• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (11)

|

- ராஜேஷ்குமார்

கபிலனின் முகம் ஒரு பெரிய திகைப்புக்கு உட்பட அவன் அந்த ஆதிகேசவனை கொஞ்சம் பயமாய் பார்த்தான்.

" என்கூட தனியா பேசணுமா ? "

" ஆமா "

" என்ன பேசணும்..... எதைப் பேசறதாய் இருந்தாலும் உள்ளே வந்து பேசலாமே... இப்ப ஏசிபியோடு உள்ளே பேசிட்டு இருக்கிறது உங்க டாட்டர்தானே.... வாங்க உள்ளே போலாம்" ஆதிகேசவன் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு சொன்னார்.

" வேண்டாம் தம்பி..... நான் உங்ககிட்ட பேசப்போறதே என்னோட டாட்டர் கோபிகாவைப் பத்தித்தானே ? "
கபிலனின் நெற்றிப்பரப்பு வியப்புக்கு உட்பட்டு விரிந்தது.

flat number 144 adhira apartment episode 11

" கோபிகாவைப் பத்தி என்ன சொல்லப் போறீங்க ? "

" இப்படி வாசல்ல நின்னுகிட்டே நான் எல்லாத்தையும் சொல்லிட முடியாது. நீங்க அந்த ஏசிபி சந்திரசூடனை எதுக்காக உங்களோட அப்பார்ட்மெண்ட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா என்னோட டாட்டர் அவரைப் பார்த்ததுமே ஒடி வந்து அவர்கூட பேசிட்டு இருக்கா..... அவ அப்படி பேசறதை நீங்களும் சரி ஏசிபியும் சரி ஒரேயடியாய் நம்பிடக்கூடாதுன்னுதான் நான் இங்க வந்தேன் "

கபிலன் அவரைக் குழப்பமாய் பார்த்தான்.

" ஸார்...... நீங்க இப்ப என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை "

" தம்பி.... ஒரு அஞ்சு நிமிஷம் அப்படி தனியா வாங்க. எல்லாத்தையும் சொல்றேன். நான் சொல்லப்போறதை கொஞ்சம் நிதானமா பொறுமையாய் கேளுங்க. அதுக்கப்புறம் நீங்க கேட்கிற எல்லா கேள்விகளுக்கு நான் பதில் சொல்றேன் "

கபிலன் ஒரு சில விநாடிகள் அவரையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு சொன்னான்.

" சரி ஸார்..... நீங்க மொட்டை மாடிக்கு போய் வெயிட் பண்ணுங்க.... நான் ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன் "

ஆதிகேசவன் தலையாட்டிவிட்டு நகர்ந்து போக, கபிலன் மறுபடியும் ஃப்ளாட்டுக்குள் நுழைந்து அறை வாசலில் போய் தயக்கமாய் நின்றான்.

சந்திரசூடன் கோபிகாவோடு பேசுவதை ஒரு விநாடி நிறுத்திவிட்டு கபிலனை ஏறிட்டபடி கேட்டார்.

" வந்தது யாரு...... கபிலன்..... ? ".

" அ.....அ....அது வந்து கீழே மூணாவது மாடியில் ஒரு வடநாட்டு ஃபேமிலி குடியிருக்காங்க ஸார். நாங்க இந்த ஃப்ளாட்டை விக்கப்போற விஷயம் அவங்களுக்கும் தெரியும். அவங்க ஃப்ளாட்ல ஃபேமிலி மெம்பர்ஸ் அதிகமாய் இருக்கிறதால இந்த ஃப்ளாட்டையும் வாங்கிக்க விரும்பறாங்களாம். அது சம்பந்தமாய் ஒரு அஞ்சு நிமிஷம் என்கிட்டே பேசணுமாம். வரச்சொன்னாங்க. நான் போய் பேசிட்டு வந்துடறேன் ஸார். ஏன்னா இதுக்காக நான் மறுபடியும் சிட்டியிலிருந்து ஈஞ்சம்பாக்கம் வர முடியாது "

சந்திரசூடன் தலையாட்டினார்.

" யூ ஆர் கரெக்ட் கபிலன். போய் பேசிட்டு வாங்க. நீங்க வர்றவரைக்கும் நான் கோபிகாகிட்டே என்னோட என்கொயரியை கண்டினியூ பண்ணிட்டிருக்கேன் "

" ஒ.கே. ஸார் " சொன்ன கபிலன் அடுத்த விநாடியே அவசர நடையில் ஃப்ளாட்டுக்கு வெளியே வந்து மொட்டை மாடியை நோக்கிப் போனான். மாடியின் தென்மேற்கு மூலையில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் வாட்டர் டேங்கிற்குப் பக்கத்தில் நின்றிருந்த ஆதிகேசவன் கபிலனை நோக்கி வந்தார்.

" ஸாரி தம்பி.... உங்களுக்கு தொந்தரவு தர்றேன் "

" இதோ பாருங்க ஸார். உங்க மன்னிப்பையொல்லாம் கேட்டுகிட்டு இருக்க எனக்கு நேரமில்லை. மொதல்ல விஷயம் என்னான்னு சொல்லுங்க "

ஆதிகேசவன் தயக்கமாய் குரலை இழுத்தார். " அதற்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு கேள்வி தம்பி "

" என்ன .... ? "

" எம் பொண்ணு கோபிகா உங்ககிட்டேயும் ஏசிபிகிட்டேயும் எதுமாதிரியான தகவல்களை பகிர்ந்துகிட்டாள்ன்னு சொல்ல முடியுமா .... ? "

கபிலன் தனக்குள் பீறிட்ட எரிச்சலை அடக்கிக்கொண்டு சொன்னான்.

" இந்த அபார்ட்மெண்ட்டில் நடந்த ஆறு மரணங்களும் அமானுஷ்யமானதுன்னு சொன்னாங்க "

" அப்புறம்.... ? "

" இந்த ஒட்டு மொத்த அபார்ட்மெண்ட்டும் ஒரு மயானத்தின் மேல கட்டப்பட்டிருக்கிறதாகவும், இந்த விஷயம் வெளியுலகத்துக்கு தெரியாதுன்னும் சொன்னாங்க "

" அப்புறம்.... ? "

" அவ்வளவுதான்......"

ஆதிகேசவன் ஒன்றும் பேசாமல் சில விநாடிகள் மெளனம் காக்க கபிலன் பொறுமையிழந்து லேசாய் குரலை உயர்த்தினான்.

" இப்படி ஒண்ணுமே பேசாமேயிருந்தா என்ன ஸார் அர்த்தம். உங்க பொண்ணு கோபிகாவைப்பத்தி ஏதோ சொல்றேன்னு சொன்னீங்களே என்ன அது? "

ஆதிகேசவன் கண்களில் மின்னும் நீரோடு கபிலனை ஏறிட்டார்.

" கோபப்படாதீங்க தம்பி..... இதோ விஷயத்துக்கு வந்துட்டேன். நான் இப்ப சொல்லப் போகிற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஆனா அதுதான் உண்மை. கோபிகா உங்ககிட்டேயும் ஏசிபிகிட்டேயும் பேசும்போது இந்த அபார்ட்மெண்ட்டில் நடந்த ஆறு மரணங்களும் அமானுஷ்யமானதுன்னு சொல்லியிருக்கா இல்லையா .... ? "

" ஆமா "

" அப்படி இறந்துபோன ஆறு பேர் யார் யார்ங்கிற விபரத்தைச் சொன்னாளா .... ? "

" சொல்லலை.... இனிமேத்தான் அதைப் பத்தி கேட்கணும். ஏசிபி சந்திரசூடனும் அது சம்பந்தமான ஒரு விசாரணையை மேற்கொள்ளத்தான் என்கூட வந்திருக்கார். இனி அவர் இங்கே அடிக்கடி வருவார் "

" சரி..... இந்த அதிரா அபார்ட்மெண்ட்டில் மர்மமான முறையில் இறந்து போன அந்த ஆறு பேர் யார் யார்ங்கிற விபரங்களை நான் சொல்லலாமா .... ? "

" ம்..... சொல்லுங்க....... "

ஆதிகேசவன் நிதானமான குரலில் பேச்சை ஆரம்பித்தார். " ஆறு பேர்களில் நாலு பேர் பெண்கள். ரெண்டு பேர் ஆண்கள். அபார்ட்மெண்ட் கட்டி முடிச்ச அடுத்த வருஷமே குடி வந்த டி.வி.நடிகை சொர்ணரேகா ஒரு நாள் சூட்டிங் புறப்பட்டுப்போக தயாராகிக் கொண்டிருந்தபோது மயக்கமாகி கீழே விழ ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் ட்ரீட்மெண்ட் கொடுக்கிறதுக்குள்ளே இறந்துட்டாங்க "

கபிலன் குறுக்கிட்டு கேட்டான்.

" அந்த நடிகையோட சொந்த ஃப்ளாட்டா அது .... ? "

" இல்லை..... ஒனர் வேற ஒருத்தர். ஒனர் பேர் கன்ஷிராம். நாக்பூர்ல இருக்கார். வாடகைக்கு விடறதுக்காகத்தான் இந்த அபார்ட்மெண்ட்ல ஒரு ஃப்ளாட்டை வாங்கினார்"

" டி.வி.நடிகை சொர்ணரேகா மரணத்தைப் பற்றி டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க"

" கார்டியோ வேஸ்குலார் அரஸ்ட் என்கிற ஒரு வகையான ஹார்ட் அட்டாக்ன்னு சொன்னாங்க "

கபிலன் தன் நெற்றியில் துளிர்த்துவிட்ட வியர்வையை கர்ச்சீப்பால் ஒற்றிக்கொண்டே கேட்டான்.

" சரி...... ரெண்டாவது மரணம் யாரோடது .... ? "

" அந்தப்பெண் ஒரு ஏர்ஹோஸ்டஸ். இண்டிகோ ஃப்ளைட்ல ஒர்க் பண்றா. பேரு தர்ஷிணி. அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். ஒரு நாள் சண்டே கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டிருக்கும்போது மயங்கி சோபாவில் விழுந்துட்டா. ஹாஸ்பிடல் போகிற வழியிலேயே இறந்துட்டா "

" இந்த ஏர்ஹோஸ்டஸ்ட் தர்ஷிணி இறந்ததும் கார்டியோ வேஸ்குலார் அரஸ்ட்தானா .... ? "

" ஆமா.... தம்பி அந்தப் பெண் மட்டும் இல்லை.... அடுத்தடுத்து வந்த வருடங்களில் ஒரு காலேஜில் தமிழ் புரபசராய் வேலை பார்த்துக்கிட்டு இருந்த நப்பின்னை என்கிற முப்பது வயது பெண்ணும் ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்துகிட்டு இருந்த வான்மதி என்கிற இருபத்தி மூணு வயது பெண்ணும் அதேமாதிரியான ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க "

" ரெண்டு ஆண்கள் இறந்ததும் அப்படித்தானா ... ? "

" ஆமா...... "

" அவங்க யார்ங்கிற விபரம் தெரியுமா ... ? "

" தெரியும் " என்று சொன்ன ஆதிகேசவன் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு பேச்சை ஆரம்பித்தார்.
" ரெண்டு பேர்ல ஒருத்தர் ரியல் எஸ்டேட் ஒனர். பேரு அன்வர் அலி. வயது முப்பத்தஞ்சு இருக்கலாம். ரொம்பவும் நல்ல டைப். எந்தவிதமான ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. அம்மா, அப்பா, மனைவி ஒரு குழந்தைன்னு சந்தோஷமாய் இருந்தார். திடீர்ன்னு அபார்ட்மெண்ட்டின் பேவ்மெண்டில் வாக்கிங் போய்ட்டு இருந்தவர் சத்தமே இல்லாமே சாய்ஞ்சார். ஹாஸ்பிடல் போய் அட்மிஷன் போடறதுக்குள்ளே இறந்துட்டார் "

" கடைசியாய் இறந்தது ஒரு லாயர்ன்னு கேள்விப்பட்டேன். அவர் யாரு .... ? "

" அவர் பேரு தனசேகர். எம்.ஏ.பில். படிச்சவர். சிருஷ்டி ஸாஃப்ட்வேர் கம்பெனியில் லீகல் அட்வைஸராய் ஒர்க் பண்ணிட்டிருந்தார். போன வருஷம் ஒரு மத்தியான நேரம் மூணு மணி இருக்கும் அப்போ...... " என்று பேச ஆரம்பித்த ஆதிகேசவனை கையமர்த்தினான் கபிலன்.

" ஒரு நிமிஷம் ஸார்...... அந்த லாயரோட பேர் என்னான்னு சொன்னீங்க.... ? "

" தனசேகர் "

" சிருஷ்டி ஸாஃப்ட்வேர் கம்பெனியில் லீகல் அட்வைஸராய் வேலை பார்த்தாரா? "

" ஆமா...... "

" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க டாட்டர் கோபிகா என்கிட்டேயும், ஏசிபிகிட்டேயும் பேசும்போது, இதே தனசேகர் பேரையும் கம்பெனி பேரையும் சொல்லி தனசேகர் தன்னோட கணவர்ன்னு சொன்னாங்களே ? "

" உண்மைதான் "

கபிலன் திகைத்தான். " தன்னோட கணவர் தனசேகரோடு இந்த அப்பார்ட்மெண்டில் ரெண்டு வருஷமாய் இருக்கேன்னு கோபிகா சொல்றாங்களே? "

" அது பொய் "

" என்ன ஸார் சொல்றீங்க ? "

" இன்னமும் தனசேகர் உயிரோடு இருக்கிறதாய் எம் பொண்ணு கோபிகா நினைச்சுட்டிருக்கா. ஆனா அவர் இறந்து ஒரு வருஷமாகுது "

(தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10]


English summary
Flat number 144 Adhira apartment (Episode 10) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X