For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 13

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

எகிறும் இருதயத் துடிப்புகளோடு நித்திலன், சாதுர்யா, பத்ரி, கஜபதி நான்கு பேரும் விழா நடக்கும் இடத்தை நெருங்கிய போது காற்றில் நாதஸ்வர இசை காயப்பட்டுக் கொண்டிருந்தது.

விழா மேடையில் கட்சிப் பிரமுகர்கள் நாற்காலிகளில் தொப்பைகளைத் தள்ளிக் கொண்டு உட்கார்ந்திருக்க, மையத்தில் முதல் அமைச்சர் வஜ்ரவேலு அவர்க்கென்று போடப்பட்டு இருந்த பிரத்யேக சோபாவில் சாய்ந்தபடி முகத்தில் எந்த வித சலனத்தையும் காட்டிக் கொள்ளாமல் இயந்திரத்தனமாய் யார் யாரையோ பார்த்து கும்பிடுகள் போட்டுக் கொண்டிருந்தார்.

மைக்கைப் பிடித்து இருந்த ஒரு மாவட்டச் செயலாளர் ஏற்ற இறக்கக் குரலோடு பேசிக் கொண்டிருந்தார்.

five star dhrogam chapter 13

"நமது அன்புக்குரிய அண்ணன் முகில்வண்ணன் அவர்களுக்கு இன்றைக்கு அகவை அறுபது. அவரைப் பொறுத்தவரை 60 என்பது ஒரு எண். அவ்வளவுதான். அவருடைய மனதுக்கு வயது 20. இன்றைக்கும் அவருடைய செயல்பாடுகளிலே அந்த 20 வயதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தன்னுடைய பதினைந்தாவது வயதில் செய்யாத தவறுக்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளிக்குச் சென்றவர். அங்கே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்டு அந்த பள்ளியையே சீர்திருத்திவிட்டு வந்தவர். அவர் அரசியலில் தன் இருபதாவது வயதில் நுழைந்தார். 22வது வயதிலே சட்டசபை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு மக்களுக்காக ஊன் உறக்கம் இன்றி உழைக்க ஆரம்பித்தார். அப்போது ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களின் ஆணவத்தையும், அகந்தையையும் அழித்தவர். சட்டசபை தேர்தலுக்கு தன்னுடைய உழைப்பைக் கொட்டியவர். சட்டசபை உறுப்பினராக ஏழுமுறை தேர்ந்து எடுக்கப்பட்டு இரண்டு தடவை முதல் அமைச்சர் பதவி வகித்தவர். பத்தாண்டுகள் பதவியில் இருந்தாலும் பத்து பைசாவைக் கூட சொத்தாக சேர்க்காதவர். அவருடைய வேஷ்டியில் கரை இருக்கும். ஆனால், கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர். கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு பாரி வள்ளலுக்கு நிகராய் முதலமைச்சர் பதவியை அண்ணன் வஜ்ரவேலு அவர்களுக்கு வழங்கி ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்தவர்...!"

முதலமைச்சர் வஜ்ரவேலு தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முகில்வண்ணனின் பக்கம் தலையைச் சாய்த்தார்.

"என்ன முகில்... மைக்கை பிடிச்சு பேசிட்டு இருக்கிறவன் யாரு சொல்லருவி மோகன்ராஜ்தானே?"

"அவன்தான்!"

"என்ன இப்படி பொய் பேசறான்...! இவனுக்கு சொல்லருவின்னு பட்டம் கொடுத்ததற்கு பதிலாய் 'பொய்யருவி’ன்னு கொடுத்து இருக்கலாம்.... பேச்சுன்னா நம்பறமாதிரிதான் இருக்கணும்..."

"அவன் பேச்சை நிப்பாட்டவா வஜ்ரம்?"

"வேண்டாம்... வேண்டாம்... அவன் பேசட்டும். சினிமாவுல வடிவேலும் பேசற மாதிரி இருக்கு... நமக்கும் பயம் போகம் வேண்டாமா...?" என்ற வஜ்ரவேலு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கேட்டார்.

"எங்கே.... உன்னோட மாப்பிளை மணிமார்பன்? வந்ததிலிருந்து நானும் பார்க்கிறேன். கண்ணுல படவேயில்லை.. ஏதாவது பிரச்சனையா...?"

"சேச்சே... அதெல்லாம் ஒண்ணுமில்லை. சில முக்கியமான வி.ஐ.பி.ஸ் வர்ற நேரம்.. அதான் வாசல்ல நின்னு அவங்களை ரிஸீவ் பண்ணிட்டிருப்பார்.!"

"அதெல்லாம் உன்னோட மாப்பிள்ளை பார்க்கிற வேலையா...? அவரை மேடைக்கு வரச் சொல்லு!"

"இதோ... இப்ப வரச் சொல்றேன்... வஜ்ரம்..." என்ற முகில்வண்ணன் தனக்கு பின்புறமாய் நின்றிருந்த மகன் செந்தமிழை கையசைத்துக் கூப்பிட்டார். அவன் வேகவேகமாய் பக்கத்தில் வந்து குனிந்தார்ன்.

"அப்பா..."

முகில் வண்ணன் கிசுகிசுப்பாய்

"மாப்பிள்ளை எங்கடா...?" என்று கேட்டார்.

"அதான் தேடிட்டு இருக்கேன்ப்பா"

"என்னது... தேடிட்டு இருக்கியா... அவர் காணாமே போறதுக்கு சின்னக் குழந்தையா என்ன...? வேண்டாத வேலையை ஏதாவது பண்ணிட்டு இருப்பார். போன்ல காண்டாக்ட் பண்ணு..."

"பண்ணினேன்ப்பா... போன் நாட் இன் யூஸ் ன்னு வருது....!"

"தங்கச்சி ஜெயக்கொடிக்கு போன் பண்ணி கேளு...!"

"கேட்டேன்... காலையில அஞ்சு மணிக்கு பார்த்தது. அப்புறம் அவரைப் பார்க்கவேயில்லைன்னு சொல்றா....!"

"தினமும் காலையில் 'பெட் காபி’க்கு பதிலாய் ஷீவாஸ் ரீகல் விஸ்கி சாப்பிடற ஆளு... சாப்ட்டுட்டு எங்கேயாவது கவுந்துட்டாருன்னு நினைக்கிறேன்."

"இப்பப் பார்த்துடறேன்ப்பா...!"

"அ...அ.... அப்புறம்... கஜபதி எங்கே....?"

"அதோ முன்வரிசையில் உட்காந்திருக்கார். பக்கத்துல உட்கார்ந்து இருக்கிறது முத்துப்பாண்டியனோட மகன் நித்திலனும் மகள் சாதுர்யாவும்...."

"சரி...சி.எம்.க்கு போட வேண்டிய மெகா மாலையும், கொடுக்கப் போகிற வெள்ளி செங்கோலும் ரெடியாய் இருக்கா?"

"இருக்குப்பா.... கொண்டாந்து வெச்சிருக்கேன்ட

"இந்த சொல்லருவி மோகன் பேசினதும் கஜபதியை மேடையில் ஏத்திடு. நல்லா பேசுவான்"

"சரிப்பா..." சொன்ன செந்தமிழ் பின்னுக்கு நகர்ந்து மேடைக்கு பின்புறமாய் வந்தான்.

இன்ஸ்பெக்டர் ஒருவர் நின்றிருந்தார். செந்தமிழ் அவரைப் பார்த்துவிட்டு கேட்டான்.

"என்ன முஸ்தபா... இங்கே நின்னுட்டு இருக்கீங்க...?"

"ஸார்... கமிஷனர் உங்களை உடனே பார்த்து பேசனும்ன்னு சொல்றார்."

"எதுக்காக...?"

"தெரியலை ஸார்... ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை பேசணும்ன்னு சொன்னார்."

"இங்கே எனக்கு தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்கு... இந்த நேரத்துல இவர் வேற... கமிஷனர் இப்போ எங்கே இருக்கார்...?"

"அதோ... அந்த சி.சி.டி.வி. காமிரா மானிடரிங் அறைக்குப் பக்கத்துல உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார்... ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கப் போய்த்தான் உங்களைக் கூப்பிடறார் ஸார்.... ஒரு அஞ்சு நிமிஷம் போய்ப் பார்த்து பேசிட்டு வந்துடுங்க..."

செந்தமிழ் சில விநாடிகள் யோசனையாய் இருந்து விட்டு நூறடி தூரத்தில் தெரிந்த அந்த சி.சி.டி.வி. காமிரா மானிட்டரிங் அறையை நோக்கிப் போனான்.

வெளிச்சம் குறைவாய் இருந்த பகுதி அது. ஒரு ட்யூப்லைட் மட்டும் பற்றாக்குறை மின்சாரத்தால் விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. மானிட்டரில் அறை மூடப்பட்டு இருக்க, அதற்குப் பக்கத்தில் இருந்த சாமியானோ தடுப்புக்கு அருகே போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் நடைபோட்டபடி காத்திருந்தார். செந்தமிழைப் பார்த்தும் நின்றார். தயக்கத்தோடு சொன்னார்.

"ஸாரி... உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு... ஃபங்க்‌ஷன் நடக்கிற இடத்துக்கு நான் வந்தா பேச முடியாது. அதான் உங்களை வரச் சொன்னேன்..."

செந்தமிழ் எரிச்சலோடு சொன்னான்.

"அதான் வந்துட்டேனே.... என்ன விஷயம் சொல்லுங்க...?"

கமிஷனர் ஆதிமூலம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சொன்னார். "ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னால் என்னுடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது, கூப்பிட்டது யார்ன்னு பார்த்தேன். ஒரு புது எண். பொதுவாய் ஒரு புது நெம்பர் வந்தா அந்த நெம்பரோடு பேசும் போது அந்த ஆடியோ கான்வர்சேஷனை பதிவு பண்ணிடுவேன்.... அதே மாதிரி இந்த கான்வர்சேஷனையும் பதிவு பண்ணினேன். அந்த நபர் பேசிய விஷயம் எனக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. அந்தச் செய்தி எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்ததுன்னும் தெரியலை.... எனக்கும் அந்த நபர்க்கும் நடந்த ஆடியோ கான்வர்சேஷனை இப்ப ஆன் பண்றேன். கேட்டுப் பாருங்க"

சொன்ன கமிஷனர் செல்போனின் ஆடியோ ஆப்ஷனை ஆன் செய்தார். ஒரு நபரின் குரலும் கமிஷனரின் குரலும் மாறி மாறி கேட்டது.

"காலை வணக்கம் கமிஷனர் ஸார்"

"பேசறது .... யாரு...?"

"என்னை அறிமுகப்படுத்திகிட்டாலும் நான் யார்ன்னு உங்களுக்குத் தெரியப்போறதில்லை. விஷயத்தை மட்டும் கேளுங்க ஸார்."

"சரி... சொல்லு...!"

"துக்க வீட்ல எக்ஸ் மினிஸ்டர் முகில்வண்ணனோட ரஷ்டியப்த பூர்த்தி விழா நடக்கலாமா கமிஷனர் ஸார்..?"

"ஏய் ... நீ என்ன சொல்றே?"

"முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பன் இப்போ உயிரோடு இல்லை..."

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The 13th episode of Rajeshkumar's new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X