• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 7... "முனீசு"!

Google Oneindia Tamil News

- விஜயா கிப்ட்சன்

போற வழி நெடுக கலர் கலரா ஸ்டார்ஸ் ....நைட் நெல்லையே வண்ண வண்ண விளக்குகளால சும்மா மின்னுது ...
வழக்கமா வாங்கப் போற கடை தான்..

கடைக்கு முன்னாடி வண்டிய நிறுத்தீட்டு உள்ள போனா கூட்டம் னா கூட்டம் ! அப்படியொரு கூட்டம் ...

"ஆத்தீ கொரோனாவே செத்துச் செதஞ்சு சின்னா பின்னமாயிரும் போலயே!" ... ன்னு நினச்சுகிட்டே பைக்குள்ள கைய விட்டு துழாவுறேன்!

அம்மா வரும்போதே வரிசையா எழுதி வேற குடுத்து வுட்டாங்களே!

லிஸ்ட்டை காணூமே ...ஆங் ....பர்சில் வச்சேனே ..கிடைச்சுருச்சு ... (கொண்டையிலேயே சீப்ப வச்சுக்கிட்டே தேடுத மாதிரி...)

Sillunnu Oru Anubavam is a story series and this is about Muneesu written by Writer Vijaya Giftson.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, நல்லெண்ணெய் , கடலை எண்ணெய் , வெண்ணெய் , முந்திரி , கிஸ்மிஸ் பழம், பேக்கிங் பவுடர் , சர்க்கரைன்னு இப்டி இத்யாதிகள மொத்த சரக்கா வாங்கி வைக்குற பழக்கம் இருந்தாலும் பண்டிகைக் காலங்களில் திடீர்னு தட்டித்தான் போயிருது..

தீவாளிக்கு வேற நெய் உருண்டை, முறுக்கு, தட்டை, கோதுமை அப்பம் , வடை ,கேசரின்னு செஞ்சு காலி பண்ணீர்ப்போம்ல!

கொரோனா கால கட்டத்துக்கப்புறம் எல்லாருமே ,ஏதோ கொஞ்ச கொஞ்சம் வீட்டுல செய்யுறது தான்..
ஆல் லேடீஸ் குக்கிங் அண்ட் போஸ்டிங் இன் தி சோசியல் மீடியா யு நோ !!

மிச்சம் மீதிக்கு இருக்கவே இருக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ், திசையன்விளை தங்கையா ஸ்வீட்ஸ் , சாந்தி ஸ்வீட்ஸ்சு ...இருட்டுக்கடை அல்வா, ஆர்யாஸ் , அரசன்னு வெரைட்டி வெரைட்டியா ..... கடையா இல்ல திருநவேலில?!

நானும் சூப்பர் மார்க்கெட் ரேக்கில் வரி..ஸ் ..ஸ்..சையா பாத்துகிட்டே வாரேன் .. சாமி வீதி உலா போன கணக்கா!

எழுதுனது , எழுதாதது, பாத்தது பாக்காதது, புடிச்சது புடிக்காதது ... எல்லாத்தையும் கூடையில தூக்கிப் போட்டாச்சு. என்னமோ ஷாப்பிங் போணும்னாலே பொண்ணுங்களுக்கு பரவசம் தான் போல... ஹி ஹி ஹி ....
. திடீர்னு சூப் நூடுல்ஸ் கண்ணுல பட்டுட்டு !

இந்த எழவெல்லாம் சாப்பிடக்கூடாதுனு ஆயிரம் பேரு பத்தாயிரம் தடவை அட்வைசுப் பண்ணாலும் நம்ம கொரங்கு மனசு கேக்கவா செய்யுது?...

பிச்சு போட்டாலும் சரி, வச்சுக் கட்டுனாலும் சரி இந்த கிழிப் ப்ரோட்டாக்கும் (அப்டீக்கா ப்ரோட்டா மேல சால்னாவ ஊத்தி ஊற வச்சு வாழ இலையில சுடச்சுட மடிச்சு குடுக்கிறது) , பாட் ப்ரோட்டாக்கும் சிலோன் ப்ரோட்டாக்கும் மனசு ஆளாப் பறக்குதா இல்லையா ?

அது மாதிரி .."இதெல்லாம் சாப்பிடப்படாது ...நல்லது இல்லனு ஒரு மனசு ..." சொல்லுது

"சாப்ட்டு எவ்ளோவ் நாளாச்சுன்னு இன்னொரு மனசு ..." சொல்லுது

கடைசீல ரெண்டுமில்லாம நாக்கு ஜெயிச்சிருச்சு...

பெருந்தன்மையோட ஒரேயொரு பாக்கெட்ட தூக்கி போட்டுக் கிட்டேன் !
(நாவடக்க்கம்...... பப்ளிக் பப்ளிக்)

சர..சர..ன்னு பில்லிங் கவுண்டர் வந்தாச்சு..

நம்ம கூடையிலப் பொறக்கிப் போட்ட எல்லா சாமானையும் கீ .......ன்........கீ ........ன் னு ஸ்கேனர் ல காமிச்சுட்டு--
"மேடம் ஆயிரத்து ஐநூத்து அம்பத்து ஆறு" ஆச்சுங்கறான்!

உள்ளப் போனாலே ஆயிருதுப்பா -
ஆயிரம் ஓவா வ சொன்னேன் !

சரின்னு பில்லக் கட்டி ,செக்யூரிட்டிட்ட குடுத்து வச்சிருந்த கட்டப்பைய வாங்கி (ஆமாஞ்சாமி இப்பல்லாம் எல்லாக் கடையிலேயும் பேப்பர் பைகள் தான் )சாமானெல்லாம் உள்ள வச்சுட்டு,வெளிய வந்து வண்டியேறி காலுக்கு நடுவுல பைய வச்சுட்டு திரும்புறேன் ...

"எ...ம்...மா " ன்னு ஒரு குரல் ..

திரும்பி பாத்தா பல நாட்கள் குளிக்காத தேகம், சிரைக்கப் படாத முடி, ... நீ.........ள.......மான தாடி ...
காசுக்காக கையேந்தி நிக்குறாரு ஒரு பெரியவரு ..

என்னை ரெண்டொரு நொடிகள் பாத்துட்டு உடனே அந்த பக்கத்தில் யாரு கிராஸ் பண்ணாலும் அவர்களிடமும் கையேந்துகிறார் -கெந்தி கெந்தி நடந்து கொண்டே ..

"உங்க பேரு என்ன ?"

"முனுசாமி ன்னோ முனுசு ன்னோ முனீசுன்னோ " சொல்லுதாரு

காதுக்கு எட்டல ...மொத்தத்துல வெளங்கல ..

டைம் வேற ஆச்சு ...மணி ஆறரை ...இப்போவே நடையக் கட்டுனாதான் வீட்ல அடுத்த ரவுண்டு டின்னர் ஆரம்பிக்க முடியும்....

..கிளம்பணுமா இல்லையா ?!

"எந்த ஊரு நீங்க... ஏன் இங்க இருக்கீங்க ?"

பதில் இல்லை ...

"இப்டி எவளாச்சும் நடுரோட்டுல என்கிட்டே வந்து கேப்பாளா- இல்ல பேசுவாளா ?" ங்கிற மாதிரி ஆழமான பார்வை..

கொஞ்ச நிமிஷம் கழிச்சு ..

"தெங்காசி"

"அப்டியா !"

"எப்டி இங்க வந்தீங்க ..புள்ளைங்க இல்லையா? "

"உடம்புக்கு முடியாம போயிட்டு தாயி ...ஹக்கிரவுண்டுல வைத்தியம் பாக்கலாம்னு வந்துட்டேன்" .
(தெளிவான பேச்சு,புத்தி ஸ்வாதீனம் இல்லை னு தெரியுது )...

சட்டுன்னு ஸ்பீடா ஒரு மாதிரி பதட்டமா பேசுறாரு-

"உங்கள நா பாத்திருக்கேன் ...நீங்களே எனக்கு ரெண்டு தடவை காசு குடுத்திருக்கீங்க !"

(எனக்கு அப்புடியே தூக்கி வாரி போட்ருச்சு... நாம தான் வண்டிய எடுத்துக்கிட்டு இங்கிட்டும் அங்கிட்டும் ஆயிரம் சோலியா குறுக்கா மறுக்கா போய்ட்டு வாரோம் .அது இவருக்குமா தெரிஞ்சுருச்சு? ....அவ்வ்வ் ... !)

இல்லையே ....என்னையவா? பாத்திருக்க வாய்ப்பில்லையே !வேற யாரையோ சொல்றீங்க ...

"ஒரு தடவை பெரியாஸ்பத்திரி பக்கத்துல அப்புறம் பஸ்ஸ்டாண்ட் பக்கம் னு சொல்றாரு ...

அம்புட்டு ஞாபகசக்தியா இருக்குது ??!! --முனீசுக்குத்தான்!

சரின்னு கேட்டுக்கிட்டேன் ...

""ஒன்றுமில்லாமையில் கடவுளிடத்திலிருந்து பெற்றுக்கொண்டோம் ...அவருக்கே திரும்ப செலுத்துகிறோம் ங்கிற மாதிரி!"

கையில் வைத்திருந்த காசிலிருந்து என்னால் முடிந்ததையும் குடுத்தேன் ...

"உங்க புள்ள குட்டியெல்லாம் நல்லா இருக்கணும்"னு வாயாரச் சொன்னாரு!

சொல்லிவிட்டு அவர் அங்கே நிற்கவுமில்லை ... அடுத்த நொடி விறு விறு வென நடந்து கடந்தும் போய் விட்டார் ...

வண்டியின் சைடு ஸ்டாண்டை எடுத்து விட்டுவிட்டு திரும்பியபடி ஒரு நிமிடம் அவர் முகத்தை பார்த்தேன் ...

மறுபடியும் அவர் முகத்தப் பாத்தோன எனக்கென்னமோ தாடியும் ,நீளமான பின் முடியும், ஆழ்ந்த பார்வையும் சேர்த்து லேசாகத் தலையை வானத்தை நோக்கி நிமிர்த்தவாறு அனைத்துக் கிறிஸ்தவர்கள் வீட்டுலேயும் ஹால் போட்டோல அதிரூபனாய் ஜொலிப்பாரே "இயேசு கிறிஸ்து" அவரப் பாத்த மாதிரியே இருந்துச்சு !

ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள் ..அவைகள் விதைக்கிறதுமில்லை , அறுக்கிறதுமில்லை , கழஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை .அவைகளையும் பரம பிதா பிழைப்பூட்டுகிறார் ! அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா ?!

என்கிற வேத வசனம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது ... முனீசு மாதிரி ஆதரவற்றோர் அனைவருமே மெய்யாகவே கடவுளின் பார்வையில் விசேஷித்தவர்கள்தான் !

அன்றன்றைக்குள்ள அப்பத்தையும் தண்ணீரையும் முனீசின் கைகளில் தேவன் தினமும் குடுப்பாராக!
அனைத்து வேலைகளுக்கு நடுவிலும் எம்மனசுக்குள்ள என்னமோ செய்யுது ....முனீசின் முகம்!
வீட்டிற்கு வந்தவுடன் சூப் நூடுல்ஸ் எனக்கு தேவைப்படவில்லை !

அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் ...அடுத்து வரும் நாட்கள் இனிமையான நாட்களாக நம் அனைவருக்கும் அமையட்டும் ...

#வாழ்தல் இனிது

--விஜயா கிப்ட்சன்
(thanga.vijaya@gmail.com)

(அழகிய அனுபவங்கள் தொடரும்)

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Muneesu written by Writer Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X