For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத்துப்பூராடனாரின் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூலறிமுகம்...

Google Oneindia Tamil News

- முனைவர் மு. இளங்கோவன்

அறிஞர் ஈழத்துப்பூராடனார்( க.தா.செல்வராசகோபால்) அவர்களால் எழுதப்பெற்று திரு. அருள்சுந்தரம் விஷ்ணுசுந்தரம், திரு. பொன்னம்பலம் சிவகுமாரன் ஆகியோரால் பதிப்பு கண்டுள்ள வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூல் 2011 ஆவணியில் விஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியத்தின் ஆதரவில் வெளிவந்துள்ளது.

292 பக்கத்தில் அழகிய வண்ணப் படங்களையும், பல்வேறு அட்டவணைகளையும் வரைபடங்களையும் நிலப்படங்களையும் கொண்டு நேர்த்தியான அச்சில் குறிக்கோள் நோக்கி வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டாளர்களுக்கு முதலில் நம் பாராட்டுகளும் நன்றியும்.

நீராவிக் கப்பல்கள் அறிமுகத்தில் இருந்த காலச் சூழலில் பாய்மரக்கப்பல் கட்டுவதில் பேரறிவுபெற்ற தமிழர்களின் கப்பல்கட்டும் திறம், கடல்வழி குறித்த அறிவு, காற்றின் போக்கு அறியும் உயர் அறிவு, கப்பல் செலுத்தும் அறிவு, கடற்கொள்ளையர்களை எதிர்கொள்ளும் போர்த்தொழில் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கொண்ட ஆவணமாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. உரைநடையில் அன்னபூரணிப் பாய்மரக் கப்பலின் வரலாற்றை எடுத்துரைக்கும் அறிஞர் ஈழத்துப்பூராடனார் பாட்டுவடிவிலும் இந்த வரலாற்றைப் பதிவுசெய்துள்ளார். ஏழு அதிகாரங்களாகப் பல்வேறு தலைப்புகளில் இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது.

Eelathu Pooradanarin Valvettithurai Kadalodigal

அன்னபூரணிப் பாய்மரக் கப்பல் எந்த ஆண்டில் கட்டப்பட்டது, கட்டியவர்கள் யார், அதன் உரிமையாளர் யார்? இந்தக் கப்பலை விலைக்கு வாங்கிய இராபின்சன் என்ற அமெரிக்க செல்வந்தரின் கப்பல் ஈடுபாடு, அன்னபூரணி அமெரிக்காவுக்குப் பயணப்பட்ட வரலாறு, பாதை, வழியில் அன்னபூரணி சந்தித்த சவால்கள், அன்னபூரணிக் கப்பலைச் செலுத்திய மீகாமர்கள் யாவர்? அவர்களின் திறம் என்ன? எந்த நாளில் அமெரிக்கா அடைந்தது? கப்பலையும் மீகாமன்களையும் கண்ட அமெரிக்க மக்கள் அடைந்த மகிழ்ச்சி, இக்கப்பல் வருகை குறித்து அமெரிக்க ஏடுகள் வெளியிட்ட படங்கள், செய்திகள் யாவும் சிறப்பாக இந்த நூலில் உள்ளன.

மேலும் கடல்தொழிலிலும், கப்பல் கட்டும் தொழிலிலும் வல்வெட்டித்துறைக் கடலோடிகளுக்கு இருந்த பேரறிவு யாவும் இந்த நூலில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன. அக்காலத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த கப்பல்கள், அதனை இயக்கிய மீகாமன்கள் குறித்த செய்திகளும் சிறப்பாக உள்ளன. இலங்கையின் வரலாறு, அங்கு நடைபெறும் கண்ணகியம்மன் வழிபாடு, பிற பண்பாட்டு நிகழ்வுகளையும் நூலாசிரியர் சிறப்பாகத் தந்துள்ளார். நூலின் பின்பகுதியில் கிழக்கு இலங்கை குறித்த பல அரிய செய்திகள் தரப்பட்டுள்ளன.

அன்னபூரணி கப்பல் 1930 இல் சுந்தர மேத்திரி என்பவரால் கட்டப்பட்டது. இக்கப்பலின் உரிமையாளர் தமிழகம் தேவகோட்டையைச் சேர்ந்த நாகப்ப செட்டியார் ஆவார். நாகப்ப செட்டியாரிடம் இருந்து இராபின்சன் என்ற அமெரிக்கர் உருவா இருபத்தைந்தாயிரம் (9000 அமெரிக்க டாலர்) விலைக்கு வாங்கினார். இந்தக் கப்பலை இராபின்சன் வாங்குவதற்கு வல்வெட்டித்துறை கதிர்வேலு என்பவர் உதவியுள்ளார்(பக்கம் 23). இக்கப்பலை அமெரிக்கா கொண்டுசெல்ல மேலைநாட்டு மீகாமன்கள் முன்வராத சூழலில் 1930 முதல் இக்கப்பலை இயக்கிய தண்டையல்(கேப்டன்) தம்பிப்பிள்ளை என்பவர் இதனை அமெரிக்கா கொண்டுசெல்ல முன்வந்தார். அன்னபூரணியை அமெரிக்காவுக்குக் கொண்டு சேர்த்தோர் விவரம் வருமாறு:

1. கனகரத்தினம் தம்பிப்பிள்ளை, அகவை 48, தண்டையல்
2. சின்னத்தம்பி சிதம்பரப் பிள்ளை, அகவை 28
3. தாமோதிரம் பிள்ளை சபாரெத்தினம், அகவை 28
4. பூரணவேலுப்பிள்ளை சபாரெத்தினம், அகவை 29
5. ஐயாத்துரை இரத்தினசாமி, அகவை 24

27.02.1937 இல் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்ட அன்னபூரணி கப்பல் 7 நாளில் கொழும்பு சென்றது. அங்கு 23 நாள் தங்கி 27.03.1937 இல் ஏடன் துறைமுகத்தை அடைந்தது. அதன் பிறகு எட்டு மாதங்கள் இங்குத் தங்கி,1810.1937 இல் மீண்டும் பயணத்தைத் தொடங்கி போர்ட் சூடான், சுவைசு, எகிப்து, போர்ட் செயிட், கண்டியா, சிப்ரால்டர், பேர்மியுடா கமில்டன் சென்று, மாசசூட் மாநிலத்தின் குளொசெசுடர் துறைமுகத்தை 01.08.1938 இல் அடைந்தது என்ற விவரங்கள் இந்த நூலில் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.

அன்னபூரணி கப்பல் இரட்டைப் பாய்மரக் கப்பல்; பத்தாயிரம் மூட்டை அரிசி ஏற்றலாம். இதனை உருவாக்கியவர் சுந்தர மேத்திரி. தேக்குமரத்தில் 90 அடி நீளத்தில் இந்தக் கப்பலைக் கட்டினார். இலங்கை-அமெரிக்கா இடைப்பட்ட ஊர்களில் அன்னபூரணி கப்பல் தரித்து நின்றபொழுது அந்த ஊர்களைக் கப்பலில் பயணம் செய்தவர்கள் சுற்றிப்பார்த்துள்ளனர்.

இராபின்சன் அவர்கள் கொழும்பிலிருந்து தம் மனைவியுடன் புதியதாக வாங்கிய அன்னபூரணி கப்பலில் பயணம் செய்தார். இதற்காகக் கொழும்பில் கப்பல் தரித்து நின்றபொழுது கப்பலில் குளியல் அறை, கழியல் அறை, படுக்கை அறை, ஆகிய வசதிகளைச் செய்துகொண்டார். அவசரத் தேவைக்காக எண்ணெயால் இயங்கும் சுழல் விசிறி இயந்திரம் ஒன்றையும் கொழும்பு வோக்கர்சு(Walkers) நிறுவனத்தாரின் உதவியுடன் பொருத்திக்கொண்டார்.

இராபின்சன் அன்னபூரணிக் கப்பலைத் தமதாக்கிக் கொண்டபொழுது இதற்குத் தம் மனைவியின் பெயரை அமைத்து, புளோரன்சு சி. இராபின்சன் என்று அமைத்துக்கொண்டார்.

இந்தக் கப்பலை அமெரிக்காவுக்குச் செலுத்திச் சென்றவர்கள் 1982 வரை உயிருடன் வல்வெட்டித்துறையில் வாழ்ந்துள்ளனர் என்ற செய்திகளை இந்த நூலில் அறியும்பொழுது வியப்பும் மலைப்பும் ஏற்படுகின்றது. அன்னபூரணிக் கப்பலின் பாதுகாப்புக்காகச் சாண்டோ சங்கரதாசு என்ற பெருவீரர் சென்றதாகவும் இவர் சுவிசு கடற்கரை வரை சென்று அன்னபூரணியைப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு இடையில் ஈழம் திரும்பியதாகவும் இந்த நூலில் குறிப்பு உள்ளது(பக்கம்35).

வல்வெட்டித்துறைக் கடலோடிகள் என்ற இந்த நூலில் அன்னபூரணி கப்பல் பற்றிய செய்திகளை விளக்கும் பல நூல்களின் பெயர்களை நூலாசிரியர் மேற்கோளாகத் தந்துள்ளமை மேலாய்வு செய்ய விழைவார்க்குப் பெரும் பயன் தரும்.

ஈழத்தில் வல்வெட்டித்துறை மிகச்சிறந்த கடல் வாணிகத்தளமாக இருந்துள்ளதை இந்த நூலின் குறிப்புகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இங்கிருந்து அயல்நாடுகளுக்குச் சென்ற கப்பல்கள், அதனை இயக்கியவர்கள், கப்பல் தரகர்கள், கப்பலின் உரிமையாளர்கள், அந்தக் கப்பலில் வணிகத்திற்கு அனுப்பப்பட்ட பொருள்கள் குறித்த விவரங்களும் தரப்பட்டுள்ளன. அக்காலத்தில் கப்பல்துறையில் பேரறிவுகொண்டு திகழ்ந்தவர்கள் பலரைப் பற்றிய குறிப்புகள் நூலில் உள்ளன.

அன்னபூரணிக் கப்பலின் படமும் அக்கப்பலை இயக்கிச் சென்ற கப்பல் தொழிலாளர்களின் படமும் இராபின்சனின் குடும்பத்தினர் படமும் இந்த நூலில் இடம்பெற்று நூலைப் பெரும் மதிப்பிற்குரியதாக மாற்றியுள்ளது.

வல்வெட்டித்துறையின் வரலாற்றுப்பெருமை குறிப்பாகவும் வெளிப்படையாகவும் இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கடலாய்வு, புவியாய்வு, வரலாற்று ஆய்வு, வளியாய்வு செய்வாருக்கும் இலங்கை வரலாற்று ஆய்வு ஆர்வலர்களுக்கும் பயன்தரத்தக்க நூல் இது.

நூல் கிடைக்குமிடம்:
ரிப்ளக்சு அச்சகம்
RIFLEX CREATIVE SOLUTIONS,INC,
CANADA

நன்றி - http://muelangovan.blogspot.in/

English summary
A review of Eelathu Pooradanarin Valvettithurai Kadalodigal book by Dr Mu Elangovan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X