For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிவாளிகள் தினம்

By Siva
Google Oneindia Tamil News

April 1
– புன்னியாமீன்

சர்வதேச ரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக்கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.

விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் ‘தான் ஒரு முட்டாள்’ என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு ‘அறிஞனாக’ வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது.

“The first of April is the day we remember what we are the other 364 days of the year ” – Mark Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாளை மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.

“முட்டாள்கள் தினம்” ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.

புராதான வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம் தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதான வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், ” பிரான்ஸ் தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரகரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்று தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. 1562ம் ஆண்டில் போப் கிரகரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்து வைத்தார்.

இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டி தான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம்மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் தேதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.

எவ்வாராயினும் பிரான்ஸ் 1582ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்பே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.

இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.

இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.

இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் ஏப்ரல் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் முதல் நாளை, “Poission d’avril ” என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ஃபூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிரகரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்ஸ் இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தில் April Fool’s Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை கொண்டாடியதாக மேலும் தெரிவித்தார்.

ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், “இன்று ஏப்ரல் ஃபூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்”, இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் “ஏப்ரல் மீன்” என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, “ஏப்ரல் ஃபூல்ஸ் டே” திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.

ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.

அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.

English summary
What is special about the first of april? Why is it considered as April fools day? Who introduced this day as fools day? Read the above article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X