For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் தமிழ் இலக்கணம் குறித்த கலந்துரையாடல்

Google Oneindia Tamil News

தமிழ்நாட்டு அரசின் பாட நூல்களிலும், தமிழ்நாட்டின் செய்தி ஏடுகள், தொலைக்காட்சிகளிலும் தமிழ் முறையாக எழுதவும் பேசவுமாக இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

Discussion on Tamil grammer

இது குறித்து காரைக்கால்(திருநள்ளாறு) மருத்துவர் பொன்முடி அவர்கள்(பிறந்த ஊர் ஆயக்காரன்புலம், வேதாரண்யம் அருகில்) ஒரு நூல் எழுதி வருகின்றார். அந்த நூலில் ஏற்கத் தகுந்த, மறுக்கத் தகுந்த பல கருத்துகள் உள்ளன. இதனை மனங்கொண்ட தமிழறிஞர் முனைவர் பொற்கோ அவர்கள் தமிழில் ஈடுபாடுகொண்ட, இலக்கணத்தில் ஆர்வம்கொண்ட அறிஞர்களை அழைத்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வினைச் சென்னை அண்ணா நகரில் உள்ள வசந்தபவன் உணவகத்தின் அருகில் (அட்சயா அரங்கு) ஏற்பாடு செய்திருந்தார்கள் (27.10.2012).

மருத்துவர் பொன்முடி அவர்கள் தம் நூலின் செய்திகளையும் உள்ளடக்கத்தையும் அறிஞர்கள் முன் எடுத்துரைத்தார். காலை 10.30 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு பகல் 2 மணி வரை நடைபெற்றது. சற்றொப்ப மூன்று மணிநேரம் மருத்துவர் பொன்முடி அவர்கள் தமிழ்நாட்டுப் பாடநூல்களில் சீர்மையற்றுச் சொற்களைப் பிரித்து அச்சிட்டுள்ளதைச் சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.

சொற்களைப் பிரித்தும், சேர்த்தும் எழுதுவதால் ஏற்படும் பொருள் வேறுபாடுகளை எழுத்து வழக்கிலிருந்தும் பேச்சு வழக்கிலிருந்தும் மிகுதியான மேற்கோள் வழி மருத்துவர் பொன்முடி எடுத்துரைத்தார். மேலும் தமிழ் இலக்கணத்தில் இரண்டாம் வேற்றுமை மிகும் இடம், நான்காம் வேற்றுமை மிகும் இடம் இவற்றில் ஒற்று மிகுக்க வேண்டியதில்லை என்று தம் மாறுபட்ட கருத்தை முன்வைத்தார். இதற்கெல்லாம் தீர்வுகாணும் வகையில் இந்தக் கலந்துரையாடலை முனைவர் பொற்கோ அவர்கள் நெறிப்படுத்தினார்.

கலந்துரையாடல் அரங்கில் வெளிப்பட்ட கருத்துகளைக் கவனித்த அறிஞர்குழு பொருத்தமான கருத்துகளை ஏற்றுக்கொண்டனர். வேற்றுமைஉருபு குறித்த பொருத்தமற்ற கருத்துகளை மறுத்துரைத்தனர். முனைவர் பொற்கோ அவர்கள் மொழியியல் அடிப்படையிலும், இலக்கண மரபுநெறி நின்றும் ஆழமான மொழியியல் உண்மைகளை எடுத்துரைத்தார். மருத்துவத் துறையில் பணியாற்றிக்கொண்டு தமிழின் தொடரமைப்பு, இலக்கண அமைப்புகளை ஆழமாக உற்றுநோக்கிக் கருத்துரைத்த மருத்துவர் பொன்முடி அவர்களை அனைவரும் பாராட்டினர்.

முனைவர் பொற்கோ கருத்து:

மருத்துவர் பொன்முடி அவர்கள் தமிழில் உள்ள சில சிக்கல்களைக் கவனித்துள்ளார். மொழிச்செய்திகளைக் கவனித்துத் தம் கருத்தை உரைத்துள்ளார். சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையை மருத்துவர் புணர்ச்சி என்கின்றார். இது பொருத்தம் இல்லை. இது தழுவுத்தொடர் என்று இலக்கண நூல்களில் உள்ளது. பாட நூல்களில் பிரித்து எழுதுதலில் சீர்மை இல்லை என்பதை இக்குழுவினர் ஏற்றுக்கொள்கின்றனர். பாடநூல்களில் புணர்ச்சிப்பிழை உள்ளதைத் தவிர்க்க வேண்டும்.

ஒலி அழுத்ததால் தமிழில் பொருள் வேறுபடுவது உண்டு. ஒலி அழுத்தத்தை எழுத்தில் காட்ட வழியில்லை. தொகைகளைச் சேர்த்து எழுத எல்லா இடங்களிலும் இயலாது. பேசுவது போல எழுத முடியாது. பேசும்பொழுதும் நுட்பமான ஒலி இடைவெளி உண்டு.

இரண்டாம் வேற்றுமைத் தொகைக்கு எடுத்துக்காட்டாகப் புறநானூறு, அகநானூறு என்று குறிப்பிடலாம். பேச்சுமொழியில் நீண்ட தொடர்கள் உண்டு. மொழியில் உள்ள தொடர்களைக் கணக்கிட முடியாது.

முனைவர் செம்பியன் கருத்து:

திரு.வி.க., மு.வ போன்றோர் எளிமை கருதிச் சொற்களைப் பிரித்து எழுதினர். மீண்டும் சொற்களைச் சேர்த்து எழுதினால் பழைய நிலைக்குச் சென்று விடுவோம். வினைத்தொகையைச் சேர்த்து எழுதவேண்டும். தொகைகளைப் பிரித்து எழுதவேண்டாம்.

பொற்கோ நிறைவுரை:

சொற்களைப் பிரித்து எழுதினால் தெளிவு கிடைக்கும். உள் தொகைகளைப் பிரித்து எழுதலாம். வினைச்சொல்லில் நீண்ட தொடர் உள்ளது. இடம் விட்டுப் பிரித்து எழுதலாம். சிக்கலைச் சிக்கல் என்று உணர வேண்டும். தீர்க்க வேண்டிய சிக்கல் தமிழில் நிறைய உள்ளன.

தமிழ்ப்பாட நூல்களில் உள்ள குறைகளைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்கும் எழுதுதல் வேண்டும். தமிழில் பிரித்து எழுதுதல் பற்றிய செய்திகளை இதழ்கள், பதிப்பகங்களுக்கு எழுதலாம் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முனைவர் பொற்கோ, முனைவர் தங்க.மணியன், கவிக்கோ ஞானச்செல்வன், முனைவர் கி.செம்பியன், முனைவர் அர்த்தநாரீசுவரன், முனைவர் அமிர்தலிங்கம், முனைவர் மெய்கண்டான், முனைவர் ஒப்பிலா. மதிவாணன், முனைவர் மு.இளங்கோவன், ஆய்வாளர் சாம்சன், மருத்துவர் பொன்முடியின் நண்பர்கள், உறவினர்கள் எனச் சற்றொப்ப ஐம்பதின்மர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நன்றி: http://muelangovan.blogspot.in

English summary
There was a discussion on Tamil grammer in Chennai recently, moderated by Dr Porko.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X