• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 20... "விடாமுயற்சி"

|

ஒரு விழாவிற்காக அம்பாசமுத்திரம் வரை போக வேண்டியிருந்தது ..போறதே போறோம் பஸ்ல போவோம் ..காற்றிலே கானம் இசைக்கும் கல்லிடைக்குறிச்சி வயக்காட்டையும் , வெண்ணிற கொக்கு கூட்டத்தையும் ,அங்கங்கே காக்கைகளை விரட்ட கை விரித்து நிற்கும் சோளக் காட்டு பொம்மைகளையும் ஜன்னலோர சீட்ல உக்காந்து ரசிச்சுகிட்டே போயிரலாம்னு ஆசை வந்துட்டு. புதிய பேருந்து நிலையத்துல அம்பை வண்டி ஏறியாச்சு.

வண்டி கிளம்புது . அப்புடியே நம்ம இயர் போன்ஸை காதுல வச்சு ஒரு பாட்ட தட்டி விட்டோம்னா அடடா ...
எடுத்த ஒடனே யேசுதாஸ் அவர்கள் குரலில் ...."பச்சைப்புல் மெத்தை விரித்து அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும் ! பட்டுப்பூ மொட்டு வெடிக்கும் , செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும் ! சுற்றிலும் மூங்கில் காடுகள் , பட்சிகள் வாழும் கூடுகள் , மண்ணின் ஆடை போலே வெள்ளம் ஓடுதே --அங்கே நாரைக்கூட்டம் செம்மீன் தேடுதே ..இந்நேரம் ...இள நெஞ்சே வா...."ன்னு வசீகர குரலில் ஆரம்பித்த சாங்ஸ் கலெக்ஷன் ஓடிட்டே இருக்கு ..காத்துக்கும் பாட்டுக்கும் அப்படியொரு தூக்கம் ..பஸ்லதான் !

Sillunnu Oru Anubavam Vidaymuyarchi written by Vijaya Giftson

முழிச்சு பாத்தா கிட்டத்தட்ட அம்பை ஆர்ச் ..ஆஹா அப்புடியா தூங்கிட்டோம்னு ஒரு பக்கம் பீலிங்ஸ் ..கொஞ்சம் அதிகாலை லேயே கிளம்புனதால பசிக்க வேற ஆரம்பிச்சிட்டு ..இருக்கவே இருக்கு நம்ம கௌரி சங்கர் ...னு பைய போட்டுக்கிட்டு நடக்க ஆரம்பிச்சாச்சு ...சுடச்சுட பொங்கல், வடை , சட்னி , சாம்பார் ..கைய கழுவிட்டு வந்து ஒரு வாய் வைக்கல ..அதுக்குள்ள "மேம் ----னு ஒரு குரல் " அதுவும் பின்னாடி டேபிளில் இருந்து ..இங்க யாரு நம்மள மேம்னு கூப்புட்றாங்க?! .........னு யோசிச்சிட்டே திரும்புறேன் ...எனக்கே ஆச்சர்யம் " அட மகேசு !அடையாளம் தெரியாத அளவுக்கு தாடி மீசை ..""நீ இங்க எப்படி ?" "அதைத்தான் நானும் கேக்க வந்தேன் மேம் ..நீங்க எப்டி இங்கனு கேக்குறான் ... பத்து வருசத்துக்கு முன்னாடி காலேஜ் டிபாட்மென்ட்ல எம்.பி.ஏ படிக்கும் போது பாத்தது ..எப்டி இருக்கீங்க மேம் ..எத்தனை குழந்தைகள் ..என்று உரையாடல் நீள்கிறது ..எவ்வளவு நேரம் தான் கழுத்தை திருப்பியே பேசுவது ..மகேசு அவன் தட்டை தூக்கிட்டு என் டேபிளுக்கே வந்துட்டான் ...

"நான் நல்லா இருக்கேன். இங்க ஒரு பங்க்சனுக்காக வந்தேன் .. மத்த பேட்ச் மேட்ஸ் கூட காண்டாக்ட்ல இருக்கியா ..? "ஆமா மேம் நம்ம செட் நிரஞ்சனா , ஸ்ரீ , ஸ்வப்னா , காசி ,அபி எல்லாரும் மும்பை , ஐதராபாத் னு வேற வேற ஊர்ல நல்ல நல்ல பொசிசன்ல இருக்காங்க ...னு சொல்லிட்டு கொஞ்சம் இடைவெளி விட்டு தட்டுல இருக்குற பூரி கிழங்கை சாப்புடுறான் ..அவன் குரல் கம்முவதையும் , அவன் முக பாவனையையும் பாத்த உடனே ஒரு மாதிரி இருக்கு ..நா மெதுவா "ஏன் மகேசு உனக்கும் தான போர்ட் கம்பெனில கேம்பஸ்ல கிடைச்சுது ... போகலையா இல்ல விட்டுட்டியா ? னு கேட்டேன் . இப்போ இங்க .....னு நா இழுக்கறத பாத்துட்டு அமைதியாவே இருக்கான் ...கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டு ..."கேம்பஸ்ல வேலை கிடைச்சது உண்மைதான் மேம் ...ஆனா அது ரொம்ப நாள் நிலைக்கல ..கொஞ்ச வருஷங்கள் பாத்தேன் ..பிறகு குடும்ப சூழ்நிலை ..கோயம்புத்தூருக்கே திரும்ப வர வேண்டியதா போச்சு .."ஏன் கோவைல கிடைக்காத வேலையா ?! அப்டி இல்ல மேம் ....இந்த காலத்துல ஹச் .ஆர் படிச்சவனுக்கே ஹைக் கிடைக்க மாட்டிக்கு நா வேற மெ....க்...கா...னி...க்...க...ல் னு இழுக்கிறான்.. ..அப்போ வேலைய விட்டுட்டியா ? ம்ம் ...மாடா உழைச்சு மண்ணா தேயுறவனையே வேலைய விட்டு தூக்குற கால கட்டம் ...எனக்கு பக்குனு ஆயிட்டு ..

ச்ச நம்ம மாணவன் , எவ்ளவு சின்சியர்- எல்லா ஆக்டிவிடீஸ்யும் சிறப்பாய் செய்யக்கூடியவன், ..னு ஆரம்பிச்சு மண்டைக்குள்ள என்னென்னவோ யோசனைகள்! அப்பா வேற தவறிட்டாருங்கிறான் ...அடி மேல அடி ..எனக்கு ஒண்ணுமே ஓடல ! எனக்கு அதுக்கும் மேல ஒரு வாய் கூட பொங்கல் உள்ள போக மாட்டிக்கு ! ஆனா அவன் குரல் மாறுது ...ஆனா மேம் நா இப்போ நல்லா இருக்கேன் ..எனக்கு ஆச்சர்யம் ....ரெண்டொரு வினாடிகள் அவனை பாத்துட்டே இருக்கேன் ..."நானும் இங்க இருக்கற என் பிரண்டு ஆதவனும் சேர்ந்து ஆர்கானிக் விவசாயம் பாக்குறோம் .. போன தடவ முள்ளங்கி போட்டதுல கிட்டத்தட்ட எழுபதாயிரம் லாபம் ...ஆளுக்கு முப்பத்தஞ்சு கிடைச்சுது ங்கிறான் . எனக்கோ அப்படியொரு சந்தோசம் ...ஆதவன் அப்பா கிட்ட கொஞ்சம் நிலம் இருந்துச்சு ..நாங்க ரெண்டுபேரும் இறங்கி வேலை செய்ய ஆரம்பிச்சோம் ...இன்னிக்கு தக்காளி , வெண்டை , அப்புறம் நாட்டு அரிசி வகைகள்னு போய்கிட்டே இருக்கோம் ..கிடைச்ச வேலை தான் இல்லனு ஆயிட்டுனு ஒடஞ்சு போயி ஒரே இடத்துல உக்காந்துராம அடுத்து உன்னையும் குடும்பத்தையும் யோசிச்சு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி வளர்ந்து நிக்குற உன்ன பாத்தா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா ...வாழ்த்துக்கள்! னு சொல்லிட்டு ரெண்டு பேரும் காப்பிய குடிச்சிட்டு கிளம்பிட்டோம் ...

இன்றைக்கு வளர்ந்து நிக்குற பல தொழில் அதிபர்கள் அப்படியானவர்கள் தானே ...நாம கடைய தேடிப் போயி பாண்ட்ஸ் பவுடர் சின்ன டப்பா , சீயக்காய் , துவரம் பருப்புனு லிஸ்ட் போட்டு குடுத்துட்டு வரிசையில நின்னோ இல்ல அவன் சாமானை போட்டுட்டு நாளைக்கு வந்து வாங்கிக்கோங்கனு சொல்லுற காலம் போயி எதை எடுத்தாலும் உக்காந்த இடத்தில இருந்தே இன்னிக்கு ஆர்டர் போட்டு வீட்டுக்கு வந்து பொருட்களை டெலிவரி பண்ணுவதும், கையில பார்சல் கிடைத்த பிறகு கூட கேஷ் குடுத்துக் கொள்வதும், பிசுனஸ் உலகின் மாபெரும் வளர்ச்சியும் வெற்றியும் தானே !

இன்னும் கொஞ்ச நாட்களில் நீங்க என்ன சாப்பிடணும்னு நாங்க தான் முடிவு பண்ணுவோம்னு சொன்ன ஸ்விக்கியிலும் , சோமட்டோவிலும் அங்க இருக்கற வகைகளில் நாம செலக்ட் பண்ணி சாப்புட்ற மாதிரி ஆயிட்டா இல்லையா ...நம்ம நம்ம வீட்டுல ஹாயா சோபாவுல உக்காந்துகிட்டு , நமக்கு புடிச்ச பாட்டையோ , படத்தையோ பாத்துக்கிட்டே ரிலாக்ஸ் ஆ சாப்புடுறோமே ..அதே மாதிரி ஒரு ஊருக்கு டிக்கட் வாங்க ரயில் நிலையத்துலேயோ , பஸ் நிலையத்துலேயோ , வேர்க்க விறுவிறுக்க தண்ணி பாட்டிலோட போயி வரிசையில நின்னு டிக்கட் புக் பண்ண காலங்கள் போயி ஒரு போன் ஆப்ல உக்காந்த இடத்துல இருந்தே என்னைக்கு வேணுமோ முன் கூட்டியே யோசிச்சு டிக்கட்ஸ் புக் பண்றோமா இல்லையா ...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ...நம்ம ஆட்டோ புடிச்ச காலம் மாறி,, நாம ஆன்லைன்ல புக் பண்ணா வீடு தேடி ஓலா ,ஊபர் , ரெட் டாக்ஸி , பிங்க் னு டைமுக்கு வந்துருதே .. இப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வர அவர்களும் வெவ்வேறு வழிகளில் முயற்சித்திருப்பார்கள் தானே !

"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் " என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொன்ன குறள்தான் மகேசை நினைக்கும் போது என் மனதுக்குள் ஓடியது! ...சூழ்நிலை எப்படி ஆயினும் என் முயற்சிக்கு பலன் கிடைத்து விட்டது என்று அவன் சொன்ன விதம் நான் ஒரு பேராசிரியர் என்பதையும் தாண்டி சொல்ல முடியாத ஆனந்தக் களிப்பைத் தந்தது ... தன் மாணாக்கனுடைய வளர்ச்சியை வியந்து பார்ப்பதைக் காட்டிலும் ஒரு ஆசிரியருக்கு வேறு என்ன வேண்டும் ?!

# முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்!
#வாழ்தல் இனிது

--விஜயா கிப்ட்சன்

( thanga.vijaya@gmail.com )

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Vidaymuyarchi written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X