For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக புகைத்தல் எதிர்ப்பு நாள்

By Staff
Google Oneindia Tamil News

World No Tobacco Day
-புன்னியாமீன்

மே 31. இன்று உலக புகைத்தல் எதிர்ப்பு நாளாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் World Health Organization உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தன. 1988ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் WHA 40.38 தீர்மானப்படி ஏப்ரல் 07ம் தேதி இத்தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும்கூட, அதேயாண்டில் WHA 42.19 தீர்மானப்படி மே 31ம் தேதி அனுஸ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் புகைத்தலால் தமக்கும் பிறருக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து தவிர்ந்து கொள்வதை வலியுறுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான இறப்புகளைக் குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கிறது.

உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையிலைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர்பாக வலியுறுத்தப்படுகிறது.

ஒரு நபர் புகைப்பிடிப்பதினால் அவருக்கு ஏற்படும் கெடுதலைவிட அவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார். புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக 'நாட்டிங்காம்' பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி நுரையீரல் புற்றுநோய் 16 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு புகைப்பிடிப்பவர்களிடத்திலன்றி பக்கத்தில் இருப்பவர்களிடமே ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் முன்னையநாள் பணிப்பாளர் 'வில்லியம் பொலின்;' வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் குறிப்பிட்ட விடயங்கள் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியதே. 'புகையிலை மதுவைவிட ஏன் ஹெரோயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடிமைப்படுத்தக்கூடியது. அடிமையானவர்களில் 60% – 90% வீதமானவர்கள் தம் பழக்கத்திலிருந்து மீட்சி பெற முடியாதவர்களாக உள்ளனர். சீனாவில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். ஓர் ஆண் வருடமொன்றுக்கு 1900 சராசரியாக சிகரெட்டுகள் புகைக்கின்றனர்.

வளைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப்பொருட்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) வளைகுடா நாடுகளில் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங்களை தந்திருந்தது. வளை குடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த கொதிப்பு நோய் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவர். அப்துல்லா அல் பாதாஹ் (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti – Smoking Programme at the Health Ministry) தன்னுடைய ஆய்வின் படி, தற்போது வளைகுடா நாட்டைச்சார்ந்த 600,000 பெண்கள் புகை பிடிக்கிறார்கள். இவற்றில் யுவதிகள் தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அத்துடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

'பகையைக் கூட புகையாய் ஊதித் தள்ளிவிடும் மனிதன் இந்தப் புகை என்னும் பகையை பகைக்க முடியாமல் திணறுகிறான்'. உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது? புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.? இவ்விடத்தில் சிறிதேனும் ஆராய்தல் வேண்டும். புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. புகையிலையில் நிக்கோடின் எனும் நச்சுப் பொருளுடன் வேறும் 700 வகையான இரசாயனக் கூட்டுப்பொருட்கள் சேர்ந்துள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவற்றுள் சில மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அதி சக்தி வாய்ந்த நச்சுப் பொருட்களாகும். இவற்றைத் தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர். மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றது. இந்த மாயையினால் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சினைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். அதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.

இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.

தொடர்ச்சி...தொடர்ச்சி...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X