• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 9... "ரோசுக்குட்டி"

Google Oneindia Tamil News

இரண்டொரு நாட்கள் வீட்டில் இல்லை.. வந்து கதவைத் திறந்தவுடன் சன்னலில் உள்ள வலையில் மிகப் பெரிய ஓட்டை ...கொ...ற ..கொ ..ற .. வென கரும்பி , நார் நாராக கிழித்து அல்லது கடித்து துப்பப்பட்டிருக்கிறது !

"பெம்மி இவ்ளோவ் பெரிய்ய ஓட்டைனா வெரி பிக் எலியாதான் இருக்கும்"

இது ஜெஸ்ஸியின் டயலாக் ...

Sillunnu Oru Anubavam Rosukutti written by Vijaya Giftson

"ஆமாம்மா பெருச்சாளிதான் கடிச்சு கொதறிட்டு உள்ள வந்துட்டு போயிருக்கு .டேபிள் மேல உள்ள பவுடர் டப்பால்லாம் உருண்டு கீழ கிடக்கு!"

அன்னிக்கு மாடிப்படிக்கு கீழ கருப்பா இத்தா தண்டி படக்குனு நம்மள கிராஸ் பண்ணி ஓடுச்சே அதாம்மா வந்துருக்கும் .. "என்கிறான் ஜெர்ரி ..

"டேய் அதுக்காக டப்பா, கண்ணாடி , சார்ஜர் , சீப்பு, நெய்ல் பாலிஷ் , கிரீம் ,னு எல்லாத்தயுமா தள்ளி விடும் ..என்னமோ போடா !"

ஒரு நாள் வீட்ல ஆள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அதுவுமா ஆட்டைய போடுது ...(இது என்னோட மைண்ட் வாய்ஸ்) ...

நம்ம முதல்வர் சமீபமா திறந்திருக்காரே "மினி கிளினிக் " அதுமாதிரி திருநவேலிக்காரங்க வீட்ல எப்பவுமே ஒரு "மினி லாலா கடை" இருப்பது வழக்கம் ...அதுல பக்கடாவோ -காராசேவோ, தட்டையோ -தேன்கொழலோ ,முறுக்கோ -முந்திரி கொத்தோ , மிச்சரோ -துக்கடாவோ இருக்கத்தான் செய்யும் ...கொறஞ்ச பட்சமா மசாலா கடலையாச்சும் ஒரு டப்பால இருக்கும் ...

Sillunnu Oru Anubavam Rosukutti written by Vijaya Giftson

அப்டி என்னத்த வந்து தின்னுட்டுப் போயிருக்கும்?! ..

ஒரே குழப்பமா இருக்கு ..

எதுக்கும் அருகில் இருக்கும் மரமேசையையும் , அதிலுள்ள சாமான்களையும் ஒவ்வொரு ரேக்காத்திறந்து செக் பண்ணி பாக்குறேன் ..ஒரு வேளை உள்ள இருக்கற புத்தகங்களை சல்லி சல்லியா கடிச்சு துப்பீருக்குமோன்னு நினைக்கும் போதே பீதியா இருக்கு ...

சரி கொஞ்ச நேரம் ரூம் கதவை சாத்தீட்டு அமைதியா உக்காந்து கவனிப்போம் ..இன்னிக்கு சிக்குவாம்யா ..எப்பிடியும் "க்ரீச்.... க்ரீச்" ன்னு சத்தம் வரும் ..அப்போ கண்டு புடிச்சிரலாம்னு ...காத்தாடிய கூட அமத்திட்டேன் !
வாடி எலி ..ஐ ஆம் வெயிட்டிங்கி ..ன்னு--

இருபது நிமிஷம் ஆச்சு , அரை மணி நேரம் ஆச்சு , நானோ காதுல இயர் போன்ஸ் வச்சுட்டு சத்தமில்லாம பாட்டு கேட்டுட்டு இருக்கேன் ..சும்மா உக்காந்திருந்ததுல அப்டியே கண்ணக் கட்டீருச்சு ...எனக்கே தெரியாம அசந்து தூங்கிருக்கேன் ...மறுபடியும் பாத்தா அதே பவுடர் டப்பா கீழ உருண்டு கிடக்கு ..ஆத்தாடி ...இதானா சார் உங்க இன்வெஸ்டிகஷன் ...ச்சை .... இப்படியா உக்காந்துக்கிட்டே தூங்குறது?! ....

இதுல சைடுல ரெடியா எலிப்பொறி வேற...இந்த பொறிக்குள்ள அந்த பிக் எலி மாட்டுமா? ...தேங்கா பத்தைய வச்சு புடிச்சிரலாமா ??...இல்ல இப்போல்லாம் மார்க்கெட்டுல விக்குதே "உள்ள சாப்டுட்டு வெளிய போய் செத்துரும்னு" அட்வெர்டைஸ்மென்ட்ல வர்ற மாதிரி மாத்ர கீத்ர வாங்கி வச்ருலாமான்னு மண்டைக்குள்ள ஆயிரம் யோசனை ஓடுது ..!

இருந்தாலும் வந்தது எலி தானா? ..மாயமா இருக்கேனு ஒரு பக்கம் குழப்பம் ....

சந்திரமுகி படத்துல தலைவர் சொல்லுவாரே "இது என்ன பெட்ரூமா இது ...மைதானம் மாதிரி இருக்கு ...குடுக்கும் போது ஸ்டைலா வாங்கிட்டோம் ...இப்போ படுக்கும் போது லபக்கு.... லபக்கு ...லபக்கு... லபக்கு ன்னு அடிக்குதே .....ஏயா இந்த நேரத்துல வந்த ?..எம்பொண்டாட்டி கொறட்ட தொல்ல தாங்கல ..நடந்தா மோகினி மாறி இருக்கா.. படுத்தா பேய் மாறி இருக்கா... நீ ஒரு டாக்டர் தான .. அதாவது பேய் இருக்கா இல்ல்லையா ?... பாத்திருக்காய்ங்களா பாக்கலயா ?நம்பலாமா நம்பப்படாதா ...இது எனக்கு தெரிஞ்சாகணும்ங்கிற மாதிரி நா யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் ...

வராத பழைய மோகினி பட டயலாக்லாம் ஞாவகத்துக்கு வருது ...

அப்புறம் பக்கத்துல பாத்தா ...சின்ன சின்ன வைக்கோலு, பதறு ,குட்டி குட்டி குச்சி ன்னு பாதையெல்லாம் இறைஞ்சு கிடக்கு ...

பறவைகளுக்கென்று ஒரு தட்டில் தண்ணீரும், தானியமும் வைப்பது வழக்கம் . சமீபமா காக்கா தவிற நிறைய பறவைகளும் வந்து போகின்றன ..ஒரு சின்ன தோசைத் துண்டு இருந்தாலும் இரண்டு கால்களாலும் புடிச்சுகிட்டு , ஒரு முறை சுத்தும் முத்தும் பாத்துட்டு ," கா கா" னு கூப்டுட்டு தான் சாப்பிட ஆரம்பிக்குது ...நம்ம கொஞ்சம் பாக்குறது தெரிஞ்சாலும் பறந்துரும் ..ஒரு காகம் போயி அடுத்த காகம் வர்ற இடைவெளிக்கு நடுவுல ,தென்னை மரத்துலேந்து குடு குடுன்னு இறங்கி வந்து இருக்கற சாப்பாட்டை ரெண்டு முன்னங்கைகளில் பக்குவமா எடுத்து யம்...யம்...யம்..யம் ..னு ஸ்பீடா சாப்டுட்டு மறுபடியும் விறுவிறுன்னு மரத்துல ஏறுற அணிலாரின் அழகு இருக்கே! அப்டி சாப்டுட்டு போகும் போதுதான் வர்ற மாடிப்படி ஓரமா இருக்கற ஜன்னல் கதவுகளில் இதே மாதிரி வைக்கோலு, குட்டி குச்சி ,பதற பாத்திருக்கேன் .."ஆஹா அவனா நீயு" ன்னு இப்பத்தான் புரிஞ்சுது .. இது தெரியாம இம்புட்டு நேரம் "இலவு காத்த கிளி" கணக்கா உக்காந்தே இருந்துட்டோமேன்னு பீலிங்ஸ் ஆயிருச்சு ..சரி எல்லாமே ஒரு அனுபவம் தான! ..

நம்ம அணிலார் பெரிய பணக்காரர் தெரியுமா? ..கொறஞ்ச பட்சம் அஞ்சாறு வீடு கட்டி வச்சிருப்பாராம் ...குட்டிகளுக்கோ தனக்கோ ஏதாவது ஒரு சங்கடம்னா உடனே வீடை ஒரு மரத்துலேந்து இன்னொரு மரத்துக்கு ராத்திரியோட ராத்திரியா ஷிப்ட் பண்ணி விடுவாராம்.

சீதாபிராட்டியை அழைத்து வருவதற்காக ராமபிரான் கடலிலே பாலம் கட்ட துவங்கும் போது, அணிலார் மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி , கடல் நீரில் சற்று முங்கி விளையாண்டு திரும்ப அங்க இருக்குற கடற்கரை மணலில் புரண்டு ,அங்கு தொடர்ந்து அடுக்கி வைக்கப்பட்ட பாறாங்கற்களுக்கு நடுவுல தன்மேலிருந்த மண்துகள்களை உலுக்கியும் , குலுக்கியும் விடுவதுமாக இருந்ததாம்.இதுக்கும் ஒருபடி மேலப் போயி குட்டி குட்டி கற்களை எடுக்க முடியாமல் எடுத்து வந்து அங்கங்கே போட்டுட்டும் போச்சாம் ..இதைப் பார்த்த அனுமனுக்கு பொறுக்கவில்லை!

உடனே ராமபிரானிடம்...அதென்ன அணிலை அப்டி புகழ்ந்து பேசுகிறீர்கள் ?அப்பேற்பட்ட கடலுக்கு அடியில் மிக பிரம்மாண்டமான கற்களைக் கொண்டு வந்து கஷ்டப்பட்டு அடுக்கி ஒரு பாலத்தை உருவாக்க முயன்றது எங்கள் படை ..இந்த அணிலோ உடலில் ஒட்டிக்கொண்டுவந்த சிறுசிறு மண் துகள்களை இப்படியும்-அப்படியுமாக உதறித்தான் போயிருக்கு ..அதற்கு அவ்வளவு பாராட்டா ? என்பது போல கேட்டானாம் ..

அதற்கு ராமபிரான் , "சகல அம்சங்களும் , தெய்வத்தின் அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய நீ மலையைத் தூக்குவதும், கடலைத்தாண்டி பாறைகளை அடுக்குவதும் மிக எளிது ! ஆனால் அணிலோ தன்னுடைய இயல்பையும் தனக்கு கொடுக்கப்பட்ட சக்தியையும் மீறி சின்ன சின்ன கற்களைக் கொண்டு வந்து இந்த பாலத்தை கட்ட உதவி செய்தது ..அதற்கு நான் பல வழிகளில் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று சொல்லி, அந்த அணிலைத் தன் கையில் ஏந்தி அதன் முதுகில் தடவிக்குடுக்க மூன்று கோடுகள் உருவானது" என்பது நமக்கு நன்றாகவே தெரியும் ..ஆனால் அக்கோடுகள் மூன்று குணங்களை குறிக்கின்றன என்பது நமக்குத் தெரியுமா ??

அனைத்து உயிர்களையும் சமமாக நேசிக்கும் தன்மை , தர்மம் , மற்றும் சத்தியத்தை வெளிப்படுத்தும் விதமாகவே அவை அமைந்திருக்கின்றன ! அதனால் தான் இன்றளவும் ஒரு சின்ன அணிலைப் பார்த்தால் கூட நம்மை அறியாமல் ஒருவித உற்சாகமும், சந்தோஷமும் தொற்றிக்கொள்ளுகிறது! ..இனிமேலு அணிலார் அமர்ந்து சாப்பிடும் அழகை எல்லாரும் ரசிப்பீர்கள் தானே !

"ஆஹா நம்ம வீட்டு கெஸ்ட்டு எலியார் இல்லை-- அணிலார்னு முடிவுக்கு வந்தாச்சு" ..இருந்தாலும் ஒரு யோசனை ..மாடிப்படிக்கு பக்கத்தில் அது கட்டிவைத்திருக்கும் கூட்டைப் போயி பார்த்தால் என்ன? ...நம்ம போனா வேற அது ஓடீருமே! ..என்ன செய்யலாம்? ..மெதுவாகப் போயி பாத்தேன்! ...அதுக்குள்ள மூணே மூணு ரோஸ் குட்டிஸ் ...ஓரிரு நாட்களுக்குள் பிறந்திருக்க வேண்டும்.. இதுக்குதான் கூடு கட்ட இடம் தேடியிருப்பார் போலன்னு வெளங்குச்சு ..புது வருஷத்தில் பூத்த புத்தம் புது ரோசாப்பூ மாதிரி இருக்குங்க ... மகப்பேறு மருத்துவர்கள் எத்தனை பிரசவம் பாத்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தையைக் கையில் ஏந்தும் போது ஒரு ஆனந்தம் வருமே அது மாதிரி அவைகளைப் பார்க்கும்போது நா பூரிச்சுப்போனேன் ... ஒரு வேளை ரோசுக்குட்டீஸ் வளர்ந்த பின் அவுங்க வீடு ஷிப்ட் பண்ணாலும் பண்ணுவாங்க ...!

#ரோசுக்குட்டி
#வாழ்தல் அழகு

--விஜயா கிப்ட்சன்

( thanga.vijaya@gmail.com )

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Rosu Kutti written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X