For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபுலாநந்த சுவாமிகளின் யாழ்நூல் தொடர்புடைய அரிய மடல்...

Google Oneindia Tamil News

- முனைவர் மு.இளங்கோவன் ([email protected])

தவத்திரு விபுலாநந்த சுவாமிகளின் யாழ்நூல் 1947, 1974, 2003 ஆகிய ஆண்டுகளில் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது. யாழ்நூல் உருவாக்கத்திற்குப் பத்தாண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது என விபுலாநந்த அடிகளார் தம் முன்னுரையில் குறித்தாலும் (பக்கம்.27:1947) முன்னுரை எழுதிய ஐந்தாண்டுகள் கழித்துதான் நூலுக்கு முடிவுரை எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. எனவே சற்றொப்ப பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக விபுலாநந்தரின் அறிவு, உழைப்பை ஈடாகப் பெற்றே யாழ்நூல் வெளிவந்துள்ளது.

Rare letter of Vipulananda Swamigal

யாழ்நூலை எழுதி முடிக்க அடிகளார் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்திதுள்ளார். மாயாவதி ஆசிரமப் பணியிலிருந்து விடுபடல்(1941), கொழும்புப் பல்கலைக்கழகப் பணியேற்றல்(1943 - 47), கடுங்காய்ச்சலில் வீழ்ந்தமை, முடக்குவாதம் வந்தமை என்று பணியும், பிணியும் அடிகளாரை வாட்டியுள்ளன. ஆயின் யாழ்நூலை அச்சிடுவதே தம் நோய்தீர்க்கும் மருந்து என்று நண்பர்களிடம் குறிப்பிடவும், புதுக்கோட்டையில் வாழ்ந்த தமிழ்வள்ளல் இராம. சிதம்பரம் செட்டியார் அவர்கள் விபுலாநந்தருக்கு வேண்டிய அனைத்து ஏந்துகளையும் செய்து தந்து ஆதரித்தார். 14,000 சதுர அடிகொண்ட தம் 'இராம நிலைய' வளமனையின் முன்பகுதியை அடிகளாரின் ஆராய்ச்சிக்கு ஒதுக்கித் தந்தும், பல்வேறு பணியாளர்கள், உதவியாளர்களை அமர்த்தியும், யாழ்க் கருவியை உருவாக்க உதவும் தச்சர்கள், இசைநுட்ப வல்லுநர்களைப் பணிக்கு அமர்த்தியும் யாழ்நூல் உருவாக உதவியுள்ளார்.

விபுலாநந்த அடிகளார் தங்கி ஓய்வெடுக்கவும் அமைதியாகத் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்யவும் இலங்கையில் இருந்த தம் தேயிலைத் தோட்ட வளமனையை வழங்கியும் திரு. செட்டியார் அவர்கள் யாழ்நூல் ஆராய்ச்சிக்கு உதவியுள்ளார். தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்களுக்கும் அகவையில் குறைந்த திரு. சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கும் மிகச்சிறந்த நட்பும் உறவும் இருந்துள்ளமையை இருவரின் எழுத்துகளையும் ஊன்றிக் கற்கும்பொழுது உணரலாம். இராம. இராம. சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கு நம் சுவாமிகள் வரைந்த மடல் ஒன்று அண்மையில் என் பார்வைக்குக் கிடைத்தது. அந்த மடலில் யாழ்நூலை அச்சிட நம் அடிகளார் வழங்கிய திட்டமும், யாழ்நூல் அச்சேறத் துணைநின்ற அ. கணபதிப்பிள்ளை அவர்களின் சிறப்பும் தெரியவருகின்றது. அடிகளார் வரைந்த மற்ற கடிதங்கள், குறிப்பேடுகள் கிடைத்தால் யாழ்நூல் சிறப்பை உணர மேலும் வழிகிடைக்கும்.

Rare letter of Vipulananda Swamigal

விபுலாநந்த அடிகளின் யாழ்நூல் வெளியீடு குறித்த அரிய மடல்...

9.5.45
Camp
Woodstock Estate,
Rogele

பிரிய நண்பர் திரு. பெ. ராம. ராம. சித அவர்களுக்கு
ஆண்டவன் அருளை முன்னிட்டு எழுதுவது.

நலம். 25/4 இல் சென்னையிலிருந்து எழுதிய கடிதமும், 5/5 இல் புதுக்கோட்டையிலிருந்து எழுதிய கடிதமும் கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு இன்று ஒருங்கு கிடைத்தன.

பேரன்புள்ள திரு. **அ. க. அவர்கள் கடிதத்தையும் படித்தேன். அக்கடிதத்தில் ஒரு குறிப்பு எழுதி, இதனுள் வைத்திருக்கிறேன். அவர்களுக்கு அனுப்பிவிடலாம். அச்சுச் சட்டத்தின்படியும், நானூறு பக்கம் புத்தகத்தை ஓராண்டில் வெளியிட்டால் அதிகாரிகள் வினாவுவதற்கிடமுண்டு.

Rare letter of Vipulananda Swamigal

1944 ல் அச்சாகி முடிந்த முதல் ஐந்து இயல்களை(ப்) பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலை திரிபியல், பண்ணியல்களை இப்பொழுது வெளியிடலாம். படங்களை ஈற்றிற் சேர்ப்பது இப்பொழுது வெளிவரும் ஆங்கில ஆராய்ச்சி நூல்களின் மரபு பற்றி யாமும் ஈற்றிற் சேர்த்துக்கொள்ளுவோம். உள்ளுரையும் நூல் முற்றிலும் அச்சான பிறகு அச்சிடுதற்குரியது. இப்பொழுது நாம் அச்சிடவேண்டியது முகப்புத்தாள் மாத்திரமே (Title Page). இது திரு. அ. க. அவர்களுக்கு முன்னமே எழுதியிருக்கிறேன். வெளிக் கவருக்கு கையினால் செய்த தாள் தடிப்பானது. மதுரையிலும், விருதுநகரிலும் கிடைக்கும். வெண்சிவப்பு நிறத்தில் உபயோகிக்கலாம். முகப்பு(த்) தாளிலுள்ள விஷயத்தைச் சுருக்கி அச்சிடலாம்.

விபுலாநந்த சுவாமிகள்

யாழ்நூல்

YAL NUL
By
Swami Vipulanda

கரந்தை தமிழ்ச்சங்கம்
தஞ்சாவூர்

ஒருவாரத்தில் இங்கிருந்து புறப்படுகிறேன். 21- ஆந்தேதி கொழும்பில் ஒரு கூட்டமுண்டு. அடுத்த நாளே புதுக்கோட்டைக்கு புறப்படலாம். குழந்தைகளுக்கும் தங்களுக்கும் எனது அன்பு.

அன்புள்ள விபுலாநந்தர்.

ஐந்தியல்களை இப்பொழுது வெளியிடலாம். அரங்கேற்று விழா வேண்டுமானால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இரண்டாம் பாகம் வெளியிடும்போது வைத்துக்கொள்ளலாம்.
வி.

**அ.க. என்று குறிக்கும்பெயர் அ. கணபதிப்பிள்ளை என்னும் அன்பராவார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் பணியாற்றிய பெருந்தகை. திரு. உமாமகேசுவரம் பிள்ளையின் உற்ற நண்பர்; நம்பிக்கைக்குரியவர். உமாமகேசுவரானர் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டபொழுது உடன் சென்றவர். உமாமகேசுவரனார் வடநாட்டில் இயற்கை எய்தியபொழுது அவரை அடக்கம்செய்து, இறுதிக்கடன்களை நிறைவேற்றித் தமிழகம் திரும்பியவர்.

## சுவாமிகளின் கடிதத்தில் தட்டச்சில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. சுவாமிகளில் திருவாய்மொழியை உதவியாளர் தட்டச்சிட்டிருப்பார் என்று தெரிகின்றது.
## எழுதுகோலால் இரண்டாம் பக்கத்தில் எழுப்பட்டுள்ள கணக்கு விவரம் மடலைப் பாதுகாத்தோரின் செயலாகத் தெரிகின்றது.

English summary
This is a very rare letter of Vipulananda Swamigal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X