• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"என்ன ஸார் சொல்றீங்க ?" .. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (12)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

ஆதிகேசவன் சொன்னதைக்கேட்டு ஸ்தம்பித்துப்போன கபிலன் ஒரு சில விநாடிகளுக்கு பின் இயல்புக்கு வந்தான்.

" என்ன ஸார் சொல்றீங்க ? கோபிகாவோட கணவர் தனசேகர் அதாவது உங்க மருமகன் இறந்து ஒரு வருஷமாகுதா..... ? "

" ம்..... சரியா சொல்லணும்ன்னா ஒரு வருஷம் ரெண்டு மாசம். ஆனா எம் பொண்ணு கோபிகாவுக்கு தன்னோட கணவர் இறந்த சம்பவம் அவளோட நினைவுகளிலிருந்து காணாமே போயிடுச்சு "

கபிலன் உச்சபட்ச குழப்பத்தோடு அவரைப் பார்த்தான்.

" என்னது காணாமே போயிடுச்சா ?" ஆதிகேசவன் முகம் நிறைய கவலையோடு ஒரு வெறுமை சிரிப்பை தன்னுடைய உதடுகளில் தவழவிட்டார்.

" தம்பி..... நான் இனிமே கோபிகாவைப் பத்தி சொல்லப்போகிற எல்லா விஷயங்களுமே உங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். உங்களுக்கு மட்டுமில்லை..... நீங்க இப்ப கூட்டிட்டு வந்திருக்கிற ஏசிபி சந்திரசூடன்கிட்டே இதைச் சொன்னாலும் அவரும் ஆச்சர்யப்படுவார். ஏன்னா கோபிகாவோட அன்றாட நடவடிக்கைகள் அப்படிப்பட்டது" கபிலன் தன் குரலில் நடுக்கம் பரவ கேட்டான்.

" ஸார்..... கோபிகாவுக்கு அப்படி என்ன பிரச்சினை ? "

ஆதிகேசவன் தலைகுனிந்து சில விநாடிகள் மெளனித்துவிட்டு கண்கள் நிறைய நீர் பனிக்க நிமிர்ந்தார்.

" ஷி ஈஸ் ஏ ரெட்ரோக்ரேட் (RETROGRADE) பேஷண்ட் "

" ரெட்ரோக்ரேட் பேஷண்ட்டா ? "

" ம் "

" அது எதுமாதிரியான நோய்... ? "

flat number 144 adhira apartment episode 12

" ஒருத்தர்க்கு அளவுக்கு மீறிய துக்கம் ஏற்படும்போது மூளையில் உண்டாகிற பாதிப்பு. துக்கத்துக்குக் காரணமான அந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட நபரோட மூளையிலிருந்து மறைந்து போய் உருவாகிற ஒரு வகையான ந்யூரோனல் ஆக்டிவிடிக்கு பேர்தான் ரெட்ரோக்ரேட் "

" கோபிகாவுக்கு இப்ப அந்த பிரச்சினைதானா ? "

ஆதிகேசவன் கண்ணீரோடு தலையாட்டினார்.

" ஆமா ..... அவளோட கணவர் இறந்ததுமே அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்க முடியாமே மயக்கமாயிட்டா. அப்படி மயக்கமாய் விழுந்தவளை உடனடியாய் உணர்வுக்குக்கொண்டு வர ஃபர்ஸ்ட் எய்ட் ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். ஆனா கோபிகா கண் முழிச்சு பார்க்கலை. உடனே பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனோம். நியூரோ சர்ஜன் டாக்டர் உமாபதிதான் பார்த்தார் " இந்த இடத்தில் பேச்சை நிறுத்திய ஆதிகேசவன் பீறிட்ட அழுகையை அடக்கிக்கொண்டு கம்மிய குரலோடு பேச்சைத் தொடர்ந்தார்.

" ஃப்ளாட்ல மருமகனோட டெட்பாடி இருக்கும்போதே கோபிகாவுக்கு ஹாஸ்பிடல்ல ட்ரீட்மெண்ட் போயிட்டிருந்தது. ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு டாக்டர் சொன்ன விஷயத்தைக்கேட்டு அதிர்ந்து போயிட்டேன். கோபிகாவின் மூளைப்பகுதியில் இருக்கிற ஹிப்போகாம்பஸ் நியூரான்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறதாகவும், அவளுக்கு நினைவு திரும்பும்போது சில விஷயங்களை மறந்து போயிருக்கலாம்ன்னு சொன்னார். ஹாஸ்பிடலில் கோபிகா சுயஉணர்வு இல்லாமல் இருக்கும்போதே நான் என் மருமகனோட இறுதிக் காரியங்களை இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கிற நண்பர்களை வெச்சு செஞ்சு முடிச்சேன். காரியமெல்லாம் முடிஞ்ச பிறகு சரியா ஒரு வாரம் கழிச்சுத்தான் கோபிகாவுக்கு சுயஉணர்வு வந்தது. கண் விழிச்சதுமே அவ கேட்ட முதல் கேள்வி அவர் வரலையாப்பா ? "

" நீங்க என்ன பதில் சொன்னீங்க ? "

" நான் என்ன பதிலைச் சொல்றதுன்னு யோசனை பண்ணிட்டிருக்கும்போதே கோபிகாவோட பார்வை அறைவாசல் பக்கம் போய் முகம் சந்தோஷத்தில் விரிந்தது. " அதோ ...... அவரே வந்துட்டாரே"ன்னு சொல்லி சிரிச்சா. நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே யாருமில்லை. ஆனாலும் கோபிகா வீட்ல மாப்பிள்ளை தனசேகர்கிட்டே எப்படி பேசுவாளோ அதே மாதிரி யாருமே இல்லாத அறை வாசலைப் பார்த்து பேச ஆரம்பிச்சா. நான் பயந்து போய் டாக்டரைக் கூப்பிட்டேன். டாக்டரும் உடனே புறப்பட்டு வந்தார். கோபிகாவோட பேச்சையையும் அவளுடைய நடவடிக்கையையும் பார்த்துட்டு அதிர்ந்து போயிட்டார். என்னைத் தனியா கூட்டிட்டு போய் கோபிகா ஒரு ரெட்ரோக்ரேட் பேஷண்டாய் மாறிட்டதாகவும் இனி அவளை குணப்படுத்த வாய்ப்பில்லைன்னும் சொன்னார். தவிர கடந்த கால சம்பவங்கள் எது எது அவ ஞாபகத்துல இருக்கு. எது எது இல்லை என்கிற விஷயங்களும் போகப் போகத்தான் தெரியும். நல்லவேளையா உங்களை மறக்கலை. எல்லாத்துக்கும் மேலா..... அவளோட ஹஸ்பெண்ட் தனசேகர் இறந்து போன சம்பவம் மூளையோட பதிவிலிருந்து காணாமல் போயிருக்கு. அதுக்குப் பதிலா மூளையில் கணவர் தனசேகரோட விர்ச்சுவல் இமேஜ் அழுத்தமாய் பதிவாகியிருக்கு. இனிமே உங்க டாட்டரை அவ போக்குலதான் விடணுமே தவிர நீங்க அவளுக்கு பழைய ஞாபகங்களை கட்டாயப்படுத்தி நினைவுபடுத்தக் கூடாதுன்னும் சொன்னார். ஹாஸ்பிடல்ல ஒரு மாசம் இருந்தோம். பிறகு கோபிகாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன் "

கபிலன் உஷ்ணமாய் பெருமூச்சொன்றைவிட்டபடி தோள்களை குலுக்கிக் கொண்டே சொன்னான்.

" ஸாரி ஸார்...... உங்க டாட்டர் கோபிகா மாதிரியான நிலைமை வேற எந்த ஒரு பொண்ணுக்கும் வரக்கூடாது. தன்னோட கணவன் இறந்தது தெரியாமே அவர் உயிரோடு இருக்கிற மாதிரி நினைச்சுகிட்டு பேசறதும் அதை நீங்க பார்த்துட்டு இருக்கிறதும் ரொம்பவும் கொடுமை. நானும் உங்களைப்பத்தி சரியா புரிஞ்சுக்காமே கொஞ்சம் அலட்சியமா பேசிட்டேன். பை த பை இப்ப நீங்க கோபிகாவைப் பத்தி சொன்ன விஷயமெல்லாம் என்னோட அப்பாவுக்குத் தெரியுமா ? "

" தெரியாது..... இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற சொற்பமான சில பேர்க்கு மட்டும்தான் தெரியும்.... அவங்க எம் பொண்ணுக்கு வெச்சிருக்கிற பேரு மெண்டல்"

" கோபிகாவை இந்தப் பிரச்சினையிலிருந்த குணப்படுத்த முடியாதா ? "

" நானும் எத்தனையோ சைக்யாட்ரிஸ்ட் டாக்டர்ஸ்கிட்டே கூட்டிட்டுப் போய் கன்ஸ்சல்ட் பண்ணிப் பார்த்துட்டேன். எல்லாரும் சொல்ற ஒரே பதில், இது ஒரு வகையான செலக்டிவ் அம்னீஷியா. இதை குணப்படுத்தக்கூடிய சாத்தியம் இன்றைய மருத்துவத்துக்கு இல்லைன்னு திட்டவட்டமாய் சொல்லிட்டாங்க "

" ஸார்.... இந்த அப்பார்ட்மெண்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருந்துட்டு இருக்கு. இதையெல்லாம் பொருட்படுத்தாமே நீங்க உங்க டாட்டரோடு இங்கே ஏன் குடியிருக்கணும் ? வேற ஏதாவது ஒரு இடம் பார்த்துகிட்டு போலாமே ? "

ஆதிகேசவன் இரண்டு கைகளையும் விரித்து விரக்தியாய் ஒரு விநாடி கண்களை மூடித் திறந்தார்.

" அதுக்கும் முயற்சி பண்ணினேன் தம்பி. ஆனா கோபிகாவுக்கு இந்த அப்பார்ட்மெண்டை விட்டுப்போக மனசில்லை. நாலைஞ்சு தடவை பேசிப் பார்த்தேன். அதுக்கு கோபிகா என்ன பதில் சொன்னாத் தெரியுமா? "

" என்ன சொன்னா ? "

" நான் மாப்பிள்ளைகிட்ட பேசிப் பார்த்தேன்ப்பா. அவர்க்கு இந்த அப்பார்ட்மெண்டை விட்டுப்போக மனசில்லையாம். எனக்கும் இஷ்டமில்லேப்பா.... வெளியே இருக்கிறவங்க எல்லாம் இந்த அதிரா அபார்ட்மெண்ட்டைப் பத்தி தப்பா பேசினாலும் எனக்கு இந்த ஏரியா பிடிச்சிருக்கு..... இங்கே ஒரு சில பேர் செத்துட்டாங்கிற காரணத்துக்காக நாம பயப்படலாமா ? நாமதான் காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலுக்குப் போய் பொங்கல் வெச்சு செய்ய வேண்டிய பரிகாரத்தைப் பண்ணிட்டோமே அப்புறமும் என்ன பயம் ? "

" கோபிகாவுக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்குன்னு சொன்னீங்க.... ஆனா இவ்வளவு தெளிவாய் பேசறாளே ? "

" தம்பி.... கோபிகாவை நீங்க இன்னிக்குத்தான் பார்க்கறீங்க ...... அதனால்தான் அவளைப்பற்றின ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியலை "

" என்ன ? "

" இன்னிக்கு ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றி பேசும்போது அதை ஆதரிச்சு பேசுவா. நாளைக்கே அந்த விஷயத்தைப்பற்றி பேசும்போது அது தப்புன்னு ஆர்க்யூ பண்ணுவா.... அப்படி அவ ஆர்க்யூ பண்ணும்போது அதை நாம மறுத்துப்பேச முடியாத அளவுக்கு அந்த வாதம் சரியாய் இருக்கும். கடந்த ஒரு வருஷ காலமாய் நான் எம் பொண்ணுகிட்ட படற பாடு இருக்கே அதை வார்த்தையால சொல்ல முடியாது "

" ஸார்... கோபிகாவைப்பத்தி நீங்க பேசப்பேச எனக்கு ஆச்சர்யமாயிருக்கு. இந்த நிமிஷம் என்னோட ஃப்ளாட்டுக்குள்ளே ஏசிபி சந்திரசூடனும் உங்க பொண்ணும் பேசிட்டு இருக்காங்க. நீங்களும் நானும் இப்ப தடாலடியா அங்கே போவோம். உங்களைப் பார்த்ததுமே கோபிகாவோட ரியாக்சன் எப்படி இருக்கும்ன்னு நான் பார்க்கணும். வாங்க பார்க்கலாம் "

அவசர அவசரமாய் ஆதிகேசவன் தலையசைத்து மறுத்தார்.

" வே....வேண்டாம் தம்பி "

கபிலன் அவரை வியப்பாய்ப் பார்த்தான்.

" ஏன் வேண்டாம்ன்னு சொல்றீங்க ? "

" கோபிகா எனக்குத் தெரியாமே ஏசிபியைப் பார்க்க தனியாய் வந்திருக்கா..... இந்த நேரத்துல நான் போய் திடீர்ன்னு அவ முன்னாடி நின்னா அவ எப்படி பேசுவா எப்படி நடந்துக்குவாளோன்னு பயமாயிருக்கு"

கபிலன் அவரை கையமர்த்தினான்.

" ஸார் ... நானும், ஏசிபி சந்திரசூடனும் உங்க கூடவே இருக்கும்போது என்ன பயம்...... வாங்க போகலாம்"

சொல்லிக்கொண்டே ஆதிகேசவனின் கையை இறுகப்பற்றிய கபிலன் அவரை தன்னுடைய ஃப்ளாட் இருந்த திசை நோக்கி இழுத்துச் செல்லாத குறையாய் அழைத்துச் சென்றான்.

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ]


English summary
Flat number 144 Adhira apartment (Episode 10) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X