For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைக்கனமில்லா மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்

By Siva
Google Oneindia Tamil News

Neil Armstrong
-புன்னியாமீன்

சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதர் எனும் பெருமைக்குரிய உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் 82 வயதில் (25.08.2012) காலமானார். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் "நாசா" குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார். இம்மாத ஆரம்பத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நாசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து குணம் அடைந்த அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் அவர் (25.08.2012) மரணம் அடைந்தார்.

அவர் 1930ம் ஆண்டில் ஆகஸ்டு 5-ந் தேதி ஒகயோவில் உள்ள வபாகொனெட்டா என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆடிட்டராக பணி புரிந்தார். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஒகயோவில் வளர்ந்தார். தனது ஆறாவது வயதில் தந்தையுடன் முதல் வான் வெளி பயணத்தை மேற்கொண்டார். 1950ம் ஆண்டு கொரியாவுடனான யுத்தத்தின்போது அமெரிக்க கடற்படை ஜெட் வீரராக கடமை புரிந்தார். 1962ம் ஆண்டு நாசாவுடன் இணைந்தார்.

1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, "ஈகிள்" என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, "கொலம்பியா"விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ராங்கையும், ஆல்ட்ரினையும் சுமந்து கொண்டு ஈகிள் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ராங் (நியூயார்க் நேரப்படி) இரவு 10.50 மணிக்கு சந்திரனில் இறங்கினார். நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றார். இப்பிரதேசம் பின்னர் "அமைதித் தளம்" (Tranquility Base) என அழைக்கப்பட்டது. ஆர்ம்ஸ்ட்ராங்கும், அவரது சக விண்வெளி ஆராய்ச்சியாளர் எட்வின் ஆல்ட்ரினும் 2 மணிநேரம் 31 நிமிடங்கள் சந்திரனில் நடந்து, மாதிரி உருவங்களை சேகரித்தல், சில படிவ ஆராய்ச்சிகள் செய்தல் என்பவற்றுடன் தம்மை புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங் கூறிய கூற்று- ஒரு மனிதனைப் பொறுத்த அளவில் இது ஒரு சிறிய காலடி, மனித இனத்துக்கு ஒரு பாரிய பாய்ச்சல். அப்பல்லோ 11 ( Apollo 11 ) பயணத் திட்டமே சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். இது அப்பல்லோ திட்டத்தில் 5வது ஆளேற்றிய பயணத் திட்டம்.

ஜான் எப். கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்ட இந்த வியப்புக்குரிய பயணம் அமெரிக்கர்களை விண்வெளித்துறையில் தனியிடத்தில் அமர வைத்தது. அறிவியல் துறையின் வளர்ச்சியி்ல் சாதனைக்குரிய மைல் கல் இந்த நிகழ்ச்சி என்றாலும் கூட, சோவியத் யூனியனுக்குப் போட்டியாக உருவானதே நிலவுப் பயணம் என்பதே நிஜம். இது ஒரு வரலாற்று நிகழ்வாக காணப்பட்டாலும் கூட இந்த நிகழ்வு பற்றியும் பல்வேறு விமர்சனங்களும், சந்தேகங்களும் வெளிவரத்தான் செய்தன.

அப்பல்லோ திட்டம் என்பது 1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளித் திட்டமாகும். இது, 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாகப் பூமிக்குத் திருப்பிக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் நிறைவேறியது. சந்திரனில், பாதம் பதித்த முதல் மனிதனால் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளை தொடர்வதற்காக இத்திட்டம், 1970களின் முற்பகுதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அப்பல்லோ திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. 3 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் நாசா இத்திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் அப்பல்லோ 11 விண்கலம், 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டு நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகிய மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் பயணத்தைத் தொடங்கியது.

சந்திரனை அடைந்த அப்பல்லோவின் கட்டுப்பாட்டு ஓடத்தில் மைக்கேல் கொலின்ஸ் தங்கிக் கொள்ள, முதலி்ல் நிலவில் காலடி எடுத்து வைத்தார் நீல் ஆம்ஸ்ட்ரோங். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து நிலவில் இறங்கினார் எட்வின் ஆல்ட்ரின். நான்கு நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெருமை பொங்க பூமிக்குத் திரும்பியது அப்பல்லோ. உலகமே வியந்து போய் நின்ற நேரம் அது. அந்த தருணம் குறித்து எட்வின் ஆல்ட்ரின் கூறுகையில், மிகப் பெரிய நிகழ்வு அது. பெருமைக்குரிய தருணம் அது என்றார். நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூலை 20, 1969 திரும்புவதற்கு முன்பு நிலவில் எட்வின் ஆல்ட்ரினும், நீல் ஆம்ஸ்ட்ராங்கும் அமெரிக்க கொடியை நாட்டினர். அப்போது அவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைந்தனர்.

தான் மிகப்பெரிய சாதனையாளன், விண்வெளி வீரன் எனும் பந்தாவுடன் ஊடகங்களுக்கு தேவையற்ற விளம்பரங்களை கொடுக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் பொது நிகழ்வுகளில் பங்கேற்றது கூட மிகக் குறைவு.

சந்திரனில் இருந்து பூமி திரும்பிய நீல் ஆம்ஸ்ட்ராங் நாசாவின் விண்வெளி மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காற்று மண்டலம் அல்லாத சந்திரனில் தான் எடுத்து வைத்த முதல் காலடி, குழந்தை தவழ்வது போன்று மகிழ்ச்சியாக இருந்தது என வர்ணித்தார். நீல் ஆம்ஸ்ட்ராங் "நாசா" விண்வெளி மையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் மிக உயரிய சிவிலியன் விருதான காங்கிரஸின் தங்க பதக்கத்தை பெற்றார்.

ஆர்ம்ஸ்ட்ராங் எங்கு மரணமடைந்தார் எனும் தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. ஆர்ம்ஸ்ட்ராங் உயிருடன் இருந்திருந்தால், சந்திரனில் காலடி எடுத்த வைத்த நிகழ்வின் 50 வருட பூர்த்தியை 2019ல் சிறப்பாக கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்ததாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

English summary
Neil Armstrong, the first man to walk on the moon is no more. Though he acheived a big thing, he was a down to earth personality throughout his life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X