• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைத்துலக குழந்தைகள் நாள்

By புன்னியாமீன்
|

Universal Children's Day
ஜுன் 1ம் தேதியான இன்று சர்வதேச சிறுவர் தினமாகும்.

சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும் போது தேதி குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஒவ்வொரு நாடுகளும் வெவ்வேறு தினங்களில் இத்தினத்தை கொண்டாடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை 'நேரு மாமா' என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் அக்டோபர் 1ம் தேதி இத்தினம் கொண்டாப்படுகிறது. அனைத்துலக குழந்தைகள் நாளை டிசம்பர் 14, 1954லிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1954ல் ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானப்படி சர்வதேச சிறுவர் தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு UNICEF அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. UNICEF, UNESCO, SAVE THE CHILD போன்ற அமைப்புக்கள் பல செயற்றிட்டங்களை முன்வைத்துச் செயற்படுகின்றன.

அவ்வாறாயின் ஜுன் 1ம் தேதி ஏன் இத்தினம் பற்றி குறிப்பிட வேண்டும் என்பதை சற்று அவதானித்தல் வேண்டும். ஆரம்பகாலங்களில் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தங்களில் சிறுவர்கள் தினம் என்றடிப்படையில் அல்லாமல் சிறுவர்களை மகிழ்விக்கும் சில நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக 1920ம் ஆண்டில் துருக்கியில் ஜுன் 01ம் தேதி சிறுவர்களை மகிழ்விக்க சில போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 1925ம் ஆண்டு ஜுன் 01ம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் சென் - பிரான்சிஸ்கோவில் சீனா கொன்சல் ஜெனரலாகக் கடமையாற்றியவர் சீன அநாதைச் சிறுவர்களை ஒன்றுதிரட்டி 'டிரகன் படகு' விழாவை சிறப்பாக நடாத்தினார். இப்படகு விழா அநாதைச் சிறுவர்களை மகிழ்விக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதே தினத்தில் ஜெனீவாவில் சிறுவர்கள் தொடர்பான மகாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது. எனவே, இவ்விரு சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஜுன் 1ம் தேதி சிறுவர் தினமாக ஆரம்பகாலங்களில் அனுஸ்டிக்கப்பட்டிருக்கலாம் என கருத இடமுண்டு.

உலகில் சில நாடுகளும், சில ஐக்கிய அமெரிக்கா மாநிலங்களும், பல கம்யூனிச நாடுகளும் ஜுன் 1ம் தேதியில் இத்தினத்தைக் கொண்டாடுகின்றன. இச்சிறுவர் தினம் சீனா- கம்யூனிச நாட்டாவரால் ஆரம்பிக்கப்பட்டமையினால் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்பு உலகளாவியரீதியில் கம்யூனிச, முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான அணி வேறுபாடு காரணமாக முதலாளித்துவ நாடுகள் இந்நாளை ஏற்றுக் கொள்ளாமல் பிறிதொரு நாளைத் தீர்மானித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும் 1925 ஜுன் 1ம் தேதி ஜெனீவா மகாநாட்டினையடுத்து சிறுவர்களுக்கெதிரான எல்லாவித துஸ்பிரயோகங்களையும் (பாலியல் கொடுமை, சிறுவர்களை வேலைக்கமர்த்துதல், சிறுவர்களைக் கடத்துதல், சிறுவர்களின் கல்வியைத் தடுத்தல்) களைவது தொடர்பாக சிந்திக்கப்படுவது விசேஷ அம்சமாகும். எனவே, எத்தினத்தில் கொண்டாடப்படுகின்றது என்பதை விட இத்தினம் கொண்டாடப்படும் நோக்கம் ஒன்றாக இருப்பதை இங்கு அவதானித்தல் வேண்டும்.

விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், வாழ்க்கை வசதிகளில் ஏற்பட்ட அபிவிருத்தி, கைத்தொழில் பெருக்கம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நகரமயமாக்கல் போன்ற பல காரணங்களால் சிறுவர் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிட்டது. உலக ஜனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவராவர். இலங்கை சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி 1995இல் 27.7 சதவீதம் சிறுவராவர்.

சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதுக்கு கீழ்ப்பட்டவராவர். 1939ன் சிறுவர், இளைஞர் கட்டளைச்சட்டம் சிறுவர் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும், இளைஞர் 14-16 என்றும் வரையறுத்துள்ளது. 1989ன் வயது வந்தவர் திருத்த சட்டத்தின்படி சிறுவர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவராவர். பொதுவாக 14 வயதுவரை என ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இன்று உலகின் பல பாகங்களிலும் சிறுவர் எத்தகைய பாதிப்புக்கு உட்படுகின்றனர் என்பதை வெகுசன ஊடகங்கள் மூலம் அறியமுடிகிறது. அவர்கள் குறைந்த சம்பளத்தில் கடின வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். வீட்டு எஜமானிகளின் தண்டனைகள், நெருப்பினால் சூடு, உணவின்றிப் பட்டினி போடல், வீட்டைவிட்டுத் துரத்தல் போன்ற கொடூர செயல்களால் சிறுவர்கள் தெருவில் அலைகிறார்கள் பிச்சை எடுக்கிறார்கள். UNICEF அமைப்பின் அறிக்கையொன்றின்படி (1996) உலகில் 14 வயதுக்குக் கீழ் 250 மில்லியன் சிறுவர்' கடின உழைப்பில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் மட்டும் 60-115 இலட்சம் சிறுவர் வேலை செய்கின்றனர்.

14 வயதுக்குக் கீழ் சிறுவரை வேலைக்கமர்த்தலுக்கு எதிராக இலங்கையில் பல சட்டங்கள் இருந்தபோதிலும், 10 லட்சம் சிறுவர், உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 1 லட்சம் சிறுவர் தெருவில் நிர்க்கதிக்குள்ளாகின்றனர். ஒடுக்கப்படுவதன் காரணமாக இளங் குற்றவாளிகளாகவும் மாறுகிறார்கள். சுமார் 5 லட்சம் சிறுவர் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவரை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதும் உலகளாவிய ரீதியில் காணப்படும் அம்சமாகும். சிறுவரை ஆயுதப் போரில் ஈடுபடுத்துவது தொடர்பான ஐ.நா.வின் விஷேச பிரதிநிதி அலுவலகம் விடுத்துள்ள தகவலின்படி ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சிறுவர்கள் போர் நடவடிக்கைகளால் கொல்லப்பட்டுள்ளனர். 250,000 சிறுவர் உலகின் பல பாகங்களிலும் நடைபெறும் யுத்தங்களில் இளம் போர் வீரர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 12 மில்லியன் சிறுவர் வீடிழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

UNICEF கணிப்பீட்டின்படி 14 வயதுக்குக் கீழ்ப்பட்ட சுமார் 30,000 சிறுவர் கடற்கரைப் பிரதேசங்களில் தன்னினச் சேர்க்கைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1970களின் பின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியுடன் இந்நடவடிக்கைகள் பெருகிவருகின்றன. தாய்லாந்தில் 2 இலட்சம் சிறுவர்களும், பிலிப்பைன்சில் 20,000 சிறுவர்களும் பாலியல் துஸ்பிரயோகத்துக்குப் பயன்படுகின்றனர். சிறுவர் பாலியல் நடத்தைகள் AIDS எனும் கொடிய நோய்ப் பரம்பலுக்கும் காரணமாக அமைகின்றது. விரிவான குடும்ப அமைப்புகள் ஆசிய நாடுகளில்கூட, அதாவது பெற்றாரின் கண்காணிப்பில் பிள்ளைகள் வாழுகின்ற போதிலும்கூட, சிறுவர் துஷ்பிரயோகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

''குழந்தைகள் நட்சத்திரத்தை ஆகாசத்தில் காண்பதில்லை. ஓடும் நதி நீரிலே கண்டு விடுகிறார்கள் '' என்றார். பிரபல ரஷ்யத் திரைப்பட இயக்குநர் உவ்சென்கோ. இவ்விடத்தில் மேற்படி கருத்தினை ஆழமாக சிந்தித்தல் வேண்டும். உலகளாவியரீதியில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் அறிக்கைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் விழாக்கள் என்பன நடத்தப்படுவதுடன் பல்வேறு தரப்பினராலும் சிறுவர் உரிமையைப் பேணுவது பற்றி சபதங்களும் எடுக்கப்படுவது வழமையான நிகழ்வுகளாகும். 1924ம் ஆண்டிலேயே முதன் முதலில் சிறுவர் உரிமை தொடர்பான கொள்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1959ம் ஆண்டு பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் சபையால் விரிவாகவும் தெளிவாகவும் சிறுவர்களுக்குரிய உரிமைகள் தொடர்பான கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 1959ம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனம் 1924ம் ஆண்டின் பிரகடனத்தை விட பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்தது.

இந்நிலையிலேயே 1979ம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு பரந்தளவில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் 1989ம் ஆண்டின் சிறுவர் உரிமைகள் தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. 1992ம் ஆண்டு மேற்படி உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை இலங்கையும் நடைமுறைப்படுத்துவதாக உறுதி செய்து ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன் படி சர்வதேச சிறுவர்கள் அனுபவிக்கும் சகல அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளையும் இலங்கையிலுள்ள சகல சிறுவர்களும் அனுபவிக்கும் உரிமை சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. பதின்னான்கு வயது வரையான பிள்ளைகள் சிறுவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். தற்போது அது பதினாறு வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. இனம், மதம், மொழி, பால் என்ற எந்தவொரு பாகுபாடுமின்றி குறிக்கப்பட்ட உரிமைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு சிறுவர், சிறுமியருக்கும் உள்ளது. நடைமுறையில் இவ்விதிமுறைகள் பேணப்படுகின்றனவா என்று மதிப்பீடு செய்யும் போது கவலை தரும் பல விஷயங்கள் வெளியே தலைகாட்டி வேதனையைத் தருகின்றன. சர்வதேசம் ஏற்றுக் கொண்ட சட்ட விதிகள் ஏட்டளவிலேயே பேணப்படுகின்ற அவலம் தெளிவாகிறது.

சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை பின்வருமாறு அமைகிறது:

- வாழ்வதற்கும் முன்னேற்றுவதற்குமான உரிமை.
- பிறப்பின் போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக் கொள்ளும் உரிமை.
- பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.
- பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை.
- கருத்தை வெளிப்படுத்தும் உரிமை.
- சிந்திப்பதற்கும், மனச் சாட்சிப்படி நடப்பதற்கும், சமயமொன்றைப் பின்பற்றுவதற்குமான உரிமை.
- சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை.
- போதிய கல்வியைப் பெறும் உரிமை.
- பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை.
- பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை.
- சித்திரவதை, குரூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் உரிமை.
- சாதாரண வழக்கு விசாரணைக்குள்ள உரிமை.
- சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்குமான உரிமை.

இவ்வாறு பல்வேறு உரிமைகள் சிறுவர் உரிமை தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நடைமுறையில் உலக நாடுகளிலாகட்டும் அல்லது நமது நாட்டிலாகட்டும் இவற்றில் எத்தனை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

நாளைய சமுதாயத்தின் நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் நடைமுறையிலுள்ள தீய மனிதப் பண்புகளுக்கும் சமய விழுமியங்களுக்கும் ஒவ்வாத சிந்தனைகளிலிருந்து விடுபட்டு சிந்திக்க வேண்டும். குறுகிய நலன்களுக்காக எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வைப் பணயம் வைத்து நாட்டைச் சீரழிக்கும் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் புதிய சிந்தனையுடன் மேன்மையான நோக்கத்தின் அடிப்படையில் நாளைய தலைமுறை நலமாக வாழ செயற்பட முடியும். நம் நாட்டின் அரசியல், சமய, சமூகத் தலைவர்கள் பொறுப்புணர்ந்து சிறுவர் உரிமைகளைப் பேணி அவர்களது எதிர்காலத்தை மேம்படுத்த உதவுவார்களா?. ஆயிரக்கணக்கான சிறுவர் பாலியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சுரண்டப்படுகின்றனர். இத்தகைய இழிநிலையிலிருந்து நமது சிறாரைப் பாதுகாக்க வேண்டும். அது நமது கடமையுமாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X