யாரும்மா நீ.. போனை வை.."
யார்னே தெரியலையே, என்ன இப்படில்லாம் போனில் பெண்கள் "ஆடம் டீசிங்" பண்ண ஆரம்பிச்சுட்டாங்க என்று கடுப்பாகி செல்போனை ஆப் செய்தான் சுனில்.
திடீரென ஜன்னல் படபடபடக்க.. அதன் கொக்கியைப் போடப் பக்கத்தில் போனான் சுனில்.. வெளியே பார்த்தால் சிலுசிலுவென மழை.. முகத்தில் வந்து குத்தி நின்ற அந்த குளிர் காற்றில் சொக்கிப் போன சுனில்.. கொக்கியைப் போடாமல் அப்படியே கொஞ்ச நேரம் மழையின் வாசத்தை நுகர்ந்தான்.. கூடவே காற்றின் சுவாசத்தை வாசம் பிடித்தான்.. மனதில் விரிந்தது ஒரு கவிதை....
"விழுந்து படர்ந்து
அமிழ்ந்து கலந்து
விரிந்து விலகியது
மழைத்துளி
என் முகத்தில்
மூடிய கண்கள்
மெல்ல விரிய
புருவ நுனியில்
மெல்லிய இழையாய்
மழைத்துளி
பரவசம் பரவி
உடலெங்கும் நவரசம் கிளப்ப
சிலாகித்து சிலிர்த்து
பிடித்து மகிழ்ந்தேன்
மழைத்துளி
மீண்டும் மூடியது விழிகள்
மீண்டும் மீண்டும் விழுந்தன துளிகள்!"
மீண்டும் செல்போன் சிணுங்கல்.. கனவும், கவிதையும் கலைந்து அப்படியே திரும்பினான்.. போனை எடுத்து காதில் வைத்தான்.. அதே குரல்...!