• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நெதர்லாந்து நினைவுகள்...!

|

- முனைவர் மு. இளங்கோவன்
(muelangovan@gmail.com)

இரவு பதினொரு மணிக்குப் புறப்படுவதுபோல் பாரிசில் உள்ள பன்னாட்டுப் பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்திருந்தேன். அரை மணி நேரத்திற்கு முன்பாகவே பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். ஈரோலைன்சு (eurolines) நிறுவனப் பேருந்தில் நெதர்லாந்துக்குச் செல்லும் பயணிகள் ஆர்வமுடன் ஏறி அமர்ந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து புறப்பட்டது, விமானம் செல்வதுபோல் ஆடாமலும் அசையாமலும் பேருந்து மெதுவாக தார்ச்சாலையில் ஊர்ந்து முன்னேறியது. முன் பின் அறிமுகம் இல்லாத ஊருக்குச் செல்கின்றோமே என்ற நினைவுகளுடன் மெதுவாக வரலாற்றை நினைவுகூர்ந்தேன்.

நெதர்லாந்துக்காரர்கள் நம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி உள்ளிட்ட ஊர்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கைப்பற்றி ஆட்சிபுரிந்தவர்கள். பொருள்களை விற்கவும் வாங்கவுமாக நம் நாட்டைப் பயன்படுத்தியவர்கள். அவர்கள் தமிழகத்தின் பல கலைப்பொருள்கள், ஆவணங்கள், சிலைகள், நூல்களைக் கொண்டு சென்றவர்கள் என்பதை நினைத்துப் பார்த்தேன்.

புகழ்பெற்ற இலெய்டன் செப்பேடுகள் பற்றி வரலாற்றில் படித்தமை நினைவுக்கு வந்தன. நம் நாட்டுச் சிலைகள், வலம்புரிச் சங்குகள் உள்ளிட்ட அரிய பொருள்கள் நெதர்லாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள செய்திகள் நினைவுக்கு வந்தன. ஓரிரு மணி நேரத்தில் கண்ணயர்ந்தேன்.

இடையில் விழித்துப் பார்த்தபொழுது நெதர்லாந்து நாட்டில் பேருந்து முன்னேறிச் சென்றுகொண்டுள்ளமை தெரிந்தது. இடையில் சிறு நகரங்களில் ஓரிருவர் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தனர். பேருந்து ஓட்டுநர் முதியவராக இருந்தார். அனைவரிடமும் உற்ற நண்பனைப் போல் மகிழ்ச்சியுடன் உரையாடியபடி இருந்தார். இடையில் வேறொரு இளைஞர் மாற்று ஓட்டுநராக வந்து அமர்ந்தார். அவரிடம் நான் இறங்கவேண்டிய இடத்தை நினைவூட்டி வந்து மீண்டும் அமர்ந்தேன். தூக்கம் இல்லை.

தென் காக் பேருந்து நிலையம்

தென் காக் பேருந்து நிலையம்

வைகறை 5.15 மணிக்கு நெதர்லாந்து நாட்டின் தென் காக் (Den Haag) பேருந்து நிலையத்தில் வண்டி நின்றது. ஓரிருவர் என்னுடன் இறங்கினர். ஆள் அரவம் இல்லை. எங்கும் அமைதி நிலவியது. காலை 6.20 மணிக்குதான் என்னை அழைத்துச் செல்ல பொறியாளர் கோபி வருவார். அதுவரை அங்கு நிற்பதைவிட ஆள் அரவம் உள்ள இடத்திற்குச் செல்லலாம் என நினைத்து, கீழ்த்தளத்தில் இருந்த தொடர்வண்டி நிலையம் சென்றேன். எங்கும் தானியங்கிப் படிக்கட்டுகள் அழைத்துச் செல்கின்றன. இந்த இடத்தில் குளிர் இல்லை. காவல் துறையினர் இங்கும் அங்கும் நடந்தபடி இருந்தனர். வெளியூருக்குச் செல்லும் பயணிகள் முதல் தொடர்வண்டியைப் பிடிக்க விரைந்து வந்துகொண்டிருந்தனர். தொடர்வண்டிகள் சில வருவதும் போவதுமாக இருந்தன. அருகில் இருந்த வீசுபலகையில் அமர்ந்தேன். குளிர் சில்லிட்டது. கையுறை உள்ளிட்டவற்றை அணிந்து உடலைக் காத்தேன். நேரம் மெதுவாக நகர்ந்தது.

கோவைக்காய் முதல் கொத்துமல்லி வரை

கோவைக்காய் முதல் கொத்துமல்லி வரை

பொறியாளர் கோபி அவர்கள் 6.20 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரின் இல்லத்திலிருந்து அப்பொழுதுதான் முதல் வண்டி வரும் நேரம் என்று குறிப்பிட்டார். இருவரும் உரையாடியபடி பத்து நிமையப் பயணத்தில் கோபி இல்லம் சென்றோம். தெருவில் எங்கும் அமைதி குடிகொண்டிருந்தது. முறைப்படுத்தப்பட்ட சாலைகள் கண்டு வியந்தேன். கோபியின் துணைவியார் வதனா அவர்கள் வரவேற்றார். ஒருமணிநேரம் ஓய்வெடுக்கும்படி சொன்னார்கள். சற்றுக் கண்ணயர்ந்தேன்.
8.30 மணியளவில் எழுந்து குளித்து முடித்தேன். வெண்பொங்கல் விருப்பமாக உண்டேன். நானும் கோபியும் கறிகாய் வாங்குவதற்குச் சந்தைக்குச் சென்றோம். முதலில் வீட்டுக்கு வேண்டிய மளிகைப் பொருள்களை வாங்கினோம். ஒரு பஞ்சாபியர் கடை. பலவாண்டுகளாக இங்குக் கடை நடத்துவதாக கடையின் உரிமையாளரான ஒரு பெண்மணி தெரிவித்தார். இந்தியாவில் உள்ள அனைத்துப் பொருள்களும் அங்குக் கிடைக்கின்றன. கோவைக்காய் முதல் கொத்துமல்லி வரை அனைத்தையும் வாங்கிக் கொண்டு அடுத்து, அருகில் இருந்த சந்தைக்குப் புறப்பட்டோம்.

கூவி விற்கப்படும் மீன்கள்

கூவி விற்கப்படும் மீன்கள்

நம் ஊர்போல் பழங்களையும், மீன்களையும் கூவிக் கூவி விற்கின்றனர். மீன்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பல்வகை மீன்கள், நண்டுகள், கருவாடுகள் எங்கும் காட்சிக்கு இருந்தன. எந்த இடத்திலும் ஈ, கொசு நடமாட்டம் இல்லை. மிகத் தூய்மையாகப் பதப்படுத்தப்பட்டுப் பொருள்கள் விற்கப்படுகின்றன. மீன் வாங்கிக்கொண்டோம். பழங்களும், வேறு சில பொருள்களும் வாங்கிக்கொண்டோம். சீனாவிலிருந்து வந்த இஞ்சியும், இசுபெயினிலிருந்து வந்த இஞ்சியும் பெரிய வடிவில் தூய்மையாகப் பளிச்சிட்டுக் காணப்பட்டன. உருளை, தக்காளி யாவும் வாட்டம் இல்லாமல் அப்படியே எடுத்து உண்ணத் தூண்டும் நிலையில் இருந்தன.

மகாத்மாவுக்கு அஞ்சலி

மகாத்மாவுக்கு அஞ்சலி

சந்தையை முழுமையாக ஒரு வட்டம் அடித்துப் பார்த்தோம். இடையில் தென் காக்கு நகரத்தையும் பார்வையிட்டோம். மேலும் நெதர்லாந்து நாட்டின் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டோம். ஒரு பூங்காவில் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் அவர் பிறந்தநாள் என்பதால் அன்பர்கள் மலர்தூவி மாலையிட்டிருந்தனர். அனைத்தையும் பார்வையிட்டபடி இல்லம் திரும்பும்பொழுது பகல் இரண்டுமணி இருக்கும். பகல் உணவு முடித்தோம். உலகக் குற்றவியல் நீதி மன்றத்தைப் பார்க்கும் வாய்ப்பும் அமைந்தது. உலகின் புகழ்பெற்ற பல வழக்குகள் இங்கு நடைபெற்றுள்ளன என்று நண்பர் கோபி விவரித்தபடி வந்தார். அங்கிருந்து புறப்பட்டு, இலெய்டன் நோக்கிச் சென்றோம்.

இலெய்டன் நகரம்

இலெய்டன் நகரம்

நெதர்லாந்தின் முக்கிய நகரங்களுள் இலெய்டன் முதன்மையான ஒன்றாகும். இங்கு அருங்காட்சியகங்கள் உள்ளன. மக்களுக்கு உரிய பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. தொடர்வண்டி, பேருந்து என அனைத்து வசதிகளும் உண்டு. பல்கலைக்கழகமும் உண்டு. நாங்கள் சென்ற அந்த நாள் உள்ளூர் விடுமுறை நாளாம். அன்று இலெய்டன் மக்கள் அனைவரும் தங்களின் தேசியத் திருநாளை ஒன்றுகூடி, கொண்டாடிக் கொண்டிருந்தனர். குடை இராட்டினம், கடைத்தெருக்கள் என ஊரே அமர்க்களப்பட்டது. மக்கள் உண்பதும், குடிப்பதுமாக இரு மருங்கும் இருந்த கடைகளில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அனைவரும் குடும்பம் குடும்பமாக நகரை வலம் வந்தனர். அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததால் நாங்களும் திருவிழாவைக் காண வந்தவர்கள் போல் ஒரு நெடுந்தூர நடைபோட்டு மீண்டும் தொடர்வண்டி நிலையம் வந்தோம். அங்கிருந்து ரோட்டர்டாம் என்ற துறைமுக நகரம் சென்றோம். கண்கொள்ளாக் காட்சியாக அந்த ஊர் இருந்தது.

ரோட்டர்டாமின் அழகு

ரோட்டர்டாமின் அழகு

அங்கு இருந்த ஈரோமாசுடு (Euromast) என்ற புகழ்பெற்ற ஒற்றைக் கோபுரத்தைப் பார்வையிடச் சொன்றோம். 185 மீட்டர் உயரம் உடைய அந்த ஒற்றைக் கோபுர நெடுமுடியிலிருந்து பார்வையிட்டால் ரோட்டர்டாம் நகரத்தின் எங்கும் நிறைந்த அழகுக்காட்சியின் ஆட்சியைக் கண்டு மகிழமுடியும். இதற்குத் தனியான நுழைவுச்சீட்டினைப் பெற்று மாடிப் படியேறியும், தூக்கியில் சென்றும் பார்வையிடவேண்டும். இதனைப் பார்வையிட மக்கள் தொகை தொகையாக வந்தவண்ணம் உள்ளனர். கோபுர முடி வரை ஏறி நின்று அரைமணி நேரத்திற்கும் மேலாக இயற்கைக் காட்சிகளைப் பார்த்தோம். அருகில் உள்ள நீர்நிலைகளில் கப்பல்களும், படகுகளும் போவதும் வருவதுமாக இருந்தன. பிறகு ரோட்டர்டாம் பாலம் பார்த்தபடி பலநிலைகளில் படம் எடுத்துக்கொண்டோம். ரோட்டார்டாமிலும் கப்பல், படகு போக்குவரவு சிறப்பாக உள்ளது. விண்ணைத்தொடும் கோபுரங்கள் நெதர்லாந்து நாட்டின் வளமை காட்டி நிற்கின்றன.

மக்களைப் பற்றி சிந்திக்கும் ஆட்சியாளர்கள்

மக்களைப் பற்றி சிந்திக்கும் ஆட்சியாளர்கள்

நடைபாதை, மிதிவண்டிப் பாதை, படகுப்பாதை, தொடர்வண்டிப் பாதை, பேருந்துப்பாதை என ஊரில் அனைத்து வகையிலும் பயணம் செய்ய வசதி உள்ளது. பயண அட்டை ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு எந்த வண்டியிலும் நாம் பயணம் செய்துகொள்ளலாம். போகும் தூரத்திற்கு உரிய காசைக் கணினி கழித்துக்கொள்ளும். விடுமுறை நாளிலும், போக்குவரவு நெரிசல் இல்லாத நேரங்களிலும் பயணம் செய்தால் 40 விழுக்காடு சலுகை விலையில் பயணம் செய்யவும் இயலும். எங்கும் கணினிமயப்படுத்தப்பட்ட நாடாக நெதர்லாந்து விளங்குகின்றது. நாட்டையும் மக்களையும் சிந்திக்கும் ஆட்சியாளர்களால் இந்த நாடு ஆளப்படுவதால் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது. நம் ஊரில் ஒரு தானியங்கி வங்கிச் சேவையைக் கூட ஒழுங்காகப் பயன்படுத்தமுடியாத நிலையை நினைத்து வருந்தினேன்.

மதிப்பளிக்கும் மக்கள்

மதிப்பளிக்கும் மக்கள்

அவையல்கிளவி முழக்கும் நம் நாட்டுப் பேருந்து ஓட்டுநர்களைப் போன்ற மாந்தர்களையோ, சீறிப் பாய்ந்து செல்லும் சென்னை நகர உந்துவண்டியோட்டிகளையோ, சாலையில் தவறி நடந்தவர்களைச் சுடுசொல்லால் சுட்டெரிக்கும் இழிமகன்களையோ நெதர்லாந்தில் யாண்டும் கண்டிலேன். அனைவர் முகத்திலும் அன்பொழுகும் பார்வை. அனைவருக்கும் மதிப்பை வழங்கி மகிழும் மேன்மைக் குணம். உதவுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் பரந்த மனத்துடன் உதவும் இயல்பு ஒவ்வொருவரிடமும் குடிகொண்டுள்ளன.

அயர்வுற்ற கால்கள்

அயர்வுற்ற கால்கள்

நெதர்லாந்து குறித்த அனைத்து விவரங்களையும் பொறியாளர் கோபி அவர்கள் தெரிந்து வைத்திருந்ததால் அவருடன் உரையாடியபடிச் செல்வது இனிய அனுபவமாக இருந்தது. ரோட்டர்டாம் நகரின் பகல் காட்சியைக் கண்ட கண்கள் இரவுக்காட்சியையும் கண்டு மகிழ்ந்தன. அங்கிருந்து தொடர்வண்டியில் இரவு 9 மணியளவில் கோபி அவர்களின் இல்லம் திரும்பினோம்.

நெடுந்தொலைவு நடந்த காரணத்தால் கால்கள் அயர்வுற்று இருந்தன. உறக்கம் கண்களைத் தழுவின. இன்று பார்க்க நினைத்த இலெய்டன் அருங்காட்சியகம் நாளையாவது பார்க்க வாய்ப்பு அமையுமா? என்று எண்ணியபடி கண்ணயர்ந்தேன்.

English summary
Dr Mu Elangovan has narrated about his recent visit to the Netherlands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X