• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 10... "பிஸ்கட்டு "

|

பள்ளிக்கூடம் வரைக்கும் வேலை இருந்துச்சு ...

போய்ட்டு திரும்பற வழியில வந்ததே வந்தோம் அப்புடியே ரெண்டு காய்கறி வாங்கிட்டு போயிறலாம்னு தோணிச்சு ....

நம்ம மண்டைக்குள்ள தான் ஆயிரம் வேலை ஓடிட்டே இருக்குமே ..கேக்கவா வேணும் ..

மழை வேற வர்ற மாதிரி இருக்கு!

Sillunnu Oru Anubavam Biscuit written by Vijaya Giftson

சரி ஒரேடியாய் வேலையை முடிச்சிட்டு போயிருவோம் ...

அண்ணே , ஒரு கிலோ உருளக் கிழங்கு , அரக்கிலோ பீன்சு ன்னு சொல்லிக்கிட்டே தக்காளி , வெங்காயம் , அவரக்கா , பீட்ரூட்டு , இஞ்சி , முட்டைக்கோசு, கேரட் , தேங்காய் அப்றம் ஆ ....தட் ட்வின் சிஸ்டர்ஸ் .. "ஐ மீன் கொத்தமல்லி , கருவேப்பிலை" .. எல்லாம் எடுத்தாச்சு .

நா எடுத்துப்போட்ட கூடையில உள்ள எல்லா காய்கறியையும் எடை போட்டு ,ஒரு சின்ன துண்டு பேப்பர்ல விலை எழுதி சும்மா ஸ்.....டை...லா 29 /-,32/-,17/- அப்டின்னு சைடுல ஒரு கோடு வேற போடுதாரு அண்ணாச்சி ! போன சென்மத்துல ஒரு வேளை பேங்க் கேஷியரா இருந்திருப்பாரு போல !

வரிசையா மனக்கணக்குலேயே கூட்டி "மொத்தம் முன்னூத்து எண்பத்து ஒண்ணும்மா " ங்கிறாரு .

பர்ச தொறந்து பைசாவ எடுத்துக் குடுக்கிறதுக்குள்ள .. பின்னாலேர்ந்து ஒரு குரலு ..

"..ஏ .......தாயி ..."

யாருன்னு திரும்பி பாக்குறேன் ..

பஞ்சுப் பொட்டியா நரைச்ச தலை ...

லவிக்க இல்லாத அதரப் பழசான சீலை ...

வெள்ளக் கலரு தான் ..ஆனா இப்போ காபி கொட்டுனது கணக்கா ப்ரவுன் கலர்ல இருக்கு!

காலுல செருப்பு இல்ல ... வெயிலுல எப்புடி வெறுங்காலோட நடக்குதோனு நினச்சுக்கிட்டேன் !

பாதி ஒடம்பு கூனி நிலத்தப் பாத்தாப்லதான் இருக்கு !

பொக்க வாயி , ஒரு பல்லு கூட இல்ல..

காது இழுத்த மாதிரி இருக்கு . இருக்கற நிலைமையப் பாத்தா பாம்படம் கீம்படம் போட்ருந்துருக்குமோ என்னமோ ..?!

ஆனா இப்போதைக்கு ஒன்னும் போடல ..

கருத்து மெலிஞ்ச தேகம் ...அவ்வ்ளவு சுருக்கங்களோட ... வயசு எப்படியும் எண்பது இருக்கலாம் ...

நாலு பொட்டலப் பைய கையுல வச்சிருக்கு ..மண்டைய சொறிஞ்சுகிட்டே நிக்குது ..அந்த கால பிளாக் அண்ட் வொயிட்டு படத்துல வர்ற வில்லன் மாதிரி -அந்த பச்சக் கலரு கவர்க்குள்லேர்ந்து கடலைய எடுத்து ஒன்னொன்னா வாயுல போட்டு மெண்டுட்டே பேசுது ...

காசு கேக்க வந்த மாதிரியு தெரியல ..நா காசு குடுக்கவா இல்ல என்ன செய்யனு ஒரே யோசனையா இருக்கு ...
சரி , டக்குன்னு திரும்பி ,

"அண்ணே இந்தக் கிழவி யாருண்ணே ?" னு கடைக்காரரைப் பாத்து கேட்டுட்டேன் .

"அ......து.......வா.....ம்.....மா அது இங்கிட்டு தான் கொஞ்ச நாளா சுத்திகிட்டு இருக்கு ! கடப்பக்கமா வந்துச்சுன்னா எதையாச்சும் வாங்கி திங்கும்" ..."

சரி ன்னு கேட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன் ..

"வெளிய போனா மறக்காம இந்த இந்த மாத்திரை வாங்கிட்டு வந்திரு"ன்னு அம்மா சொல்லீர்ந்தாங்க ... அப்டி சொன்னாதான் நம்ம கரெக்டா மறந்திருவோம்ல !...ஹி ..ஹி

கொஞ்ச நேரம் கழிச்சு அப்பல்லோ பார்மஸி பக்கமா போயி சைடுல வண்டிய நிறுத்துறேன் ...

அங்க ...

ஹாயா கால நீட்டிக்கிட்டு அதே பச்ச கலர் கவரு, மஞ்சப்பை சகிதமா தட் சேம் கிழவி !

"என்னையப் பாத்தோன்ன

--வண்டி எங்க? "ங்குது

அ....ட எம்புட்டு வெவரம் !

வண்டிய ரோட்டுலயே நிறுத்திட்டு வந்துட்டேன் பாட்டி !

"நீ எந்த ஊரு ..சாப்ட ஏதாச்சும் வேணுமா ?!"

உடனே வானத்த அண்ணாந்து பாக்குது --

பக்கத்துல இருந்த ஆட்டோ ஸ்டாண்டு ஓட்டுனர்கள் எல்லாரும் நாங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிறோம்னு உத்து கவனிக்கறாங்க ! (ஒனக்கு என்னதுக்கும்மா வேண்டாத வேலை! ங்கற மாதிரி ....)

மாத்திரைகளை வாங்கிட்டு, பில்ல போட்டுட்டு வண்டிய எடுக்கறேன் ..மனசு கேக்கல ...

"ஒரு வேளை அனாதக் கிழவியா இருக்குமோ ...? எப்புடியோ சாப்பாட்டுக்கு அல்லாடுது" ...ன்னு யோசிச்சுகிட்டே ..
பக்கத்துல இருந்த கடையில ப்ரெட்டு, பழம் , பிஸ்கட்டுலாம் வாங்கி அது கையில குடுத்துட்டேன் "

இப்டி ரோட்டுல இருக்கற முதியோர்களை பாதுகாப்பாக எங்கு தங்க வைக்கலாம்னு வெவரம் தெரிஞ்ச நம்ம நண்பர்கள் யாராச்சும் இருக்காங்களான்னு கான்டக்ட்ஸ்ல சர்ச் பண்ணி கால் பண்ணிட்டேன் ...

"இப்டி ஒரு கிழவி இருக்கு ...இந்த லொகேஷன் ...கேட்டா எக்கு தப்பா மாத்தி மாத்தி பேசுதுன்னு !"

"என்ன செய்யலாம் ..ஹோம் ஏதாச்சும் இருக்குமா ..அங்க சேத்துரலாமா ?!

"மேடம் --அதுக்குலாம் ப்ரொசீஜர் இருக்கு ...மொதல்ல இப்டி ஒருத்தங்க இருக்காங்கன்னு கம்பளைண்ட் பண்ணனும் ...அதோட போட்டோ ஒன்னு ஆதாரமா வேணும்னு".... வரிசையா என்னென்னமோ சொல்றாங்க ..

எனக்கென்ன கவலைன்னா ?-- நடக்கையில ஆடுமாடுமுட்டியோ , வண்டியில ஏதும் அடிபட்டோ கிழவிப் போயி சேந்துற கூடாதுன்னு யோசிக்கிறேன் " ன்னேன் .

"பக்கத்துல ஏதாச்சும் அமைப்பு இருந்தா அங்க இருக்கிறவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வச்சுட்டு போங்க மேடம் " ங்கிறாரு அந்த நண்பர் .

சரிங்க னு சொல்லிட்டு திரும்பி பாத்தா ...அதுக்குள்ள கிழவியக் காணூம்.

வாங்கி குடுத்த பிஸ்கட்டு பொட்டலத்த தூக்கிட்டு பூமி பாத்த நடையோட எங்கயோ கிளம்பீருச்சு .. நானும் கொஞ்ச தூரம் பின்னாடியே போயி,

"பா ....ட் ...டீ " னு கூப்ட்டேன் ..

"நீயின்னும் போகலியா" ங்கிற மாதிரி என்னைய ஒரு பார்வை பாத்திட்டு நிக்குது ..

" பசிச்சுதுன்னா பிஸ்கட்ட சா......ப்......டு எ....ன்...ன ..." புரியுதா ? ன்னு கேட்டேன்

ஒடனே , என்னையப் பாத்து--

"நீயெல்லாம் இங்கன நிக்க கூடாது ....

சரி சரி நீ கிளம்பு ...

பன்னென்ற மணிக்கெல்லாம் ஒரு வண்டி வரும் ..அதுல ஏறி நா ஊருக்கு போயிருவேன் ...வெள்ளாமப் பாக்கணும் " னு சொல்லிச்சே பாக்கலாம் ... (அது சொல்லும்போது மணி ரெண்டரை )

எனக்கு பக்குனு ஆயிருச்சு ...இம்புட்டு நேரம் வாயவே தொறக்காத கிழவி ..திடீர்னு கருத்தா பேசுறாப்லயே ....ஒரு வேளை செலெக்ட்டிவ் அம்னீஷியா வா இருக்குமோ ?!

(என்னைய நினச்சு நீங்க இப்ப சிரிச்சீங்கள்ல அது மாதிரி எனக்கும் சிரிப்பு வந்துட்டு ...)

அது சொன்ன தொனி அப்டி ..

"அடக்கிழவி நா வேற பெரிய லெவெல்ல சட்டப் பஞ்சாயத்தெல்லாம் கூட்டியிருப்பேன் போ!" ..

தன்னிடத்தில் ஒண்ணுமே இல்லைனாலும் என்னாவொரு தெனாவெட்டு ! ...இந்த வயசுலேயும் வெறுங்காலோட உலகத்த சுத்தி வர்ற தைரியம் .. இத்தனைக்கும் அரை குறை மறதி வேற ...

தனது சின்ன வயதில் -- தனது காய்ப்பேறிய குதிங்கால்கள் செம்மண்ணுக்குள் அமிழ , காளையைப் பூட்டி கலப்பையும் மண்வெட்டியும் சுமந்து , களை எடுத்து ,நீர்ப் பாய்ச்சி, நெல்லு வயல்ல வெளஞ்ச கதிர் அறுத்து முப்போகத்த பாத்தவளாக் கூட இருக்கலாம் ...

இப்படிப்பட்ட மனுஷி மண் சார்ந்து , பூமித் தாயை வணங்கி, சூரியனுக்குப் பொங்கலிட்டு படச்சு வெள்ளாமைக் கண்டவளாக மட்டுமே இருக்க முடியும் !

அவளின் ஞாபகச் சிறகுகளோடு என் வண்டி பறக்குது ..

திரும்பவும் ஒரு நாள் தொலைவில் அவளைப் பார்த்தேன் .அதே மஞ்சப்பை , கூனியாக இருந்தாலும் கெத்து நடை ..என் சார்பில் யாரோ அவளுக்கு பிஸ்கட் வாங்கி குடுத்துக் கொண்டிருந்தார்கள் ..

அவள் எத்தனை பேருக்கு கதிர் அறுத்து சோறு போட்டாளோ! ..அந்த மண் அவளை இன்றளவும் விட்டுக்கொடுக்கவில்லை-- வாழவைக்கின்றது என்றே எண்ணுகிறேன் .. சரிதானுங்களே ....

மணம் கமழும் மங்கள மஞ்சளோடும் , கற்கண்டுச்சுவை கரும்போடும் , பாரெல்லாம் பரந்து விளையும் பனங்கிழங்கோடும் நாம் தைத்திருநாளை வரவேற்போம் ..விவசாயத்தை மதிப்போம் . அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! ..

#விவசாயி
#அன்பை விதைப்போம்

--விஜயா கிப்ட்சன்

( thanga.vijaya@gmail.com )

(அழகிய அனுபவங்கள் தொடரும்)

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Biscuit written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X