For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பர்சேஸ் போறீங்களா.. கொஞ்சம் பார்த்து போங்க..

By Staff
Google Oneindia Tamil News

-சஞ்சய் காந்தி

எதை திண்ணா பித்தம் தெளியும்னு சொல்ற மாதிரி, என்ன பண்ணா இப்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கலாம் என யோசிக்க வேண்டியதாகிவிட்டது. இந்தக் கட்டுரையில் பர்சேஸ் போகிறவர்களுக்கு சின்ன ஆலோசனை. வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் எனது நேரடி அனுபவமே இந்த கட்டுரை.

பொதுவாக ஒரு பொருள் வாங்க செல்பவர்கள் ஒரே கடையில் விசாரித்து வாங்கி விடுகிறார்கள். சோம்பேறித்தனமும் பணத்தின் அருமை தெரியாததுமே இதற்கு காரணம். இனியும் அவ்வாறு செய்யாதீர்கள். சில நூறு ரூபாய் அளவில் உள்ள பொருட்கள் என்றால் பரவாயில்லை. 10, 20 ரூபாய்கள் வித்தியாசம் தான் இருக்கும். ஆனால் ஆயிரங்களில் வாங்கும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, ஹோம் தியேட்டர், ஃபர்னிச்சர்கள் போன்ற பொருட்களை வாங்கும் போது ஒரே கடையில் விசாரித்து வாங்கும் பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

எதாவது ஒரு கடைக்கு சென்று உங்களுக்கு பிடித்த மாடலை தேர்வு செய்துக் கொண்டு அதற்கான விலையை கேட்டுக் கொள்ளுங்கள். “ நாங்கள் வேறு கடையிலும் விலையை விசாரிக்க விரும்புகிறோம். உங்களை விட குறைவாக இருந்தால் அங்கேயே வாங்கிவிடுவோம். அலல்து நீங்கள் அதைவிட குறைவான விலையில் அல்லது அதே விலையில் கொடுக்க முன்வந்தால் உங்களிடமே வாங்கிக் கொள்கிறோம்" என கண்ணியமாக சொல்லிவிட்டே (இப்படி சொல்லும் போதே அவர்கள் ஓரளவு நியாயமான விலையை சொல்லிவிடுவார்கள்) அல்லது வேறு காரணங்களை சொல்லிவிட்டு வேறு கடைக்கு சென்று விசாரியுங்கள். குறைந்தது 4 கடைகளிலாவது விசாரியுங்கள். அப்போது தான் உண்மை விலை என்னவென்று தெரியும்.

தவறாமல் பெட்டியில் இருக்கும் அதிகபட்ச விலையை (MRP) பார்த்துக் கொள்ளுங்கள். அதை அழித்திருந்தால் வாங்க வேண்டாம். மதிப்புக் கூட்டு வரி (VAT) அமுல்படுத்திய பிறகு பொருட்களின் அடக்க விலைக்கும் அதிகபட்ச விலைக்குமான வேறுபாடு பெரிய அளவில் குறைந்துவிட்டது. அதில் இருந்து சில சதவீதம் கழித்து வாங்கினாலே அது சரியான விலையாகத் தான் இருக்கும்.

தவணை முறையில் வாங்க விரும்பினால் குறைந்தது 3 நிதி நிறுவங்களின் சேவை பற்றியாவது விசாரியுங்கள். நீங்கள் பொருள் வாங்கும் கடையிலேயே அதற்கான ஆட்கள் இருப்பார்கள். அவர்களிடம் வட்டி விகிதம், டாகுமெண்ட் சார்ஜ் போன்றவற்றை விசாரித்து, எந்த நிறுவனம் நமக்கு சரியாக இருக்கும் என தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.

அதிக விலை உள்ள பொருட்களை இணையத் தளங்கள் மூலம் வாங்குவதை தவிர்க்கவும். அவர்கள் பெரும்பாலும் அதிகபட்ச விலையில் தான் விற்பனை செய்கிறார்கள். செல்போன், கேமரா போன்றவற்றின் விலையை இணையத் தளங்களில் தெரிந்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைகளில் வாங்குங்கள். இவைகளை பொறுத்தவரையில் இணையத் தளங்களில் தான் ஓரளவு சரியான விலை இருக்கும்.

ஆன்லைனில் வாங்குவதில் சில அசெளகரியங்கள் உள்ளன. வாங்கிய பொருள் சரியாக எப்போது கிடைக்கும் என சொல்ல முடியாது. குறைந்தது 7 நட்கள் ஆகும். Transport Damage இருந்தால் அதை மாற்றுவது கஷ்டம்.

இணையத் தளத்தில் பார்த்த தோற்றத்திலேயே அந்த பொருள் இருக்கும் என்பதை சொல்ல முடியாது. ஷிப்பிங் சார்ஜ் ஃப்ரீ என்று சொல்லிவிட்டு பொருளை டெலிவரி செய்யும் நிறுவனம் நம்மிடம் காசு வாங்க வாய்ப்பிருக்கு. நாம் முன்பே பொருளுக்கான விலையை கிரெடிட் கார்ட் மூலம் கட்டி இருப்போம். ஆகவே இப்போது சில நூறு ரூபாய்க்காக பொருளை வேண்டாம் என சொல்ல முடியாது. தேவை இல்லாத மன உளைச்சலும் செலவும் ஏற்படும். சமீபத்தில் கூட ஒரு நண்பருக்கு இந்த பிரச்சனை வந்தது.

எந்தப் பொருளை வாங்கினாலும் அருகில் இருக்கும் கடைகளிலேயே வாங்குங்கள். அப்போது தான் வாங்கிய பொருளை எடுத்து செல்வதற்கான செலவு குறையும். அதைவிட முக்கியம், சர்வீஸ் வசதி. ஏதேனும் பழுதடைந்தால் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் செண்டருக்கு நீங்களே நேரடியாக அழைப்பதைவிட, அந்தப் பொருளை வாங்கிய கடையிலேயே பழுதைப் பற்றி சொல்லி உங்கள் விலாசம் கொடுத்து விட்டால், அவர்கள் இன்னும் விரைவான சேவைக்கு ஏற்பாடு செய்வார்கள். இதற்கு, அருகில் இருக்கும் கடைகளில் வாங்குவது தான் சிறந்தது.

Exclusive Showroomகளில் பொருட்களை வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும். அங்கு வேறு நிறுவனப் பொருட்கள் இருக்காது என்பதால் குறைவான அளவிலேயே வியாபாரம் நடக்கும். ஆகவே சிக்கிய வாடிக்கையாளர்களிடம் தாழித்து விடுவார்கள். அவர்களிடம் விலை விசாரித்துவிட்டு வேறு கடைக்கு வந்து விசாரித்து பாருங்க. பெரிய வித்தியாசம் இருக்கும்.

இந்த ஆலோசனைகளை என் நண்பர்கள் பலருக்கும் சொல்லி இருக்கிறேன். இதன் மூலம் பல நூறு ரூபாய்களில் இருந்து சில ஆயிரங்கள் வரை மிச்சப்படுத்தி இருக்கிறார்கள்.நீங்களும் முயற்சி செய்யுங்கள். சம்பாதிக்கும் பணத்தை சரியாக செலவளியுங்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X