• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 19... "டைம்டேபிள்"

|

இரு நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது என்னதான் பேசிக்கொள்வார்கள் ?! வயதானவர்களாக இருந்தால் "ஏ என்னப்பா பேரன் , பேத்திலாம் நல்லா இருக்காங்களா? , ஒனக்கு சுகர் , ப்ரஸ்ஸர்லாம் கண்ட்ரோல்ல இருக்கா ? நம்ம கோபாலு தடுப்பு ஊசி போட்டுட்டானாம்டே !. இப்போ ரிட்டயர்மண்ட் ஏஜ் அறுபதாம்பா- எலெக்க்ஷன் வேற வருது -ஆமா வோட்டு யாருக்கு ? அதுக்கா இல்ல** இதுக்கானு பூடகமாவே பேச்சு ஓடும் !

அதுவே குடும்பத்தலைவிகள் பக்கமா வந்தோம்னா "இந்த ஆன்லைன் கிளாஸ் வந்தாலும் வந்துச்சு எல்லா வேலையும் நேரத்துக்கு நடக்கறது இல்ல--கால சாப்பாடு பதினோரு மணி , மதியம் நாலு மணி , ராத்திரி டின்னரு அதுபாட்டுக்கு பத்து மணினு போவுது . எம்புட்டு நேரம் தான் மோரு , தயிறுன்னு டைனிங் டேபிள் மேலயே அத்தனையையும் கடை பரப்பி வச்சுக்கிட்டே நாங்க உக்காந்திருக்க ? இதுல தோசை கடைன்னா இன்னும் ஒருபடி மேல ! வீட்டுல ஒண்ணொண்ணும் தினுசு தினுசா , கேக்குது --வெரைட்டியாம் ! அம்மா எனக்கு கீ ரோஸ்ட் ; ஏம்மா எனக்கு தோசைக்கு மேல சர சர சர ன்னு மழை பெய்யுற மாதிரி லேசா பொடியைத்தூவி ஒரு பொடி தோசை -இது அவுரு !

Sillunnu Oru Anubavam Time table written by Vijaya Giftson

சாப்பிட நல்ல மெதுவா இருக்கற மாதிரி நல்ல தடியா ஊத்தாப்பம் ரேஞ்சுக்கு கொஞ்சம் கூடுதலா ஒரு கரண்டி நல்லெண்ணெய ஊத்தி மெத்து மெத்துன்னு நாலு தோசை ராத்திரிக்கு ஊத்தி வச்ரும்மா! அதுக்குப் பேரு இட்லி தோசையாம் .. நாங்க பள்ளியூடம் போவும் போது எங்க அம்மா அப்டித்தான் ஊத்துவா !(ரைட்டு ) --இது அப்பா ! அந்த உருளைக்கிழங்கு மசாலா கொஞ்சம் மிச்சம் இருக்குல்ல அண்ணி -அதை அப்டியே உள்ள சுட சுட வச்சு எனக்கு ரெண்டே ரெண்டு மசால் தோசை -சர்தான்! விட்டா நைட் செக்யூரிட்டி வேலை , குடுகுடுப்பைக்காரன் வேலையெல்லாம் சேத்து நம்ம தான் பாக்கணும் போல ! போதாக்கொறைக்கு , இந்த கார்ட்டூன் , நெட்ப்ளிக்ஸ் , யூட்யூப் வேற .எப்பப்பாரு மொபைலும் கையுமாதான் திரியுற மாதிரியே சூழ்நிலை மாறிக்கொண்டே வருகிறது ..அப்புறம் எப்டி சீக்ரம் தூங்குவாய்ங்க? ..

காலங்காத்தால இந்த புள்ளைகள எவ்வளவுதான் உசுப்பி எழுப்பி விட்டாலும் சீக்ரம் எழுந்திருக்கிறதும் இல்ல! இதுக்காகவே பள்ளிக்கூடம் தொறக்க மாட்டாய்ங்களா ? னு ஒரே பீலிங்ஸ் ..

எதுக்குமே ஒரு நேரம் காலம் வேணாமா ?! பள்ளி நாட்களில் பத்தாப்பு படிக்கும் போது விடுதியில் இருக்க நேர்ந்தது . காலங்காத்தால நாலு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கணும் . எழுந்திருக்கிறது மட்டும் இல்லிங்க , சில்லுனு வர்ற தண்ணியில உடனே போயி பல்ல விளக்கி , குளிச்சு துணியெல்லாம் தொவச்சு போட்டுட்டும் வந்திரனும் ..அப்புறமா சூடா ஒரு டீ குடுப்பாங்க ..பிரேயர்அ முடிச்சிட்டு அப்புடியே போயி ஸ்டடி ஹால்ல உக்காந்தோம்னா " சூ.....ப்.....ப....ரா ப.....டி...க்...க...லா...ம்" னு தான நினைக்கிறீங்க ..ம்ம்க்கும்-- செம்மையா தூக்கம் வரும்...நாமளும் ஹுயூமன்ஸ் தான ! படிக்கிறோமோ இல்லையோ சீக்கிரமா எழுந்திரிக்கற பழக்கம் உருவானது உண்மை ! அதிகாலையில் எழுவதே அந்த நாளில் செய்யக்கூடிய செயல்களின் பாதி வெற்றிக்கு காரணம் என்கின்றார்கள் அறிஞர்கள் !

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் " ன்னு சொல்ற மாதிரி ஒரு செயலைச் சில நாட்கள் தொடர்ச்சியாக செய்து வந்தோமானால் சரியோ--தவறோ அது நம்மை ஒரு பழக்கத்திற்கு ஆளாக்கி விடுகிறதா இல்லையா ? இன்றைக்கும் கிராமங்களில் பெண்கள் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருச்சு வாசல் தொளிச்சு , கோலம் போட்டு சீக்கிரமே அடுப்பை பத்த வைக்கத்தான் செய்கிறார்கள் ..ஆண்களும் நீத்தண்ணியை குடிச்சிட்டு வயக்காட்டுக்கு போறவங்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள் ..அவர்கள் செய்கின்ற வேலையில் பாதி அளவு கூட நகரத்தார் செய்வார்களா என்றால் சந்தேகமே ! இங்கே உலகம் வேறு .. பெரியவர்கள் அந்த காலத்தில் சில ஒழுங்கு முறைமைகளை சாமி பெயரை வைத்தாகிலும் நம்மைப் பின்பற்ற வைத்திருக்கிறார்கள் ( அப்புடியாச்சும் கேப்போம்னுதான் ) அதுனாலோ என்னவோ அவர்கள் உடம்பும் மனதும் நன்றாகவே இருந்திருக்கிறது !

எங்க பக்கத்து வீட்டு அபிக்குட்டி உர்ர்ர்ருன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு வந்துச்சு ... "என்னாச்சு அபி அக்கா கூட சண்டை போட்டியா , ஒரு மாதிரி வர்ற ? னு கேட்டேன் .."அதுலாம் ஒண்ணுமில்ல ஆன்டி --எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்கு !(என்னங்கடா இது -இந்த நண்டு சிண்டு சொல்ற அளவுக்கு அங்க என்ன ஸ்ட்ரெஸ் இருந்துற போவுது ? )மேலும் இவ்வளவு பெரிய வார்த்தையை இந்த குட்டி சொல்லுதேனு எனக்கு யோசனை ."என்னடா தங்கத்துக்கு அப்டி ஸ்ட்ரெஸ் ஆயிட்டு ..ஆமா ஸ்ட்ரெஸ்னா என்னடா ?" "அதுவா நேத்திலிருந்து என் பார்பி பொம்மையை காணூம் ! அம்மா கிட்ட புதுசு வாங்கி தாங்கனு கேட்டேன் ..அம்மா "வாங்கி தரமாட்டேனு சொல்லிட்டாங்க " "ஒஹோ" மிகச் சாதாரணமான விஷயங்களுக்கு குழந்தைகளின் மனப்போக்கு எவ்வாறெல்லாம் மாறியிருக்கிறது பாருங்கள்! .

"ஆமா நீ எங்க வச்ச ? கடைசியா எங்க விளையாட கொண்டு போனே ? தேடி கண்டுபுடிக்கலாம்ல ? னு கேட்டேன் ..மறுபடியும் உர்ர்ர் ....இத தான் எங்க அம்மாவும் சொல்றாங்க ...பார்ரா அதுக்குதான் கோவமா ...ஆமா அபி ..அம்மா சொல்றது சரிதானே ...உனக்கு காட் நீ கேட்டதெல்லாம் குடுத்திருக்காரு ..அப்போ நம்ம தான அதை பத்திரமா வச்சிருக்கணும் இல்லடா ?" ..நீ எங்கயோ பொம்மையை வச்சதுக்கு அம்மா என்ன செய்வாங்க?னு கேட்டோன்ன அவளுக்கு புரிந்துவிட்டது! ஒருவேளை நீ நல்லாத் தேடியும் பொம்மை கிடைக்கலேனா அம்மா நிச்சயம் புதுசு வாங்கி தருவாங்கனு சொன்னேன் ..அவளுக்கு அப்படி ஒரு சந்தோசம் ...

என்றைக்குமே குழந்தைகளுக்கு நம்ம தான ரோல் மாடல் ..அவர்கள் நம் சொல்லக்கேட்டு வளருகிறவர்கள் அல்ல ..நம்மைப் பார்த்து வளருகிறவர்கள் .. எதுக்கு சொல்ல வரேன்னா , நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் , நாம் எப்படி ஒரு செயலைக் கையாள்கிறோம் , எவ்வாறெல்லாம் சூழ்நிலைகளை சமாளிக்கிறோம்னு கண்ணுல விளக்கெண்ணையை ஊத்திக்கிட்டு வர வர ரெம்ப ஜாஸ்தியா தான் கவனிக்கிறார்கள் . ஆன்லைன் கிளாஸ்ஸஸ் ங்கிறதால கூடவே சுத்துதுகளா இல்லையா?! ...அதுங்க வேற ரூம்ல தான இருக்காங்கனு எதையும் போன்ல கூட பேசீர முடியல ..கண்ணு அங்க இருந்தாலும் காது நம்ம மேலயே இருக்கும் போல !

நம்ம ஒரேடியா ஆர்மி லெவலுக்கு இல்லாட்டியும் அடிப்படை ஒழுக்க நெறிகளை கற்றுகொடுத்தோம்னா இந்த குட்டி சுட்டிஸ்சையும் அவர்கள் இயல்பு நிலை ஸ்கெடுல்ஸ்கு மாத்தீரலாம்னு நினைக்கிறேன் . மழை பொய்த்து விட்டது என்பதற்காக உழவன் என்றைக்குமே நிலத்தை உழாமல் விட்டதில்லை ! அவன் நிலத்தை சீர் படுத்தி வைக்க வைக்க என்றைக்கு மழை பெய்யுமோ அன்றிலிருந்து அவன் வெள்ளாமை துவங்குகிறது அல்லவா ?"இருகினால் கல் --இளகினால் களி " என்று சொல்வார்களே அது மாதிரி , நாம் செய்யும் எந்த ஒரு சின்ன காரியத்திற்கும் , முயற்சிக்கும் பலன் இல்லாமல் போகாது !

இந்த உட்கருவை புரிந்துகொண்டோமானால் நம் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிதானமாக அவர்களுடன் பேசி நல்ல முறையில் அவர்களுக்கு புரிய வைத்தும் விடலாம் ..அதுக்காக ஸ்ட்ரிக்டாக இருக்க வேண்டிய இடத்தில் இறுக்கி பிடித்துத்தான் ஆக வேண்டும் ..சரிதானுங்களே ..."எதையும் பிளான் பண்ணாம பண்ணப்படாது "-- என்ற வடிவேலு சாரின் காமெடி ஒரு மிகப்பெரிய மேனேஜ்மென்ட் தத்துவம் ! பள்ளிக்கூடங்கள் திறக்கும் வரைக்கும் ஒரு ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம் --நாமும் முன்மாதிரியாக நடப்போம் !

#டைம் டேபிள்
#வாழ்தல் இனிது

--விஜயா கிப்ட்சன்

( thanga.vijaya@gmail.com )

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Time table written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X