For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக தபால் தினம்

Google Oneindia Tamil News

Indian Post Box
உலக தபால் தினம் அக்டோபர் 9ம் தேதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1874ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் "சர்வதேச தபால் ஒன்றியம்' (Universal Postal Union) ஸ்தாபிக்கப்பட்டது. இதை நினைவுகூரும் முகமாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 9ம் தேதி உலக தபால் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உலக தபால் தின பிரகடனம் பின்வருமாறு:

"உலகின் பல்வேறு நாடுகளுக்கே உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும் மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும் பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது.

அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற்றிறமையுடனும் நேர்மையுடனும் பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும் பொருட்களையும் உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும் இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக'' என்பதாகும்.

தபால் சேவையென்பது இன்றைய மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். குறிப்பாக தபால் சேவை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதனால் இதன் முக்கியத்துவம் அவ்வளவாக உணரப்படுவதில்லை. ஆனால், தபால் சேவை இன்றியமையாதது என்பதில் எந்தவிதமான வாதிப்பிரதி வாதங்களும் இல்லை.

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள 'புறாக்களைப் பயன்படுத்தினான்' என்றும், உலகில் முதல்தர விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் போட்டி கூட கடிதப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஒரு விளைவின் ஞாபகார்த்தமாகவே ஆரம்பிக்கப்பட்டதென்றும் வரலாறு சான்று பகர்கின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.

நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிய போதிலும்கூட தகவல் பரிமாற்றங்களுக்கு தபால் மிகவும் இன்றியமையாததொன்றாக இன்றும் காணப்படுகின்றது. உத்தியோகபூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு இன்னும் அஞ்சல் முறை அவசியப்படவே செய்கின்றது..

ஆரம்ப காலங்களில் தபால் நிலையங்கள் கடிதப் பரிமாற்றங்களுடன் தபால் சேவைகளுடன் இணைந்த வகையில் தந்தி சேவைகள், தொலைபேசி சேவைகள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டிருந்தன. இன்றைய காலத்தில் கடிதப் பரிமாற்றங்களுக்கப்பால் நானாவித சேவைகளை வழங்கும் நிலையமாக தபால்நிலையங்கள் மாறிவிட்டன. இலங்கையைப் பொருத்தமட்டில் பிரதான நகரங்களில் அமைந்துள்ள தபால் நிலையங்கள் தனது சேவையினை பல துறைகளுக்கும் விரிவுபடுத்தியிருப்பதை அவதானிக்கலாம். இவ்விடத்தில் தபால்துறையின் வளர்ச்சிப் பரிணாமங்கள் பற்றி சுருக்கமாக தெரிந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும்.

ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர். 1653 ஆம் ஆண்டு Longueville மாகாண Minister Fouqet என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தான் தபால்பெட்டி அறிமுகமாகியதென கூறப்படுகின்றது.

சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இலண்டன் மற்றும் இதர நகரங்களில் முற்றிலும் வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய தபால்பெட்டிகளை வைக்க அந்தோணி ட்ரோலோபி (Anthony Trollope) என்ற பிரித்தானிய தபால்துறையின் பணி மேம்பாட்டு அதிகாரியை 1851-ல் பிரித்தானிய அரசு நியமித்தது. இவர் ஒரு நாவலாசிரியரும் ஆவார். அவரது ஆய்வின் முடிவில் பிரான்சில் உள்ளதுபோல் ஐந்தடி உயரமுள்ள இரும்புத்தூண் தபால்பெட்டிகளை பல்வேறு இடங்களில் வைக்கலாம் என முடிவாயிற்று. பிரான்ஸ் நாட்டில் அறிமுகமான தபால்பெட்டிகள் பிரித்தானியா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளால் பின்பற்றப்பட்டன. தபால்பெட்டிகள் அதிகபட்சம் ஐந்தேகால் அடி உயரத்தையும், குறைந்தபட்சம் நான்கடி உயரத்தையும் கொண்டவையாகவே வடிவமைக்கப்பட்டன.

1852ல் அமெரிக்காவில் செவ்வக வளைவு கொண்ட தபால்பெட்டிகள் வைக்கப்பட்டன. அதே ஆண்டு ஜெர்சி மாகாணத்தில் 4 தூண் தபால்பெட்டிகள் வைக்கப்பட்டன. அதன்பின்னர் 1855ல் குர்னெசி மாகாணத்தில் (Guernse) 3 தபால்பெட்டிகளும், இலண்டனில் 6 தபால் பெட்டிகளும் வைக்கப்பட்டன. இலண்டனில் வைக்கப்பட்ட தபால்பெட்டிகள் பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தன. தபால்பெட்டிகளில் பிரித்தானிய அரசின் சின்னமும், அதற்கு கீழ் பிரித்தானிய தபால் துறையான 'ரோயல் மெயில்' சேவையின் சின்னமும் முகப்பில் இருந்தன. தபால்பெட்டியின் மேற்பகுதி விக்டோரியா மகாராணியின் கிரீட சின்னத்தையும் கொண்டிருக்கும். தபால் பஸ்கள், தபால் புகையிரதங்களிலும் கூட அக்காலத்தில் தபால்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

சிவப்பு வண்ணம் மக்களது பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் தபால்பெட்டிகளுக்கு சிவப்பு வண்ணம் பூசலாம் என பிரித்தானிய அரசு அறிவுறுத்தியது. இது “போஸ்ட் ஆபீஸ் ரெட்'' (Post Office Red) என ஒரு வர்ண பெயின்டாகவே பிரபலமாயிற்று. பச்சை நிறத் தபால் பெட்டிகளும் பின்னர் அறிமுகமாயின. ஆனால் அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்நாட்டு தபால்களைப் போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.

தபால் சேவையுடன் ஒன்றிணைந்த வகையில் முத்திரை பயன்பாட்டைப் பற்றியும் இவ்விடத்தில் சற்று நோக்குதல் அவசயிம். ஒட்டும் தன்மையுள்ள முத்திரைகளும், ஒரே அளவைக் கொண்ட தபால் கட்டணமும், 'ஜேம்ஸ் சாமேர்ஸ்' (James Chalmers) என்பவரால் 1834 ஆண்டளவில் முன்வைக்கப்பட்டது.

இதே கருத்தை 1837ல் 'ரோலண்ட் ஹில்' என்பவரால் வெளியிடப்பட்ட, "தபால் துறையின் சீரமைப்பும் அதன் முக்கியத்துவமும், செயற்படுதன்மையும்" என்னும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தபாலைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர் கட்டணம் செலுத்தவிரும்பாவிடில், தபாலை வாங்க மறுக்கலாம். எனவே தபால் கட்டணத்தை, பெறுனரிடம் அறவிடுவதிலும் பார்க்க தபாலை அனுப்புவரிடமிருந்தே அறவிடுவது சிறந்தது என அந்த அறிக்கையில் அவர் தெளிவுபடுத்தியிருந்தார். தபால் பகிர்வின்போது எவ்வளவு தூரத்திற்கு வழங்கப்படுகிறது என்பதைக் கருதாமல், ஒருசீரான கட்டணமாக ஒரு பென்னியை அறவிடவேண்டுமென்றும் அவர் கருத்துப்பட்டிருந்தார். வெவ்வேறு தொலைவிடங்களுக்கு வெவ்வேறு கட்டண அறவீட்டு முறை, கணக்கு வைக்கும் செலவை அதிகரிக்கும் என்றும், ஒருசீரான கட்டணமுறையில் ரோயல் தபால் சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின் இக்கருத்துக்கள் இறுதியாக 1839 ஆகஸ்டில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் தபால் அலுவலகம், 1840ல் பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன், 1 பென்னியும், 2 பென்னியும் பெறுமானமுள்ள, படம் அச்சிடப்பட்ட உறைகளையும் வெளியிட்டது.

மூன்று மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்டபென்னி பிளாக் (Penny Black) என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது. முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால், அனைத்துலகப் பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துக்களில் அவற்றில் பொறிக்கப்பட வேண்டுமென்ற அதன் விதியிலிருந்து, ஐக்கிய இராச்சியத்துக்கு, "சர்வதேச தபால் ஒன்றியம்' (Universal Postal Union) விலக்கு அளித்துள்ளது. இன்றுவரை முத்திரையில் நாட்டுப் பெயரைக் குறிப்பிடாமல் அச்சிடும் ஒரே நாடு பிரித்தானியாவாகும்.

"சர்வதேச தபால் ஒன்றியத்தில் இணைவதற்கு முன்னர் பல நாடுகள் இப்படிச் செய்வதில்லை, எனினும் பின்னர் மிகக் குறைந்த மீறல்களே இருந்தன. இதன் காரணமாக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பெரும்பாலான பழைய வெளியீடுகளிலுள்ள கீழை நாட்டு எழுத்துக்களுக்கு மேற்கு நாட்டுப் புதிய சேகரிப்பாளர்கள் அறிமுகமில்லாதவர்களாக உள்ளார்கள். ஒரு தபால் தலை, அதன் பெறுமதியையும், அந்நாட்டு நாணயத்தில் கொண்டிருக்க வேண்டும். சில நாடுகள், ஒரு எழுத்தையோ அல்லது "First Class" என்பது போன்ற குறிப்புக்களையும் பெறுமதிக்குப் பதிலாகக் கொடுக்கின்றன. "சர்வதேச அஞ்சல் ஒன்றியம்' விதி காரணமாக இது உள்ளூர் சேவைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றது, எனினும் மீறல்களும் அதிகம் கவனிக்கப்படுவதில்லை. (ஐரோப்பிய தபால் சேவைக்கான பிரித்தானியாவின் "E" தபால்தலையும், தென்னாபிரிக்காவின் "International Letter Rate" தபால் தலையும் மேற்சொன்ன விதிவிலக்குகளில் அடங்கும்).

சர்வதேச ரீதியில் தரமான தபால் சேவையினை வழங்குவதை நோக்காகக் கொண்டு "சர்வதேச தபால் ஒன்றியம்' அமைக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் இயங்கும் பழைமை வாய்ந்த அமைப்புக்களில் ஒன்றான இவ் ஒன்றியம் உலக நாடுகளின் ஒத்துழைப்பின் பலனாகவே இன்றும் தனது நோக்கை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

"சர்வதேச தபால் ஒன்றியம்' பற்றிய எண்ணக்கரு 1863ல் ஐக்கிய அமெரிக்காவில் தபால் அதிபர் நாயகமாகவும் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மந்திரி சபையின் உறுப்பினராகவும் கடமையாற்றிய மொன்கெமேரி பிளேயரின் எண்ணத்தில் வெளிப்பட்டது. பின்னர் பாரிஸ் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதிகள் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய பொதுவான அமைப்பினை ஏற்படுத்துவதற்கு இணக்கம் கண்டனர். இதன் பின் ஏறத்தாழ பதினொரு ஆண்டுகள் கடந்த நிலையில் ஜேர்மன் நாட்டின் தபால் பணிப்பாளர் நாயகத்தின் பெரு முயற்சியினால் 1874ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி சுவிட்சலாந்து நாட்டின் பேர்ன் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் இருபத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு "அஞ்சல் பொது ஒன்றியம்' உருவாக்கப்பட்டது. இப்பெயரானது 1878ல் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் "சர்வதேச தபால் ஒன்றியம்' (Universal Postal Union) எனப் பெயர் மாற்றம் பெற்றது.

ஒன்றியம் அமைக்கப்பட்டதற்கான நோக்கத்திற்கு இணங்க உறுப்பு நாடுகள் அனைத்தும் தபால் பொருட்களை பரஸ்பர நம்பிக்கையுடன் கையாள்வதன் மூலம் அகில உலக நாடுகளும் ஒரு தபால் வலயமாகக் கருதப்பட்டு நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக உலகளாவிய ரீதியில் சுதந்திரமான தபால் போக்குவரத்துக்கு வழி திறந்ததுடன் ஒரு தபால் நிர்வாகத்தினால் இன்னொரு தபால் நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் தபால் பொருட்கள் இடைநிலை தபால் நிர்வாகத்தினால் பொறுப்புடன் கையாளப்படுகின்றமையினை உறுதிப்படுத்தியது.

மேலும், தபால் பொருட்களின் நிறைக்கமைய விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதுடன், 1875 தொடக்கம் 1971 வரையான காலப்பகுதியில் தபால் பொருட்களை அனுப்பும் மூல நிர்வாகங்கள் தான் பெறும் கட்டணங்களைத் தமக்குரியதாக்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும், விநியோகத்தினை மேற்கொள்ளும் தபால் நிர்வாகத்திற்கு வேதனம் எதுவும் கிடைப்பதில்லை. இந்நிலையில் 1969ல் டோக்கியோ நாட்டில் இடம்பெற்ற மாநாட்டுத் தீர்மானப்படி குறிப்பிட்ட ஒரு தபால் நிர்வாகம் (நாடு) இன்னொரு தபால் நிர்வாகத்திற்கு (வேறொரு நாட்டிற்கு) அனுப்பும் தபால் பொருட்களின் நிறைக்கும் அந்நாட்டிலிருந்து முதற்குறிப்பிட்ட நாட்டிற்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் நிறைக்கும் உள்ள வித்தியாசம் கணக்கிடப்பட்டு கூடுதலான தபால் பொருட்களை அனுப்பிய நாடு மற்றைய நாட்டிற்கு ஒன்றியத்தினால் குறித்துரைக்கப்பட்ட நியதிகளுக்கு இணங்க ஒரு தொகையினை வழங்குதல் வேண்டும். 1971ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இம்முறையானது எதிர் காலத்தில் மாற்றமடைவதற்கான சாத்தியப்பாடு உள்ளது.

தபால் பொருட்கள் என்ற பதம் தபால் அட்டைகள், வான் கடிதங்கள், அச்சடித்த விடயங்கள், கண்பார்வை அற்றோர்க்கான இலக்கியம் சிறிய பைக்கற்றுகள் என்பனவற்றை உள்ளடக்கியதாகும். ஒன்றியத்தின் அமைப்பு விதி இப்பொருட்களின் கட்டண வீதம், அதியுயர், அதிகுறைந்த நிறை, பருமன் அத்துடன் பதிவுக்கடித சேவை, காப்புறுதிக் கடித சேவை, விமான மூலமான தபால்சேவை, கப்பல் மூலமான தபால்சேவை விஷேட பாதுகாப்புடன் அனுப்ப வேண்டிய பொருட்கள் சம்பந்தமாகவும் விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பொதுச்சபை, நிறைவேற்றுச் சபை, தபால் கல்விக்கான ஆலோசனைச்சபை, சர்வதேச பணியகம் ஆகியன ஒன்றியத்தின் முக்கிய பகுதிகளாகும். ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்து மத்திய அலுவலகம் "சர்வதேச பணியகம்' என்ற பெயரில் பேர்ன் நகரில் இயங்கி வருகின்றது. சர்வதேச தபால் ஒன்றியம், சர்வதேச தபால் சேவை தொடர்பான ஒருங்கிணைப்பு வெளியீடுகள், பிரசுரம் என்பன இதன் முக்கிய பணிகளாகும்.

தபால் முத்திரைகளை வெளியிடுதல், விற்பனை செய்தல் உறுப்பு நாடுகளின் சொந்த விவகாரமாகும். அதனால்தான் முன்பு முத்திரை வெளியிடுதல் ஒன்றியத்துடன் தொடர்பற்ற விடயமாக இருந்தபோதும் உறுப்பு நாடுகளின் நலனில் ஒன்றியம் அக்கறையுடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலத்தில் இக்கொள்கையில் முத்திரைகள் ஒரு நாட்டின் கலாசாரம், சரித்திரம், கலை வளர்ச்சி என்பவற்றினைப் பிரதிபலிப்பதுடன் வரியினை ஈட்டிக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் காரணமாக சில மாற்றங்களை மேற்கொண்டன. ஒன்றியமானது ஐ.நா. சபையுடன் 1947ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க 01.07.1948 தொடக்கம் ஐ.நா.வின் விசேட அந்தஸ்துடன் கூடிய உறுப்பினர் வரிசையில் உள்ளது.

சர்வதேச தபால் வலையமைப்பு மூலம் பின் தங்கிய கிராமங்கள் கூட தபால் சேவையினைப் பெறக்கூடியதாகவுள்ளன. தற்போது உலகில் ஏறத்தாழ 670,000 நிரந்தர அஞ்சல் அலுவலகங்கள் இயங்குவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் ஆறு மில்லியன் பேர் வரையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் சர்வதேச ரீதியில் 430, 000 மில்லியன் தபால் பொருட்கள் வருடந்தோறும் பரிமாற்றப்படுகின்றன. இத் தபால்அலுவலகங்கள் அஞ்சற் சேவையுடன் காசுக்கட்டளை அஞ்சற் காசோலை, சேமிப்பு வங்கிக் கணக்கு போன்ற சேவைகளையும் தேசிய, சர்வதேச ரீதியில் மேற்கொண்டுள்ளன. உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து இந்திய தபால்துறையிடம் மொத்தம் 154,000 தபால் அலுவலகங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. உலகிலே அதிக தபால் நிலையங்களைக் கொண்ட நாடாக இந்தியாவும், அடுத்ததாக சீனாவுமுள்ளது.

இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய தபால் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய தபால் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன.

தபால் சேவையை இலகுபடுத்தும் முகமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் தபால் குறியீடு முறைகளைப் பயன்படுத்துகின்றன. தபாலை இலகுவாகவும், சரியான முறையிலும் பிரித்தெடுக்க தபால் நிலையங்களுக்கு உதவும்பொருட்டு முகவரியில் சேர்க்கப்படும் எண்களையும் எழுத்துக்களையுமே தபால் குறியீடு என்கிறோம்.

இந்த தபால் குறியீட்டு முறையின் பாவிப்பு முதன்முதலில் 1941 ஆம் ஆண்டு ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து ஐக்கிய இராச்சியம் 1959ஆம் ஆண்டிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் 1963ஆம் ஆண்டிலும் இம்முறையைப் பின்பற்றியது. 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத கணிப்பீட்டின்படி "சர்வதேச தபால் ஒன்றியம்' (Universal Postal Union) இணைந்துள்ள 190 நாடுகளில் 117 நாடுகளில் இந்த அஞ்சல் குறியீட்டு முறையை பின்பற்றுகின்றன.

பொதுவாக தபால் குறியீடுகள் ஓர் குறிப்பிட்ட நிலப்பரப்பிறகு வழங்கப்பட்டாலும், சிறப்பு காரணங்களுக்காக அரசு அலுவலகங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் போன்ற அதிகமான தபால் பெறும் தனி முகவரிகளுக்கோ நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படலாம்.. உதாரணமாக பிரெஞ்ச் செடெக்ஸ் முறையைக் குறிப்பிடலாம். தபால் சேவைகள் அவர்களுக்கென்று தனி வடிவமைப்பையும் தபால் குறியீடுகளை இடவேண்டிய முறைகளையும் சீர்படுத்துகின்றன. பெரும்பாலான ஆங்கிலம் பேசும் நாடுகளில் இக்குறியீடு முகவரியின் இறுதியில் இடப்படுகிறது.. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இது ஊர் அல்லது நகரின் பெயருக்கு முன்னால் இடப்படுகிறது.

இந்தியாவில் தபால் எண்கள் தபால் பெட்டி எண்கள் அல்லது தபால் குறியீடு எண் (PIN) என வழங்கப்படும். ஆறு எண்களைக் கொண்டிருக்கும் இவ்வெண். உதாரணமாக 606000. இலங்கையிலும் தற்போது தபால் குறியீட்டு எண் பயன்படுத்தப்படுகின்றது. இது ஐந்து இலக்கங்களைக் கொண்டதாகும். இலங்கையில் முதல் எண் மாகாண இலக்கமாகும். ஒவ்வொரு தபால் நிலையத்திற்கும் துணை தபால் நிலையங்களுக்கும் இலக்கங்கள் கொடுக்கப்படுள்ளது.

இலங்கையில் தபால் குறியீட்டு முறை கடந்த ஒரு தசாப்த காலமாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும்கூட, தபால் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டாமையை விசேடமாக அவதானிக்க முடிகின்றது. அனுபவ ரீதியாக நோக்குமிடத்து இலங்கையிலுள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் அரச சார்ந்த நிறுவனங்கள் கூட தபால் குறியீட்டு முறையை முறையாகப் பயன்படுத்துவதில்லை. எனவே தபால் குறியீட்டு முறையை விரிவுபடுத்த விசேட திட்டங்கள் எடுத்தல் அவசியம். தற்போதைய தபால் தினங்கள் கலைவிழாக்களுடனும், வரலாற்றுப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளுடனும் சுருங்கிவிடுகின்றன. மாறாக இத்தினத்தில் தபால் குறியீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.

இருபத்தியிரண்டு நாடுகளின் உறுப்புரிமையுடன் ஆரம்பிக்கப்பட்ட "சர்வதேச தபால் ஒன்றியம்' (Universal Postal Union) இன்று 192 நாடுகளின் உறுப்புரிமையினைக் கொண்டுள்ளது.. இலங்கை குடியேற்ற ஆட்சி முறையின் கீழ் 01.04.1877 இலும் பின்னர் 13.07.1949 இல் சுதந்திர நாடாகவும் ஒன்றியத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புராதன காலத்தில் அரசர்களிடையே தூதுவர் மூலம் செய்திப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட போதும் போர்த்துக்கேயர் ஆட்சியில் (1517-1640) ஒல்லாந்தர் ஆட்சியில் (1640-1794) ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1815 வரை தபால் சேவை நடைபெற்றதற்கான பதிவுக் குறிப்புகள் கிடைக்கக் கூடியதாக இல்லை. 1815ல் முதன் முதலாக ஆறு தபால் அலுவலகங்கள் கொழும்பு, காலி, மாத்தறை, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் ஆரம்பிக்கப்பட்டன. 22.08.1872ல் முதன் முதலில் தபால் அட்டை அறிமுகமானது. 01.02.1893ல் முதலாவது தபால் முத்தி உலகத் தர நிர்ணய நாளரை இலங்கை நாணயத்தில் வெளியிடப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X