• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 11... "மஞ்சக் காட்டு மைனா"!

Google Oneindia Tamil News

பொதுவாகவே புத்தாடை எடுக்க வேண்டும் என்றால் அது ஆரெம்கேவி அல்லது போத்தீசில்தான் அமையும்! ..அப்படித்தான் 2015ல் தீவாளிக்கும் பொங்கலுக்கும் சேத்து வேஷ்டி, சட்டை , சேலை, சுடிதார் என்று ஒரு ஷாப்பிங்கை பண்ணீரலாம்னு நெல்லை டவுண் போத்திஸ்க்கு போயாச்சு ..

அப்போ கொரோனவெல்லாம் இல்லை ..அலை அலையாய் மக்கள் ..டாப் ப்ளோர் ஆண்கள் , குட்டிஸ் செக்சன் , அப்புறம் கிரௌண்ட் ப்ளோருக்கும் கீழ உள்ள பேஸ்மெண்டுல நம்ம குர்தி , கலர்புல் டாப்ஸ் வகையறாக்கள் ..வழக்கம் போல நினைச்சுட்டுப் போனதை விட ஜாஸ்தி வாங்கியாச்சு ...

"அவுங்கவுங்க பில் தொகைக்கு இணையா பொங்கல் பரிசு ஒன்னு குடுப்பாங்க ...முன்னாடி உள்ள கவுண்டர்ல போயி பில்லைக் காமிச்சு வாங்கிக்கோங்க" னு சொல்லி அனுப்பறாங்க! ..ஐநூறு ரூபாய்க்குள்ளனா ஒரு அழகிய பெரிய பவுல் , "ஐநூறில் இருந்து ஆயிரம்னா ........அச்சச்சோ என்னனு மறந்து போச்சு!..ரொம்ப வருஷம் ஆச்சா இல்லையா? ...அப்டி நிறைய நிறைய நிறைவான பரிசுகள் ... எங்களுக்கு அழகான குட்டி செடி ஒன்று கிடைத்தது.

Sillunnu Oru Anubavam Lemon tree written by Vijaya Giftson

..அத என்னத்த வளத்துக்கிட்டுனு மொதல்ல தோணத்தான் செஞ்சுது..பொறவு குட்டி கவர்ல உள்ள அந்த செடி அம்மாவின் கருவறையில் இருப்பது மாதிரில்லா அழகா தளிர் விட்டு இருக்கு... ...பின்னாடி கொஞ்ச மண் இடம் கிடக்குது ..நினச்சா அங்க நட்டு வைக்கலாம்தான் ..தொடர்ந்து கவனிக்கணும் .. மரம் வளர்ப்பு என்பது ஒரு கலை .. இன்னைக்குலாம் மாடித்தோட்டம் போட்டு அழகு அழகா வெண்டைக்காய் , கத்தரி, தக்காளி , பச்சை மொளகாய் , ஏன் வாழை கூட வச்சு கலக்குறாங்க ..குடுத்த மரக்கன்று ரோசாப்பூவோ, மல்லிகையோ, கருவேப்பிலையோ ,முருங்கையோ ,இல்லிங்க ... மஞ்சள் நிறப் பழங்களை அள்ளித் தரும் எலுமிச்சைதாங்க ...

அடுத்து என்ன ...? மண்ணுல வச்சு தண்ணி ஊத்தி வளக்க வேண்டிதான் பாக்கின்னு மனசுல நினச்சுக்கிட்டே கையில பொங்கல் பரிசை வாங்கியாச்சு ...அப்புடியே விசாக பவன்ல சூப்பரா ஒரு காப்பிய குடிச்சிட்டு பஸ்ல ஏறி வீட்டுக்கும் வந்தாச்சு ... ...எதேச்சையா உழவர் சந்தையில ஒரு கிழவிகிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது "எம்மா எலுமிச்சங்கன்னுலாம் சின்ன பெண்டுகள் வைக்கப்படாது ...வயசானவுக தான் நடணும்"..னு புதுக் கதை சொல்லுது .."என்னமோ போ கிழவி நீ சொல்லிட்டே ...சரியாத்தான் இருக்கும்னு" நினைச்சுகிட்டு ..அத நட்டு வைக்கறதுக்கு ஆள் தேடணுமே.. வழக்கமா தோட்டத்தை கிளீன் பண்ண சண்முகம் தாத்தா எப்பவும் வருவாரு ..அவர்கிட்ட சொல்லி வச்ரலாமான்னு பிளான் போட்டாச்சு ...

"தாத்தா நல்லா இருக்கீயளா ...ஆமாந்தாயி ..இது எலுமிச்சங்கன்னுதான ..வச்சு ..தண்ணிய ஊத்துனா வளந்துராது ??...ஹி ..ஹி ..

""நடவுன்னா சும்மாவா ?"

என்னம்மா அப்டி சொல்லிப்புட்டீக !"

"உங்க மண்ணு செம்மண்ணுதே ...நல்ல சாகுபடி ஆவும் ..எங்க ஊரு புளியங்குடியில நா நடாத எலுமிச்சங்கன்னா? அம்புட்டு பயலும் என்னையத்தே கூப்டுவானுவோ .." னு பெருமையா பேசிக்கிடுதாரு! இது நல்ல நாட்டுக்கன்னும்மா ....ஒழுங்கா கவாத்து பாத்தீகன்னா மூணுலேந்து அஞ்சு வருசத்துக்குள்ள பூ பூக்கும் ...நீங்க தீவளிய ஒட்டி கார்த்திய மாசந்தே வைக்கச் சொல்றீக .. இதேன் சரியான பருவோம்..இப்ப வச்சாத்தே பங்குனியில வெளச்ச தரும்" னு மண்ண கொத்திக்கிட்டே சொல்லுதாரு ..ஆனா பாருங்க தை மாசம் வச்சீகன்னா பொறவு வைகாசி ஆயீரும் ...சித்திரக்குள்ள அறுவட பாத்தாதான் நல்லது" ...ம்ம்.. ஓஹோ சித்திரைன்னா கிட்டத்தட்ட ஏப்ரல் 15 அ சொல்லுதாரு தாத்தான்னு மனசுல நினைச்சுக்கிட்டேன் .. (நம்ம தான் இங்கலீப்பீசு காலண்டர் பாக்குறவுகளாச்சே)

"நாத்து நல்ல்லா வேரு புடிச்சு வளரணும்னு வைதாயி ...மொதல்ல வட்டமா பாத்தி கட்டி விட்டுட்டு ,நடூக்கா நடூக்கா வாழைய நட்டு விட்டுறனும் ! எலுமிச்சைக்கு நடுவுல வாழையா ? தாத்தா....

என்ன வாழைனாலும் வைக்கலாம் ...கற்பூரவல்லி , பச்சை , செவ்வாழைன்னு உங்க சௌரியம்மா..சிலவேரு மல்லிப்பூ, பிச்சி , கனகாம்பரம் னும் வைப்பாக !

"அப்போ ஒரம்லாம் வேண்டாமா தாத்தா? ..."

"தண்ணி பாச்சுகதும் , ஒரம் வக்கதும் அது ஒடம்புக்கு ஒன்னும் வராம பாத்துக்கும்" ன்னு பச்சப்புள்ள வளர்ப்பு மாதிரி பேசிக்கிட்டே இருக்காரு தாத்தா!

உங்களுக்கு தண்ணி கொண்டாரட்டுமா ? வேணாம்மா நீர் மோரா கொண்டாருங்கோ ...சர்தான் ..எம்புட்டு இயல்பா அக்ரிகல்ச்சர் கிளாஸ் எடுக்காருன்னு நினைச்சுக்கிட்டேன் ..

அவரு கேட்ட மாதிரி நீர் மோரக் கொண்டாந்து கையுல குடுத்தேன் ..அப்டி அங்கிட்டு வைங்கம்மா ..னு சொல்லிட்டு மறுபடியும் லெக்ச்சர் ஸ்டார்ட்ஸ்! எயற்கையா வைக்குற ஓரம்தாம் நல்லது ...ஆட்டு எருவு ,மம்புழு , புண்ணாக்கு , இதுவே போதும்மா ...நல்லா வளந்துருவான் ..ஓஹோ இப்போ அதைக் குட்டிப் புள்ளையாவே பாவிச்சுப் பேசுதாரு தாத்தா ...அழகா மண்ணைத் தோண்டி வச்சுட்டுப் போய்ட்டாரு ..ஒரு நா விட்டு ஒரு நாளாது நல்லாத் தண்ணி தெளிச்சு விடணும்னாரே..காலங்காத்தால பல்லு வெளக்குற சாக்குல பின்னாடி தோட்டத்துக்குப் போயி அத ஒரு நிமிசம் நின்னு பாத்துட்டு ..கொஞ்சமா தண்ணி தெளிச்சு விட்டுட்டு வந்திருக்கேன் ..ஆனா பல வேளைகளில் அவைகளைப் பராமரிப்பதில் நமக்கென்னமோ சோம்பேறித்தனம் தான் ..

நல்லா வளந்துட்டு வரும்போதே இலையெல்லாம் ஒரே வெள்ளக் கலர்ல புள்ளி புள்ளியா வர ஆரம்பிக்கு ..அச்சச்சோ என்னடா இது ..இதுக்கு என்ன செய்யணும்னு தெரியலையேன்னு யோசிச்சப்போ -- வேளாண்கல்லூரியில் பேராசிரியராக இருந்த வீரபத்ரன் மாமாவிடம் விவரத்தைக் கேட்டபோது , "ரசாயனம் கலக்காத இயற்கை உரங்களே மிகச்சிறந்தது ..பஞ்சகவ்யமோ , மூலிகைப் பூச்சி விரட்டியோ தெளிக்கலாம்" என்று விவரமாகச் சொன்னார்கள்.

அவங்க சொன்னபடி தெளிச்சாச்சு..கொஞ்சம் முன்னேற்றம் ..பொறவு ஒரு நாள் நம்ம புளியங்குடி சம்முகம் தாத்தா வீட்டு பக்கமா கிராஸ் பண்ணுதாரு ..."தா....த்....தோ ...வ் " ன்னு கூவி கூப்டாச்சு ...தாத்தா தலையில கட்டியிருந்த முண்டாசை எடுத்து கக்கத்துக்கு நடுவுல வச்சுக்கிட்டு வெரசலா வீட்டு கேட் பக்கமா வாராரு ...அவரு நட்டு வச்ச புள்ளைலா ...பாக்கணுமா இல்லையா .. எனக்குதான் எம்புட்டு மார்க் போடுவாரோன்னு பக்கு ...பக்குன்னு இருக்கு ..ப்ராஜெக்ட் வைவால இந்த எக்ஸ்டர்னல் எக்ஸ்சாமினர் கேப்பாரே அது மாதிரி ....
உள்ள வந்தோன நேரா தோட்டத்துக்குத்தான் போனாரு ..நா அவரு கண்ணையே உத்துப் பாத்துக்கிட்டே இருந்தேன்.."ஆ.....த்....தா நா பாஸ் ஆயிட்டேன்" னு பதினாறு வயதினிலே மயிலு சொன்ன மாதிரி ,அவரு சிரிப்பப் பாத்தோன்ன எனக்குப் பரம சந்தோசம்!! ..."நல்லா வளந்திருக்கும்மா! ...சீக்ரம் பூ விட்டுரும்"னு சொன்னாரு ..ஆஹா ..அதக் கேட்டோன்ன நம்ம வீட்டுக்கு புது வரவு ஒன்னு வரப்போகுது டோய் ங்கிற மாதிரியான பூரிப்பு ...

"ஊரு எப்டி இருக்கு தாத்தா ?"

"ஊர என்னத்தக் கேக்கியோ ஊர ? எங்கூரு சந்தை எப்டியிருக்குன்னு கேளு தாயி .."

"முப்போகம் வெளைஞ்சு ஏக்கர் கணக்குல இந்த வருசம் எலுமிச்ச சாகுபடில்லா ..."

"சுத்துப்பட்டு அம்புட்டு ஊருக்கும் இதான மொத்த சந்த !"

"பொட்டுக்காயி , சொத்தக் காயி , நல்ல நாட்டுகாயின்னு பதம்மா பாத்து பிரிச்சு இங்கன கொண்டு வந்த்ருவாவொல்லா ..இம்புட்டு ஏன் செங்கோட்ட , பம்பொழி வரைக்குமே நல்ல யாவாரம் தாம் ..."

"ரொம்ப சந்தோசம் தாத்தா "..ன்னு நா கதையக் கேட்டு முடிச்சோன்ன

"பத்திரமா பாத்துக்கிடுங்கோ "ன்னு அக்கறையாச் சொன்னாரு ..

"இந்த மண்ணின் மீது எவ்வ்வளவு நாட்டம் , ஊறுன ஒருவித அன்பு" ...ச்ச ..சாதாரண ஒரு செடிக்கே இவ்வளவு கரிசனை காட்டுகிற மனிதர்கள் இருப்பதால்தான் என்னவோ பெய்யெனப் பெய்கின்றதோ மழை !

சில வருடங்கள் கழித்து பூ காயாகி , பழமாகி ...ஒரு நாளைக்கு இருபது முப்பதுன்னு கீழே விழ ஆரம்பிச்சுது ..அ...வ்...ளோ ஒரு மணம் ...நிறைவான சாறுடன் ...அப்புறம் என்ன அனைத்து நண்பர்களுக்கும் எலுமிச்சை கிப்ட்டா குடுத்தாச்சு.. (உபயம் : டபிள்யு டபிள்யு டபிள்யு. விஜயா .காம் ஹி ஹி )அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை "என்னா வாசமா இருக்கு " என்பது தான் ...இன்றைக்கோ அந்த மரங்களில் , எலுமிச்சங் கிளைகளுக்கு நடுவில் அழகான மீன்கொத்திகளும் , மைனாக்களும் வந்தமர்ந்து பாடல் பாடி நன்றி சொல்லிப் போகின்றன !
ஊருக்கு வந்தவுடன்-- இந்த மஞ்சக் காட்டு மைனாக்களை கையில் தேநீர்க் குவளையுடனும் சம்முகத்
தாத்தாவுடனும் தினமும் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது !!

#எலுமிச்சங்கன்னு
#வாழ்தல் அழகு

-விஜயா கிப்ட்சன்

( thanga.vijaya@gmail.com )

(அழகிய அனுபவங்கள் தொடரும்)

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6,

8</a>, <a class=9, 10, 11, 12]" title="8, 9, 10, 11, 12]" />8, 9, 10, 11, 12]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Lemon Tree written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X