For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 15... "பால் ஐஸ்.. கப் ஐஸ்"

Google Oneindia Tamil News

பல ஊர்களில் வேலை நிமித்தமாக இருந்துவிட்டு நெல்லைக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து பாத்தா நம்ம ஊரு மாதிரியே இல்லை ...அவ்ளோவ் முன்னேற்றங்கள் ..வித்தியாசங்கள் ..சின்ன சின்ன ஆச்சர்யங்கள் ..

"உங்களுக்கு நெல்லையில் ரொம்ப புடிச்சது என்ன சொல்லுங்கன்னு "கேட்டா யார்னாலும் உடனே யோசிக்காமல் "இருட்டு கடை அல்வா " அப்டின்னு தான் சொல்லுவாங்க ..காலை சிற்றுண்டிக்கு பிறகு சூடா காபி குடிப்பது அநேகமாக அனைத்து நெல்லை வாசிகளின் பழக்கமாக இருக்கும். .அதுலேயும் நேரா காபி கடைக்கு போயி எண்பது-இருபது அல்லது அறுபது --நாப்பது னு காபி சிக்கரி அளவுகள் சொல்லி மணக்க மணக்க கண் முன்னாடி காபி பொடி திரிச்சு வாங்கிட்டு வந்து தான் டிகாஷனோ , பில்டர் காபியோ போட்டு குடிப்பாங்க ..அவ்ளவு ரசனையானவங்க வேணுவனத்து சனங்கள் .

Sillunnu Oru Anubavam milk ice and cup ice written by Vijaya Giftson

அப்டி தான் கையில காபி கோப்பையுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது ,திடீர்னு வெளிய ஒரு குட்டி பாப்பா சௌண்டு ...அதுவும் ஸ்பீக்கர்ல ! "கீம் .....கீம் ....கிறீம் ...வெண்ணிலா-- ஸ்ட்ராபெர்ரி , சாக்கலேட்--- பிஸ்தா--- கசாட்டா ன்னு அதுவும் அழகான குழந்தையின் மழலை மொழியில்! ..இனிமையான குரலில்! கேட்காதவர்களும் ஓடி வந்து என்னனு பாத்ருவாங்க ..அப்டி தான் நானும் போனேன் ..ஆகா ..அவ்ளவும் ஐஸ்க்ரீம் வகைகள் ..முன்னெல்லாம் சாயந்தரம் பள்ளிக்கூட மணி அடிச்ச ஒடனே பேயா வெளிய முந்தி அடிச்சிக்கிட்டு ஓடி வருவோம் --வீட்டுக்கு வாறதுக்குன்னு தான யோசிக்கிறீங்க ..அதான் இல்ல ..வெளிய ஒரு பாட்டி சின்ன சாக்கை விரித்து அதுல அரி நெல்லிக்காய் , குட்டி குட்டியா வெட்டி வைக்கப்பட்ட மாங்காய் துண்டுகள் , அதுவும் அந்த காரப்பொடிய லேசா மேல தூவி தருவா பாருங்க ..அத வாங்கி சாப்பிடத்தான் ,அப்படியொரு ஓட்டம் !...பஸ்ஸையும் தான் புடிக்கணும்..சில நாட்கள் அதை சாப்பிட்டு வயிறு சரியில்லாம போனது வேற கதை !

அப்டியே கொஞ்சம் தள்ளிப் போனா சைக்கிள்ல ஒரு தாத்தா ஒரு சின்ன பொட்டி வச்சிருப்பாரு ..அதான் ஐஸ் பொட்டி . கீழ விழாம இருக்க அதை சைக்கிள் கேரியர் ஓட பெரிய கயிறு வச்சு கட்டியும் வச்சிருப்பாரு ..."பாப்பா --என்ன ஐஸ் வேணும் ? என்ன ஐஸ்லாம் இருக்கு தாத்தா? ..கையில இருக்கறது என்னவோ அம்பது பைசா இல்ல ஒரு ரூவாயாதான் இருக்கும் .."பால் ஐஸ் , கப் ஐஸ் , சேமியா ஐஸ் , குச்சி ஐஸ் ..கோலா ஐஸ் ." "உனக்கு எது வேணும்" பாரு .நம்ம ஒடனே ப்ரெண்ட திரும்பி பாத்து "ஏய் ராணி நீயும் நானும் ஒன்னு போல வாங்கிக்கிடுவோமா ?" "போ புள்ள , நீவேற வாங்கு ,நாவேற வாங்குதேன் , அப்பதான ரெண்டையும் டேஸ்ட் பண்ண முடியும் " ஹி..ஹி ...ஹி என்னவொரு டீலிங்கு ! ..

தாத்தா எனக்கு குச்சி ஐஸ் ல ரோஸ் கலர் , எனக்கு சேமியா ஐஸ் ஓகே வா "! நல்ல ஐஸ்கட்டி ஒண்ண எடுத்து ஒரு குச்சியில சொருகி , ஒரு கையில இத வச்சுக்கிட்டு , இன்னொரு கையால அந்த ரோஸ் சிரப்ப மணக்க மணக்க ஊத்தி ரோஸ் ஐஸ் ப்ரிப்பேர் பண்ணி குடுப்பாரு.. சிரப் ஊத்தும் போது இடது கைய சும்மா ஸ்டைலா சுத்திக்கிட்டே ஊத்துவாரு பாருங்க ..அதுலாம் அச்சச்சோ எப்போ முடிப்பாரு ..வாங்கி சாப்பிடலாம் னு நாக்கு ஊரும் .."நம்ம சாப்புட்றத பாத்து ராணி வேற ....ஏட்டீ எனக்கு ..." ம்பா .. உடனே உர்ர்ர்ர் னு ஒரு உறிஞ்சு ..அவ்ளோ தான் போ ..னு சொல்லிகிட்டே கதை பேசிகிட்டு பஸ் ஸ்டாப் வரைக்கும் நடந்திருவோம் ...மத்தபடி எப்பவும் இப்பவும் கோன் ஐஸ் பிரபலம் தான் ..அதுக்கு மேல என்ன பிளேவர் வேணுமோ அது வச்சு குடுத்ருவாங்க ...அப்போல்லாம் ஐஸ்கிரீம் கம்பனிகள் வர துவங்கி இருந்த காலம் ! வியனெட்டா ல வெண்ணிலா பிளேவர் சூப்பரா இருக்கும் ..அப்புறம் வால்ஸ் , ஜாய் ஐஸ் கிரீம் , குவாலிட்டி , அருண் ஐஸ் கிரீம்ஸ் , அமுல் கம்பெனியின் மேங்கோ டாலி (இது கிட்ட தட்ட நம்ம குச்சி ஐஸின் நெக்ஸ்ட் வெர்சன் ), கொஞ்சம் லேட்டஸ்ட்டானா அனைவருக்கும் புடிச்ச கார்நெட்டோ ...மொதலெல்லாம் வெரைட்டிகள் என்பது குறைவுதான் ..இப்போ இன்னது னு இல்லாம வந்திருச்சு ...அதுலேயும் சில தடவை சூப்பர் ஆபர்ஸ் வேற அப்போ தான் அருண் ஐஸ்க்ரீம்ஸ்ல பேமிலி பேக் அறிமுகம் பண்ணாங்கனு நினைக்கிறேன் ..

அரை கிலோ வெண்ணிலா வாங்கினா அரை கிலோ சாக்கலேட் ஐஸ் க்ரீம் பிரீ ...சில நாட்கள் பிரிட்ஜ்ல வச்சு கிலோ கணக்குல சாப்ட்ருக்கோம் ..குறிப்பா வெயில் காலங்கள்ல ! என்னடா இது ஒன்னொன்னா வாங்கி சாப்புட்றதுக்கு பதிலா தேவையான அளவு எடுத்து சர்வ் பண்ணிட்டு திரும்ப பிரிட்ஜ் லேயே வச்சுக்கலாம் போலயே ..இது நல்லா இருக்கேனு மக்கள் மனசுக்கு இதமா புதுமையை புகுத்துனாங்க!

ஆனா பாருங்க வீட்டுல தோசை , இட்லி செஞ்சு சாப்பிட்ட காலம் போயி , ரெஸ்டாரண்ட்ல யும் அதே தோசை -இட்லியை ஒரு மணி நேரமா குடும்பத்தோட , நண்பர்களோட கடல போட்டுட்டு சாப்புட்ற சுகமே தனி இல்லையா ?! அது மாதிரி ஐஸ் க்ரீம்ம கடையில வாங்கி சாப்ட்ட காலம் போயி அதுக்குன்னு தனி ரெஸ்டாரண்ட் லெவல்ல மொதல்ல ஆரம்பிச்சது நம்ம "அரசன் ஐஸ்க்ரீம்ஸ் " தாங்க ...சைவ பிரியர்களுக்கு "ஜானகி ராம்ஸ் " ன்னா ஜங்சன்ல ஐஸ்க்ரீம் னா அப்போல்லாம் அரசன் மட்டும் தான் .. ஆல் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் அங்க தான் ஆஜர் ..நைஸ் கலர்புல் இன்டீரியர் ...ரெட் அண்ட் வொயிட்ல 'சேர்ஸ் அண்ட் டேபிள்ஸ்', அதோட மெனு கார்டு ல பாத்தா இப்படியெல்லாம் வெரைட்டி இருக்கானு வாய பொளந்துருவோம் ..

சாக்லட் , மேங்கோ , பிளாக் கரண்ட் , ரைசின்ஸ் , ஸ்ட்ராபெர்ரி , பலூடா , ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் , குல்பி , னு விதம் விதமா , கலர்கலரா ..மெல்லிசா ரொமான்டிக்கா ஒரு இளையராஜா மியூசிக் வேற ஸ்பீக்கர் ல ஓடும் ..அடடா நா சொல்லல நம்மூரு ஆளுங்க ரசனையானவங்க னு ! உக்கார இடம் இல்லாம வெயிட்டிங் போட்டு காத்திருந்து சாப்ட்ருக்கோம் யா ... வேலண்டைன்ஸ்டே வும் அங்க தான்! பிறகு கொஞ்ச வருடங்கள் கழித்து தான் பாஸ்கின் ராபின்ஸ் வந்துச்சு ..இன்னிக்கு நிலவரத்துல ஆல் பீப்பிள் லைக் "ஐபாக்கோ "..அதுல ஒரு படி மேல போயி அவன் வேற அதையும் இதையும் தூவி தூவி குடுக்கிறான் ..குட்டி சுட்டிஸ்கு புடிச்ச மாதிரி தினுசு தினுசா ..அது என்னமோ "டாப்பிங் காம்" . ..கேசர் பிஸ்தா , பிரூட் ஐஸ்க்ரீம் , ஹனி வால்நட் , மேங்கோ வெண்ணிலா , சாக்கலேட் பட்ஜ் , இன்னும் பல பேரு வாயிலேயே வர மாட்டிக்கு ..அதுக்கும் மேல அவரு ஹனி சிரப் , மேங்கோ சிரப் , ஜெம்ஸ் முட்டாய், சாக்கோ சிப்ப்சு , னு போட்டு அசத்துறாங்க.. ஆனா அந்தந்த வெயிட்க்கு ஏத்த மாதிரி ரேட்டும் இருக்கு ! என்ன சொல்லுங்க மலங்க மலங்க ஓடி வந்து அம்பது பைசாக்கு வாங்கி சாப்ட்ட பால் ஐஸ் மாதிரி வருமா ?!!

#ஐஸ்கீம்
#வேலன்டின்ஸ் டே
#வாழ்தல் அழகு

விஜயா கிப்ட்சன்

[email protected]

(அழகிய அனுபவங்கள் தொடரும்)

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6,

8</a>, <a class=9, 10, 11, 12, 13, 14, 15]" title="8, 9, 10, 11, 12, 13, 14, 15]" />8, 9, 10, 11, 12, 13, 14, 15]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about milk ice and cup ice written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X