• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 24... "சம்மர் கேம்ப்"

|

- விஜயா கிப்ட்சன்

சொளையாக ரெண்டு மாத காலம் கிடைக்கும் முழு ஆண்டு விடுமுறையை பெரும்பாலும் ஆச்சி, தாத்தா வீட்டிலும், மற்ற உறவினர்கள் வீட்டிலுமே கழித்திருப்போம் . அப்போது குறைந்த பட்சம் வீட்டிற்கு இரண்டு குழந்தைகளாவது இருந்திருப்பார்கள்.

சமீப காலங்களில் எப்படி பாத்தாலும் ஒரே ஒரு குழந்தை போதும் என்கின்ற மனநிலைக்கு அநேகர் வந்துவிட்டார்கள் . விடுமுறை நாட்களில் உறவினர்கள் வீட்டிற்குச் செல்லலாம் என்றால் அவர்களிடம் ஓரிரு வார்த்தை நியமனங்களாக கேட்டுவிட்டுத்தான் போக வேண்டிய சூழல் ! ஆமாங்க ...அவுங்களுக்கும் அப்பதான சேர்ந்தாற்போல விடுமுறை கிடைக்கின்றது !..அவர்களும் வெளி ஊர்களுக்கு பயணப்படுகின்றார்கள்

Sillunnu Oru Anubavam summer camps written by Vijaya Giftson

.. முன்னெல்லாம் ஒரு ஊருக்கு போனால் ஏதாவது ஒரு தங்கும் விடுதிகளில் நேரில் போய் இத்தனை நாட்களுக்கு என்று எத்தனை அறைகள் வேண்டுமோ அத்தனை அறைகளை புக் பண்ணி விட்டு , அந்தந்த ஊர்களின் சிறப்பு ஸ்தலங்கள் , கோவில்கள் ,கடற்கரை , அப்புடியே கடல் ஓரமா நடந்து போனா ஷாப்பிங் என்று ஓரிரு நாட்கள் சுற்றி விட்டு வரலாம் ..வேறு இடங்களுக்கு பயணிப்பது மனதுக்கு இனிமை தரும்தான் . அதுவே இன்றைக்கு சற்றே காலத்திற்கேற்ற மாறுதல்களை உள்ளடக்கி "ரிஸார்ட்ஸ்" கலாச்சாரங்கள் பெருகிவிட்டன . "சுற்றுலாத்துறை" என்பது மிகப்பெரிய துறையாக மாறிவிட்டது !

வீட்டில் இருந்தபடியே பயண வலைத்தளங்களுக்குச் சென்று முன்பதிவு செய்துவிட்டு நிதானமாக கிளம்பலாம் ..நாம் தங்கியிருக்கும் ரெண்டு அல்லது மூணு நாட்களில் செய்யவேண்டிய அல்லது பார்க்க வேண்டிய இடங்களை முன்கூட்டியே குறித்து , தெரிந்தும் வைத்துக் கொள்ளலாம் ...அதுனால கோடை காலம் வந்தாலே பாதி பேரு வெவ்வேறு ஊர்களுக்கு ரிசார்ட் புக் பண்ணி போய் விடுகிறார்களா இல்லையா ? அதுனால உறவினர்கள் வீட்டில் நாம் போயி தங்குவது என்பது இந்த காலகட்டத்தில் குறைந்துதான் போய்விட்டது என்பது எதார்த்தம்!...வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடப்பது என்பது குழந்தைகளைப் பொறுத்தவரை சாத்தியமற்றது .

பத்திலிருந்து , முப்பது குழந்தைகள் வரை பங்கேற்கும் பொருட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வாழ்வியல் சார்ந்த கலைகளையும் பள்ளிக்கூட சூழல் அல்லாத விதங்களில் கற்றுக்கொடுப்பது என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த "கோடை முகாம்கள் ".ஓவியம் வரைதல் , பேப்பரில் செய்யக்கூடிய ஆரிகாமி எனப்படும் காகிதக்கலை , கண்ணாடிகளில் வண்ண ஓவியங்கள் தீட்டுதல், கதைகள் வாசிப்பு , ஆடற்கலை ,பாடல் , கால்பந்து ,மட்டைப்பந்து , கூடைப்பந்து , இறகுப்பந்து ,மண்டேலா வகை ஓவியங்கள் தீட்டுதல் , நாட்டியம் , கராத்தே , சதுரங்கம் , சமையல் கலை , கேக் பேக்கிங் , களி மண் மற்றும் அதற்கான பொருட்களை வைத்து அலங்கார நகைகள் செய்தல், ஆசனங்கள் பயிற்றுவித்தல் , கையெழுத்துப் பயிற்சிகள் , சிற்பம் செதுக்குதல் , அபாகஸ் வகைகள் , கணினி பயிற்சி வகுப்புகள் என சொல்லிக்கொண்டே போகலாம் .

எத்தனை நாட்கள் பயிற்சியோ அதற்கு ஏற்றார் போல் பணமும் செலுத்த வேண்டும் . சில தொண்டு நிறுவனங்கள் இவற்றை இலவசமாகவும் கற்றுக் கொடுக்கிறார்கள் ! ஒத்தையில வீட்டுக்குள்ளேயே இருந்து கண்கள் வலிக்க , வலிக்க தொலைக்காட்சியையும் , கைப்பேசியையும் மட்டுமே பார்த்து கொண்டு நேரத்தைக் கடத்தும் குழந்தைகளுக்கு இது நல்லதொரு வாய்ப்பு தான் . புதிய நண்பர்களாக இருபது , முப்பது பேர்களோடு இணைந்து செயலாற்றுவது என்பது அவர்களுக்கு ஒரு புதிய அனுபவமும் கூட! சேர்ந்து இருக்கப்போகும் அந்த ஓரிரு நாட்களில் அவர்களுக்கே அறியாமல் பல நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டுதான் வந்திருப்பார்கள். "குழுவாக இணைந்து ஒரு செயலை செய்து முடிப்பது எப்படி?" என்று கண்டிப்பாக தெரிந்து கொள்வார்கள் .

இதற்கெல்லாம் ஒருபடி மேலே , குழந்தைகளை ஒரு சிறிய சுற்றுலா மாதிரி அந்தந்த இடங்களுக்கே அழைத்துச் சென்று காட்டி விளக்கம் கொடுப்பது இன்னும் சிறப்பாக அமைகின்றது . இன்றைய குழந்தைகளில் சிலருக்கு "அரிசி எங்க இருந்து வருது ?" னு கேட்டா , சூப்பர் மார்க்கட்டிலிருந்து வருது ! ங்குறான். ஆக விதைத்து , களை எடுத்து , நீர் பாய்ச்சி , வெள்ளாமை பாத்து , அத்தனை மாதங்கள் கழித்துத் தான் ஒரு தானியம் விளைகின்றது என்பதனையே நாம் நேரில் வயக்காட்டிற்கு கூட்டிச் சென்றுதான் விளக்கம் அளிக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றோம் . பள்ளிக்கூடத்தைப் போலவே அந்தந்த துறையில் நன்றாகத் தேர்ச்சி பெற்றவர்கள்தான் இந்த "கோடை முகாம்" நிகழ்ச்சிகளையும் நேர்த்தியாக கையாளுகின்றார்கள். அதற்கேற்ற நபர்கள் அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு பணியமர்த்தப்படுகிறார்கள் .

தண்ணீரும் , மதிய சாப்பாடும் குழந்தைகள் தங்களோடு எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள் ..இரு பெற்றோர்களும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இப்படிப்பட்ட கோடைமுகாம்கள் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே ! மற்ற நாட்களில் பெற்றோராகிய நாமும் நம்மால் இயன்ற அளவிற்கு குழந்தைகைளை வெளியில் அழைத்தும் செல்லலாம் . மாவட்ட மைய நூலகம்--அங்கு உறுப்பினர் ஆகும் வழிமுறைகள் எத்தனை பிரிவுகளில் புத்தகங்கள் இருக்கின்றன , ஒரு நேரத்தில் ஒரு நபர் எத்தனை புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம் , எத்தனை நாட்களுக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் போன்ற தகவல்களைக் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளலாம் . நமது ஊரில் இருக்கின்ற அறவியல் மையங்கள்--அங்கு காணப்படும் இயற்பியல் , வானவியல் சம்மந்தமான விளக்கங்கள் பற்றி அவர்களுக்கு புரியும்படியாக எடுத்துரைக்கலாம் .

அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிலைகளும் , பாரம்பரிய பொருட்களும் நிறைந்து இருக்கின்ற அருங்காட்சியகங்கள் ,கல்வெட்டுகளின் ஆச்சர்யங்கள் , கோயில்களில் காணப்படும் தமிழரின் சிற்பக்கலை , என்று சிறார்கள் கற்றுக்கொள்ள இடமா இல்லை?! .. இந்த ரமலான் நோன்பு காலங்களில் வாழ்வியல் ஒழுக்க நெறிகளையும், சக மனிதனுக்கு உதவும் குணங்களையும் நாமே முன்மாதிரியாக இருந்து கற்றும் கொடுக்கலாம் . என்றைக்குமே குழந்தைகள் நம்மைப் பார்த்து நடக்கின்றவர்களாவே இருக்கிறார்கள்! கடந்த ஒரு வருடமாகவே தொற்று காலத்தில் குழந்தைகளுக்கான இப்படிப்பட்ட கோடை முகாம்கள் நடத்தப்படவில்லை என்றே எண்ணுகிறேன் !. எப்படியோ நேரங்களை நகர்த்துகிறோம் . முக்கியமாக நம்ம வீட்டு குட்டிச் செல்லங்களுடன் !

பலருக்கு "எப்படா பள்ளிக்கூடம் தொறப்பீங்க?" னு அழுகாச்சி வராத குறை தான்! நாலு சுவத்துக்குள்ளேயே நம்முடைய அனைத்து வேலைகளின் மத்தியிலும் இவ்வளவையும் சமாளிக்கணுமா-இல்லையா! .ஆனாலும் தீநுண்மி காலத்தில் அனைத்தையும் கவனமாக கையாள வேண்டிய கட்டாயத்தில் அனைவருமே இருக்கின்றோம் .. பல நேரங்களில் குழந்தைகளுக்கு நமது மதிப்பிற்குறிய ஆசிரியப் பெருமக்கள் பெற்றோர்களாக இருப்பது போல-- சில நேரங்களில் பெற்றோர்களாகிய நாம் வீட்டில் ஆசிரியர்களாக இருப்பது அழகுதானே !.

குழந்தைகள் உலகத்தில் நாமும் கூட இணைந்து இன்னும் நெருக்கமாக பயணிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உருவாகியிருக்கின்றன ! கோடை முகாம்கள் இல்லாவிடினும் "கற்றது கைம்மண் அளவு --...கல்லாதது உலகளவு " என்பது போல் அவர்களைப் பற்றிய புரிதலை பெரியவர்களாகிய நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறன் ! தொடர்ந்து பயணிப்போம் ...

#வாழ்தல் இனிது

#விஜயா கிப்ட்சன்

( thanga.vijaya@gmail.com )

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about summer camps written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X