• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"நோ..நோ.. எதுவாய் இருந்தாலும் சொல்லுங்க".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (18)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடன் சொன்னதைக் கேட்டு ராவ்டே பிந்தர் சற்றே தயக்கமான குரலுடன் அவரை ஏறிட்டார்.

" ஸார் ..... உங்க வ்யூவை சொல்லிட்டீங்க. நான் என்னோட கெஸ்ஒர்க்கைச் சொன்னா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே ..... ? "

" நோ....நோ...... எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்க..... "

" கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட இளம் பெண்ணோட டெட்பாடி கங்காதரனின் காரின் டிக்கிக்கு மாற்றப்பட்ட இடம் இந்த அதிரா அப்பார்ட்மெண்ட் இல்லாமே வேற ஒரு இடமாய் ஏன் இருக்கக்கூடாது... ? இங்கே ஆறுபேர் மர்மமான முறையில் மரணம் அடைந்த விஷயம் வேறு. அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் வேறுன்னு நான் நினைக்கிறேன். நீங்க இந்த இரண்டு சம்பவங்களையும் ஒரே கோணத்தில் பார்த்தால் இன்வெஸ்டிகேஷன் செய்யும்போது நிறைய குழப்பங்கள் வரலாம். உண்மையான குற்றவாளிகள் இருக்கக்கூடிய திசை கூட தெரியாமே போகலாம். நான் இப்படியொரு கெஸ்ஒர்க்கை உங்ககிட்ட சொல்றதுக்கு காரணம் நான் ஆர்மியில் தி டிஃபென்ஸ் இண்டலிஜென்ஸ் பிரிவில் ரெண்டு வருஷம் இருந்திருக்கேன். வேற ஒரு ஆபீஸர் லீவில் இருந்ததால அவர் திரும்பவும் வந்து ட்யூட்டியில் ஜாய்ன் செய்கிற வரை நான்தான் சில கேஸ்களை டீல் பண்ணினேன். அப்படி டீல் பண்ணும்போதுதான் சில உண்மைகளை கத்துகிட்டேன். அதில் ஒரு உண்மை ஆர்மியில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் ஒரே இடத்தில் ஓரே மாதிரியான முறையில் நடந்திருந்தாலும் அது வெவ்வேறு சம்பவங்களோடு சம்பந்தப்பட்டு இருப்பதை ஆதாரப்பூர்வமாய் கண்டுபிடிச்சு சப்மிட் பண்ணினேன்"
சந்திரசூடன் இடைமறித்தார்.

flat number 144 adhira apartment episode 18

" யூ மே பி கரெக்ட் மிஸ்டர் ராவ்டே. ஒரு கொலையாளி தான் செய்த கொலைகளை திசை திருப்ப சில காரியங்களைச் செய்யலாம். கங்காதரன் தன்னோட காரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருந்த இருட்டான கிளைச் சந்தில் நிறுத்திட்டு போயிருக்கார். அந்தத் தெருவில் சி.சி.டி.வி. காமிராக்கள் இல்லாத காரணத்தால என்ன நடந்ததுன்னு கண்டுபிடிக்க முடியலை. அந்தத் தெருவில் குடியிருந்தவங்களை விசாரிச்சபோது எந்த ஒரு உபயோகமான பதிலும் கிடைக்கலை. அதனால்தான் அந்த இளம்பெண்ணின் சடலம் கங்காதரனின் கார் இந்த அபார்ட்மெண்டின் பேஸ்மெண்ட் கார் பார்க்கிங்கில் நின்னுட்டிருந்தபோது அந்தக் காரின் டிக்கிக்கு மாற்றப்பட்டு இருக்கலாம்ங்கிறது என்னோட சந்தேகம். நான் இந்த இன்வெஸ்டிகேஷனை இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன். இந்த விசாரணை இன்னும் விரியும்போதுதான் எது உண்மை எது பொய்ன்னு தெரியும்...... இது ஒரு காம்ப்ளிகேட்டட் கேஸ். உடனடியாய் நாம் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது "

" ஒன்ஸ் அகெய்ன் ஸாரி ஸார் "

" ஃபார் வாட் ..... ? "

" நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா ..... ? "

" நோ மிஸ்டர் ராவ்டே..... நீங்க தப்பா எதையும் சொல்லலை. உங்க சந்தேகத்தைத்தான் சொல்லியிருக்கீங்க. இனிமே இந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு நான் அடிக்கடி வர வேண்டியிருக்கும். உங்களுடைய ஒத்துழைப்பு இதுல முக்கியம். ஒரு ஆர்மி ஆபீஸரான உங்களுக்கு இந்தக் கேஸ்ல ஒரு உண்மையான அக்கறை இருக்கும்ன்னு நினைக்கிறேன் "

" ஷ்யூர் ஸார் "

" தென்.... அயாம் லீவிங் ஹியர். இந்த கேஸைப் பத்தி நான் என்னோட போலீஸ் ஹை அஃபிஷியல்ஸ்கிட்டே பேசிட்டு ஃபர்தர் என்கொயரிக்காக வருவேன். அந்த சமயத்துல என்கிட்டே நிறைய கேள்விகள் இருக்கும். அதற்கான பதில்களை தரவேண்டியது உங்க பொறுப்பு "

" வெல்கம் ஸார் "

" அப்புறம்.... ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் "

" என்ன ஸார் ..... ? "

" இந்த ஃப்ளாட் நெம்பர் 144 இனி போலீஸின் கண்காணிப்பில்தான் இருக்கும். பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுகிறவரை இந்த ஃப்ளாட்டுக்குள்ளே யாரும் போகக்கூடாது. மொதல்ல இந்த கதவைச் சுத்தம் பண்ணி ரத்தப் பொட்டுக்களையெல்லாம் அழிச்சு, கால பைரவர் போட்டோவைக் கழட்டிட்டு ஒரு புதுப்பூட்டைப் போட்டு பூட்டி அந்தப்பூட்டைத் துணியால சுத்தி அரக்கு சீல் வைக்கணும்"

" ஸ....ஸார்..... என்று குரலை இழுத்தார் ராவ்டே பிந்தர்.

" என்ன ..... ? "

" இந்த விஷயத்தை ஃப்ளாட்டோட ஒனர் நாக்பூரில் இருக்கிற கன்ஷிராமுக்கு கன்வே பண்ணி அவரோட சம்மதத்தை வாங்க வேண்டாமா ..... ? "

" வேண்டியது இல்லை " என்று சொன்ன சந்திரசூடன் தன் அருகில் இருந்த கபிலனை ஏறிட்டார்.

" ஒரு கனமான பூட்டும், காடாத்துணியும் அரக்கும் வேணும்..... அரைமணி நேரத்துக்குள்ளே வாங்கிட்டு வர முடியுமா ..... ? "

" அப்பார்ட்மெண்ட்டுக்கு பக்கத்திலேயே ஒரு ஹார்டுவேர் கடையும், துணிக்கடையும் இருக்கு..... ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளே நான் போய் வாங்கிட்டு வந்துடறேன் ஸார் " என்று கபிலன் சொல்லிக்கொண்டே நகர்ந்து போய்விட அதுவரைக்கும் எதுவும் பேசாமல் மெளனமாய் இருந்த ஆதிகேசவன் தயக்கத்துடன் சந்திரசூடனிடம் திரும்பினார்.

" ஸார்.... கோபிகா வீட்ல தனியா இருப்பா. நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா..... ? "

" நீங்க கிளம்புங்க ஆதிகேசவன். மறுபடியும் நாம சந்திப்போம். முதல் சந்திப்பிலேயே நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கீங்க. தேங்க்ஸ் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்ஸ் "

" ஸார்..... உங்ககிட்ட ஒரு ஆப்ளிகேஷன் "

" என்ன சொல்லுங்க ..... ? "

" கோபிகாவை இந்த மனச்சிதைவு நோயிலிருந்து எப்படியாவது மீட்டெடுக்கணும். உங்களுக்குத் தெரிஞ்ச ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்ட் யாராவது இருந்தா சொல்லுங்க "

" டோண்ட் வொர்ரி ஆதிகேசவன். ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்டில் பாரன்ஸிக் சைக்காலஜிஸ்ட் கோபால மேனன்னு ஒருத்தர் இருக்கார். வெரி எமினென்ட் பர்ஸன். இந்த வாரத்திலேயே அவர்கிட்ட ஒரு அப்பாயிண்மெண்ட் வாங்கறேன். கோபிகாவை அவர்கிட்டே கூட்டிட்டுப் போகலாம். அவரோட சைக்கோதெரபியெல்லாம் கொஞ்சம் வித்தியாசமானது. அவர் தர்ற தெரபியில் கோபிகா குணமாக வாய்ப்பு அதிகம் "

ஆதிகேசவன் சந்திரசூடனை கைகளை குவித்து கும்பிட்டார்.

" நீங்க சொல்ற இந்த வார்த்தைகளை கேட்கும்போதே மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருக்கு ஸார். மறுபடியும் இங்கே வரும்போது எனக்கு முன்கூட்டியே தகவல் கொடுங்க. உங்க விசாரணை நல்லபடியாய் முடிய என்னோட பங்களிப்பு நிச்சயம் உண்டு ஸார்...... "

" நீங்க மொதல்ல கோபிகாவைப் போய்ப் பாருங்க. கபிலன் வந்ததும் இந்த ஃப்ளாட்டை சீல் பண்ணிட்டு நானும் கிளம்பி கமிஷனரைப் போய்ப் பார்க்கணும் "

ஆதிகேசவன் மறுபடியும் சந்திரசூடனுக்கு ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு நகர்ந்தார்.

*******

அடுத்த அரைமணி நேரத்திற்குள் ஃப்ளாட் 144 புது பூட்டோடு சீல் வைக்கப்பட்டு விட, சந்திரசூடன் கபிலன் இருவரும் ராவ்டே பிந்தரிடம் விடைபெற்றுக்கொண்டு காரில் புறப்பட்டு சென்றனர்.

அவர்களின் கார் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராவ்டே பிந்தர் சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு தன்னுடைய ஃப்ளாட்டை நோக்கி மெல்ல நடை போட்டார். அடித்த காற்றில் வெய்யிலின் சீற்றம் தெரிந்தது.

ஒரு இரண்டு நிமிட நடையில் "எம்" அப்பார்ட்மெண்ட்டில் இருந்த அவருடைய ஃப்ளாட் வந்தது. காலிங்பெல்லுக்கு வேலை கொடுக்க, அடுத்த சில விநாடிகளில் கதவு திறக்கப்பட்டு அவருடைய மனைவி வசுந்தராவின் கோபமான முகம் பார்வைக்குத் தட்டுப்பட்டது. பஞ்சாபி மொழியில் கோபமாய் கேட்டாள்.

" என்ன அந்த போலீஸ் ஆபீஸர் போயிட்டாரா..... இல்ல இன்னமும் இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டையே சுத்தி சுத்தி வந்து பார்த்துட்டு இருக்காரா ..... ? "

" இப்பத்தான் கிளம்பிப் போனார் "ராவ்டே பிந்தர் சொல்லிக்கொண்டே கையில் இருந்த புகையும் பாதி சிகரெட்டை ஆஷ்ட்ரேக்குள் போட்டு நசுக்கினார். சுழலும் மின்விசிறிக்கு கீழே இருந்த நாற்காலிக்கு போய் பெருமூச்சோடு சாய்ந்தார்.

வசுந்தரா அதிகரித்த கோபமூகத்தோடு அவர்க்கு எதிரே போய் நின்றாள்.

" மணி இப்ப என்ன தெரியுமா.... ரெண்டரை. நீங்க இன்னும் லஞ்ச் சாப்பிடலை. நாற்காலிக்குப் போய் சாய்ஞ்சுட்டீங்க "

" எனக்கு பசிக்கலை வசு..... நீ போய் சாப்பிடு "

" ஏன் பசிக்கலை ..... ? "

" மனசே சரியில்லை "

" என்ன அந்த போலீஸ் ஆபீஸர் உங்களை மிரட்டற மாதிரி பேசினாரா ..... ? "

" சேச்சே.... அவர் அப்படியெல்லாம் பேசலை. வேற ஒரு விசாரணைக்காக வந்தார். இருக்கிற பிரச்சினைகள் போதாதுன்னு இப்ப ஒரு புது பிரச்சினை. அதையெல்லாம் பேசிட்டிருக்க வேண்டாம். நீ போய் சாப்பிடு. பத்மஜா
சாப்பிட்டாளா ?"

பக்கத்து அறையில் உட்கார்ந்து மொபைல் போனை நோண்டிக் கொண்டிருந்த அவருடைய மகள் பத்மஜா குரல் கொடுத்தாள். ஏழு மாத கர்ப்பத்தோடு பிரசவத்துக்காக தாய்வீடு வந்திருப்பவள்.

" டாடி..... நான் சாப்ட்டுட்டேன். இன்னிக்கு அம்மா செஞ்ச சிக்கன் பிரியாணி அமர்க்களம். போய் சாப்பிடுங்க "

" இல்லேம்மா.....இப்ப பசியில்லை. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன்"

வசுந்தரா ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு கணவர்க்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

" வந்த போலீஸ் ஆபீஸர் வேற ஒரு விசாரணைக்காக வந்ததாய் சொன்னீங்க. அது என்ன விசாரணை ..... ? "

ராவ்டே பிந்தர் சில நிமிஷ நேரத்தை செலவழித்து கங்காதரனின் கார் திருடு போன விஷயத்தைப்பற்றியும், அந்தக் காரின் டிக்கிக்குள் கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் அடைக்கப்பட்டு இருந்ததைப்பற்றியும் சொல்ல வசுந்தராவின் முகம் பயத்தில் ரத்தமின்றி வெளுத்துப்போயிற்று. சேலைத் தலைப்பால் நெற்றி வியர்வையை ஓற்றிக்கொண்டாள்.

" அப்படீன்னா அந்த போலீஸ் ஆபீஸர் இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த அந்த ஆறு மரணங்களைப்பற்றி விசாரிக்க வரலையா ..... ? "

" அவர் அதுக்காக வரலை.... கங்காதரனும் அவரோட மனைவியும் நேத்து ராத்திரி ஒரு மேரேஜ் ரிசப்ஷனுக்கு போறதுக்கு முந்தி இங்கே வந்திருக்காங்க. காரை பேஸ்மெண்டில் நிறுத்திட்டு அவரோட ஃப்ளாட்டுக்கு போயிருக்காங்க. அந்த நேரத்துலதான் நம்ம அப்பார்ட்மெண்ட்டில் இருந்த யாரோ கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட ஒரு பெண்ணோட டெட்பாடியை அவரோட காரின் டிக்கிக்குள்ளே அடைச்சிருக்கணும்ன்னு போலீஸ் ஆபீஸர் சந்திரசூடன் சந்தேகப்பட்டு சொல்றார். அவர் சொல்றது நம்பறமாதிரியா இருக்கு...? நான் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லைன்னு சொன்னேன். அவர் அதை ஏத்துக்க மறுத்துட்டார்....."

" அவர் சொன்னது உண்மைதான் டாடி..... "

ராவ்டே பிந்தரின் மகள் பத்மஜா பக்கத்து அறையினின்றும் வெளிப்பட்டுக் கொண்டே மெல்லிய குரலில் சொல்ல ராவ்டே பிந்தர் அதிர்ந்து போனவராய் மகளைப் பார்த்தார்.

" நீ..... நீ..... நீ..... என்னம்மா சொல்றே ..... ? "

" நானே நேர்ல பார்த்தேன் டாடி "

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 17 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 18) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X