• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 8... "அஞ்சு ரூவா நோட்டு"

|

அன்னைக்குல்லாம் டவுண்லேந்து ஜங்ஷன் போறதுக்கு ஒரு ரூபா இருபது பைசாதான் . அப்பா வெளியூரில் வேலை பார்த்த காரணத்தினால் சில மாதங்கள் நான் கலைக்கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்க வேண்டிய சூழல் ...

ஆனால் ஒரே ஒரு ஆறுதல் சனி, ஞாயிற்று கிழமைகளில் டவுணுக்கு ஆச்சி வீட்டிற்கு வரலாம் ...

அத்தனை வயதிலும் ஒரு ஒயர் கூடையை எடுத்துக்கிட்டு மார்க்கட் வரைக்கும் நடந்தே போய் காய்கறி வாங்கி வருவது ஆச்சிக்கு வழக்கம்! ...லீவு நாட்களில் நானும் கூடவே போவேன் ...டவுண் மார்க்கட் எப்பவுமே கூட்டம் நிறைந்ததாய்தான் இருந்திருக்கிறது . நாங்க ரெண்டுபேரும் காந்தி சிலையில் இருந்து , மெல்லமா பேசிக்கிட்டே நடந்து மசூதி, டிப்- டாப் கடை தாண்டி அந்த குறுகிய தெரு வழியாகத்தான் மார்க்கட்டுக்குள் நுழைவோம்!.
எதிர்புறம் இருந்து வருபவர்களுக்கு ஏத்தாப்புல நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சாத்துவதற்கென்றே ஆரம்பத்திலேயே இருக்கும் பலப்பல பூக்கடைகள்--

Sillunnu Oru Anubavam Anju rooba nottu written by Vijaya Giftson

..மணக்க மணக்க மல்லிகை பூப்பந்துகள் , பிச்சிப்பூ சரங்கள் , கொழுந்து, குவளையில் நீர் ஊற்றி வைக்கப்பட்ட சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்கள், வழி நெடுக தொங்க விடப்பட்டிருக்கும் பன்னீர் மணம் கமழும் ரோசாப்பூ மாலைகள் , ... அடுத்தடுத்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெத்தலை, பாக்கு, சாம்பிராணி, ஊதுபத்தி, மஞ்சள், கற்பூரம் ,சின்ன சின்ன அகல் விளக்குகள் கொண்ட பூசை சாமான் கடைகள் .. *ஒவ்வொரு கார்த்தியலுக்கும் மண்ணில் செய்த இருக்காஞ்சட்டி வாங்குவதும் அங்கே தான் !

பூசை சாமான் வாங்குறோம்னா கண்டிப்பா தேங்காய் கடை இருக்கனும்ல!

மொத்த குவியலாய் குவிக்கப்பட்ட நூத்துக்கணக்கான தேங்காய்கள் பக்கத்துலேயே!

அதுகுப்பக்கத்துல டின்னு டின்னா நல்லெண்ணெய் , கடலெண்ணெய் , தேங்காண்ணெய்னு லிட்டர் கணக்குல மொத்த வியாபாரக் கடை இருக்கும்! ...

"போற போக்குல ஏ ....யா ச் சீ ய்.....எண்ணை வேணாமா? " ன்னு கடைக்காரர் கேக்க ...

" இப்பதைக்கு இருக்குய்யா-- அடுத்து வரும் போது வாங்குதேன் " ன்னு இவப் பதிலு ....

இப்ப நம்ம கல்யாண வீடுகள்ல தண்ணி ஊத்த ஒரு ஜக்கு இருக்கே --அது மாதிரி எண்ணையை கோதி ஊத்த பெரிய ஜக்கு மாதிரி எவர்சில்வர்ல வச்சிருப்பாரு கடைக்காரரு ...எவ்ளோ கேக்குறோமோ அவ்ளோ அளந்து ஊத்துவாரு .வீட்டில் இருந்தே ஹார்லிக்ஸ் பாட்டில் கொண்டு போன ஞாபகம் ...பிளாஸ்டிக் பவுச்களில் எண்ணெய் வியாபாரம் வந்த மாதிரி நினைவில்லை ... (அப்போல்லாம் ஹார்லிக்ஸ் பாட்டில் பத்து ரூபாய் தான் ...கூடவே ஆரஞ்சுப் பழங்களும் தான் ஆஸ்பத்திரிக்கு போனா வாங்கிட்டு போறது வழக்கம் ...)

அடுத்ததா வெங்காய மண்டி ...பெரிய வெங்காயம் ஒரு பக்கம் குவியல் குவியலா ....இன்னொரு பக்கம் சின்ன வெங்காயம் ...

ஒரு மரப்பெட்டியக் கவுத்திப்போட்டு அதுக்குமேல ஒரு சாக்கையும் விரிச்சு .. "கூறு அஞ்சு ரூவா ...கூறு அஞ்சு ரூவா" ன்னு கூவி கூவி விப்பாங்க . கூறு அஞ்சு ரூவாய்க்கு வாழைக்காய் , வெள்ளரிக்காய், வெண்டைக்காய்ன்னு தினுசு தினுசா வச்சிருப்பா ஒரு கிழவி (ஒரு கூறுல மூணு இருக்கும் )...எப்புடியும் ஒரு ஏதோ ஒன்னுல ஒரு கூறு ஆச்சி வாங்கிருவா...உருளக்கிழங்கு மட்டும் எப்பவும் அரைகிலோ -

வாங்குனப்றம் அந்த காய்கறிக் கூடைய தூக்கிட்டுவாரது நான்தான் ...

மழை பெஞ்சா ரோட்டோரத்துல இருக்குற சாக்கடை லேசா மேல வந்திரும்!

...நாங்க மார்க்கட் போய்ட்டு வரும்போது எவனாவது பக்கத்துல ஸ்பீடா சைக்கிள்ல போனா ப..டா..ர்... ன்னு தண்ணி மேல தெளிச்சுரும் ...

"மூதி , பாத்து போறானா பாருளா --அவங்கண்ணு என்ன பொடதிலயா இருக்கு ? " ன்னு அவன ரெண்டு ஏச்சு ஏசுவா ஆச்சி !

"ஏட்டீ உனக்கென்ன வேணும் ?" ன்னு இடையிடையுல கேட்டுக்கிடுவா!.

காய்கறி வாங்கும் போது வடக்களவு ஆச்சி பத்தி மட்டும் என்கிட்ட ஏதோ ஒன்னு சொல்லீருவா ஆச்சி ..

சொடல மாடன் கோயில் பக்கமா திரும்பும்போது ஒரு அம்பது பைசா உண்டியல்ல போட்ரு என்னா...அப்படின்னு கையில வைப்பா...

நாடியில ரெண்டு விரலால அங்கிட்டும் இங்கிட்டும் தொட்டு கும்பிட்டுக்கிடுவா..

அதுக்கு முன்னாடி , அந்த நாட்டு மருந்து கடை பக்கமா ஒருத்தர் உளுந்த வடை போட்டுட்டு இருப்பாரு ... அவருகிட்ட ரெண்டு உளுந்த வடைய எண்ணையும்- பேப்பருமா மடக்கி வாங்கி கையில வச்சிக்கிடுவா ... தீவாளிக்குன்னா அவ கிண்டுற திரட்டுப்பாலுக்காகவே நானெல்லாம் நடு ராத்திரி வரைக்கும் முழிச்சிருந்து சாப்ட்ருக்கேன் ... அந்த அரைவேக்காட்டு தேங்கொழலுக்கு சண்ட வர்றதெல்லாம் சகஜம் ...
எண்ணி நாலணாக்கு தேன் முட்டாயும் , ரோஸ் கலர்ல இருக்கற தேங்கா முட்டாயும் பேப்பர்ல மடிச்சு வாங்கிட்டு வருவா ...
தெருமுக்கு திரும்பியதும்,

இங்கனதான் அய்யப்பன் என்னமோ வீடியோ காஸெட்டு கடை ஆரம்பிச்சிருக்கானாம் ...படமெல்லாம் போட்டு பாக்கலாமாம் ன்னு சொல்லுவா .. அப்போ டிடி தமிழ் தவிர வேறு சேனல்கள் பாக்க வேண்டும் என்றால் தனியாக கேபிள் கனக்சன் பணம் கட்டி வாங்க வேண்டும் ...ஒரு சில வீடுகளில் மட்டுமே சாத்தியம் ..இல்லையென்றால் வெள்ளிக்கிழமை இரவு வரும் ஒளியும் ஒலியும் மற்றும் ஞாயித்துக்கிழமை மாலை ஒளிபரப்பப்படும் ஏதோ ஒரு தமிழ்ப் படத்தை மட்டுமே பாக்கக்கூடிய சூழல் !.

இங்கன இருக்காருல்லா கொலசேகரம் ஆசாரி அவரும் நல்லா செய்வாருட்டீ தங்க வளையலு....அப்படீம்பா
... இப்போ சோமசுந்தரம் தாத்தா கடைலேயும் நகைலாம் நல்லா இருக்காம் என்பது கூடுதல் தகவல்

அவ பேசப்பேச நானு "ம்ம்" கொட்டிக்கிட்டே வருவேன் ..

"ஏட்டீ அணு ஒனக்கு சாம்பார் புடிக்கும்லா " ன்னு சொல்லிக்கிட்டே தேங்காய் சீரகம் சின்ன வெங்காயத்த அம்மியில வச்சு அரைச்சு அதைப் போட்டு கொதிக்க வச்ச சாம்பார் இருக்கே ...அதுலயும் அவிச்ச உருளைக்கிழங்க கையாலேயே மசிச்சு போட்டு கடைசீல கொஞ்சமா கொத்தமல்லியையும் கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பா பாருங்க ..அடடா ...சாம்பார் சீவலப்பேரி சீமை வரைக்கும் மணக்கும் .. ... அடுக்களைச் சுவற்றில் சாஞ்சு உக்காந்திருந்து அவள் சமையல் செய்த உருவத்தின் பிம்பத்தையும் இன்னைக்கும் என்னால மறக்க முடியாது .!

21 ,இ --சொடல மாடன் கோயில் தெரு என்றைக்குமே திருநெல்வேலி டவுண் ஆள்களுக்கு மறக்க முடியாத ஒரு முகவரி ...

எழுத்தாளர்களுக்கு தி.க.சி தாத்தான்னா , மத்தவங்களுக்கு அவ தெய்வக்கா! ...யாரு வந்தாலும் அவளைத்தான் விசாரிப்பார்கள் ...அத்தனை ஒரு மனித நேயம் மிக்க மனுசி ... சாப்பிட உக்காரும் முன்னால சோறு கேட்டு வர்றவங்களுக்கு மொதல்ல எடுத்து வச்சுட்டு சாப்பிடுவா!

செமஸ்டர் லீவு முடிந்து ஜனவரியில் கல்லூரி விடுதிக்கு திரும்பச் செல்ல வேண்டும் ..

திங்கள் கிழமை காலைல கல்லூரிக்கு கிளம்பும் போது தேங்கா எண்ணையை நல்ல்ல்லா தலைல வச்சு பொறவாசல் மேல் படியில அவளும் , கீழ் படியில நானும் உக்கார அழகா பின்னல் போட்டு தலையை பின்னி விடுவா..

"ஆச்சி காலேஜ்க்கு கிளம்புதேன் "

"கிளம்புத்தேம்னு சொல்லாத ....போய்ட்டு வாறேம்னு சொல்லுட்டீ " ம்பா ..

(அப்போல்லாம் பெரியவர்கள் வார்த்தைகளை எவ்வளவு ஜாக்ரதையாக பயன்படுத்தக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் !)

நோட்டு, புக்கு , பை சகிதமா வாசத்திண்ணை வரைக்கும் வந்தவள பட்டாசலுக்குத் திரும்ப கூப்ட்டுப் போயி "பூட்டியாச்சிய கும்புட்டுக்கோ"ன்னு சொல்லுவா!

கும்புட்ட கையோட ஒரு நூறு மல்லியப் பூவக்குடுத்து , அவ முந்தானையில எட்டா மடிச்சு முடிஞ்சு வச்சிருந்த ஒரே ஒரு அஞ்சு ரூவா நோட்டையும் குடுத்து வழியனுப்பி வைப்பா தெய்வாச்சி ..

இந்தப் புத்தாண்டில் அந்த அன்புள்ளம் கொண்ட பெரியோர்களை மனதார நினைத்து வணங்கிக் கொள்கின்றேன் ...எத்தனைப் பரிசுகள் வாங்கினாலும் அன்று அவள் கொடுத்த அஞ்சு ரூவாய்க்கு ஈடாகுமா ?...
ஆச்சி குடுத்த அந்த அஞ்சு ரூவா நோட்டுத்தான் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மறக்க முடியாத மிகப் பெரிய புத்தாண்டு பரிசு! ..அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு இனிமையான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்!

#அம்மாச்சி

-விஜயா கிப்ட்சன்

( thanga.vijaya@gmail.com )

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Anju rooba nottu written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X