• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

"யார் சார் இவன்?".. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (7)

Google Oneindia Tamil News

- சுதா அறிவழகன்

மொத்த அறையும் ஸ்தம்பித்துப் போனது.. சுனில் உறைந்து போய் விட்டான்.. மின்னலென சுதாரித்த அவன் அப்படியே விலக.. கத்தியுடன் பாய்ந்த நபர் குறி தப்பி சுவற்றில் போய் மோதினான்.

விழுந்த வேகத்தில் எழுந்த அவன் மீண்டும் சுனில் மீது பாய எத்தனிக்க.. வேகமாக தனது அருகில் இருந்த சேரை காலால் தட்டி விட்டான் சுனில்.. அது போய் அந்த கத்தி நபர் மீது மோத.. மீண்டும் விழுந்தான் அந்த மர்ம நபர். இப்போது சுனில் மேலும் சுதாரித்து அவனைப் அப்படியே மடக்கி முடக்கி கையைப் பிடித்துக் கொண்டான்.

Nilavukku neruppendru peyar tamil series episode 7

வேகமாக திரும்பி .."ப்ரீத்தி.. வெளியே போலீஸ் இருப்பாங்க போய் கூட்டிட்டு வா..சீக்கிரம் போ.. பயப்படாம போ" என்று கூற ப்ரீத்தி வெளியே ஓடினாள்.

சிறிது நேரத்தில் போலீஸார் விரைந்து வர.. அவர்களிடம் அந்த மர்ம நபரை ஒப்படைத்தான் சுனில்.. போலீஸாருக்கு அதிர்ச்சி.

"யார்டா நீ.. யார் சார் இவன்" என்று அந்த நபரிடமும், சுனிலிடமும் மாறி மாறி கேட்டனர் போலீஸார்.

"தெரியலை சார்.. திடீர்னு பாய்ந்து வந்தான்.. மடக்கிப் பிடிச்சுட்டேன்.. நல்லவேளை யாருக்கும் எதுவும் ஆகலை" இது சுனில்.

"சரி. சார்.. நாங்க பாத்துக்கரோம்.... வாடா " என்று கூறியபடி அந்த நபரை தட்டி நெக்கி வெளியில் அழைத்துச் சென்றனர் போலீஸார்.

ப்ரீத்திக்கு மார்பு அப்படி படபடத்தது. படுக்கையில் அமர்ந்து வேகமாக தண்ணீரைக் குடித்தாள்.. அப்படியும் பதட்டம் போகவில்லை.

சுனிலுக்கோ மண்டை காய்ந்து போனது. கத்தியை எடுத்து வந்து குத்தும் அளவுக்கு ப்ரீத்திக்கு யார் எதிரி இருப்பாங்க என்று மனதுக்குள் வேகமாக ஓடியது. அதை அவளிடமே கேட்டான்..

"யார் ப்ரீத்தி இது"

"தெரியலை சுனில்.. யார்னே தெரியலை.. முன்ன பின்ன பார்த்தது கூட கிடையாதே"

"எதுக்கு கத்தியோட வரணும்"

"எனக்கும் புரியலையே"

" அவன் என்னைத் தாக்க வந்தது போல தெரியலை.. தடுப்பேன் என்பதால்தான் என்னைத் தாக்க முயன்றான்.. ஆனால் அவன் கண் உன்னைத்தான் பார்த்தது.. நீ கவனிச்சியா" என்றான் சுனில்.

"ஆ.. மா.. சுனில்.. பார்த்தேன்.. எனக்கும் தெரிஞ்சது.. ஆனால் இவன் யார்னு தெரியலையே"

"சரி ரிலாக்ஸ் ஆகு.. போலீஸ் விசாரிக்கட்டும்.. நீ ரிலாக்ஸா இரு.. டீ சாப்பிடறியா.. வாங்கிட்டு வர்றேன் இரு"

"இல்லை.. வேண்டாம்.. இங்க இருந்து போகாதீங்க. கூடவே இருங்க.. பயமா இருக்கு எனக்கு" .. கையை சுனில் பக்கம் நீட்டி அவனது கையைப் பிடித்து இறுக்கியபடி சொன்னாள் ப்ரீத்தி..

ப்ரீத்தியின் குரலில் இனம் தெரியாத பயமும், பதட்டமும் இழையோடுவதை உணர்ந்தான் சுனில்.

மெல்ல அவள் அருகில் போய் தலையை பற்றி தட்டிக் கொடுத்தான்.. முதுகில் வாஞ்சையுடன் கை வைத்து தடவிக் கொடுத்து.. "தைரியமா இரு.. நான் இருக்கேன்" என்று கூறியபடி மெல்ல படுக்கையில் அவள் அருகில் அமர்ந்தான்.

அவ்வளவுதான்...

ப்ரீத்தி சுனிலின் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.. கண்களிலிருந்து தாரை தாரையாக தண்ணீர்.. திடுக்கிட்டுப் போனான் சுனில்..

"ஏன் ப்ரீத்தி.. என்னாச்சு.. ஏன் அழறே"

"தெரியலை.. யார் இவன் என்னை எதுக்காக குத்த வரணும்"

" அட.. அதுதான் தெரியலையே.. அதான் பிடிச்சாச்சே.. விசாரிச்சா தெரியப் போகுது.. ஆள் தெரியாம கூட உள்ளே புகுந்திருக்கலாம்.. யார் கண்டா.. விசாரிக்கட்டும்"

"ம்.. சரி.. ஆனா எனக்கு பயமா இருக்கு சுனில்.. இங்கேயே இருக்கீங்களா.. நான் டிஸ்சார்ஜ் ஆற வரைக்கும்"

டென்ஷன் சொய்ங்கென்று குறைந்து விசுக்கென ஒரு சந்தோஷம் சுனிலுக்குள் முளைத்துக் கொண்டது.

அடடா.. இதை விட என்னய்யா சான்ஸ் வேணும் ஒரு மனுஷனுக்கு.. விடுவோமா நாங்க.. விட மாட்டோம்ல.. இருந்தாலும் கொஞ்சம் கிராக்கி காட்டுவோம்

"அப்டியா ப்ரீத்தி.. அம்மாவை தனியா விட்டுட்டு வந்திருக்கேனே.. எப்படி தனியா உன் கூட இருக்க முடியும்.."

"ப்ளீஸ் சுனில்.. எனக்கு பயமா இருக்கு.. இன்னிக்கு நைட் மட்டுமாச்சும் இருங்களேன்.. ப்ளீஸ்"

"ம்..ம்.. உங்க அம்மா ஏதாவது சொன்னா.. என்ன பண்றது ப்ரீத்தி"

"அம்மா கிட்ட நான் சொல்லிக்கிறேன்.. இப்டி ஆயிப் போச்சுன்னு.. புரிஞ்சுப்பாங்க"

"அப்டியா.. சரி.. நான் என் அம்மாவுக்கு போன் போட்டு முதல்ல கேட்டுப் பார்க்கிறேன்.. சரின்னா தங்கறேன் ஓகேவா"

"அத்தை மறுக்க மாட்டாங்க.. போங்க.. போன் போட்டுப் பாருங்க".. வெட்கப் புன்னகை முகத்தில் விளையாட அடக்க முயன்று தோற்றாள் ப்ரீத்தி.

"என்னாது.. அத்தையா.. பார்ரா" கிண்டலடித்தபடி ப்ரீத்தியின் கண்ணைப் பார்த்தான் சுனில்.

அடேய் கடங்காரா.. அப்படிப் பார்க்காதடா.. முடியலடா.. என்னவோ பண்ணுதுடா.. நெளிந்து வளைந்தாள் ப்ரீத்தி.

சிரித்து புன்னகைத்தபடி குறும்புப் பார்வையை இன்னும் கொஞ்சம் அருகில் வந்து ஓட விட்டான் சுனில்.

"சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு
அதை சொல்ல துடிக்குது மனசு"

எங்கேயோ யார் போனிலோ ஓடிய ரிங் டோன்.. ப்ரீத்தி மனசை வந்து கவ்வி நின்றது.. செல்லை எடுத்துக் கொண்டு மெல்ல வெளியே வந்தான் சுனில்.

"அம்மா.. நான்தாம்மா.. வெளில வந்தேன்.. பிரண்டுக்கு ஒரு சின்ன ஆக்சிடன்ட்.. எனக்கு இல்லம்மா.. நான் நல்லாதான் இருக்கேன்.. ஆமா.. அவன் தான்... நைட் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்.. காலைல வந்துர்றேன்.. நீ சாப்பிட்டுட்டு டோர் சரியா பூட்டிட்டு படுத்துக்கோ.. வந்துர்றேம்மா.. பயப்படாம இரு.. தனியா இருக்காம்மா அவன் அதான்.. சரிம்மா.."

மனசு பூராம் அப்படி ஒரு சந்தோஷம்.. முதல் முறையாக ப்ரீத்தியுடன் இருக்கப் போறேன்.. ஆனால் அவளோட அம்மா இருக்காங்களே.. அவங்களை எப்டி சமாளிக்கிறது.. "மாமியார்" குறித்த யோசனை வந்து மண்டையைக் கொட்டியது. இதுக்கும் பீர்த்தியிடமே ஐடியா கேட்டுரலாம் பேசாம!

அறைக்குள் மெல்ல எட்டிப் பார்த்தான் சுனில்..

இன்னும் வெட்கம் விலகாமல் மனசெல்லாம் பரவச உணர்வுடன் அமைதியாக அமர்ந்திருந்தாள் ப்ரீத்தி.. முகத்தில் பட்டுத் தெறித்தது அந்த புன்னகை.. பெருமிதம்.. சந்தோஷம்.. எல்லாம் கலந்த சந்தோஷ உணர்வுக் குவியல் அது. அவள் குத்தியிருந்த அந்த மூக்குத்தியின் வெளிச்சம் மெல்ல டாலடித்து சுனிலின் மனதை சுண்டிப் போட்டது.

பேரழகுடா என்று மனதுக்குள் பெருமூச்செறிந்தபடி .. "ப்ரீத்தி.. அம்மா கிட்ட சொல்லிட்டேன்.. ஓகே சொல்லிட்டாங்க"

"அப்படியா தேங்ஸ் சுனில்" .. குரலில் குலோப்ஜாமூன் வாசம்..!

"யாரு என்ன சொன்னாங்க.. எதுக்கு ப்ரீத்தி தேங்ஸ்"

துணுக்குற்று திரும்பிப் பார்த்தால்.. ப்ரீத்தியின் அம்மா.

இவங்க "மாமியாரா இல்லை நாத்தனாரா".. இப்படி சமயாசமயம் புரியாமல் வந்து நிக்கிறாங்களே என்று தனக்குத்தானே அலுத்துக் கொண்டான் சுனில்.

"அது.. பெரிய கதைம்மா.. நான் சொல்றேன்.. நீ உட்கார்" அம்மாவை ஆசுவாசப்படுத்தினாள் ப்ரீத்தி.

பிறகு மெல்லச் சொல்லத் தொடங்கினாள்.. ப்ரீத்தியின் தாயார் அதிர்ந்து போய் விட்டார்..

"கடவுளே.. யாருடி அது.. நாம யார் வம்புக்கும் போறதில்லையேடி.. யாரா இருக்கும் அது"

"தெரியலம்மா.. அதான் சாரை இன்னிக்கு நைட் நமக்குத் துணையா இருக்கச் சொல்லிருக்கேன்.. நீ வேணாம்னா அனுப்பிர்றேன்".. மெல்ல கொக்கி போட்டு நிறுத்தினாள் ப்ரீத்தி.

"அப்படியா.. சரி பரவாயில்லை. இருக்கட்டும்.. ஆனால் தம்பிக்கு பாவம் சிரமம் நம்மால" என்று சங்கடத்தை வெளிப்படுத்தினார் ப்ரீத்தியின் அம்மா.

"அட இதுல என்னங்க இருக்கு.. எங்க வீட்டு ஆளுங்கன்னா விட்டுட்டுப் போயிருப்பேனா.. நமக்குள்ள என்னங்க இருக்கு" என்று பெரியாம்பளத்தனமாக அள்ளி விட்டான் சுனில்.

ஆமா.. இவங்களை எப்படி பேக்கப் பண்றது இப்போ.. ப்ரீத்தி பாட்டுக்கு கம்முன்னு இருக்காளே... உள்ளுக்குள் மருகினான் சுனில்.

"அம்மா இங்க ஒருத்தர்தான் இருக்க முடியும்.. நீ அந்த நர்ஸம்மா ரூமில் போய் படுத்துக்கோ.. சார் இங்கே இருக்கட்டும்.. அதான் சேப்டி"

அடிச்சா பாருங்க ப்ரீத்தி ஒரு "ஃபோர்".. அப்படியே மெல்ல போய் "சிக்சரில்" விழுந்தான் சுனில்.. இது நம்ம லிஸ்ட்டுலேயே இல்லையே.. நமக்கு மேலே பாஸ்ட்டா இருக்காளே நம்மாளு.. சுனில் மனசெல்லாம் வருடியது அந்த கிடார் இசை.

"எக்ஸ்கியூஸ்மி சார்.. உங்களுக்கு கருணாகரன் என்பவரைத் தெரியுமா"

வாசலில் குரல்.. திரும்பிப் பார்த்தால் போலீஸ்காரர்.

"எனக்குத் தெரியாது சார்.. இவங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம்"

ப்ரீத்தியிடம் திரும்பினான் சுனில்.

ப்ரீத்தி முகம் பேயறைந்தார் போல இருந்தது.. அவளது அம்மா அப்படியே சமைந்து போய் நின்றார்..

(தொடரும்)

பகுதி [1, 2, 3, 4, 5

66

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X